Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

புனர்வசு நட்சத்திரத்தை, புனர்பூசம் என்றும் சொல்வோம். அதன் முதல் மூன்று பாதங்கள் மிதுன ராசியிலும், மிஞ்சிய பாதம் கடக ராசியிலும் பரவியிருக்கிறது. மிதுனத்துக்கு அதிபதி புதன்.  கடகத்திலும் பரவியிருப்பதால், பலன் சொல்லும்போது, சந்திரனின் பங்கும் சேர்ந்துவிடும். அம்சகத்தில் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் அவர்களையும் பலன் சொல்லும்போது கவனிக்க வேண்டிய கட்டாயம் உண்டு!

ராசிக்கு அதிபதியாக இருக்கும் கிரகம், அதில் அடங்கிய மூன்று நட்சத்திரங்களிலும் இணைந்திருக்கும். நட்சத்திரத்துடன் தொடர்பு இருப்பவன், ராசியில் முழுமையாகப் பரவியிருக்க இயலாது. எனவே, ராசி அதிபதிக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. இங்கு ராசிக்கு அதிபதி புதனுக்கு ராசியிலும் அம்சகத்திலும் இடமுண்டு. அதேபோல், 4-ஆம் பாதத்தில் பிறந்தவருக்கு சந்திரன் கடகத்திலும் அம்சகத்திலும் இடம்பிடித்துவிடுவான்! சந்திரன் மற்றும் புதன் ஆகியோரின் தொடர்பு வலுப்பெற்றிருப்பதால், அவர்களின் தாக்கம் புனர்வசு நட்சத்திரத்தில் அதிகமாகவே இருக்கும்.

காலபுருஷனின் கழுத்து, தோள்பட்டை இரண்டிலும் இடம் பிடித்த நட்சத்திரம் அது! வார்த்தையை அளந்து பேசவும், சொன்ன சொல்லை நிறைவேற்றவும் தகுதி இருக்கும். இந்த நட்சத்திரக்காரர்கள் இனிமையாகப் பேசி, அனைவரையும் ஈர்ப்பார்கள். புனர்வசுவில் தோன்றிய ஸ்ரீராமரிடம் இந்த குணங்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றன புராணங்கள்!

புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவர், முதலில் குரு தசையைச் சந்திப்பார். விசாகத்துக்கும் பூரட்டாதிக்கும் இது பொருந்தும். அது, 16 வருடங்கள் வரை நீடித்திருக்கும். புக்தியிலும் அந்தரத்திலும் மற்ற கிரணங்களுடன் இணைந்து பலன் தந்தாலும், பெரும்பாலும் முற்பிறவி கர்ம வினையின் நல்ல பலனை வெளியிடுவான் எனும் சிறப்பு உண்டு. பண்பாளனாக மாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறான்.

'வசு’ என்றால் செல்வம். சேமித்த செல்வம் கரைந்தாலும் திரும்பவும் சேமிப்புத் தொடரும். 'புன:’ திரும்பவும் 'வசு’ செல்வம் எனும் விளக்கம், அதற்குப் பொருந்தும். அதன் தேவதை அதிதி. நட்சத்திரத்துடன் இணைந்த அதிதி, நாங்கள் அளிக்கும் உணவை ஏற்று, எங்களை வளமான வாழ்க்கையுடன் இணைக்க வேண்டும்  என்ற வேண்டுகோள், வேதத்தில் உண்டு (புனர்னோ தேவ்ய திதி:...).

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வாழ்க்கையைச் சுவைக்க செல்வம் வேண்டும். நிலையாக இருக்காத செல்வத்தை, தன் அருளால் நிலைத்திருக்கும்படி செய்வது அதிதி. சேமிப்பு கரைந்தாலும் திரும்பவும் சேமிப்பு இருக்கும். ஆசாபாசங்கள் அவர்களை அழுத்தினாலும் புலன்களை அடக்கும் வல்லமை இருக்கும். படபடப்பு, அழுத்தம் ஆகியவற்றைச் சந்திக்காத மனம், இன்பத்தைச் சுவைத்து மகிழும். பிறரை ஈர்க்கும் இயல்பு தென்படும். சில தருணங்களில், தவறான சிந்தனையிலும் பிணியை வரவழைத்து அதில் சிக்கித் தவிப்பதும் உண்டு. கட்டுக்கு அடங்காத ஆசையும் சில வேளைகளில் தலை தூக்கும் என்று புனர்பூச நட்சத் திரத்தில் பிறந்தவர்களது குணாதிசயங்களை வரையறுக்கிறார் வராஹமிஹிரர்.

இந்த நட்சத்திரக்காரர்கள், வாழ்வில் பல மேடு - பள்ளங்களைக் கடக்க வேண்டியிருக்கும். புகழை அடைவதற்கு மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொள்ளவேண்டியிருக்கும். குடும்பச் சுமை அழுத்தும். நோய்கள் பலவும் அவர்களைத் தாக்கும். ஆனாலும் எதிலும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவார்கள் என மாறுபட்ட விளக்கம் தருகிறார் பராசரர்.

பாங்கான உடல் அமைப்பு, செல்வச் செழிப்பு, உடல் - உள்ளம் ஆகிய இரண்டிலும் வலிமை, பெருமை, புகழ், கவிதை புனைகிற தகுதி, அளவு கடந்த ஆசை ஆகியவை அவர்களில் தென்படும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

##~##
முதல் பாதத்தில் பிறந்தவர், வாழ்க்கையை இன்பமாகக் கழிப்பர். இரண்டாவதில் அறிஞனாகத் திகழ்வர். மூன்றாவதில், உடல்நலம் குன்றி துயரத்தைச் சந்திப்பார்கள். நான்கில், பொய் பித்தலாட்டத்தில் நாட்டம் இருக்கும் என்று
பிரஹத் சம்ஹிதை
வரையறுக்கிறது.

அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய வற்றை முறையே சரம் என்றும் அசரம் என்றும் குறிப்பிடு வார்கள். அந்த இரண்டும் இணைந்ததே உலகம். அதனை 'சராசரம்’ என்போம். அசையும் பொருளுடன் இணைந்த செயல்பாடுகளுக்கு உகந்த நட்சத்திரம் புனர்பூசம் என்கிறது முகூர்த்த சாஸ்திரம். உலக அலுவல்கள் அனைத்தும் சரத்தில் அடங்கும். அவற்றில் புனர்பூசத்தின் இணைப்பு, சிறப்பைத் தரும் என்கிறார் பராசரர்.

குடுமிக் கல்யாணத்தை புனர்வசுவில் நடைமுறைப் படுத்து என்கிறது தர்மசாஸ்திரம் (த்ருதீயே வர்ஷே சௌனம் புனர்வஸ்வோ:). திருமணம் முதலான மங்கலகரமான விஷயங்களின் சிறப்புக்கு புனர்பூசம் ஒத்துழைக்கும்.

நல்லவேளைகளை, பொழுதுகளை வரையறுத்துக் கூறுவது முகூர்த்த சாஸ்திரம். அதாவது ஜோதிடத்தின் தனிப்பிரிவு. இது, அஸ்ட்ரானமி, (அஸ்ட்ராலஜி அல்ல). பிறப்பின் வேளையை வரையறுப்பது அஸ்ட்ரானமி. அவர்களின் செயல்பாடுகளுக்கு உகந்த நட்சத்திரங்களை அது தெரிவிக்கும். பிறந்த நட்சத்திரத்தில் இருந்து, 3,5,7 நட்சத்திரங்கள், எட்டாவது ராசியில் இணைந்த நட்சத்திரங்கள், 22-வது நட்சத்திரம், 88-வது நட்சத்திர பாதம்... அது சில பொழுது 23-வது நட்சத்திரத்திலும் தென்படும். 27-வது நட்சத்திரம், அதாவது 108-வது பாதம் சிலபொழுதுகளில் 28-லும் தென்படும். இவற்றை விலக்கி மற்றவற்றை ஏற்கச் சொல்லும். இதனை தினப்பொருத்தத்தில் சேர்த்துக்கொண்டிருக்கிறது அஸ்ட்ராலஜி (அதாவது, பலன் சொல்லும் ஜோதிடம்).

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

முதல் சுற்றில்  உள்ள 9 நட்சத்திரங்களில், 3,5,7-ஐ விலக்க வேண்டும். 2-வது சுற்றில் வரும் 9-ல், 3,5,7 நட்சத்திரங்களில் மூன்றில் முதல் பாதம், 5-ல் நான்காம் பாதம், 7-ல் 3-ஆம் பாதம் ஆகியவற்றை மட்டும் விலக்கினால் போதும். 3-வது சுற்று 9-ல், 3,5,7 நட்சத்திரங்களில் பாபாம்சம் இருக்கும் பாதத்தை மட்டும் விலக்கினால் போதும் என்று வித்யாமாதவீயம் முதலான நூல்கள் பரிந்துரைக்கின்றன. செயல்பாட்டுக்கு இடையூறு உள்ள பகுதியை மட்டும் துல்லியமாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளது ஜாதகாதேசம். ஆறு ராசியைத் தாண்டிய ராசிப் பொருத்தத்தை ஏற்கச் சொல்கிறது அது. அதைச் செயல்படுத்தும்போது, பொருத்தமின்மை தானாக விலகிவிடும்.

பத்துப் பொருத்தங்கள் அனைத்தும் நட்சத்திரத்தைக் கொண்டு எழுந்தவையே! அதன் பெருமை அங்கும் வெளிப்படுகிறது. நட்சத்திரங்கள் கண்களுக்குப் புலப்படுவதால், அதன் நம்பகத்தன்மை வலுப்பெறுகிறது. நம் உடல், ஐம்பெரும் பூதங்களின் பங்கில் உருவானது. நம் செயல்பாடுகளும் வளர்ச்சியும் ஐம்பூதங்களின் இணைப்பில் நிறைவுறுகிறது. பிருத்வி, நீர், நெருப்பு, காற்று, இடைவெளி அதாவது ஆகாயம் ஆகியன உடலில் இணைந்திருக்கும். ஆகாசத்தில் உள்ள நட்சத்திரங்களும் அதில் அடங்கும். வெளியே தென்படும் ஆகாசம், நம் உள்ளேயும் உண்டு என்கிறது உபநிஷதம் (யாவான்வா ஆகாச: தாவான் அந்தர் ஹிருதய ஆகாச:).

கண்ணுக்குப் புலப்படும் நட்சத்திரத்தின் பகுதி நம்மிலும் உண்டு. அதன் தாக்கம், நம்மில் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது ஜோதிடம். பவர்ஹவுஸின் தாக்கம், வீட்டு மின்விளக்கை பாதிப்பது உண்டு. பிறந்த வேளை, லக்னம் ஆகியவற்றைக் கொண்டு பலன் சொல்லும் வேளையில், சந்திரனை லக்னமாகப் பாவித்து, அதன் பலனையும் சேர்த்து ஆராயவேண்டும் என்கிறது ஜோதிடம்.

லக்ன பலத்தில், சந்திரன் மூலமாக நட்சத்திர பலமும் சேர்ந்துவிடுகிறது. அருவமான ராசிக்கு உருவம் அளித்ததே நட்சத்திரங்கள்தான்! ஒன்பது கிரகங்களின் பயணப் பாதையாக செயல்படுவது நட்சத்திரங்கள். ஒன்பது கிரகங்களின் தசைகளை வரையறுப்பதும் இவையே! கிரகண தோஷம் நட்சத்திரத்துடன் இணைந்து நம்மை ஆட்கொள்கிறது. உயிர் பிரிந்தவரின் தரத்தை, 'தனிஷ்டா பஞ்சகம்’ அதாவது அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் வரையறுக்கின்றன. ஆகவே, ஜோதிடத்தின் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருக்கிற நட்சத்திரத்தின் பங்கைப் புரிந்து செயல்படுவது சிறப்பு என்கிறது தர்மசாஸ்திரம்.

'அம் அதித்யை நம:’ என்று சொல்லி வழிபடவேண்டும். அவள், அனைத்துச் செல்வங்களையும் அள்ளித் தருபவள் என்கிறது வேதம் (ஸவாஹா பூத்யை ஸ்வாஹா ப்ரஜாத்யை ஸ்வாஹா).

'அதிதி: பாசம் ப்ரமுமோத்து’ என்ற மந்திரத்தைச் சொல்லலாம். அறியாதவர்கள், 'புத்ர பௌத்ராயு ராரோக்ய தனதான்ய ப்ரதாம் சுபாம். ப்ரணமாமி ஸதாபக்த்யா அதிதிம் தேவமாதரம்’ எனும் செய்யுளை 12 முறை சொல்லி, 16 உபசாரங்களை நடைமுறைப் படுத்தி வழிபடலாம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

மனத்துடன் இணையாத எந்தச் செயல்பாடும் விரும்பிய பலனைத் தராது. கண்ணால் பார்க்கிற தெய்வத்தின் வடிவத்தை மனதில் பதியவைத்து வழிபடவேண்டும். வழிபாட்டில், மனமானது ஆழ்ந்து இணைய வேண்டும். இறையுருவத்தின் நினைவு, மன அழுக்குகளை அகற்றிவிடும். அறியாமை விலகி, ஆசைகள் ஈடேறிவிடும். அசைந்து கொண்டிருக்கும் மனதை அசையாமல் நிறுத்த வேண்டும். அலுவல்களில் இருந்து முற்றிலும் அறுபட்ட நிலையில் இருக்கவேண்டும். வணங்குதற்குரிய இறையுருவ நினைவுடன் மந்திரத்தையும் அசை போடவேண்டும். திரும்பத் திரும்ப அதைச் செயல்படுத்தினால், மனம் நம் விருப்பத்துக்குக் கட்டுப்படும் என்கிறான் ஸ்ரீகண்ணபிரான் (அப்யாசேனது கௌந்தேய வைராக்யேசை கிருஹ்யதெ).

நம் செயல்பாட்டின் வரைபடம் மனதில் உருவாகும். தெளிந்த மனமானது, உரிய வரை படத்தை அளிக்கும். துயரத்தை உருவாக்குவதும் பின்பு சிக்கித் தவிப்பதும் நம் மனமே என்கிறது தர்ம சாஸ்திரம் (மனஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ:).

ஒளியை நெருங்கும் விட்டில்பூச்சியைக் காப்பாற்ற, விளக்கை அணைத்தான் ஒருவன். தன்னைக் காப்பாற்ற முற்பட்டவனை கோபித்துக் கொண்டது விட்டில்பூச்சி என்கிறது நீதி சாஸ்திரம். விட்டில்பூச்சியின் இயல்பு, சில மனங்களுக்கும் உண்டு. அறியாமையானது, அறிவுரையை ஏற்காது. கெட்டிக்காரத்தனமாக அவர்களை வழிபடச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். கிடைத்த உரிமையை, அறியாமையால் இழக்கக் கூடாது.

இன்றைய கோலாகலச் சூழலில் உயர்ந்த வழி... வழிபாடுதான்!  மாறுபட்ட சிந்தனைகளை ஏற்றுச் செயல்படத் துணிந்துவிட்டால், பெரு வழியில் திக்குத் தெரியாமல் தவிக்க நேரிடும். ஆகவே, விழிப்புடன் வழிபாட்டில் இறங்குங்கள்; வளமாக வாழ்வீர்கள்!

- வழிபடுவோம்