Published:Updated:

திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!
திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

ரன் வாசல் தேடி வர... கெட்டிமேளம் கொட்ட.. வள்ளியூருக்கு வந்து வள்ளிமணாளனை தரிசிப்போம்.

'இல்லறமல்லது நல்லறமன்று' என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், பலருக்கும் பல்வேறு காரணங்களினால் திருமணம் தடைப்படுகிறது. திருமணத் தடை நீக்கி, இனிய இல்லற வாழ்க்கை அருளும் பல திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றுள் தனிச் சிறப்பு மிக்கதாகத் திகழ்கிறது வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். 'தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயது வந்தும் திருமணம் தடைப் பட்டுக்கொண்டே வருகிறதே' என்று கலங்கும் பெற்றோர்களின் மனக்குறையைத் தீர்க்கவென்றே அழகன் குமரன் கோயில் கொண்ட தலம் வள்ளியூர் திருத்தலம்.

தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகப் பெரிய குகைக் கோயில் இது. வள்ளியூர்க் குகையில் அமைந்திருக்கும் இந்தக் குடைவரைக் கோயிலில்தான் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக அருளாட்சி செலுத்துகிறார்.

இந்தத் தலத்தில் அருளும் கந்தக் கடவுளை இந்திரன், அகத்தியர், இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். 'வண்ணச்சரபம்' தண்டபாணி தேசிகர், வள்ளியூர் வள்ளி மணாளனிடம் மனதைப் பறிகொடுத்து, மனமுருகி பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!

அகத்தியருக்கு குருவாகி நின்ற முருகப் பெருமான்...

தென் பகுதிக்கு வந்த அகத்திய முனிவர்,  இந்தக் குன்றில் வள்ளி பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டார். முருகப்பெருமான் குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று உபதேசிக்க, அகத்திய முனிவர் சீடரின் நிலையிலிருந்து மேற்கு முகமாக நின்று உபதேசம் பெற்ற தலம். உபதேசம் பெற்ற பிறகு, அந்தக் குன்றை பிரதட்சிணமாக கிரிவலம் வந்து கந்தக் கடவுளை வழிபட்டார்.

கிரிவலம் வரும் வழியில், குகையின் தென் பகுதியில் ஒரு பெண் சோகத்துடன் நிற்பதைக் கண்டு, அருகில் சென்று பார்த்தார். அங்கே நின்றுகொண்டிருந்தது தெய்வானை பிராட்டி என்று தெரிந்துகொண்ட அகத்தியர், 'தாயே, ஏன் சோகமாக நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

முருகப் பெருமானைக் காண வந்த தன்னை, வள்ளி அனுமதிக்காததால்,  தான் வெளியில் நிற்பதாக மனவருத்தத்துடன் கூறினார் தெய்வானை பிராட்டி. அதைக் கேட்ட அகத்தியர், தெய்வானை பிராட்டியை சமாதானப்படுத்தி, முருகப் பெருமானிடம் அழைத்துச் சென்றார். வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்த முருகப் பெருமான், அவர்களிருவரும் திருமாலின் கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் சகோதரிகள் என்பதை உணர்த்தினார். மேலும், அவர்களே தற்போது தெய்வானையாகவும் வள்ளியாகவும் தோன்றி தன்னைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்று தெரிவித்து, அவர்களுக்கு சடாட்சர மந்திரத்தை உபதேசித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சமாதானமாகி முருகப்பெருமானுக்கு இரண்டு புறங்களிலும் நின்று அகத்தியருக்கு அருள்புரிந்தனர்.  அகத்தியருக்கு பிரம்ம ஞான உபதேசம் அருளிய காரணத்தினால் முருகப் பெருமான், 'ஞானஸ்கந்தன்' என்றும் அழைக்கப்படுகிறார். அகத்தியர்,  இந்த அற்புதக் காட்சியை தரிசித்தது பங்குனி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை என்பது தலபுராணம் கூறும் செய்தி.

திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!

கோயிலில் அருளும் தெய்வ மூர்த்தங்கள்

ஒளி பொருந்திய திருமுகத்துடன், நான்கு திருக்கரங்களில் மேலிரு கரங்களில் வஜ்ஜிரம், சக்தி ஆயுதங்களையும், கீழிரு கரங்களில் வலக் கரத்தில் மலரும் ஏந்தி, இடக் கரத்தை தொடையின் மீது வைத்த கோலத்தில் காட்சி அருளும் முருகப்பெருமானின் பேரழகை தரிசித்தபோது, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகனின் அழகில் மனதைப் பறிகொடுத்ததில் வியப்பொன்றும்  இல்லையென்றே சொல்லலாம். மேலும் வள்ளி, தெய்வானையும்கூட இந்தக் கோயிலில் அமிர்தவல்லி, சுந்தரவல்லியாகவே காட்சி தருகிறார்கள். இதுவும் இந்தக் கோயிலுக்கே உரிய தனிச் சிறப்பு. கருவறைக்கு அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுக நயினார் காட்சி தருகிறார். அருகில் கன்னிமூல விநாயகர், வீரபாகு, வீரமகேந்திரனும் காட்சி தர, எதிரில் மயிலும் வலப் புறத்தில் ஒரு குகையும் காணப்படுகின்றன.

குகையின் வாயிலில் விநாயகப் பெருமான், மலைதாங்கி சாஸ்தா, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. முன்புறத்தில் இடைக்காடரும், எட்டு சக்திகளின் பீடங்களும் உள்ளன. உற்சவ மூர்த்தியாக சுப்பிரமணியர், வள்ளி ஆகியோரின் மூர்த்தங்கள் இருக்கும் சந்நிதிக்கு அருகில், வள்ளி நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். அருகிலேயே பள்ளியறை அமைந்திருக்கிறது. மூலவர் சந்நிதிக்கு இடப்புறம் ஜயந்தீஸ்வரர், சௌந்தரநாயகி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் காட்சி தருகின்றனர்.

முருகன் சந்நிதியையும், வள்ளி சந்நிதியையும் இணைத்து மயில் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் வள்ளியின் திரு அவதாரக் காட்சியின் சில பகுதிகள் கல்தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன.

திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!

சரவணப் பொய்கை

வள்ளி பிராட்டி கேட்டுக்கொண்டபடி முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை ஊன்றி உருவாக்கிய தீர்த்தக் குளம் சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடுவதுடன், தங்கள் வீடுகளுக்கும் புனித நீர் எடுத்துச் செல்கின்றனர். சாபத்தால் நாயாகப் பிறந்த கனகவல்லி என்ற பெண்ணும், ஒரு வேடனும்  இந்த சரவணப் பொய்கையில் நீராடி முக்தி அடைந்ததாக தலவரலாறு.

திருவிழாக்கள்

சித்திரை மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று கொடியேற்றத்துடன் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 9-ம் நாள் தேரோட்டம் நடைபெறும். வைகாசி மாதம் 10 நாள்கள் வசந்தத் திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 10 நாள்கள் நடைபெறுகிறது. 8-ம் நாள் இரவு தாரகாசுர வதம் நடைபெறுகிறது. மற்ற தலங்களில் தெய்வானை திருமணம் நடைபெறும். ஆனால், இந்தத் தலத்தில் வள்ளித் திருமணம் நடைபெறுகிறது. ஊரின் பெயரே வள்ளியின் பெயரால் அமைந்த வள்ளியூர் என்பதால், வள்ளிக்குத்தான் இந்தத் தலத்தில் மிகுந்த முக்கியத்துவம் போலும்! கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியன்று இரவில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

பிரார்த்தனைச் சிறப்பு:

செவ்வாய், கார்த்திகை, வளர்பிறை சஷ்டி ஆகிய நாள்களில் மூலவர் சுப்பிரமணியருக்கும் தனிச் சந்நிதியில் அருளும் வள்ளி பிராட்டிக்கும் பாலபிஷேகம் செய்து, சுவாமிக்கு வெண்பட்டும் பிச்சிப் பூ மாலையும், வள்ளி பிராட்டிக்கு மஞ்சள் பட்டும் சிவப்பு அரளி அல்லது ரோஜாப்பூ மாலையும் அணிவித்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் விலகும் என்பது ஐதீகம். மூலவர் சுப்பிரமணிருக்கு ருத்ராபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் வழிபட்டால் குஷ்டம் மற்றும் தோல் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது.

மலையைக் குடைந்து குகைக்குள்ளே காட்சி அளிப்பதால், மூலவரைச் சுற்றி வர வேண்டும் என்றால் மலையைத்தான் சுற்றி வர வேண்டும். இதனால் கிரிவலம் வந்த புண்ணியமும் கிடைப்பது சிறப்பு. பெளணர்மிதோறும் ’ஓம் சரவண பவ’ என்ற சரவண மந்திரத்தை சொல்லிக்கொண்டே பக்தர்கள் கிரிவலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. 

கோயிலைப் பற்றிய சின்னச் சின்ன செய்திகள்:

 பரசுராமர் தவம் செய்த மகேந்திரமலை இந்த ஊருக்கு மேற்கில்தான் அமைந்திருக்கிறது.

 திருமாலின் வாமன அவதாரம் எடுத்த ‘வாமன க்ஷேத்திரம்’ என்ற திருக்குறுங்குடியில் வரம் தந்து வாழ வைக்கும் 'திருப்பாற்கடல் நதி' என்ற 'நம்பி ஆறு' இந்த ஊருக்கு வடக்கில்தான் பாய்ந்து ஓடுகிறது.

 புராணக் காலத்தில் அகத்தியரின் சாபத்தால் 'கிரௌஞ்ச அசுரன்' மலையின் உருவத்தில் இருந்தான். முருகப்பெருமானின் வேல் பட்டதும், அந்த மலை மூன்று துண்டுகளாகச் சிதறியது. அதில் தலைப் பகுதி விழுந்த இடம்தான், 'வள்ளியூர் குன்று' என்கிறது தலபுராணம்.

 குன்றின் மீது முருகப் பெருமானுடைய வேலின் ஒளிபட்டு பூரணம் பெற்றதால், இந்த மலைக்கு 'பூரணகிரி' என்ற பெயரும் உண்டு.
 திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் மகேந்திரகிரி மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குன்றில் குடியேறியதால் இவ்வூர் ’வள்ளியூர்’ என்றானது. 

 வள்ளியூரை ஆண்ட 'அற்பகன்' என்ற அரசன், தன் மனைவி மகாபாகையுடன் மகேந்திரகிரி மலையில் குழந்தை வரம் வேண்டி தவம் இருந்தபோது,  அங்கு வந்த பரசுராமர், வல்லிக்கொடி ஒன்றை அரசனிடம் கொடுத்தாராம். அந்தக் கொடி பெண் குழந்தையாக மாற, வள்ளி என்று பெயரிட்டு வளர்த்து வந்தாராம். இந்த நகரை வள்ளி ஆண்டதால், 'வள்ளி மாநகரம்' எனவும் அழைக்கப் படுகிறது.

எப்படிச்  செல்வது..?

நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையில் இருந்து 42 கி.மீ., தொலைவில் உள்ளது வள்ளியூர்.

வள்ளியூர் ஊரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது, வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

கோயில் நடை திறப்பு நேரம் :

காலை - 5.30 மணி முதல் 12.30 மணிவரை
மாலை -  5.30 மணி முதல் 8.30 மணி வரை

திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!

எது  பொய்

பொய் என்பது பேசும்  சொற்களில் அல்ல. அது ஆத்ம வஞ்சனை அல்லது தன்னையே  ஏமாற்றிக்கொள்வதில் முக்கியமாக அடங்கியிருக்கிறது.   மௌனத்தாலும், இரு பொருள்படப் பேசுவதாலும், ஏதோ ஒரு சொல்லை மட்டும்  அழுத்திக் கூறுவதாலும், ஒரு வாக்கியத்துக்கு விசேஷப் பொருளைக் காட்டும் கண் ஜாடையினாலும் சிலர் பொய் புகல முயலலாம். இந்தப் பொய்களெல்லாம்  சந்தேகேத்துக்கு இடமில்லாத  பச்சைப் பொய்களை விடப்பன்மடங்கு மோசமானவை; இழிவானவை.

- பரமஹம்சர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு