Published:Updated:

ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!
ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

பிரீமியம் ஸ்டோரி

ண்ணுலகில் தர்மம் தழைத்துச் செழிக்கவேண்டும் என்பதற்காக, சிவபெருமான் எண்ணற்ற

ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!

அருளாடல்களை நிகழ்த்தியிருக்கிறார். அப்படி, அருளாடல்களை நிகழ்த்திய இடங்களிலெல்லாம் கோயில்கொண்டு, வழிபடும் பக்தர்களுக்கு அளவற்ற நன்மைகளை அருளியபடி இருக்கிறார்.

அந்த வகையில், இந்தக் கலியுகத்தில் அதர்மங்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநிறுத்தவும் ஐயன் தர்மபுரீஸ்வரர் என்ற திருப்பெயரில் கோயில் கொண்டருளிய தலம்தான், இதோ நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் சோழவித்யாபுரம் அருள்மிகு பாலசுந்தரி சமேத அருள்மிகு தர்மபுரீஸ்வரர் கோயில்.

சுமார் 175 வருடங்களுக்கு முன்பு வரை, இந்த ஊரும் தர்மபுரி என்ற பெயருடன்தான் திகழ்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில்தான் சோழவித்யாபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

சுமார் 1000 வருடங்களுக்குமுன், இந்தப் பகுதியில் சோழர்களின் கடலோர பாதுகாப்புப் படையினரின் முகாம் அமைந்திருந்தது. இந்த ஊரில் பாயும் வெள்ளையார் எனும் ஆறு, வேளாங்கண்ணியில் கடலில் சங்கமிக்கிறது. அந்த ஆற்றிலிருந்து வேதாரண்யம் வரை கால்வாய் அமைத்து 400 மரக்கலங்களுடன் இலங்கைக்குச் சென்ற ராஜராஜ சோழன், சிங்கள அரசரை வெற்றிகொண்டு இலங்கையைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது.

சிங்களத்தில் அடகுவைக்கப்பட்டிருந்த தமிழர் களின் பண்பாடு, நாகரிகம், கலாசாரம் ஆகிய வற்றை மீட்டெடுக்க சோழர்கள் நடத்திய தர்ம யுத்தம் அது. தங்களது தர்மயுத்தத்தில் வெற்றி பெற அருள்புரிந்த இறைவனுக்கு, ராஜராஜ சோழன் காலத்திலும் ராஜேந்திர சோழன் காலத் திலுமாக எழுப்பப்பட்டதுதான் அருள்மிகு தர்மபுரீஸ்வரர் திருக்கோயில். அத்துடன், இந்தத் திருக்கோயிலில் நித்திய பூஜைகளும் திருவிழாக் களும் நடைபெறுவதற்காக மானியங்களையும் வழங்கியுள்ளனர். மேலும், நான்கு வேதங்களுடன் சகல வித்யைகளையும் பயிற்றுவிக்கும் குருகுலங் களையும் ஏற்படுத்தியிருந்தனர்.

ஒரு காலத்தில் மிக பிரமாண்டமாக அமைந் திருந்த ஆலயம், இன்று மிகவும் சிதிலமடைந்திருப் பதைக் கண்டபோது, `மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரும், மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரும், தேசனும், தேனாரமுதமுமான' ஈசனின் திருக்கோயில் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கிறதே என்ற துக்கம் நம் நெஞ்சை அடைக்க, கண்களில் நீர் ஆறாகப் பெருகியது.

ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!

நமக்கு மட்டுமல்ல, மிகப் பரந்த வெளியில் சிதிலம் அடைந்து காணப்படும் ஐயனின் திருக் கோயிலைக் காணும் எவருக்கும்... அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தா லும்கூட, மனம் பதறவே செய்யும்.

வெட்டவெளிப் பொட்டலில் இரண்டு கோபுரங்கள் பரிதாபமான நிலையில் காட்சி தருகின்றன. கிழக்குப் பார்த்து அமைந்திருக்கும் கோபுரம் ஐயன் தர்மபுரீஸ்வரரின் கருவறை விமானம் என்றும், தெற்குப் பார்த்து அமைந் திருக்கும் கோபுரம் பாலசுந்தரி அம்பிகையின் கருவறை விமானம் என்றும் உடன் வந்தவர் நம்மிடம் கூறினார். ஒரு காலத்தில், இந்த இரண்டு சந்நிதிகளையும் இணைக்கும் வகையிலான மாபெரும் மண்டபம் இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

இதைவிட பெரிய வேதனை... வெட்டவெளியில்   ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கண்டோம்.  அதுபற்றி ஊர்மக்களிடம் விசாரித்தபோது, அந்த சிவலிங்கத் திருமேனியை சிலர் ஆவுடை தனியா கவும் லிங்கம் தனியாகவும் பிரித்தெடுத்து நெற்கதிர் அடிக்கப் பயன்படுத்திய விவரத்தையும், பிறகு அந்த ஊரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், அவற்றை மீட்டெடுத்து கோயிலுக்குக் கொண்டு வந்து வைத்த தகவலையும் கூறினார்கள். அதைக் கேட்டபோது, `சிவலிங்கத் திருமேனியின் மகத்துவத்தை அறியாத மனிதர்களும் உள்ளனரே' என்ற வேதனையும் ஆற்றாமையும் எழுந்தன நம் மனதில்.

 இந்தத் திருக்கோயிலில் ஐயன் தர்மபுரீஸ்வரர், அம்பிகை பாலசுந்தரியுடன் விநாயகர், முருகர், பைரவர், சூரியன், சண்டிகேசர், மகாவிஷ்ணு ஆகியோரும் காட்சி தருகின்றனர். தற்போது கோயில் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இளங்கோவனிடம் பேசினோம்.

``இந்தக் கோயில் பல வருடங்களாகவே இப்படித்தான் இருந்து வருகிறது. சிதிலமடைந்து கிடந்தாலும் இது தொன்மைச் சிறப்பு வாய்ந்தது என்பதை அறிந்துகொண்டோம். இந்தக் கோயி லைப் பற்றிக் கேள்விப்பட்ட ஜோதிமலை இறைப் பணித் திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், அடியார் பெருமக்களுடன் வந்து பார்வையிட்டு, உழவாரப்பணியும் மேற்கொண் டார். தொடர்ந்து இறைவனுக்கு அபிஷேக ஆரா தனைகள் செய்து வழிபட்டார்.

ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!

பின்னர், ஊர்மக்களிடம் கோயிலின் தொன் மைச் சிறப்புகள் பற்றியும், பழைமை வாய்ந்த ஆலயங்களைப் புதுப்பித்து அபிஷேக ஆராதனை கள் செய்யவேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கிக் கூறினார்.  அவருடைய ஆலோசனையின் பேரில் திருப்பணிக் கமிட்டி ஏற்படுத்தி, ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் திருப்பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். விரைவில் இந்தக் கோயிலை முன்பு இருந்ததைப் போல் பிரமாண்ட மாக இல்லாவிட்டாலும்கூட, ஓரளவுக்கு பெரியதாகவும், சுவாமி சந்நிதியையும் அம்பாள் சந்நிதியையும் இணைத்து ஒரு மண்டபமும் கட்டிவிடவேண்டும். பெரிய திருப்பணிதான் என்றாலும், தர்மபுரீஸ்வரர் எங்கள் விருப்பம் நிறைவேற அருள்புரிவார் என்ற நம்பிக்கையுடன் திருப்பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்'' என்றவர், வங்கிக் கணக்கு பற்றிய விவரம் ஒன்றையும் தெரிவித்தார்.

ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!

``திருப்பணிக்காக நாங்கள் பாண்டியன் கிராம வங்கியில் இரு நபர் கணக்கு ஒன்று தொடங்கியுள் ளோம். இந்த வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டதால், ஐ எ ஃப் சி (IFSC CODE) எண் ஐஓபி என்றுதான் தொடங்கும். அந்த எண்ணைப் பதிவு செய்தால், பாண்டியன் கிராம வங்கியின் தலைமையகமான விருதுநகர் என்று தான் வரும். எனவே, இதுகுறித்து நன்கொடை வழங்க விரும்பும் அன்பர்கள் குழப்பமடைய வேண்டாம்'' என்று கூறினார்.

திருவடிக்குடில் சுவாமிகளைச் சந்தித்து தர்மபுரீஸ்வரர் கோயிலின் சிறப்புகள் குறித்துக் கேட்டோம்.

``சுமார் 1,000 வருடங்கள் பழைமை வாய்ந்த கோயில். ஈசனுக்கும் அம்பிகைக்கும் தனித்தனி கோயில்கள் அமைந்திருப்பதைப் பார்த்தபோது, முற்காலத்தில் அந்த ஆலயம் எவ்வளவு பிரமாண்ட மாக இருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது.

கலியுகத்தில் மக்கள் படும் துன்பங்களைப் போக்குவதற்காகவே சிவபெருமான் எண்ணற்ற திருத்தலங்களில் கோயில்கொண்டிருக்கிறார். அந்த வகையில் கலியுகத்தில் தர்மம் தழைத்துச் செழிக்கவேண்டும் என்பதற்காக  இந்தத் தலத்தில், தர்மபுரீஸ்வரர் என்ற பெயரில் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டார் போலும்!

இந்தக் கோயில் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் காலத்தில் கட்டப் பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அதை நிரூபிக்கும் வகையில் கல்வெட்டுகள் எதுவும் காணப்பட வில்லை. ஒருவேளை மண்ணில் புதைந்திருக்கலாம்'' என்றவர், வெட்டவெளியில் இருக்கும் சிவலிங்க மூர்த்தத்தைக்கூட விரைவில் திருக்கோயிலுக்குள் வைக்க ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவித் தார்.

நாளும் நாம் நலம் வாழ அருள்புரிவதற்காக ஐயன் எழுந்தருளிய ஆலயம், தென்னாடுடைய சிவபிரானுக்கு, நூற்றுக்கணக்கான சிற்பக் கலைஞர்கள் தங்களின் அயராத உழைப்பால் எழுப்பிய திருக்கோயில் இப்படி சிதிலமடைந்து கிடக்கலாமா? அதை நாம் கண்டும் காணாமல் இருக்கலாமா?

முற்காலத்தில் ஐயன் தர்மபுரீஸ்வரரின் திருக்கோயில் எந்த அளவுக்கு பிரமாண்டமாக அமைந்திருந்ததோ, அதே பிரமாண்டமான  அளவில் நம்மால் பெருங்கோயில் எழுப்ப முடியும். தேவை சிரத்தையும் முயற்சியும் மட்டுமே.

ஐயன் தர்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்கு நம்மால் இயன்ற நிதியுதவியைச் செய்வ துடன், நமக்கு அறிமுகமான ஆன்மிக அன்பர் களையும் இந்தத் திருக்கோயில் திருப்பணிக்கு ஆற்றுப்படுத்தலாமே. கோயில் பொலிவு பெற்றால் நம் குலமும் பொலிவு பெறும்.

`பண்ணின் இசை யாகி நின்றானும், பாவிப்பார் பாவம் அறுப்பானு மாகிய' நம் பரமன், நம்மையும் நம் சந்ததியினரையும் வாழ்வாங்கு வாழ்விக்கச் செய்வான் என்பது உறுதி.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில், நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது மேலப்பிடாகை. இந்த ஊருக்கு வடக்கில் சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ளது சோழவித்யாபுரம். நாகப்பட்டினத்திலிருந்து சோழவித்யாபுரத்துக்கு 5, 7, 10 ஆகிய நகரப் பேருந்துகள் செல்கின்றன.

மேலும் விவரங்களுக்கு

எஸ்.இளங்கோவன், செல்: 9943720099


வங்கிக் கணக்கு விவரம்:

Name: ELANGOVAN. S , SELVAM. S
Bank Name:
PANDIAN GRAMA BANK
Branch: TIRUPUNDI
ACCOUNT NUMBER: 524401000004043
IFSC IOBA0PGB001

ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!

பாடலைக் கொடுத்தது  சிவாஜி!

கிருபானந்த வாரியார், ஒரு பிரசங்கத்தின்போது சிவ மகிமைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது, முன்னால் அமர்ந்திருந்த சிறுவர் சிறுமிகளை நோக்கி, “ஏழைப் புலவன் தருமிக்குப் பாட்டு எழுதிக் கொடுத்தது யார்?'' என்று கேட்டார்.

சட்டென்று ஒரு சிறுமி எழுந்து, ‘‘சிவாஜி” என்றாள்.

உடனே வாரியார் சுவாமிகள், ``பலே! சரியாகச் சொன்னாய். சிவபெருமான் என்பதை சுருக்கமாகச் `சிவா' என்று குறிப்பிட்டதோடு, மரியாதைக்காக ‘ஜி’ சேர்த்து,  சிவாஜி என்று இந்தப் பெண்  சொல்லுகிறாள்” என்றார். 

கூட்டத்தினர் மகிழ்ச்சிக் கரவொலி எழுப்பினர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு