புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

புராண- இதிகாசங்களில், அநேகமாக பொதுவான சம்பவம் ஒன்று இருக்கும். அசுரன் ஒருவன் பூவுலகில் பிறப்பான்; அவன் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசிவபெருமான் ஆகிய தெய்வங்களை நினைத்துக் கடும் தவம் புரிந்து, வரங்கள் பெறுவான். அந்த வரத்தின் வலிமையால் மூவுலகையும் ஆட்கொண்டு, ஆணவத்துடன் அட்டூழியம் செய்வான்.

அவனது கொடுமையால் தவிப்பவர்கள், இறைவனை வேண்டுவார்கள். அதையடுத்து, ஏதோவொரு வடிவில் வந்து, அந்த அசுரனை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவார், இறைவன். இப்படியாகத்தான், தர்மம் நிலைநாட்டப்படுவதை வலியுறுத்துகின்றன புராண- இதிகாசங்கள்.

##~##
இதுபோன்று கொடியவர்களை அழித்த புராணச் சம்பவங்களில் குறிப்பாக இரண்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று, மகாபலியை அழிக்க, ஸ்ரீமந் நாராயணன் எடுத்த வாமன அவதாரம். இன்னொன்று, சூரபத்மனை அழிக்க, சிவ-சக்தியின் அம்சமாகத் தோன்றிய சுப்ரமணிய அவதாரம். இந்த இரண்டிலுமே, ஆணவத்தால் அட்டூழியம் செய்த அசுரனை அழிக்காமல், அவனது அசுரத்தனத்தை மட்டும் அழித்துவிட்டு, அந்த அசுரனை தமது அடியவனாக இறைவன் ஆட்கொண்டுவிடுவதைக் காணலாம்.

இறைச் செயல்கள் காரண- காரியங்கள் இன்றி நிகழ்வதில்லை. ஆக்குவதிலும் சரி, அழிப்பதிலும் சரி... அர்த்தங்களும் தர்மங்களும் நிறைந்திருக்கும்!

பிரம்மனின் மானச புத்திரர்களில் ஒருவர், கச்யப முனிவர். அவருடைய இரண்டு மனைவிகளில் ஒருத்தி, மாயை. அவர்களுக்குக் கடும் தவத்தின் பயனால் தோன்றிய சூரன், பதுமன் ஆகிய இரண்டு குழந்தைகள், பிறந்ததுமே உடல் பலமும் மனோபலமும் மிக்க ஒரே குழந்தையாக மாறிற்று. அந்தக் குழந்தைக்குச் சூரபத்மன் எனப் பெயரிட்டனர். சூரபத்மனுக்கு சிங்கமுகன், தாரகன் என இரண்டு தம்பிகளும், அஜமுகி எனும் சகோதரியும் உண்டு.

அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், உலகில் எவருமே அடையாத நிலையைப் பெறவேண்டும் என்றும் பேராசை கொண்ட சூரபத்மன், அசுரகுரு சுக்ராச்சார்யரை தன் குருவாக ஏற்றான். உச்சபட்சமாக, மூவுலகையும் வென்று சிவனாருக்குச் சமமான பதவியைப் பெறவேண்டும்; எந்தச் சக்தியாலும் அழிவு வராமல், மரணமில்லாப் பெருவாழ்வை அடையவேண்டும் என வெறிகொண்டு செயல்பட்டான். எனவே, மகேஸ்வரன் குறித்துக் கடும் தவம் இருந்தான்.

பல காலம் தவம் புரிந்தும், சிவபெருமான் தோன்றாமல் போகவே, தன் அங்கங்களைத் துண்டு துண்டாக அறுத்து, வேள்வியில் சமர்ப்பித்தான். இறுதியில் தன் சிரத்தையே அறுத்து சிவார்ப்பணம் செய்ய முயன்றபோது, சிவபெருமான் தோன்றி, சூரபத்மன் வேண்டிய வரங்களை அருளினார். இந்திராதி தேவர்களையும், அகில உலகங்களையும் ஆளுகின்ற வல்லமை வேண்டும் என்று வரம் கேட்டான் சூரபத்மன். இரண்யன் வரம் கேட்டதுபோல், 'படைக்கப்பட்ட உயிர்கள், அல்லது விலங்கினங்கள், தோற்றுவிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகிய எவற்றாலும், தனக்கு மரணம் நிகழக்கூடாது’ என்றும் வரம் கேட்டான். 'தன் உடலிலிருந்து சிந்துகின்ற உதிரத் துளிகளெல்லாம் அரக்க சக்தியாக உருவாகித் தன்னைக் காக்க வேண்டும்’ என்றும் வரம் கேட்டான். 'சிவனும் உமையும் இணைந்து தோற்றுவிக்கும் சக்தி அல்லாது, வேறு எந்தச் சக்தியாலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது’ என்றும் வரம் பெற்றான்!

தவம் செய்து சாகா வரங்களைக் கேட்டு, அழியாமல் வாழ்ந்த அரக்கர்கள் வரலாறே இல்லை எனலாம். வாங்கிய வரங்களில், கேட்க மறந்திருந்த ஏதோ ஒரு காரண காரியத்தைப் பயன்படுத்தி, இறைவன் அவர் களை சம்ஹாரம் செய்த சம்பவங்களைப் பல புராணங்களில் பார்க்கின்றோம். ஆனால், சூரபத்மன் இதற்கும் விதிவிலக்காகி விடுகிறான்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அழியாத வரம் பெற்றவர்கள் தங்கள் அழிவுக்கு தாங்களே வழி தேடிக்கொள்வர் என்பது தர்ம நியதி. அந்த வரிசையில் சூரபத்மன் தன் பங்கைச் செய்ய ஆரம்பித் தான். கொடுமையும், தீமையும் அவன் நாட்டில் சட்டங்கள் ஆயின. தர்மம் சிதைக்கப்பட்டது. தேவர்களும், தேவ மாதர்களும் சூரபத்மனின் அடிமைகளாயினர்.

சூரபத்மனின் நல்ல நேரமோ, அல்லது தேவர்களின் கெட்ட நேரமோ... சிவபெருமா னின் அனுமதியின்றித் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்ற தாட்சாயினி, அங்கே அவமானப்படுத்தப்பட்டு, பிராணத் தியாகம் செய்தாள். உமையைப் பிரிந்த ஈஸ்வரன் ருத்ரனாகி, கடுந்தவத்தில் ஈடுபட்டார். சக்தி ஒருபுறம், சிவன் ஒருபுறம் என்று பிரிந்திருக்கின்ற நிலையில், சூரபத்மன் பயம் ஏதுமின்றி அதர்மங்கள் புரிந்து வந்தான்.

காலம் எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகச் செல்வது இல்லை. தேவர் களின் பிரார்த்தனை நிறைவேறும் சூழல் உருவானது. அன்னை உமை, பர்வத ராஜனின் புதல்வி பார்வதியாக அவதரித்து, சிவனாரைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தாள். இந்த வேளையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தேவர்கள் விரும்பினர். சிவனும், சக்தியும் இணைந்து ஒரு தேவ புருஷனை உருவாக்கினால்தான், சூரனை அழிக்க முடியும் என்று அவர்கள் கருதினர். ஈசனின் உக்ர சக்தியையும், பார்வதியின் பக்தி பாவத்தையும் ஒருமுகப்படுத்த, காமதேவனை கருவியாகப் பயன்படுத்த விரும்பினார்கள் தேவர்கள்.

படைக்கப்பட்ட ஜீவன்களில் ஆண்- பெண் பாகுபாடு உண்டு. அவர்களிடையே காமன் எய்யும் மலர்க்கணை, பிரேமையை உருவாக்க முடியும். ஆனால், காமனையே உருவாக்கிய கடவுளுக்கு இந்த விதிகள் கட்டுப்படுமா? பரமேஸ்வரனைப் பார்வதியிடம் ஈடுபடச் செய்யும் நோக்கத்துடன் காமன் எய்த கணை, பரமேஸ்வரனின் கோபாக்னியைக் கிளப்பிக் காமனைச் சுட்டெரித்தது.

சர்வேஸ்வரன் சங்கல்பம் இல்லாமல் எதுவும் நிகழாது என்பதைத் தேவர்கள் அறிந்து கொண்டனர். குறைகளைக் கூறி முறையிடத்தான் அவர்களுக்கு அதிகாரம் இருந்ததே தவிர, குறைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை, அவர்களாகவே தீர்மானித்துக்கொள்ள அதிகாரம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார் மஹாதேவன். தேவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தபின், அவர்களுக்காக மனமிரங்கி, ஒரு மார்க்கத்தையும் வகுத்துத் தந்தார். மஹேஸ்வரன். பார்வதிக்கு அருள்பாலித்து, அவளை ஏற்றுக் கொண்டார்.

நெற்றிக்கண்ணில் தோன்றிய ஒளி மிக்க நெருப்புப் பொறிகளில், சுப்ரமணியனை உருவாக்கினார். அவனைத் தன் சக்தியை மட்டுமே கொண்டு, அக்னி ஸ்வரூபனாக உருவாக்கினாரே தவிர, உமையோடு இணைந்து உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவனும் பார்வதியும் இணைந்து தோன்றும் சக்தி ஒன்றினால்தான் சூரபத்மன் அழிவுக்கு வழி உண்டு. அது அவன் பெற்ற வரத்தின் மகிமை. எனவே, முருகனின் தோற்றமும் சூரபத்மனுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

அழகுக்கும் அறிவுக்கும் சிறந்த ஞானத்துக்கும் எடுத்துக்காட்டின, அற்புதமான தெய்வ வடிவம் முருகன். அவன் அதர்மத்தைக் கண்டிப்பவன்; தண்டிப்பவன் அல்ல! அவனது அவதார நோக்கமே சூரனை ஆட்கொண்டு, தேவர்கள் வாழ்வை வளம் பெறச் செய்வதுதான். தேவசேனாதிபதியாக போர் முரசம் கொட்டிப் புறப்படும் முன், அன்னை பார்வதிதேவி, 'அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட’, தன் சக்தியை எல்லாம் ஒன்றாக்கி, வேல் ஒன்றை முருகனுக்கு வழங்கினாள்.

வேல் அறிவின் சின்னம். அறிவு அகலமானது; ஆழமானது; கூர்மையானது. இந்த மூன்று தன்மையையும் நாம் வேலிலும் காண்கிறோம். வேல் என்பது அழிக்கும் சக்தியல்ல; ஆக்கும் சக்தி; ஆபத்துகளிலிருந்து காக்கும் சக்தி. சிவனும் சக்தியும் இணைந்தால்தான் சூரன் அழிவான். இங்கே சிவகுமாரன் சுப்ரமணியன், சக்தி தந்த வேலை பெற்றுக்கொண்டதால், சிவசக்தி ஸ்வரூபனாக ஆகிவிடுகின்றான். அன்னை கொடுத்த அந்த வேல், சக்திவேல்! அது ஞானவேல், வீரவேல், வெற்றிவேல்!

வேலைத் தாங்கிய வேலவன் சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டு, தன்னை எதிர்த்த தாரகன் மற்றும் சிங்கமுகன் ஆகியோரை அழித்து, இறுதியில் சூரபத்மனை எதிர்த்து நின்றான்.

தான் பெற்ற வரங்கள், செல்வங்கள், தன்னைச் சுற்றியுள்ள அரக்கர்கள் பலம் ஆகியவற்றை நம்பி, அதுவரை இறுமாந் திருந்தான் சூரபத்மன். ஆனால், போரில் தன் தம்பியரையும், தன் கூட்டத்தினரையும், நாடு- நகரங்களையும் இழந்து, தனியாக நின்று போர் புரியும்போது, எதிரில் நிற்பது சிவசக்தியின் அம்சம் என்று உணர்ந்தான்.

சிவனாலும் அழிவில்லை; சக்தியாலும் அழிவில்லை என்று வரம் பெற்றிருந்த சூரபத்மன், அந்தக் கடைசி நேரத்தில், தான் பெற்றிருந்த வரத்தின் பலனை- தனது சக்தியை எல்லாம் சிவார்ப்பணம் செய்து, களத்திலேயே தன் உதிரத்தால் பூமிக்கு தாரை வார்த்தான். அழிவே வரக்கூடாது என்று வரம் கேட்டபோதும், அழிவு அவனைத் தேடி வந்து கொண்டிருந்தது. அதைத் தடுப்பதற்கு தான் பெற்ற தவப்பலனையெல்லாம் தானம் செய்தபோது, அந்தப் புண்ணியம் அவனை அழிக்காமல் காக்கும் அரணாக நின்றது.

சக்திவேலில் பிரணவத்தை ஓதி, சூரனின் மார்பை நோக்கி எறிந்தான் முருகன். அந்த ஒரு கணத்தில் சூரன் ஒரு மாமரமாகி நின்றான். வேல், மரத்தை இருகூறாகப் பிளந்தது. ஒரு கூறு சேவலாகவும், மறு கூறு மயிலாகவும் மாறியது. சேவலைத் தன் கொடியில் இருக்கச் செய்து, மயிலைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டான் முருகன். முருகப் பெருமான் எய்த வேல் அவனது கரத்துக்கே திரும்பி வந்தது. இந்த வரலாற்றை, தமிழில் இருபொருள்படக் கூறுவர். 'கந்தன் சட்டியில் மாவறுத்தான்’ என்ற வாசகத்தின் பொருள்... கந்தனாகிய முருகன், சஷ்டி திதியில் மாமரமாக நின்ற சூரனை இருகூறாக்கினான் என்பதுதான்.

முருகனை வழிபடுகையில், அவன் கரத்தில் உள்ள சேவற் கொடியையும், வாகனமான மயிலையும் சேர்த்தே வணங்குகிறோம். சூரனாகவும் பதமனாகவும் தோன்றி, சூரபத்மனாக வாழ்ந்தவன், மீண்டும் இரு கூறாகி, சேவலாகவும் மயிலாகவும் முருகனுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்று, அனைவராலும் வணங்கப்படும் தகுதி பெற்றான்.

'அசுரனை வணங்கலாமா?’

என்ற கேள்வி பிறக்கலாம். ஆண்டவன் வடிவில் ஒரு அம்சமான பிறகு, அசுரனும் தேவனாகிவிடுகிறான்.

சுப்ரமணியன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை; ஸ்வீஹாரம் செய்துகொண்டான். அந்தத் திருநாள்தான் கந்த சஷ்டி!

- இன்னும் சொல்வேன்...