Published:Updated:

ஆழித்தேர்... ஆரூர் தரிசனம்!

எஸ்.கண்ணன் கோபாலன்

பிரீமியம் ஸ்டோரி

‘திருவாரூர்த் தேரழகு’ என்றொரு வழக்கு மொழி உண்டு. ‘திருவாரூரில் பிறக்க முக்தி’ என்ற பெருமைக்கு உரிய திருவாரூர்த் தலத்தில் ஆழித் தேர்மட்டும்தானா அழகு? எல்லாமே அழகின் பிறப்பிடம்தான்; அருளின் இருப்பிடம்தான்.

‘கோயில்’ என்றாலே சைவப் பெருமக்கள், தில்லையம்பலத்தான் அருளாட்சி புரியும் சிதம்பரம் திருக்கோயிலைத்தான் குறிப்பிடுவார்கள். ஆனால், அதற்கும் முன் தோன்றிய  கோயிலாக இருக்குமோ என்று நினைத்த அப்பர் சுவாமிகள்,

‘மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணி திகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே’


என்று வியந்து பாடியிருக்கிறார். சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம் இந்தத் திருத்தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, தான் இந்திரனிடமிருந்து பெற்று வந்த சப்த விடங்க மூர்த்திகளில்,  இந்திரனால் தினமும் வழிபடப் பெற்ற வீதிவிடங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்த தலம் திருவாரூர்த் திருத்தலம். இந்தத் தலத்தில் பாடல் பெற்ற இரண்டு கோயில்களான, அரநெறி (அசலேசம்) மற்றும் மூலவராகத் திகழும் புற்றிடங்கொண்ட ஈசனின் பூங்கோயில் சேர்ந்தே தியாகராஜர் திருக்கோயில் என்று அழைக்கப் படுகிறது.

ஆழித்தேர்... ஆரூர் தரிசனம்!

வன்மீகநாதர்

தியாகராஜர் கோயிலில் புற்றிடங்கொண்ட மூலவரும் சரி, வீதிவிடங்கரும் சரி இருவருமே மகாவிஷ்ணுவுடன் தொடர்பு கொண்டவர்கள் தான்.  ஒருமுறை மகாவிஷ்ணுவும் தேவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு யாகம் செய்தபோது, இடையில் தேவர்கள் சோர்ந்துவிட்டனர்.

ஆனால், மகாவிஷ்ணு சோர்வின்றி யாகத்தை முடித்து, அதன் பலனாக சிவதனுசையும் பெற்றார். அந்த வில்லைக்கொண்டு தேவர்களைத் தாக்கத் தொடங்கினார். தேவர்கள் அஞ்சி ஓடினர். அவர்களைத் துரத்திக்கொண்டு வந்த மகாவிஷ்ணு அந்தக் காலத்தில்,’பராசக்திபுரம்’ என்று அழைக்கப் பட்ட திருவாரூர்த் தலத்தை அடைந்தார். அந்தத் தலத்துக்கு வந்த உடனே சாந்தம் கொண்ட மகாவிஷ்ணு, ஓடி வந்த களைப்புத் தீர சற்று கண்ணயர்ந்தார்.

அதுதான் சமயம் என்று நினைத்த தேவர்கள், தங்கள் குருவாகிய பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டனர். அவருடைய ஆலோசனையின்படி தேவர்கள் அனைவரும் கரையானாக மாறி வில்லுக்கு அடியில் சென்று புற்று வைத்ததுடன், வில்லின் நாணையும் அறுத்து எறிந்தனர். அப்போது விசையுடன் நிமிர்ந்த வில் பட்டு, விஷ்ணுவின் தலை தெறித்தது. அச்சம் கொண்ட தேவர்கள்,  சிவபெருமானை பூஜித்தனர். அவரும் புற்றில் இருந்து சிவலிங்கமாகத் தோன்றினார். பிரம்மாவும் தேவர்களும் சிவபெருமானை பலவாறாகப் போற்றி வழிபட்டனர்.

சிவபெருமானின் கட்டளைப்படி மகாவிஷ்ணு,  பிரம்மா உள்ளிட்ட தேவர்களுடன் ஆகமமுறைப்படி புற்றில் இருந்து தோன்றிய வன்மீகநாதரை வழிபட்டார்.

ஆழித்தேர்... ஆரூர் தரிசனம்!

வீதிவிடங்கப் பெருமான்

உளி கொண்டு செதுக்கப்படாத மூர்த்தி இவர். மகாவிஷ்ணுவாலும் பிறகு இந்திரனாலும் பூஜிக்கப்பெற்ற இந்த மூர்த்தியை, சோழச் சக்கரவர்த்தியான முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து பெற்று வந்து திருவாரூர்த் திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.

அழகான சிம்மாசனத்தில் சுகாசனக் கோலத்தில் அருளும் விடங்கப் பெருமான் மற்றும் அம்பிகையின் முக தரிசனம் மட்டும்தான் நமக்குக் கிடைக்கும். மற்றைய அங்கங்கள் அனைத்தும் எழில் மிகுந்த ஆபரணங்களால் மறைக்கப் பட்டிருக்கும். அபிஷேக நேரங்களில் அழகிய திருக்கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழி திருவாதிரையன்று இடது திருவடியையும், பங்குனி உத்திரத்தில் வலது திருவடியையும் சிறப்பு பூஜையின்போது தரிசிக்கலாம்.

கமலாம்பிகை

கமலாம்பிகை, சங்கரனைப் போலவே திருமுடியில் கங்கையையும் பிறைநிலவையும் தரித்தவளாக, யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள். அவள் அமர்ந்திருக்கும் அழகு திருக்கோலத்தைக் காணக் கண்கள் இரண்டு போதும் என்று தோன்றவில்லை. அத்தனை பேரழகு! அத்தனை ஒய்யாரம்! கலைமகள், மலைமகள், அலைமகள் என்று மூன்று தேவியரின் அம்சமாக அருள்கிறாள் அன்னை கமலாம்பிகை!

நீலோத்பலாம்பிகை

திருவாரூர்க் கோயிலில் புற்றிடங்கொண்ட  வன்மீகநாதர், வீதிவிடங்கப் பெருமான் என்று இரண்டு சிவ மூர்த்தங்கள் அருள்வது போலவே, கமலாம்பிகையுடன் நீலோத்பலாம்பிகையும் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறாள். இங்கே அம்பாளின் எழில் கோலம் வேறு எங்கும் காண முடியாத தனிச் சிறப்புடன் காட்சி தருகிறது.

அம்பாள், இரண்டு திருக்கரங்களுடன் ஆதிசக்தியாக காட்சித் தருகிறாள். அம்பாளுக்கு அருகில் ஒரு தோழி இருக்கிறாள். அவளுடைய  தோளில் சிறு குழந்தையாக முருகப்பெருமான் அமர்ந்துள்ளார். தோழியின் தோளில் அமர்ந்துள்ள குழந்தை முருகனின் திருமுடியை, அம்பிகை தன் இடக் கையால் தடவிக்கொடுப்பதுபோல் அம்பிகையின் திருவுருவம் காட்சி தருகிறது.

ஆழித்தேர்... ஆரூர் தரிசனம்!

திருக்குளச் சிறப்பு

இந்தத் தலத்துக்கும் இங்குள்ள தீர்த்தக் குளத்துக்கும் கமலாலயம் என்றும் ஒரு பெயர் உண்டு. திருமகள் கடலரசனின் மகளாக வளர்ந்து வந்தபோது, திருமால், மதுகடைபர்கள் என்ற இரண்டு கொடிய அரக்கர்களை வதம் செய்த தகவல் கேட்டு, அவரையே மணந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, இந்தத் தலத்துக்கு வந்து திருமூலட்டானேஸ்வரராகிய வன்மீகநாதரை வழிபட்டு வேண்ட, ஐயனும் அப்படியே வரம் அருளினார். தொடர்ந்து, திருமகள் இந்தத் திருத்தலத்தில் அமைந்திருக்கும் திருக்குளம், தன் பெயரால் கமலாலயம் என்று வழங்கப் படவேண்டும் என்று வரம் கேட்டாள். ஐயனும் அப்படியே அருள்புரிய, இந்தத் திருக்குளத்துக்குக்  கமலாலயம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஆழித்தேரின் சிறப்பு

ஆழியிலே தோன்றிய அலைமகளுக்கு, ஆரூர் ஈசன் அருள்புரிந்ததற்கு நன்றி செலுத்துவதே போல், அந்த ஆழியே தேராக வந்துவிட்டதோ என்று சொல்லும்படி, மிகப் பிரமாண்டமாக அமைந்ததுதான் திருவாரூர்த் தேர். அதனால்தான் திருவாரூர்த் தேர், ‘ஆழித்தேர்’ என்ற சிறப்பினைப் பெற்றது போலும்!

தேரில் திக்பாலகர்களின் ஓவியங்களுக்கு நடுவே அமைந்துள்ள திருவாயில் வழியாகத் தியாகேசனின் தரிசனம் காணக் கிடைக்காத அற்புதத் திருக்காட்சி! சின்னஞ்சிறு மணிகள் கிண்கிணியென்று ஒலியிசைக்க, அலங்காரத் துணி உருளைகள், வசந்தகாலத் தென்றலின் தாலாட்டில் மெள்ள மெள்ள அசைந்தாட, சிவப்பு மஞ்சள் நிறக் கொடிகள் காற்றினில் படபடவென்று பறந்தபடி பரமனின் புகழினைப் பாட, பறையொடு வெஞ்சங்கும் ஒலிக்க ஆழித்தேர் அசைந்து வருவதை திருநாவுகரசர் தன் பாடல் வரிகளில் அழகாகக் கூறியிருக்கிறார்.

“போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு
 வேழத்து உரிபோர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ
ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலிமாப் பூண்டது ஓர்
ஆழித்தேர் வித்தகனை - நான் கண்டது ஆரூரே!”


திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரப் பதிகத்தில், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!’ என்று பாடி இருப்பதிலிருந்து, திருவாரூரில் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டுக்கும் முன்பிருந்தே தேர்த்திருவிழா நடைபெற்று வந்திருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

காலை பொழுதில் கிழக்கு வீதியில் புறப்படும் தேரானது தெற்கு வீதியைக் கடந்து, கமலாலய திருக்குளத்தின் வழியாக மேற்கு வீதிக்குச் செல்லும். தியாகராஜ பெருமான் ஆலயத்துக்கும், ஆழித்தேரின் கம்பீரத்துக்கும் ஈடுகொடுப்பதைப் போலவே மிகச் சிறப்பாக அமைந்திருக்கும் கமலாலய திருக்குளத்தின் நீரலைகளில் பிரதிபலிக்கும் தேரின் அழகைக் காண நமக்கு இரண்டு கண்கள் போதாது என்பதுதான் உண்மை.

1748-ஆம் ஆண்டு ஆழித் தேரோட்டம் நடந்தது பற்றிய விவரம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. மேலும் 1765 - ஆம் வருடம் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, ஆழித் தேரோட்டத்தில் கலந்துகொண்டது பற்றிய குறிப்புகளும் உள்ளன.

முற்காலத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்களால் தேர் இழுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்போது தேருக்கு பத்து சக்கரங்கள் இருந்தன. திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தினர், ஆழித் தேரில் இரும்பு அச்சுகள், சக்கரங்கள், பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினார்கள். 10 சக்கரங்களுக்கு  பதிலாக  நான்கே சக்கரங்கள் பொருத்தப் பட்டன. இந்த மாற்றங்களால் இப்போது மூவாயிரம் பக்தர்கள் இழுத்தாலே போதும்... தேர் நகர ஆரம்பித்துவிடும்.

அலங்கரிக்கபடாத நிலையில் தேரின் உயரம் 30 அடி.  உச்சி விமானம் வரை துணி போன்ற தேர்ச் சீலைகளால் அலங்கரிக்கும் பகுதி 48 அடி. விமானத்தின் உயரம் 12 அடி. தேரின் கலசம் 6 அடி. ஆக, தேரின் மொத்த உயரம் 96 அடி. இரும்பு அச்சுகள், சக்கரங்கள் உள்பட அலங்காரமற்ற நிலையில் மரத் தேரின் எடை சுமார் 220 டன். தேர்ச் சீலைகளும், பனஞ்சப்பை களும்,  மூங்கில்களும் பயன்படுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் எடை சுமார் 300 டன்.ஆழித்தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரிய உறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என்ற ஏழு அடுக்குகளையும் கொண்டதாக உள்ளது.

எண்கோண வடிவத்தில் அமைந்திருக்கும் இந்தத் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்திருக்கும் குதிரைகளின் நீளம் 32 அடி. உயரம் 11 அடி. சுமார் 400-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் தேரில் காணப்படு கின்றன. திருவிளையாடல் புராணம், சிவபுராணம், நாயன் மார்கள் வரலாறு போன்றவற்றை சித்திரிக்கும் வகையில் அந்தச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

ஆழித்தேர் ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்குத் திரும்புவதற்கு 8 முதல் 10 இரும்பு பிளேட்டுகளை சிறு வளைவான வரிசையில் வைத்து, அந்த பிளேட்டுகளின் மீது தேர்ச் சக்கரங்கள் ஏறித் திரும்பும் காட்சி அதியற்புதமான காட்சியாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு