Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 4

திருவருள் செல்வர்கள்! - 4
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 4

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

திருவருள் செல்வர்கள்! - 4

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 4
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 4

திருப்போரூர் ஸ்ரீமத் சிதம்பரம் ஸ்வாமிகள்

திருடர்களையும் திருத்திப்
பணிகொண்ட திருவருள்செல்வர்!

எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது
எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது.
பாதைகள் எல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்.

ஆஹா!ஆஹா! அற்புதமான வரிகள். வரி வரியாக... மன்னிக்கவும்! வார்த்தை வார்த்தையாக விளக்கம் பார்க்க வேண்டிய பாடல் வரிகள்.

பிறப்பு . அது எங்கே, எப்படி நிகழப்போகிறது என்பதை, எவராலும் சொல்லமுடியாது. மருத்துவமனைக்குச் செல்லும்போது, செல்லும் வழியில் வாகனத்திலேயே பிறப்பு நிகழ்ந்துவிடுகிறது.

சரி! முடிவையாவது சொல்லலாம் என்றால், ஊஹூம்! அதுவும் முடியவில்லை.

சரி! தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட பகுதியையாவது பார்க்கலாம் என்றால், ஒன்றும் பார்க்கும் படியாக இல்லை. காரணம்? பாதை தெரியவில்லை.வாழ்க்கைப் பாதையில், நிகழ்வுகள் அனைத்தும் மாறிமாறி வருகின்றன; இறுதியில் வாழ்க்கைப் பயணமும் முடிந்து விடுகிறது.

`இதுவரை வாழ்க்கையில் என்ன செய்தோம்?'  என்று திரும்பிப் பார்த்தால், பூஜ்யம்!

திருவருள் செல்வர்கள்! - 4

அதேநேரம், வாழ்க்கைப் பாதை மாறுவதைப் புரிந்துகொண்டால், மயக்கம் தெளிந்துவிடாதா? தெளிந்துவிடும் என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் கண்ணதாசன்.

பாதைகள் மாறுவதைப் புரிந்துகொண்டவர்கள்,  ‘திருவருள்செல்வர்கள்’.

அப்படி, பாதைகள் மாறிமாறி வருவதைப் புரிந்துகொண்ட உத்தமர் ஒருவரது வாழ்க்கைப் பயணம் இங்கே...

சிதம்பரம் எனப் பெயர் கொண்ட கவிராயர் ஒருவர் மதுரையில் இருந்தார். சிறுவயதிலிருந்தே மீனாட்சி அம்மையின் திருவருளைப் பெற்றவர். இலக்கண இலக்கியத்தில் மட்டுமல்லாது, தூய்மை யான உள்ளத்திலும் தலைசிறந்தவராக விளங் கினார்.

கவிராயரின் கல்வியும் நற்குணங்களும் அவரை, அவிநாசி கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆம்! அவிநாசிக்கு அருகில் இருந்த அடியார் ஒருவர் கவிராயரைப் பற்றி அறிந்து, தன் பிள்ளைகள் இருவருக்கு, கவிராயரை ஆசிரியராக ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கே கவிராயருக்கு, விருத்தாசலத்தைச் சேர்ந்த குமாரதேவர் எனும் உத்தமர் குருவாக அமைந்தார். குரு உபதேசம் ஏற்ற கவிராயர், குருநாதரை தெய்வமாகவே பாவித்து, குருவின் சொற்படியே நடந்துவந்தார்.
ஒருநாள், கவிராயர் தியானத்தில் இருந்தபோது, மயில் ஒன்று தோன்றி தோகையை விரித்து ஆடுவதும், வடிவத்தை மறைப்பதுமாக ஒரு காட்சி தோன்றியது. விவரம் புரியாத கவிராயர் அதுபற்றி குருநாதரிடம் கேட்க, “மதுரைக்குச் செல்! அங்கே அன்னை மீனாட்சி உனக்கு அருள்புரிந்து அறிவிப் பாள்” என்று கூறி, ஆசீர்வதித்து அனுப்பினார் குருநாதர்.

கவிராயர் மதுரைக்கு வந்தார். அம்பிகையின் அருள் வேண்டி தவம் செய்தார். இடையூறுகள் ஏற்பட்டன. நோய்கள் வந்து பலவிதங்களிலும், கவிராயரைப் படாதபாடு படுத்தின.

 “ஹூம்! என்ன இது? குருநாதர் சொன் னாரேன்னு இங்க வந்தா, இந்த மீனாட்சி இந்தப் பாடு படுத்துறாளே! ஊஹூம்... இது நமக்குச் சரிப்பட்டு வராது” என்று, சாதாரண மக்களைப் போல இருக்கவில்லை கவிராயர். மீனாட்சி கலிவெண்பா பாடி, அம்பாளைத் துதித்தார். அசையாத உள்ளம், அம்பாளை நிறுத்தியது அவர் முன்னால். பணிந்து எழுந்த கவிராயருக்குப் பாதை காட்டினாள் அம்பிகை.

 “கவிராயா!இங்கிருந்து வடக்கே திருப்போரூர் எனும் தலம் உள்ளது. அங்கே எம் புதல்வன் முருகனின் ஆலயம் ஒன்று, மிகவும் சிதிலமடைந்து உள்ளது. நீதான் அதைப் புதுப்பித்து வெளிப்படுத்த வேண்டும். அதை உனக்கு அறிவிக்கவே, முருகன் மயில் வடிவாக வந்து தன் வடிவத்தைக் காட்டி மறைத்தனன். திருப்போரூர் செல்! முருகனே அங்கு ஞானஆசிரியனாக எழுந்தருளி, உனக்கு உண்மையை விளக்குவான்” என்று விவரித்து மறைந்தார்.

திருவருள் செல்வர்கள்! - 4

பாதை வகுத்த பின்பு அசரவில்லை கவிராயர். குருநாதரும் அம்பிகையும் வழிகாட்டிய பாதையில் பயணம் மேற்கொண்டார். (கவிராயரை இனிமேல் ‘அடிகள்’ என்றே பார்க்கலாம்) மதுரையை விட்டுப் புறப்பட்ட அடிகள், விருத்தாசலம் சென்று, அங்கே நிஷ்டையில் இருந்த குருநாதரை வலம் வந்து வணங்கி, பயணத் தைத் தொடர்ந்தார். வரும்வழியில் பொம்ம பாளையம் எனும் ஊரில், சிவஞான பாலைய சுவாமிகள் எனும் மகானைத் தரிசித்து, அங்கேயே சிலநாள்கள் தங்கியிருந்து அவருடன் பேசி மகிழ்ந்தார்.

அதன்பின் அங்கிருந்து புறப்பட்ட அடிகள், திருப்போரூரை அடைந்தபோது, அவர் முதலில் தரிசித்தது ‘வேம்படி விநாயகரை’. அங்கேயே தங்கிவிட்ட அடிகள், அங்கிருந்த வள்ளையார் ஓடை என்ற தீர்த்தத்தில் நீராடி, அன்னை மீனாட்சி குறிப்பிட்டுச் சொன்ன ஆறுமுகன் ஆலயத்தைத் தேடத் தொடங்கினார்.

அந்தக் காலத்தில், திருப்போரூரில் பார்க்கும் இடமெங்கும் பனை மரங்கள் நிறைந்து, காடு போலக் காட்சி அளித்தன. பல இடங்களிலும் தேடி அலைந்த அடிகள், பெண் பனைமரம் ஒன்றின் அடியில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி யிருந்த முருகப்பெருமானைத் தரிசித்தார். ஆறுமுகன் ஆலயத்தின் அடையாளம் தெரிந்து விட்டது.

ஆலயம் இருந்த இடம் தெரிந்துவிட்டது; புதுப்பித்து வெளிப்படுத்தப் பணம் வேண்டுமே. அதற்கும் வழி பிறந்தது. விநாயகர் ஆலயத்தில் இருந்த அடிகள், தம்மைத் தரிசிக்க வந்தவர்களுக் கெல்லாம் விபூதி அளிக்கத் தொடங்கினார். விபூதி பெற்றவர்களின் பிரச்னைகள், சொல்லி வைத்தாற் போலத் தீர்ந்தன; குறிப்பாகப் பலரது நோய்கள் நீங்கின.

அப்புறம் என்ன? பக்தர்கள் தங்களால் இயன்ற தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார்கள். சமர்ப்பிக்கப்பட்ட செல்வம், கள்வர்கள் சிலரின் கண்களை உறுத்தியது. நல்லது செயல்படத்தான், நாளாகும்; கெட்டது உடனே செயல்பாட்டில் வந்துவிடாதா?

அடிகளாருக்குச் சமர்ப்பிக்கப்பட்டதை, அப்படியே அபகரிக்கத் தீர்மானித்தார்கள் கள்வர்கள். யாரும் அறியாதபடி, மெள்ள மெள்ள நெருங்கினார்கள். அவர்கள் நெருங்கி வருவது அடிகளுக்குத் தெரியாது. ஆனால், ஆறுமுகனுக்குத் தெரியும் அல்லவா!

களவாட வந்தவர்களின் கண்கள், பார்வையை இழந்தன. திடுக்கிட்ட கள்வர்கள் மறைவிடத் திலிருந்து வெளிப்பட்டு, தட்டுத் தடுமாறி ஒரு வழியாக அடிகளின் திருவடிகளில் விழுந்து, மன்னிக்கும்படி வேண்டினார்கள்.

அடிகள் இரங்கினார்.  “திருடுவதை இன்றோடு நிறுத்திவிடுங்கள்! இதுவரை கொள்ளையடித்த செல்வங்களை எல்லாம், இதோ ! இங்கு அமையப் போகும் முருகன் ஆலயத் திருப்பணிக்கு சமர்ப்பணம் செய்யுங்கள்! இழந்த பார்வையை மீண்டும் பெறுவீர்கள்'' என்று கனிவோடு சொன்னார்.

பறிபோன பார்வையும், அடிகளின் கனிவான வார்த்தைகளும் கள்வர்களைத் திருத்தின. அவர்கள் அதுவரை களவாடிச் சேர்த்து வைத் திருந்த செல்வங்கள் அனைத்தையும், செவ்வேள் குமரனின் ஆலயத் திருப்பணிக்காகச் சமர்ப்பித் தார்கள். அடுத்தவரிடம் இருந்து கள்வர்கள் பறித்ததைத் திருப்பியவுடன், அவர்களிடம் இருந்து பறித்ததைத் திருப்பி அளித்தார் முருகப் பெருமான். ஆம்! கள்வர்கள் கண்பார்வை கிடைக் கப் பெற்றார்கள்.

ஓரளவுக்குச் செல்வம் கிடைத்துவிட்டது. கோயிலை வெளிப்படுத்தியாக வேண்டுமே! அதற்கும் வழிகாட்டினார் ஆறுமுகப்பெருமான்.

ஒருநாள், அடிகளாரின் முன்பு அவர் குருவான குமார தேவர் வடிவில் குமரக்கடவுள் தோன்றினார். “குருதேவா! குருதேவா!” என்று கூவியபடியே, கைகள் இரண்டையும் தலைக்குமேல் வைத்து வணங்கினார் அடிகள்.

பிறகு இருவருமாக, அறுமுகன் ஆலயம் இருந்த பனங் காட்டை அடைந்தார்கள். அப்போது, குமாரதேவர் அடிகளின் நெற்றியில் திருநீறு பூசி, “இப்போது பார்! திருக் கோயில் தெரியும்” என்றார்.

அங்கே முன்பு இருந்த கோயிலின் அமைப்பு முழுதுமாக, அடிகளுக்குத் தெரிந்தது. வியந்த அவர், குருநாதரிடம் கேட்கலாம் என்று திரும்பினார். அடிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருவடிவில் வந்த குமரக்கடவுள், அங்கிருந்த சுயம்பு மூர்த்தியில் புகுந்து மறைந்தார்.

திருவருள் செல்வர்கள்! - 4

அதே விநாடியில்,கோயிலாகக் காட்சியளித்த அந்த இடம், பழையபடியே பனங்காடாகக் காட்சியளித்தது.

முருகப்பெருமானே வந்து வழிகாட்டியதை உணர்ந்த அடிகளுக்கு மெய்சிலிர்த்தது; திருப்பணியைத் தொடங்கினார். அவரிடம் திருநீறு பெற்று நோய்நீக்கம் பெற்றவர்களும் உதவிக்குச் சேர்ந்துகொள்ள, திருப்பணி வளர்ந்து நிறைவுற்றது.

ஆலயத்தை அற்புதமாக அமைத்து முடித்த அடிகள்,  பூஜை முறைகளையும் வகுத்து வைத்தார். அந்த அடிகள் திருநாமம்,  ‘திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்’.  திருப்போரூர் முருகனைத் துதித்து ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனும் அற்புதமான துதிநூலைப் பாடினார். பதினெட்டு கண்கள் கொண்ட முருகப்பெருமானைக் குறிக்கும் முகமாக, அந்த நூலில், பதினெட்டு தலைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன.

அனைத்துக்கும் மேலாக, திருப்போரூர் கோயிலில் ஸ்ரீசிதம்பர சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட  அபூர்வமான யந்திரம் உள்ளது. இந்த யந்திரத்தின் சக்தியை உணர்ந்த காஞ்சி ஸ்ரீமகா சுவாமிகள், இந்த யந்திரத்தைத் தன் திருக்கரங்களால் தொட்டு அருள்பாலித்திருக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த யந்திரம் இது.

குருநாதர் காட்டிய வழியில் மதுரைக்குச் சென்று அம்பாளை நேருக்கு நேராகத் தரிசித்து, அம்பாள் வழி காட்ட திருப்போரூர் வந்து, திருடர்களையும் திருத்திப் பணி கொண்டு, குரு வடிவில் முருகனே வந்து வழிகாட்ட கோயில் கட்டி, நமக்காக அற்புதமான நூலையும் யந்திரத் தையும் அருளிய ஸ்ரீசிதம்பர சுவாமிகள், வைகாசி விசாகத் தன்று முருகப்பெருமானுடன் இரண்டறக் கலந்தார்.

நற்சோனையாக இன்றும் அருள்புரியும் திருப்போரூர் முருகன் நம் தீராத வினைகளைத் தீர்த்துக் காக்கட்டும்!

- திருவருள் பெருகும்...

படங்கள்: தே.அசோக்குமார்

திருவருள் செல்வர்கள்! - 4

கடவுள் நம்பிக்கை!

`கடவுள் நம்பிக்கை இருந்தும் சில தருணங்களில் சஞ்சலமும் அவநம்பிக்கையும் ஏற்படுகின்ற னவே?' எனும் கேள்விக்கு சுவாமி சின்மயானந்தர் அருளிய பதில்: `மனதின் சத்தத்தைக்  கேட்காதீர்கள். அது, உங்களை  ஏமாற்றிவிடும். ஆத்மாவின்  குரலைக் கேளுங்கள். அது,  உங்களைக் கைதூக்கிவிட்டு  லட்சியத்துக்கு அழைத்துச் செல்லும். உறுதியில்லாத நம்பிக்கையால் எதையும் சாதிக்க முடியாது. அசைக்க முடியாத நம்பிக்கைதான் பிரகலாதனையும் துருவனையும் சிரஞ்ஜீவிகளாக்கியது.