Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

Published:Updated:
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நினைக்க நினைக்க பெரிய ஆச்சரியம் பரவுகிறது. எங்கோ ஐரோப்பாவில் வாழ்ந்து, உலக வரைபடத்தில் உள்ள தேசங்களைத் துழாவிக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளருக்குச் சரியான ஆன்மிக வழிகாட்டி பகவான் ஸ்ரீரமணரே என்று தெரிவித்த மகா பெரியவாளின் தீர்க்கதரிசனம் பெரும் வியப்பு தருகிறது.

கேள்விகள் அதிகமுள்ள அந்த ஐரோப்பியர் பால் பிரண்டனுக்குச் சகலமும் வியப்பாக இருந்தது. ஆனாலும், உள்ளே ஏதோ ஓர் அமைதி படர்வதை உணர்ந்தார். நேரம் செல்லச் செல்ல, தன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து காலி ஆவதையும், தான் வெறுமே அமர்ந்திருப்பதை சுகமாக அனுபவிப்பதையும் அறிந்துகொண்டார். 'இதென்ன, இங்கு நினைவுகளே வரவில்லை. நாலா பக்கமும் அலைகின்ற மனது, தன்னுடைய சுயம் விட்டு, ஏதோ மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல அமர்ந்திருக்கிறதே! அமைதியாக இருக்கிறதே’ என்று வியந்தார். இப்படி ஒரு தன்மை தனக்கு இதுவரை ஏற்பட்டதே இல்லையே... இது இவரால் ஏற்படுகிறது என்பதையும் தெரிந்துகொண்டார்.

மகரிஷியிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா என்று ஒருவர் கேட்டதற்கு, 'இல்லை... கேள்வி கேட்க எதுவும் இல்லை; கேட்பதற்காகவே வந்தேன். ஆனால், இப்போது கேட்கும் நிலையில் நான் இல்லை’ என்று பால் பிரண்டன் மறுத்துவிட்டார். மதிய இடைவேளைக்குப் பிறகு மகரிஷியைப் பார்க்க மறுபடி வந்தபோது, பால் பிரண்டனுக்குத் தேவையான காரமில்லாத உணவைத் தன்னால் கொடுக்கமுடியாமல் போனதற்காக, மகரிஷி வருத்தப்பட்டதாகச் சொன்னார்கள்.

##~##
''உணவு முக்கியமில்லை, மகரிஷி! நான் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகவே வந்திருக்கிறேன். மேற்கத்திய விஞ்ஞானிகள், வாழ்வின் உண்மையைச் சொல்லவில்லை; மறைபொருளைக் காட்டவில்லை. மக்கள் சுக சௌகரியங்களுக்காகப் பேராசைப்பட்டு அலைந்து, அமைதி இழந்து இருப்பதையே நான் கவனித்திருக்கிறேன். இதுபற்றி நான் பலபேரிடம் பேசியும் எனக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. எனக்கு எது உண்மை என்று தெரிந்தாக வேண்டும். அதற்காகவே நான் உங்களை நாடி வந்திருக்கிறேன்'' என்று பணிவாகப் பேசினார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ஸ்ரீரமணர், 'நான், நான் என்று சொல்கிறாயே, அந்த நான் எது? அந்த நான் யார் என்று தெரியுமா?’ எனக் கேட்டார்.

பால் பிரண்டன் தலையசைக்கிறார். ''தெரியும். இவனுக்குச் சிந்திக்கத் தெரிந்த நாளிலிருந்து இவன் யார் என்பதை இவன் அறிவான்.''

''இப்போது, நான் என்று நீ சொல்வது உன் உடலை அல்லவா? உனக்கு உடலுக்குள் இருக்கின்ற அந்த விஷயம் என்ன என்பதை அறிவாயா? அதை எப்படிக் கண்டுபிடிப்பது?''

''நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும். இதற்கு என்ன பயிற்சி இருக்கிறது நீங்கள்தான் விளக்க வேண்டும்.''

''உன் மனம் என்ன செய்கிறது என்பதை இடைவிடாது பார். உன் நிலையைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதிலிருந்து உனக்கு விடை கிடைக்கும்.''

''நான் தியானம் செய்து வருகிறேன். ஆனால் அதில் முன்னேற்றம் இல்லை.''

''முன்னேற்றம் இல்லை என்பது உனக்கு எப்படித் தெரியும்? ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் என்பதை எளிதில் அறிய முடியாது.''

ஸ்ரீரமண மகரிஷி

''என் எதிர்காலம் எப்படி இருக்கும்?'' பிரண்டன் மிக சாதாரணமான ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

''நிகழ்காலத்தைப் பற்றியே தெரிந்துகொள்ள முடியாதபோது, எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் என்ன பயன்? இப் போதுள்ள உன்னைக் கவனி.''

''உலகத்தைச் சுற்றிப் பல பிரச்னைகள் உள்ளன. எதிர் காலத்தில் மக்கள் நட்போடு பழகுவார்களா அல்லது யுத்தத்தில் இந்த உலகம் மூழ்கிப்போகுமா?''

''இந்த உலகைப் படைப் பவனுக்கு இந்த உலகத்தைக் காப்பதற்கும் தெரியும். உலகத்தைப் படைப்பவனே காப்பான்; நீ அல்ல! எனவே, இதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.''

''மகரிஷி, நான் சுற்றிப் பார்க்கி றேன் கடவுளுடைய கருணையைக் காண்பது அரிதாக இருக்கிறது.''

''நீ யாரென்று அறியாமல், உலகத்தைப் பற்றி அறிந்து என்ன புண்ணியம்? அதுவும் இல்லாமல், உன் சக்தியை உலக விவகாரங் களில் செலுத்தி ஏன் வீண் செய் கிறாய்? உன்னை நீ அறி. அப்போது, உலகம் பற்றிய தெளிவும் உனக்கு நிச்சயம் ஏற்படும்.''

''ஒருவன் உண்மையை அறிய வேண்டுமென்றால் அல்லது தன்னை அறிய வேண்டுமென்றால், காட்டுக்குப் போய் தனியே அமர்ந்து தவம் செய்ய வேண்டுமென்று யோகிகள் சொல்கிறார்களே. இது உண்மைதானா?''

''அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ கண்மூடி அமர்ந்து தியானம் செய்தால் போதும். அந்தத் தியானம் உன் மற்ற வேலைகளை மிகத் தெளிவாக்க உதவும். அதாவது, செய்கின்ற வேலைகளையெல்லாம் கூட தியான நிலையில் இருந்து செய்ய முடியும். தியானம் என்பது, ஒரு நாள் முழுவதும் வாழும் வாழ்க்கையாகிவிடும் தியானத்தின்போது இருந்த உணர்வே மற்ற வேலைகள் செய்யும்போதும் ஏற்படும்.''

''இதனால் ஏற்படும் விளைவு என்ன?''

''அப்போது உலகத்தின் மீதும், மற்றவர் மீதும், உன் மீதும் நீ கொண்டிருந்த கருத்துக்கள் மாறும்.''

''ஒருவன் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டே ஞானம் அடையலாம் என்று சொல்கிறீர்களா?''

ஸ்ரீரமண மகரிஷி

''ஏன் முடியாது? அப்போது, ஒருவன் எந்த வேலையையும் தான் செய்வதாக நினைக்க மாட்டான். அதில் உள்ள லாப-நஷ்டங்களுக்கு அப்பால், எது சத்தோ அதில் மனம் லயித்திருக் கும். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்பது ஆரம்ப சாதகர்களுக்கு ஒதுக்கப்பட்டது. எல்லா நேரமும் தியானத்தில் இருப்பது என்பது இதனால் ஏற்பட்ட பிறகு, வாழ்க்கை வேறு விதமாக இருக்கும்.''

''ஆத்மா என்கிறீர்கள்; ஆத்மாவைத் தேடு என்கிறீர்கள். அறியப்படும் ஆத்மா, அறியும் ஆத்மா என இரண்டு இருக்கிறதா?'' என்று கேட்கிறார் பால் பிரண்டன்.

''எப்படி இரண்டு ஆன்மா இருக்க முடியும்? நீ உன்னை உண்மையில் யார் என்று உணர்வதே இல்லை. நீ உன்னை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாய். உன்னை உடலாக, புத்தியாக, இது செய்பவனாக, அது செய்பவனாக நினைத்துக்கொண்டிருக்கிறாய். உண்மையில் நீ யார் என்ற உணர்வு உனக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த மறைப்புகளுக்கு அப்பால் இருக்கின்ற உன்னை நீ தேடுகிறபோது... அதாவது, நீ கற்பிதமாகக் கொண்டிருந்த நினைப்புகளை ஒவ்வொன்றாக உதறிவிட்டு உன்னைப் பார்க்கிறபோது ஓர் உண்மை புலப்படும். அந்த மனத்திலிருந்து, பின்னால் ஒரு பெரிய விஷயம் எழுந்து நிற்கும். அது உன்னை முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். அந்த ஏதோ ஒன்றுதான் மனத்தின் பின்னால் இருப்பது.

அது அகண்டமானது, உத்வேகமானது, நிலையானது. சில மதத்தினர் இதை 'சொர்க்கத் தின் சாம்ராஜ்ஜியம்’ என்கிறார்கள். இன்னொரு மதத்தினர் இதை 'ஆன்மா’ என்கின்றனர். சிலர் 'நிர்வாணா’ என்கின்றனர். இந்துக்களாகிய நாங்கள் இதை 'முக்தி’ என்கிறோம். எந்தப் பெயரில் அழைத்தாலும், சத்தியம் ஒன்றுதான். பின்னால் இருக்கின்ற அது எது? உனது கற்பிதங்கள் எவை? கற்பிதங்களை எல்லாம் உதறி விட்டு, எது எது எது என்று கேட்கும்போது, அது எழுந்து உன்னை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அப்போது, இந்த நிலை ஏற்பட்டால், உன்னை இழந்து விடுவதில்லை. மாறாக, உன்னை யார் என்பதைத் தெளிவாக உணர்கிறாய்.

உலகத்தில் பேரரசர்களும், அரசியல்வாதிகளும் எதையோ ஆளவேண்டும் என்று ஆசைப்படு கிறார்கள். உண்மையில், தன்னை ஆளமுடியாதவனால் மற்றவரை எப்படி ஆள முடியும்? கடவுள் என்பது என்ன என்ற புதிருக்கு விடை தெரிந்துவிட்டதா? அது தெரியாமல் வேறு என்ன தெரிந்துவிட்டதாம்?''

''அப்படித் தேடுவது மேற்கத்தியருக்கு எளிதா?''

''இது எல்லோருக்கும் எளிதான வழி. இந்தியர், மேற்கத்தியர் என்று எந்தப் பிரிவும் இல்லை. கடினம் என்று நினைக்கிறாயே, இது நீ நினைத்ததைவிட எளிதானது. என்னால் முடியுமா... முடியாது போல் இருக்கிறதே என்ற எண்ணமே மிகப் பெரிய தடை. இந்தத் தோல்வி மனப்பான்மையே இதற்கு இடைஞ்சல். என்னால் முடியும் என்று செயலுக்குள் இறங்குகிற போது, வாழ்வைச் செம்மையாக்குகிறாய் என்பதைப் புரிந்துகொள். தன்னை செம்மை யாக்கிக்கொள்வதை விட்டுவிட்டு, இங்கு செய்ய வேண்டியது வேறு என்ன இருக்கிறது? கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டும். ஒவ்வொருவராலும் செய்யப்பட வேண்டும்.''

சிறிது நேரம் கேள்வியற்று, பால் பிரண்டன் மகரிஷி முன்பு அமர, ஸ்ரீரமணரின் பார்வை அவர் மீது குவிகிறது. பால் பிரண்டன் தன் உடல் உணர்வை இழந்துவிடுகிறார். எல்லா இடத்திலும் பரந்துபட்டு இருப்பதாக உணர்கிறார். அந்த உணர்வில் இருந்து விடுபட்டு மீண்டும் தன்னிலை பெறுகிறார். மனம் மிக அமைதியாக இருக்கிறது.

எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்த ஆசையும் இல்லாமல், எந்தப் பரபரப்பும் இல்லாமல் சுருண்டு, பேச்சற்று இருக்கிறது.

''மகரிஷி, நீங்கள் என்னைச் சீடனாக ஏற்க முடியுமா?'' - பால் பிரண்டன் ஸ்ரீரமணரை நோக்கிக் கை கூப்பிய வண்ணம் கேட்கிறார்.

''குரு- சீடன் என்பதெல்லாம் என்ன? இந்த பேதங்கள் எல்லாம் சீடனுடைய பார்வையில்தான்! ஆனால், ஆன்மாவை அறிந்த பிறகு குருவும் இல்லை; சீடனும்

இல்லை. எல்லோரையும் அவன் சம திருஷ்டியால் நோக்குகிறான். எந்த வித்தியாசமும் இல்லாமல் பார்க்கிறான்.''

''காட்டுக்குப் போய் அமர்ந்து விட்டால், என் கவனத்தை யாரும் திருப்ப முடியாதல்லவா? ஒரு நகரத்தில் என் மனம் சிதறு வதற்கு வாய்ப்பு இருக்கிறதே?'' - பிரண்டன் வினவுகிறார்.

''நீ அடையவேண்டிய இலக்கை அடைந்து விட்டால், உள்ளிருக்கிற உன்னைத் தெரிந்து விட்டால், காடாக இருந்தாலும் நாடாக இருந்தாலும் ஒன்றுதான்!''

''உயர்ந்த நிலையைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால், வாழ்க்கையில் இந்தியர்கள் முன்னேற வில்லையே?''

''ஆமாம். நீ சொல்வது உண்மைதான். நாங்கள் பின்னடைந்த வர்க்கம்தான். ஆனால், அதற்காக நாங்கள் சந்தோஷமாக இல்லை என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. எங்களது தேவைகள் மிகக் குறைவானவை. அதிகமான தேவைகளும், உடைகளும் இருக்கின்ற ஐரோப்பியர் சந்தோஷ மாக இருக்கிறார்களா? சந்தோஷம் இல்லாதபோது தேவைகள் அதிகரித்தோ, குறைவாகவோ இருப்பதில் என்ன லாபம்? அது என்ன கணக்கு? தேவைகள் என்பது சந்தோஷத் துக்குத்தானே! எல்லாத் தேவைகள் இருந்தும் சந்தோஷம் வரவில்லை எனில், மனம் அமைதியாகவில்லை எனில்... உன் தேவைக்கு, நீ அடைந்த லாபங்களுக்கு என்ன அர்த்தம்?''

ஸ்ரீரமண மகரிஷி

பிரண்டன் லண்டனுக்குப்போய் 'A Search in Secret India’ என்ற புத்தகம் எழுதினார். பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், இந்தப் புத்தகம் மூலம் கிடைத்த பாராட்டே இன்னும் நிலைத்து நிற்கிறது. பால் பிரண்டன் அந்தப் புத்தகத்தில் மகரிஷியைப் பெரிதும் பாராட்டுகிறார். 'புத்தகப் படிப்பால் ஏற்பட்ட தத்துவ ஞானமோ, விஞ்ஞான அலட்டலோ இல்லாமல், தான் நேரடியாகக் கண்ட தன் அனுபவ உண்மையை, மகரிஷி எளிதான முறையில் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் விளக்கி வைக்கிறார். அதுமட்டும் அல்லாது, அவருடைய பார்வையால், அவரு டைய இருப்பால், ஒரு சூட்சம சக்தியால், வெளியே அலைந்துகொண்டிருக்கிற மற்றவர் மனத்தை அமைதிப்படுத்துகிறார்.

சகலருக்கும் ஒரு வழியைக் காட்டுகிறார். பகவான் ஸ்ரீரமணர், வெறும் உபன்யாசி இல்லை. வெறும் பேச்சோடு அவர் நின்றுவிடுவதில்லை. தன் ஆன்ம அனுபவத்தை மற்றவருக்கு மிக எளிதாக உள்ளுக்குள் செலுத்துகின்ற வன்மையைப் பெற்றவர். பகவானின் மார்க்கம் முரட்டுத்தனமான யோக மார்க்கத்தைப் பின்பற்றாமல், பக்தி மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும் கொண்டது. எப்படி ஒரு முகமதியர் எங்கிருந்தாலும் மெக்காவை நோக்கி அமர்ந்து வழிபடுவாரோ, அப்படி என் மனமும் அவ்வப்போது திருவண்ணாமலைக்கே திரும்பு கிறது. என்னுள் ஒரு புனிதத்தலமாக அது இருக்கிறது. இந்த ஞானியின் காலடியில் இருந்து ஆன்மிக ஜோதி ஏற்றி, அதை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்கே ஆவலாகக் காத்திருக்கும் ஆன்மாக்களுக்கு அளித்தேன். இந்த ஜோதியை அவர்கள் ஆவலோடு வரவேற்றனர். இந்த நல்ல காரியத்துக்காக நான் பெருமை அடையக்கூடாது. ஏனெனில், மேற்கத்திய சாதகர்களுக்குக் கிடைத்த இந்த ஆன்மிக ஜோதி, உண்மையில் மகரிஷி ஏற்றி வைத்தது. நான் வெறும் தூதன் மட்டுமே!’

இன்று திருவண்ணாமலையில் பல தேசத்து சாதகர்கள் வந்து குவிந்து அந்த மலையையும், ஸ்ரீரமணரையும், மற்ற உயர்ந்த ஞானிகளையும் வணங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்குக் காரணம் பால் பிரண்டன்.

ஞானம் என்பது தனிப்பட்ட ஒரு தேசத்துக்கோ, ஒரு மதத்துக்கோ, ஒரு மார்க்கத்துக்கோ சொந்தமானதல்ல. அது மனிதனின் இலக்கு. அவன் இடையறாது தேடி அலைய வேண்டிய விஷயம். அதைத் தேடத் துவங்கியவர்களுக்கு திருவண்ணா மலை ஒரு புகலிடம்; ரமணாச்ரமம் ஒரு பெருங்கோயில்.

பால் பிரண்டனுடைய புத்தகம் இன்னும் பல அரிய செய்திகளை உள்ளடக்கி இருக்கின்றது. ஓர் ஆங்கிலேயனின் பார்வையில் திருவண்ணாமலையை மிக அழகாக அவர் விவரித்து இருக்கிறார். 40 வருடங்களுக்குப் பிறகு, மறுபடியும் திருவண்ணா மலைக்கு வந்து ஸ்ரீரமணரின் சமாதியைத் தரிசித்து இருக்கிறார். 'நாற்பது வருடங்களில் பல விஷயங்கள் மறந்து போயின. ஆனால், பகவான் ஸ்ரீரமணருடைய நினைவு மிகச் செழிப்பாக உள்ளே இருக்கிறது’ என்று சொல்கிறார்.

ஸ்ரீரமண மகரிஷியின் தரிசனம் இன்னும் ரமணாச்ரமத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார் பால் பிரண்டன்.

- தரிசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism