புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

பேரானந்தத்தில் திளைத்திருந்தான் கார்த்தவீர்யார்ஜுனன். பின்னே, கேட்டதெல்லாம் தரும் தெய்வீகப் பசு சுசீலை, இனி அவனுக்குச் சொந்தம் அல்லவா?

'தானமும் வேண்டாம்; தெய்வீகப் பசுவை தரும்படி நிர்பந்திக்கவும் வேண்டாம்’ என்று ஜமதக்னி முனிவர் தன்னிடம் மறுதலித்ததையும், அதையும் மீறி படை வீரர்களுடன் சேர்ந்து தெய்வீகப் பசுவை தான் கவர்ந்து வந்ததையும், மீறி தடுக்க வந்த முனிவரை கொன்று போட்டுவிட்டு சுசீலை என்கிற அந்த காமதேனுவை, கேஹய தேசத்துக்கு ஓட்டி வந்ததையும் துர்மந்திரி விவரிக்க...  மிகப் பெருமிதத்தோடு அவன் தோளில் தட்டிக்கொடுத்தான் கார்த்தவீர்யார்ஜுனன்.

ஆனால், அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை... எவருக்கும் எதுவும் எப்போதும் நிரந்தரம் இல்லை என்று!

காட்டுக்குள் சமித்துக்கள் சேகரிக்க வந்த பரசுராமருக்கு மனது நிலைகொள்ளவில்லை. மழையின்றி முழங்கிய இடியோசையும், அந்தக் காலைப் பொழுதில் தேவையின்றி ஒலித்த ஆந்தையின் அலறலும் துர்சகுனமாகத் தெரிந்தன; ஏதோ அசம்பாவிதம் நிகழப் போவதாக உள்ளுக்குள் உணர்ந்தான். சேகரித்த வரையிலும் சமித்துகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்ரமத்துக்குத் திரும்பினான்.

அங்கே... ரத்த வெள்ளத்தில் தந்தை ஜமதக்னி வீழ்ந்து கிடப்பதையும், அருகில் தலைவிரிகோலமாக தாய் ரேணுகை அழுது கொண்டிருப்பதையும் கண்டு திடுக்கிட்டான். கேஹய தேசத்தின் படைகளும் துர்மந்திரியும் நிகழ்த்திச் சென்ற கொடுமைகளை தாய் விவரிக்க, கடும்கோபம் கொண்டான்.

'கார்த்தவீர்யனின் ஆயிரம் கைகளையும் அறுத்து அவனைக் கொல்வேன். என் தாய் 21 முறை தன் மார்பில் அறைந்துகொண்டு புலம்பினாள். ஆகவே, க்ஷத்திரியர்களின் 21 தலைமுறைகளை அழிப்பேன்'' என்று வீரசபதம் செய்தான்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

இந்த நிலையில் சுக்ர பகவான் அங்கு வர, அவரது அற்புதமான மிருத சஞ்ஜீவினி மந்திரத்தால் ஜமதக்னி பிழைத்தெழுந்தார். இதைத் தொடர்ந்து, கார்த்தவீர்யார்ஜுனனின் அரண்மனையில் தன் கன்றை விட்டுவிட்டு, சுசீலை ஆஸ்ரமத்துக்குத் திரும்பியதாக சில புராணங்கள் சொல்கின்றன (இதுகுறித்து, வேறுபட்ட சில கதைகளும் உண்டு).

ஸ்ரீபரசுராமர் தனது சபதத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார். கேஹய தேசத்தின் தலைநகர் மாஹிஷ்மதிக்கு தன்னந்தனியாகச் சென்றார். கோட்டை வாயிலில் நின்றுகொண்டு கார்த்தவீர்யனைப் போருக்கு அழைத்தார்.

வனத்தில் வாழும் ஓர் அந்தணப் பிரம்மசாரி தன்னிடம் மோத வந்துள்ளானா என எள்ளி நகையாடினான் கார்த்தவீர்யன். பரசுராமனை இழுத்துவரும்படி படைகளை ஏவினான். ஆனால்... ஆயிரம் பேரானாலும் ஒரே தருணத்தில் எதிர்கொண்டு வெல்லும் அந்த பராக்கிரமசாலிகளின் வீரமும் தீரமும், பரசுராமரின் முன் ஒன்றுமில்லாமல் போனது!

தளபதிகளும் படைவீரர்களும் அழிந்துபட்டனர் என சேவகர்கள் சேதி சொல்ல, கார்த்தவீர்யன் துணுக்குற்றான். தானே புறப்பட்டான். ஆயிரம் கரங்களிலும் ஆயுதம் தரித்து, பலமிக்க படையணியுடன் கோட்டையில் இருந்து வெளிப்பட்டான். கடுமையான யுத்தம் அங்கே ஆரம்பமானது!

ஸ்ரீபரசுராமரின் தனுசும் பரசும் எதிரிகளைத் துவம்சம் செய்தன.

அவரின் வில்லில் இருந்து புறப்பட்ட பாணங்கள்,  படை வீரர்களின் உயிரைப் பருக, பரசாயுதமோ... கார்த்த வீர்யனின் கரங்களையும் சிரத்தையும் கொய்து முடித்தது.

போர் முடிவுக்கு வர, காமதேனுவின் கன்றை மீட்டுக்கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார் பரசுராமர்.

##~##
மை
ந்தன் பரசுராமரின் செயல் கண்டு மனம் வருந்தினார் ஜமதக்னி. 'ராமா! அந்தணர்களாகிய நமக்கு போர் உரித்தானது அல்ல. நீ செய்த கொடும் செயலுக்குப் பிராயச்சித்தமாக, கடும் தவத்தில் ஈடுபடு. ஒரு வருட காலம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, புனிதனாகத் திரும்பி வா!'' என்று ஆணையிட்டார்.

தந்தை சொல்லை மந்திரமாக ஏற்று, மகேந்திரகிரிக்குச் சென்று தவமியற்றினார் பரசுராமர்; தீர்த்தங்களில் புனித நீராடினார். ஒரு வருடம் கழிந்த பின், ஆஸ்ரமம் திரும்பினார். சிறிது காலம் அமைதியாகக் கழிந்தது. ஆனால், பரசுராமரின் அவதார காரியம் இன்னும் பாக்கி இருக்கிறதே?! ஆமாம்... பரம்பொருளின் சங்கல்பம் பலிக்க, கார்த்த வீர்யனின் மைந்தன் மூலம் தனது கடமையைச் செவ்வனே செய்யத் துவங்கியது காலம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

கார்த்தவீர்யனின் மகன் சூரசேனன் தன் தந்தையின் வதத்துக்குப் பழிவாங்கத் தயாரானான். தன்னைப் போலவே பரசு ராமரும் தந்தையை இழந்து தவிக்கவேண்டும் என எண்ணம் கொண்டான். படையுடன் புறப் பட்டு ஜமதக்னியின் ஆசிரமத்துக்கு வந்தான். பரசுராமர் அங்கு இல்லை என்பதை அறிந்தான். அங்கே, தியானத்தில் லயித்திருந்த ஜமதக்னியின் சிரத்தைக் கொய்து எடுத்துச் சென்றான்.

திரும்பி வந்த பரசுராமர் கொதித்தெழுந்தார். சகோதரர்களுடன் சேர்ந்து உரிய கடமைகளைச் செய்து முடித்தார். அன்னை ரேணுகாவோ, சிகாக்னியில் புகுந்து பதிவ்ரதா தெய்வமானாள்.  அன்று ஆரம்பமானது... பரசுராமரின் 21 முறை பூலோக பிரதட்சணமும், துஷ்ட நிக்ரகமும்!

க்ஷத்ரிய சம்ஹாரத்தால் பரசுராமர் பூவுலகின் பாவக்கறையை நீக்கியருளியது எப்போது தெரியுமா? திரேதா யுகமும் துவாபர யுகமும் சந்தித்த காலத்தில். அதாவது, திரேதாயுகம் முடிவுபெற...  துவாபர யுகம் ஆரம்பித்த காலகட்டமாம்!

ஸமந்த பஞ்சகம் என்ற இடத்தில் ஐந்து மடுக்களை ஏற்படுத்தி, அவற்றை தாம் வதம் செய்த க்ஷத்திரியர்களின் ரத்தத்தால் நிரப்பினாராம் பரசுராமர். அதில், தன்னுடைய பித்ருக்களுக்கான கடமைகளைச் செய்து முடித்ததாக ஞானநூல்கள் விவரிக்கின்றன. அந்த மடுக்கள் உள்ள இடமே, பிற்காலத்தில் மகாபாரத  யுத்தகளமாக திகழ்ந்த குருக்ஷேத்திரம் என்றொரு தகவலும் உண்டு. ஸ்ரீராமாயணமும் ஸ்ரீபரசுராமரைப் போற்றுகிறது. 'பூமி பாரம் குறைக்க வந்த எமது பணி ஓரளவு முடிந்தது. மீதியை நீ பார்த்துக் கொள்’ எனும்படியாக, ஸ்ரீராமபிரானிடம் விஷ்ணு தனுசை அவர் ஒப்படைத்த சம்பவம், அற்புதமாக சித்திரிக்கப் பட்டுள்ளது நம் முன்னோர்களால்.

ஆஹா... இருபெரும் அவதாரங்கள் சந்தித்துக்கொண்ட அந்த அற்புதமான சம்பவம் நிகழ்ந்தது எப்போது?

சிவ தனுசு தெரியும்! அதை, ஒடித்துதானே ஸ்ரீராமன் ஜானகியைக் கரம் பிடித்தான்?! ஆனால், அதென்ன விஷ்ணு தனுசு? அதெப்படி பரசுராமருக்குக் கிடைத்தது? கதைக்குள் கதையாக விரியும் அந்த சுவாரஸ்யத்தையும் அறிந்துகொள்வோம்!

- அவதாரம் தொடரும்...