மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

கோயில்களிலும், சுப நிகழ்ச்சிகள் சிலவற்றிலும்... அவற்றை நடத்தி வைக்கும் வேதியர்கள், கை விரல்களால் குறிப்பிட்ட முத்திரைகள் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற முத்திரைகள் எதற்காக? அதன் தாத்பரியம் என்ன?

- கமலா கிருஷ்ணன், திருவாரூர்

##~##
மந்திரத்தை வெளியிட்ட ரிஷியின் பெயரை தன் தலையிலும், மந்திரத்தைச் சொல்லும் முறையை (மீட்டர்) உதட்டிலும், அதன் தேவதையை இதயத்திலுமாக... கைகளால் தொட்டு அவற்றில் இருத்தி, ஐந்து விரல்களால் அந்த தேவதைக்கு ஐந்து உபசாரங்களைச் செய்து வழிபட்டு, குறிப்பிட்ட அந்த தெய்வ மந்திரத்தை மனதில் அசைபோடுவது சிறந்த வழிபாடு.

மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் (த்ரிகரணங்கள்) வழிபடும்போது, மூன்று தாபங்கள்  (ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம்) அகன்றுவிடும். அந்த தெய்வத்துக்கு உணவு படைக்க, காமதேனு முத்திரையைக் காண்பித்து, அமுதத்தை அளிப்பதாகப் பாவித்து வழிபடுவது உண்டு.

மானசீக வழிபாட்டில் பொருள் இல்லாமல், முத்திரை வாயிலாகப் பொருளை குறிப்பிட்டு வழிபடுவது ஒரு முறை. முத்திரையை விளக்கும் பகுதி, தர்மசாஸ்திர நூல்களில் உண்டு. அவற்றை கற்றறிந்தவர்களை அணுகி, அதன் நுணுக்கத்தை, சொல் - செயல்வடிவம் (தியரி, ப்ராக்டிக்கல்) ஆகிய இரண்டையும் அறிந்துகொள்ள வேண்டும். தபால் கல்வியில் கற்பது நம்பிக்கை யைத் தராது. குரு - சிஷ்ய முறையே சிறந்தது.

16 உபசாரங்களுக்குத் தேவையான பொருள் களை ஈட்டி சேமித்து, விரிவான- வெளிப்படையான இறையுருவப் பணிவிடையில் இறங்கும்போது, பொருளின் தூய்மையில் கவனம் திரும்பினால், இறைவழிபாடு முழுப்பயனை அளிக்காமல் போகலாம். மானஸ பூஜையில், இறையின் நெருக்கம் நிலைத்திருப்பதால், அது தனிச் சிறப்பை பெறுகிறது.

கேள்வி-பதில்

நவக்கிரகங்களுக்கு ப்ரீதி செய்வதற்காகப் படைக்கப்பட்ட தேங்காய் - பழம் ஆகியவற்றை வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாது என்கிறார்களே... சரியா?

- ர.சேதுராமன், திருவூர்

தேங்காய் - பழங்களை வீட்டுக்குக் கொண்டு வரலாம்; அதை உட்கொள்ளவும் செய்யலாம்; தவறில்லை.

நாம் உண்டு மகிழ, நவக்கிரகங்களுக்குப் படைக்கிறோம். கிரகங்களின் பார்வை பட்டு தூய்மை பெற்ற அந்தப் பொருட்களை நாம் ஏற்று மகிழும்போது, அவற்றின் தூய்மை, நம்மையும் தூய்மைப்படுத்தி, நல்வழியில் செல்ல வைக்கிறது. கிரகங்களின் அருளானது, பிரசாதப் பொருளின் வாயிலாக நம்மில் கலக்கிறது. அது, நம்மை வாழ வைக்கிறது.

இறையுருவங்களுக்கு நாம் செய்யும் பணிவிடை கள் அத்தனையும் நமக்காகவே. இறைவனுக்கு பசி, தாகம், ஆசை, பாசம் போன்ற எதுவும் இல்லை. இறையருளுடன் இணைந்த சுத்தமான உணவானது, உடல்-உள்ளம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதுடன், அறிவைப் புகட்டி ஆனந்தத்தில் ஆழ்த்த ஏதுவாகும். ஆகவே, விபரீத விளக்கங்களை நம்பாதீர்கள்!

இறந்தவர்களுக்காக ஆலயங்களில் கோபுர உச்சியில் தீபம் ஏற்றுகிறார்களே, ஏன்?

- ரா.ஜனனி, எரகுடி

அது ஒரு சம்பிரதாயம். தீபம் ஏற்றினால், மறைந்தவரின் ஆன்மா அமைதி பெறும் என்று அவர்கள் மனம் எண்ணுகிறது. இறந்தவருக்கு இடுகாட்டிலோ சுடுகாட்டிலோ ஈமச்சடங்கை நிறை வேற்றி, 12-ஆம் நாளிலோ 16-ஆம் நாளிலோ அவர் அமைதி பெற சடங்குகளை நிறைவு செய்வோம்.

காலம் காலமாக தொடர்ந்து வரும் நாகரிக மான பண்பு... கால மாற்றத்தில் பல நடைமுறைகள் அதில் கலந்துவிட்டன. இறந்தவரின் படத்துக்கு பூச்சொரிவது, ஊதுவத்தி ஏற்றிவைத்து, தேங்காய்- பழம் போன்றவற்றை படைப்பது, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவது போன்ற அத்தனையும் சம்பிரதாயங்கள். மறைந்தவருடன் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்த, பல்வேறான புதுப் புது நடைமுறைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அதற்கு வரையறை இல்லை.

ஈமச்சடங்கோடு ஆலயத்தை இணைப்பது புது நாகரிகம். சாதாரண குடிமகன் ஒருவன் மறைந்தால் தேசியக் கொடி இறங்குமா? பொது விடுமுறை முளைக்குமா? ஆக, சம்பிரதாயமும் வரைமுறையோடு இருந்தால்தான் அழகு!

கேள்வி-பதில்

ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லும் போது, கணவர் வர இயலாத நிலையில்... வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பெண்கள், தனியாகச் சங்கல்பம் செய்யலாமா?

- சு.சிவராமகிருஷ்ணன், மதுரை-16

தாம்பத்தியத்தில் இருவரின் சேர்க்கையில் இன்பம் காண்கிறோம். இருவரின் சேர்க்கையிலேயே வாரிசை உருவாக்குகிறோம். இன்ப-துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். அப்படியிருக்க, இருவரும் சேர்ந்து சங்கல்பம் செய்வதே சிறப்பு.

எதிர்பாராத சூழலில் கணவன் வர இயலாது போனாலோ, தெய்வாதீனமாக அவர் வருவது தடைப்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு வழிபாட்டில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருந்தாலோ... கணவனுக்கும் சேர்த்து மனைவியானவள் சங்கல்பம் செய்துகொள்ளலாம். தெரிந்தே கணவரை ஒதுக்கி வைத்து, அவர் வரமுடியாத சூழலை உருவாக்கி, அதன் பிறகு தனியாக சங்கல்பம் செய்வது கூடாது. அவ்வாறு செய்தாலும் பலன் அளிக்காது.

உறவைத் துண்டித்துக் கொண்டு தனியே வாழும் நிலையில், சங்கல்பம் செய்யலாம். சேர்ந்து இன்பத்தைச் சுவைக்க திருமணத்தில் ஒன்றினார்கள். அதன் பிறகு, தனியாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது சரியில்லை. அதற்கு ஒன்றாமலேயே இருந்திருக்கலாம். முடிந்த வரையிலும் இருவரும் சேர்ந்தே செயல்பட முயற்சி செய்யுங்கள். அது, இருவருக்கும் நல்லது.

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? இந்த தோஷம் இருப்பதை ஜாதகம் மூலம் அறியலாமா? இந்த தோஷத்துக்கு என்ன பரிகாரம்?

- ரகுராம், திருச்சி-17

அறத்துக்கு ஆதாரமான வேதத்தைக் காப்பாற்றுகிறான் பிராமணன். நமது கலாசாரத்தின் ஆணிவேரைக் காப்பாற்ற, தனது வாழ்நாளை அர்ப்பணிக்கிறான். அவனை அழிக்கும் செயல், அறங்காவலனை அழிப்பதாகும்.

'வருங்கால சந்ததிக்கு வழி காட்டும் கருவியை அழிப்பது பாவம். கலங்கரை விளக்கத்தை அழித்தால், கடல் பயணிகள் துன்புறுவார்கள். நதி நீரை மாசுபடுத்தினால், பல உயிரினங்கள் தவிக்கும். பொதுவுடமை சேதம் அடைந்தால், பொதுமக்கள் துயரத்தைத் தழுவுவார்கள். பொதுவுடமையைக் காப்பாற்றுபவன் அவன்; அவனைத் துன்புறுத்தாதே!’ என்கிறது வேதம் (நநிஹன்யாத், நலோகிதம் குர்யாத்).

பிராமணனை அழித்தால், அந்த பாபம் அழித்தவனை பற்றிக் கொள்ளும். அதை அகற்ற பரிகாரம் உதவும். கர்மவிபாகம் எனும் நூல் பரிகாரங்களை விளக்கும். பிராமணனை துன்புறுத்துவதால் ஏற்படும் பாபத்தின் பெயர், பிரம்மஹத்தி பாபம். இது, பிராமணனை அழித்தவனில் பிணியாகத் தென்படும். அந்தப் பிணியின் தரத்தை, ஜாதகத்தின் 6-ஆம் பாவத்தை வைத்தும், பிணிக்கான கிரகத்தின் தரத்தை வைத்தும் பிரம்மஹத்தி தோஷத்தை அறியலாம்.

'உயிரினங்களை அழிக்காதே; துன்புறுத்தாதே.’ என்று ஸனாதனம் நம்மை எச்சரிக்கும்போது, நமது கலாசாரத்தின் அதாவது பண்பின் ஊற்றை அடியோடு அகற்ற முற்படுவது, தகாத செயல் என்று சொல்வதில் வியப்பில்லை.

கேள்வி-பதில்

என் சகோதரி வாங்கியிருக்கும் வீட்டு மனையில் பாம்புப் புற்று உள்ளதாம். அதை அகற்றிவிட்டு கட்டடம் கட்ட அவள் தயங்குகிறாள். பாம்புப் புற்றை இடிப்பது தோஷம் ஆகுமா?

- லதா ரகோத்தமன், திருக்கோவிலூர்

நிலம் பொதுவுடமை. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், பாம்புப் புற்று இருக்கும். நம்மைப் போல் அதற்கும் வாழ்வதற்கான உரிமையை அளித்திருக்கிறார், அவற்றைப் படைத்த கடவுள். நாம் இருக்கும் இடத்தை, அது ஆக்கிரமிக்காது ஒதுங்கிவிடும். அப்படியிருக்க, நாம் அதன் உரிமையை அழிப்பது தகாது.

வாஸ்து சாஸ்திரமானது, பாம்புப் புற்று இல்லாத இடத்தில் வீடு கட்டப் பரிந்துரைக்கும். மற்ற உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படாத நிலையில், புற்றில் இருக்கும் பாம்பை விரட்டியடிப்பது, நல்லெண்ணம் ஆகாது. இன்றைய மனித சிந்தனையின் மாற்றமானது, சிலரது வலுவான சுயநலத்துடன் இணைந்திருப்பதும் உண்டு. மயானம், ஏரி, காடு, மலை ஆகியவற்றிலும் வீடுகள் தோன்ற ஆரம்பித்திருப்பது அதன் வெளிப்பாடு. அங்கு வாழும் உயிரினங்களை அப்புறப்படுத்துவதற்குத் தயங்காத மனமும் உண்டு!

புற்று இருக்கும் இடத்தில்தான் வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்ற அவசர காலநிலை முளைத்தால், அந்தப் புற்றை அகற்றிவிட்டு, வீடு கட்டலாம். புற்றை அகற்றாமலேயே, வீடு கட்டுவதற்குப் போதுமான இடம் இருந்தால், அதை அழிக்காமல் விட்டுவிடலாம். வீடு கட்டிய பிறகு, ஆள் நடமாட்டம் ஏற்பட்டால், புற்றிலிருந்து தானாகவே பாம்பு வெளியேறி விடும். மனித உரிமை மீறப்பட்டால் ஆணையம் இருக்கிறது. பாம்பு என்ன பண்ணும் பாவம்!

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்