Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கு
ழந்தைகள், தங்களுக்குத் தின்பண்டமோ விளையாட்டுப் பொருள்களோ வேண்டும் என்றால், தகப்பனிடம் கேட்பார்கள். ஆனால், எல்லா நாளிலும், எப்போதும் கேட்டால் கிடைத்துவிடுமா? அப்பா மாதச் சம்பளம் வாங்கிய நேரமாகப்பார்த்துக் கேட்டால், கிடைக்கிற வாய்ப்பு அதிகம். அதிலும், போனஸ் போன்ற சிறப்புத் தொகைகள் கைக்கு வந்திருக்கிற தருணத்தில், குழந்தைகள் ஆசைப்பட்டுக் கேட்கும் எதையும் தட்டாமல் வாங்கிக் கொடுக்கும் பாசக்கார அப்பாக்கள் இருக்கிற உலகம்தானே இது?!

அதாவது, கையில் காசு-பணத்துடன் அப்பா தாராளமாக, சந்தோஷமாக, குதூகலமாக இருக்கிறபோது, பிள்ளைகள் என்ன கேட்டாலும் கிடைக்கும். சந்தோஷமாகவும் நிறைவாகவும் இருக்கிற உள்ளம், பிறரையும் சந்தோஷப்படுத்தும்; நிறைவாக்கும்! நமக்கெல்லாம் தகப்பனாகத் திகழ்கிற ஸ்ரீபரமேஸ்வரனிடம், எல்லா நாளிலும், என்ன கேட்டாலும் கிடைக்கும் என்பது உண்மைதான். என்றாலும், முக்கியமானதொரு நாளில், நாம் கேட்பனவற்றையெல்லாம் தந்தருளும் மகிழ்ச்சியான நிலையில் இருக்கிறார் சிவனார். அந்த நாள்... பிரதோஷத் திருநாள்!  

கடந்த பல வருடங்களாக, தமிழகத்தில் இரண்டு விஷயங்கள், மக்களால் அதிகம் வழிபடப்பட்டு வருகின்றன. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, மிகச் சொற்பமான அளவு பக்தர்களே திருவண்ணாமலைக்கு வந்து, கிரிவலம் மேற்கொண்டார்கள். திருவண்ணாமலை, புராதனமான தலமாக இருந்தாலும், அங்கே கிரிவலம் வந்து, இறைவனை வணங்கும் முறை குறித்து அவ்வளவாக யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னர், இதை அறிந்த அன்பர்கள், திருவண்ணாமலை கிரிவல தரிசனத்தை மெள்ள மெள்ள மேற்கொள்ளத் துவங்கினார்கள். இன்றைய தினம் பௌர்ணமியன்று பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கிரிவலம் வருகிறார்கள். அதேபோல், பிரதோஷ வழிபாடு என்பதும் புராண காலம் தொட்டே இருந்து வருவதுதான். சிவாலயங்களில் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருக்கு வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. என்றாலும், கடந்த பதினைந்து வருடங்களில், பிரதோஷத்தன்று சிவாலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடுகிற அன்பர்கள் அதிகரித்துவிட்டனர்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இரவும் பகலும் உரசிக்கொள்கிற அந்தி வேளையே பிரதோஷ காலம்! இந்த நாளில், சிவ தரிசனம் செய்து, நந்திதேவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதற்காக, அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொண்டு, அலுவலகத்தில் அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு, பிரதோஷ பூஜையில் பங்கேற்கிற அன்பர்களைப் பார்க்க முடிகிறது.

பிரதோஷம் என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. பிரபஞ்சத்துக்கு வந்த பேராபத்தை, மிகப் பெரிய தோஷத்தை நிவர்த்தி செய்த வேளையைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதிலிருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு, உலகைக் காத்தருளி, திருநீலகண்டன் எனும் திருநாமம் பெற்ற நாள்தான் பிரதோஷம். ஆகவே, இந்த நாளில் சிவனாரை வணங்கித் தொழுதால், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அதேபோல், நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில், ஆடல் வல்லானான சிவப்பரம்பொருள் ஆனந்தத் திருநடனம் புரிந்ததும் பிரதோஷ காலத்தில்தான்.

சந்தோஷமாகவும் குதூகலமாகவும் இருக்கிற தகப்பன் தன் குழந்தைகளுக்கு எது கேட்டாலும் வாங்கித் தருவது போல், ஆனந்த நடனம் புரியும் சிவனார், அவர்தம் பிள்ளைகளான நமக்கு, நாம் கேட்பதையெல்லாம் தந்தருள்வார், அந்த நாளில்!

நந்தியின் கொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிகிறபோது, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ஞானிகள் எனப் பலரும் இருந்தனராம். எனவே பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால், அனைவரின் பேரருளும் கிடைத்துப் பெருவாழ்வு வாழலாம் என்பது ஐதீகம்!

ஸ்ரீபிரம்மா, ஸ்ரீபதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் அருள்பாலிக்கிற திருப்பட்டூர் திருத்தலத்தில், பிரதோஷ பூஜையைத் தரிசித்து அருள் பெற இன்னொரு விசேஷ காரணமும் உண்டு. ஸ்ரீமகாவிஷ்ணு இரண்யனை ஸ்ரீநரசிம்மமாக அவதரித்து வதம் செய்தார் அல்லவா? அந்தத் திருநாளும்கூட, இரவும் பகலும் அல்லாத அந்திப்பொழுதான பிரதோஷ காலத்தில்தான்!

இங்கே, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில், நந்திதேவருக்கு அருகில் உள்ள தூண்களில்,  நரசிம்ம மூர்த்தம் இரண்யனை வதம் செய்யும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அதாவது, பிரதோஷ நாளில் நந்திதேவரையும் ஸ்ரீநரசிம்மரையும் ஒருசேரத் தரிசித்து, சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

சோமவாரப் பிரதோஷமும் சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷமும் மிகச் சிறப்பு வாய்ந்ததாகச் சொல்வர். சோமவாரப் பிரதோஷம், சொத்துகளை மீட்டுத் தரும்; சனிப் பிரதோஷ தரிசனம் சர்வ பாப விமோசனம்! இங்கே... திருப்பட்டூர் தலத்தில், எந்த நாளில் வருகிற பிரதோஷமாக இருந்தாலும், ஸ்ரீகாசி விஸ்வநாதரையும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்தால், இந்த வாழ்க்கையின் மொத்த கவலைகளும் சோகங்களும் காணாமல் போகும்! இந்த அற்புத நாளில், இங்கு வந்து தரிசித்துப் பலன் பெற்ற அன்பர்கள் ஏராளம். அவர்களின் அனுபவங்கள்... கேட்கக் கேட்க, சிலிர்ப்பைத் தருபவை.

ஆகவே, பாவங்கள் விலகி புண்ணியங்களைப் பெருக்குகிற பிரதோஷ நாளில், திருப்பட்டூருக்கு வாருங்கள். இங்கு ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீவிசாலாட்சியையும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரியையும் மனதார வழிபடுங்கள்.

முடிந்தால் விபூதி, திரவியப்பொடி, பன்னீர், பால் முதலான அபிஷேகப் பொருட்களுடன் செல்லுங்கள். நந்திதேவருக்குச் செய்கிற அபிஷேகத்தில், சிவனார் குளிர்ந்து போவார்; நீங்கள் கேட்டதையெல்லாம் தந்து, உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நல்லவிதமாக திசை திருப்பி அருள்வார்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism