தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 4

ரங்க ராஜ்ஜியம் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 4

இந்திரா சௌந்தர்ராஜன்

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத்துட் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கமேயான் திசை.

- பொய்கையாழ்வார்


ஸ்ரீவைகுண்டம்! பரந்தாமனின் தாமச நித்திரைக்கு நடுவே, ஏதோ சொப்பனம் காணு கிறார்போல், அவரின் திருமுகத்தில் ஒரு செம்முறு வல். ஹ்ருதயவாசினியான லட்சுமிதேவியே அது கண்டு ஆச்சர்யம் கொண்டாள்.

பரந்தாமன், தன் நீல நயனங்களை மலர்த் தினார். அவருக்கு இப்போது லட்சுமி தரிசனம். திருமகள் புன்னகைத்தாள்.

“நிர்வாக நித்திரை முடிந்துவிட்டதா ப்ரபு'' என்று வினாவத் தொடங்கினாள்.

“அதற்கு முடிவேது லட்சுமி. சற்று ஓய்வெடுக்க எண்ணியே கண் மலர்ந்தேன்” என்ற பரந்தாமனை இம்முறை அதீத வியப்போடு நோக்கினாள் லட்சுமி.

“வியந்து வழிகிறாயே... ஏன்?’’

பரந்தாமனும் கேள்வியோடு தனது உரையாட லைத் தொடங்கினார்.

“ஆம்! உயிர்களுக்கெல்லாம் உறக்கமே ஓய்வு. எம்பெருமானுக்கோ விழிப்பே ஓய்வெனில், எப்படி வியக்காமலிருக்க முடியும்?”

ரங்க ராஜ்ஜியம் - 4

“இதைவிட வியப்பான விஷயங்கள் நிறைய நடந்தபடி உள்ளன தேவி!”

“அதனால்தான் உறக்கத்திலும் புன்னகையோ?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், திருமகள் குறித்த தனது பெருமிதத்தை வெளிப்படுத் தினார் பகவான்: “நீ எப்போதும் என் திருமுகத் தையே தியானித்த படி இருப்பதை, உனது கேள்வியின் மூலம் உணர்கிறேன்”

ஆனால், திருமகள் விடவில்லை. “ஸ்வாமி!  நீங்கள் குறிப்பிட்ட அந்த வியப்பான விஷயங்களை நானறியலாமா?”

“உன்னை நான் புகழக்கூடாதா தேவி?”

“உங்கள் மார்போடு கிடப்பவள் நான். நீங்கள் வேறு நான் வேறில்லாத நம்மை, நாமேவா புகழ்ந்து கொள்வது?”

“அப்படியானால், என்னுள் இருந்தே சகலமும் தோன்றின. அவை வேறு நான் வேறு இல்லை என்றும் கூறலாம் அல்லவா?”

“அதுதானே சத்தியம்?”

“அந்தச் சத்தியம் உனக்குப் புரிந்திருக்கும் அளவு, பிரம்மனுக்குப் புரிந்திருக்கவில்லை என்று கருதுகிறேன்...”

“இது என்ன விந்தை?”

“விந்தைதான்... அதை எண்ணியே நகைத்தேன்!”

“விரிவாகக் கூறலாமே?”

“என் அர்ச்சா ரூபமான பிரணவாகார விமான ரூபத்தை நீ அறிவாய் அல்லவா?''

“இது என்ன கேள்வி? பிரம்மதேவனை நெறிப் படுத்தவும் நிறைப்படுத்தவும் வேண்டி, தங்களின் சூட்சுமத்தால் உருவாக்கப்பட்டதல்லவா அந்தப் பிரணவாகார விமானம்?”

“சரியாகச் சொன்னாய். நெறிப்படுத்த வேண் டிய அதுவே, பிரம்மனையே சற்று குறைப்படுத்தி விடுமோ என்று இப்போது நான் எண்ணுகிறேன்.”

“பிரம்மம்கூட குறைவுபடுமா என்ன?”

“சத்திய லோகத்தில், பிரம்மனின் வசம் தினமும் பூஜைகள் கண்டுவரும் அந்தப் பிரணவாகாரத்தை, பிரியவேண்டி வந்துவிடுமோ என்று இப்போது கலக்கத்தில் இருக்கிறான் பிரம்மன். `பிரம்ம கலக்கம்' என்பது ஒரு குறைவுதானே?”

“அப்படியானால், அசுரர் எவரேனும் உங்களை அடைவதற்கான ஒரு குறுக்கு வழியாக, அந்தப் பிரணவாகாரத்துக்குக் குறிவைத்துவிட்டார்களா என்ன?”

“அடடா... அப்படி நடந்தால்கூட நன்றாயிருக்குமே?”

“எனில், அசுரர்கள் காரணமில்லை என்று தெரிகிறது. பீடிகை போடாமல் விஷயத்தை நேரடியாகவே கூறிவிடுங்களேன்...”

“என் மார்போடு கிடக்கும் உனக்குக்கூடவா, என்னுள் எழும் எண்ணங்களின் போக்கு தெரிய வில்லை?”

‘`ஒட்டுக்கேட்கச் சொல்கிறீர்களா?”

“ஒன்றிக் கேட்கச் சொன்னேன். போகட்டும்! நான் விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். பூ உலகைச் சேர்ந்த அயோத்தி அரசனும் ஏழாம் மனுவின் புத்திரனுமான இக்ஷ்வாகு, பிரணவாகார விமானம் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்க்கும் வேண்டும் என்று பிரம்மனைக் குறித்து தவம் செய்கிறான். எங்கே அவன் தவம் பலித்துவிடுமோ, அந்த விமானத்தை, இழந்துவிடுவோமோ என்று பிரம்மனும் கலக்கத்தில் உள்ளான்!”

“விவஸ்வானின் புத்திரன் அந்தளவுக்குப் பெரிய பக்தனா பிரபு?''

“அப்படி அவனைப் படைத்தவனே பிரம்மன் தான். தான் படைத்த ஒன்றிடம் தானே சிக்கிக் கொள்வது என்பது இதுதானோ?”

“இப்படிக் கேட்பதன் மூலம் தாங்களும் அல்லவா சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள்?”

திருமகளின் இந்தக் கேள்வியைக் கேட்டுப் புன்னகைத்தபடி பதில் சொன்னார் பகவான்:

“ `நாம்' என்று கூறு!”

ரங்க ராஜ்ஜியம் - 4

“ஆம்! இக்ஷ்வாகுவின் தவம் தங்களின் நித்திரை யையே கலைத்து, இவ்வளவுதூரம் என்னோடு பேசவைத்துவிட்டது என்றால், அவன் தவத்தின்  செம்மையை அறிய முடிகிறது. இப்போது என்ன செய்யப்போகிறீர்கள் பிரபு?”

“நீதான் கூறேன்?”

“நான் எனும் செருக்கின்றி பக்தியோடு ஒருவர் வாழ வேண்டும் எனும் நல்ல நோக்கில், தங்களின் சூட்சுமத்தால் உருவான அந்தப் பிரணவாகார விமானத்துக்கான பக்தி, பிரம்மாவிடமிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்றே, தாங்கள் அதை பிரம்மனுக்கு அளித்தீர்கள்.

பிரம்மன் அந்தப் பக்தியை விவஸ்வானுக்கு ஏற்படுத்த, விவஸ்வான் இக்ஷ்வாகுவுக்கு ஏற்படுத்தி யுள்ளான். இதில் இக்ஷ்வாகு பூலோகவாசியாகவும் பூவுலக அரசனாகவும் இருப்பவன். அப்படியான வன், பிரணவாகாரத்தை அடைந்து பூஜிப்பதன் மூலம், பூவுலகில் தங்களது அனுக்கிரகம்  பரவலாகி ‘சாந்தம், செல்வம், சந்தோஷம், பக்தி, ஞானம், ஆரோக்கியம், மோட்சம்’ ஆகிய சப்த நிதிகள் மானுடர்க்குக் கிட்டும். இப்படியெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் எனும் தங்களின் திருவுள்ளச் சித்தம்தானே, தாங்கள் அதை பிரம்மாவுக்கு அளிக்கக் காரணம்?’’

லட்சுமிதேவி வெகுஅழகாக காரணகாரியங் களோடு கூறியதைக் கேட்டு மகிழ்ந்த பரந்தாமன், “லட்சுமி! என்னுள் பூரணமாய் நீ நிரம்பியிருப்பதால்தான், என் திருவுள்ளக்கிடக்கை புரிந்து சரியாகக் கூறியுள்ளாய். நீ கூறியதே நிதர்சனம். சக்தியுள்ள ஆகாரங்களால் உடலானது வலுப் பெறுவதுபோல், அகங்காரமற்ற பக்தியால் மனம் வலுப்பெறும்.

மனோவலிமையே ஆத்மவலிமையாக மாறு கிறது. எத்தனை வலிமையான உடலும், வயதாகும் போது வலுவிழக்கும். ஆனால், ஆத்ம வலிமை என்பது காலத்தால் கூடுமேயன்றி குறைவுபடாது. என்னுள் தோன்றிய உயிர்கள், இந்த ஆத்ம பலத்தால் மட்டுமே திரும்ப என்னுள் வந்து சேரவும் முடியும். அதன் நிமித்தம் உருவானதே இந்தப் பிரணவா கார விமானமும், அதனுள் நித்திரையில் இருக்கும் என் கோலமும்!
என்னை வணங்குவோர் சகல தேவர்களையும், சப்தரிஷிகளையும், அஷ்டவசுக்களையும், துவாதச ஆதித்தியர்களையும், நவகிரகங்களையும் ஒருசேர வணங்கிய பலனை அடைகிறார்கள். சுருக்கமாகக் கூறினால், உலக வாழ்க்கை என்பது ஓர் அரங்கில் நடக்கும் நாடகம் போன்றது. அந்த நாடகத்தை நடத்தும் நாதனாய் நான் திகழ்வதால்தான், இங்கே என் நாமம் அரங்கநாதன் என்றாகிறது. ‘ரங்கா’ எனும் பதம் தலைவன் என்றாகிறது.”

பரந்தாமனின் விளக்கத்தைக் கேட்ட லட்சுமி உடனே இடைமறித்து, ``தலைவன் இல்லை; `தலையாயவன்' '' என்றுகூற, பரந்தாமன் புன்னகைத்தார். அது அவள் கருத்தை ஆமோதித் ததுபோலும் இருந்தது, `பேசியது போதும். இனி செயலாற்றுவோம்' என்பது போலும் இருந்தது!

சத்யலோகம்!

அங்கே ஸ்ரீநாராயணரின் பிரவேசம் நிகழவும், பிரம்மதேவன் பூரித்துப் போனார்.

“எந்தையே! தாங்கள் என்னை எண்ணிய அந்த நொடியே நான் வைகுண்டம் ஏகியிருப்பேனே... இப்போது, தாங்களே நேரில் வரும்படியானதால், தங்களை நான் சிரமப்படுத்திவிட்டேனே” என்று வணங்கிப் பணிந்தார்.
“பூலோக மானுடன் ஒருவன் குறித்த உனது சிந்தை, பூலோக மானுடர்களைப் போலவே உன்னையும் பேசவைக்கிறது. போகட்டும்... உனக்குமா கலக்கம்?”

பரந்தாமன் அப்படிக் கேட்ட நொடியில் பிரம்மனிடம் ஒரு சிலிர்ப்பு.

“கலக்கம்தான் பிரபு. ஆனால்,  அதற்கான காரணம், தாங்கள் அறியாததல்ல. தங்களின் பிரணவாகாரம் பூவுலகில் நிலை கொள்ளும் பட்சத்தில், நித்ய பூசனைகள் குறைவுபடாமல் நிகழவேண்டும். மானுடர்கள் யுக மாயாக்களுக்கு ஆட்படும் பட்சத் தில், ஊறு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதே என் கலக்கத்தின் அடிநாதம்!”

“பூமிப் பந்தே இரவு பகல் என்று இரு நிலைகளில் உள்ளது. அங்கு வாழ்ந்திடும் மானுடர் வாழ்விலும் தீதும் நன்றும் கலந்தே இருக்கும். அது பிரணவாகாரம் வரையிலும்கூட எதிரொலிக்கக்கூடும். ஆயினும், பிரணவாகாரம் தீதை அடக்கி, நன்மையைப் பெருக்கி வாழ உறுதுணையாக இருக்கும். அப்படி இருக்கவேண்டும் எனும் எனது விருப்பத்தால் உருவானவையே அந்தப் பிரணவாகார விமானமும் எனது அரங்கநாத கோலமும். இதை, நான் எடுத்துக்கூறினால்தான் உனக்குப் புரியுமா?”

பரந்தாமனின் கேள்விமுன் பணிந்து நின்ற பிரம்மன் ‘`எம்பெருமானே, அதை நான் அறிந் திருந்தபோதிலும், தங்கள் வாயால் கேட்க விரும்பியே கலக்கத்தை வெளிப்படுத்தினேன். பொசிந்த பச்சைத் தளிரானது மரத்தில் இருக்கும் வரை மரமென்றே அழைக்கப்படுகிறது. உதிர்ந்து மண்ணில் விழுந்துவிட்டாலோ சருகென்றாகி விடுகிறது. உண்மையில் மரம் வேறல்ல, சருகும் வேறல்ல. இரண்டும் ஒன்றே! காலத்தால் பிரத்யேகமாகி வெவ்வேறு பெயர் பெறுகின்றன. இங்கே நானும் அவ்வாறே `பிரம்மன்' என்ற பெயரில் தங்களால் சிருஷ்டிகர்த்தாவாக உள்ளேன். இந்தக் கர்த்தாவின் கர்த்தா தாங்களே. ஆணையிடுங்கள்... நான் என்ன செய்ய வேண்டும்?” என்று வேண்டினார்.

“இதை இக்ஷ்வாகுவிடம் சேர்த்துவிடு. வைகுண்டத்தில் தோன்றிய என் பிரதிமம், சத்யலோகம் சென்று பின் பூலோகம் சென்றது என்றாகட்டும். அதனால் இது இருக்கும் இடமும்  பூலோக வைகுண்டம் என்றாகட்டும்.”

“அவ்வாறே நடந்திட அனுக்கிரகம் செய்யுங்கள்.’’

பிரம்மன் பணிந்தார். பரந்தாமனும் அருளிமறைந்தார்!

சரயு நதிக்கரை - இக்ஷ்வாகுவின் தவக்கோட்டம்.

இக்ஷ்வாகுவின் நெடிய தவம் பூமியின் பருவகாலங்கள் அனைத்தையும் கண்டுவிட்ட நிலையில், அவனது அயராத மன உறுதியால் மேலும் தொடர்ந்தவண்ணமிருந்தது.

இக்ஷ்வாகுவும் ‘ஓம் ஸ்ரீரங்கதாமா’ என்கிற அரங்கநாத கோலத்தையே தன் தவச் சிந்தனையாக்கிக் கொண்டிருந்தான்.இக்ஷ்வாகுவின் உதடுகளிரண்டும் உதிர்த்தபடி இருந்த, ‘ஓம் ஸ்ரீரங்கதாமா’  என்ற அந்தச் சொல் சரயு நதிக்கரை முழுக்க எதிரொலித்ததில், அந்தச் சூழலே மாறியிருந்தது.

எப்போதோ இடி விழுந்து பட்டுப்போயிருந்த ஒரு பன்னீர் மரம் துளிர்த்துவிட்டிருந்தது! நதி தீரத்தில் மானும் புலியும்கூட தங்களின் சுபாவத்தை மறந்து ஒன்றாய் நின்றிருந்தன. அவற்றின் காலருகே முதலைகள்... தங்களுக்கான உணவிருந்தும், உண்ணாது, உண்ணவும் தோணாது கிடந்தன.

‘ஸ்ரீரங்கதாமா’ எனும் சொல்லின் பரவலுக்கே, இப்படி இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குமானால், அந்தச் சொல்லுக்கு உரியவன் எத்தனை ஆற்றல் கொண்டவனாயிருக்க வேண்டும்? இக்ஷ்வாகுவின் தவத்தை நெறிப்படுத்தி வரும் வசிஷ்டர், சரயு நதிக்கரையின் சூழல் கண்டு நெகிழ்ந்தார்.

பிரம்மஞானிகளுக்குப் பெரிது சிறிது கிடையாது. பெரிதும் சிறிதும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவதால்தான் உருவாகிறது. பிரம்மஞானிகள் அந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள். அதே தருணம், ஒரு பிரம்மஞானி தன்னைப் போல ஒரு பிரம்மஞானி தோன்றும்போது பெரிதாக மகிழவும் மாட்டான். மிக இயல்பாக எடுத்துக்கொள்வான். ஒரு பெரும் நிறைவு மட்டும் நெஞ்சு நிரம்ப இருக்கும். அது வசிஷ்டரிடம் நிரம்பியிருந்தது.

கொடி ஒன்றுக்குப் பற்றிக்கொள்ள மரம் ஒன்று கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுபோல், பூலோக மாந்தர்களுக்கு இக்ஷ்வாகு மூலமாக அரங்கநாதப் பெருமான் கிடைக்கப் போவதாகக் கருதினார். அதற்கான அறிகுறிகளும் விண்ணில் தோன்றின!

- தொடரும்...

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

ரங்க ராஜ்ஜியம் - 4

கடவுளுக்குக்  கடிதம்!

தபால் ஆபீசுக்கு, `கடவுள், சொர்க்கம்’ என்று விலாசமிடப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. அதன் கவரில் அனுப்பியவரது முகவரி இல்லை. அதை, கடவுளுக்கு எப்படி அனுப்புவது? அதேநேரம், திருப்பி அனுப்பவும் முடியாது!

ஒருவேளை, முகவரி உள்ளே இருக்கலாம் என்று கருதிய தபால் அலுவலக ஊழியர்கள், கவரைப் பிரித்துப் பார்த்தனர். உள்ளே முகவரி இருந்தது. அதை எழுதியவர் தனது கஷ்டங்களை விவரித்து, தனக்கு 200 ரூபாய் பணம் அனுப்பும்படி கடவுளிடம் உதவி கேட்டிருந்தார். அதைப் படித்து மனம் கசிந்த ஊழியர்கள், ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, அந்த நபருக்கு 150 ரூபாய் பணம் அனுப்பினர். இரண்டு நாள் கழித்து, அந்த நபர் கடவுளுக்கு நன்றிக் கடிதம் அனுப்பியிருந்தார்.அதைப் படித்துப்பார்த்த ஊழியர்களுக்கு மயக்கம் வராத குறை. ஆம்! அந்த நபர் கடவுளை இப்படி எச்சரித்திருந்தார்: ‘கடவுளே... தாங்கள் அனுப்பியதில் 50 ரூபாயைத் தபால் ஊழியர்கள் திருடிக்கொண்டனர்; கவனம் தேவை.’