Election bannerElection banner
Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'நான் சின்னப் பையனா இருந்தப்ப, எங்க ஊருக்கு திருமுருக கிருபானந்தவாரியார் வந்து, நாலு நாள் தங்கியிருந்தார். சாயந்திரம் சொற் பொழிவு; காலையில, அவர் தங்கியிருந்த வீட்டுல பூஜை. அவர் எப்பவும் கையோடு கொண்டு வர்ற பூஜைப் பெட்டியைத் திறந்து விக்கிரகங்களை எடுத்து வெச்சு, பூஜை செஞ்சார். மந்திரங்கள், திருமுறைகள்னு சொல்லிச் சொல்லி, சுமார் ரெண்டு மணி நேரம் அவர் பூஜை செஞ்சதைப் பாக்கணுமே... கொள்ளை அழகு!'' என்று நான் சொல்ல... ''அடேங்கப்பா... ரெண்டு மணி நேரமா?!'' என்று வாய் பிளந்தான் என் மகன்.

##~##
உடனே என் மகள், ''பூஜையை இவ்வளவு நேரம் பண்ணணும்னு ஏதாவது கணக்கு இருக்காப்பா?'' என்று கேட்க... ''இந்தச் சமையலை யாராவது பார்த்துக்கிட்டா, 24 மணி நேரமும் நான் பூஜை பண்ணுவேன்'' என்று சமையற்கட்டில் இருந்து குரல் கொடுத்தாள் மனைவி.

''அந்தக் காலத்துல முனிவர்கள், ஞானிகள்னு எல்லாருமே காட்டுக்குப் போய், அங்கேயே தங்கி வருஷக் கணக்குல பூஜை பண்ணினாங்க. ஆனா இன்னிக்கு, தினமும் தவறாம இதோ பக்கத்துல இருக்கிற கோயிலுக்கே போய் வர நம்மால முடி யலை. வாரியார் சுவாமிகள் அளவுக்கு, அவ்வளவு மணி நேரம் பூஜை செய்யலேன்னாலும், தினமும் ஒரு 20 நிமிஷமாவது வீட்ல பூஜை பண்ணினா, மனசுக்கு நிம்மதியும் ஆறுதலும் கிடைக்கும்'' என்றேன்.

உடனே அனைவரும், ''அதென்ன 20 நிமிஷம் கணக்கு? அப்படின்னா, ஒரேயரு நிமிஷம் மனசார வேண்டிக்கிட்டா போதாதா?'' என்று கோரஸாகக் கேட்டனர்.

''அது அது அவங்க அவங்க வசதியைப் பொறுத்தது.மகாபாரதத்துல, பாசுபதாஸ்திரம் வாங்கறதுக்காக, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனை சிவபெருமான் குடிகொண்டிருக் கிற திருக்கயிலாயத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போனார். போற வழியில, சிவகணங்கள் வண்டி வண்டியாகப் பூக்க ளைக் கொண்டு போறதைப் பார்த்து, கண்ண னும் அர்ஜுனனும் எதுக்கு இவ்ளோ பூக்கள்னு ஆச்சரியப்பட்டு, சிவகணங் களை நிறுத்தி, விவரம் கேட்டாங்க. 'பூலோகத்தில் யாரோ பீமனாம்! மகா சிவ பக்தனாம். பூமியில் அவன் பூஜித்த மலர் களைத்தான் தினமும் வண்டி வண்டியாக எடுத்துச் செல்கிறோம்’னு சொன்னாங்க சிவகணங்கள்.

'பீமண்ணாவுக்கு பூஜை செய்ய நேரம் ஏது?’ன்னு கிருஷ்ணன்கிட்டே ஆச்சரியமாவும் குழப்பத் தோடும் கேட்டான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணர் புன்னகை செய்துவிட்டுச் சொன்னார்... 'பீமன்கிட்ட ஒரு குணம் உண்டு. எங்கே பூந்தோட்டத்தையோ மலர்க்குவியலையோ பார்த்தா லும், சட்டுன்னு ஒரு கணம் அங்கே நின்னு, கண்களை மூடி, 'சர்வம் சிவார்ப்பணம்’னு மனசார சொல்லிடுவான். அதாவது, அனைத்தும் சிவபெருமானுக்கேனு அர்ப்பணிச் சுடுவான். அதனால், அந்த மலர்கள் எல்லாமே, இங்கே சிவனாருக்கு வந்துடுது. அதான் விஷயம். அதனால, ஒரு நிமிஷமோ, ஒரு மணி நேரமோ... கால அளவுகளைப் பார்க்காம, நாம மனசார செய்யற பூஜை, கண்டிப்பா இறைவனை அடைந்தே தீரும்!'' என்றேன் நான்.

அத்தோடு, 'உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் கண்ணன் எம்பெருமானுக்கே!’ங்கற வைணவச் சம்பிரதாயத்தில் உள்ள பாட்டையும் பாடிக் காட்டினேன்.

''சரி, சரி... பூஜைக்கு நைவேத்தியம் ரெடியா இருக்கு. எல்லாரும் நல்லாருக்கணும்னு பூஜை பண்ணிட்டு வாங்க, டிபன் சாப்பிடலாம்'' என்றாள் மனைவி.

''முதல்ல டிபன் நல்லாருக்கணும்னு வேண்டிக்கறோம்'' என்றார்கள் என் மகனும் மகளும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு