Published:Updated:

‘திருமுறைகளே எங்கள் வழிகாட்டி!’

‘திருமுறைகளே எங்கள் வழிகாட்டி!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘திருமுறைகளே எங்கள் வழிகாட்டி!’

பிரேமா நாராயணன், படங்கள்: க.பாலாஜி

சென்னை- மாங்காடு தலத்தில் அருளும் ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலுக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலைவேளையில் செல்பவர்கள், அங்கே நிகழும் பக்திச் சொற்பொழிவைக் கேட்கத் தவறியிருக்க மாட்டார்கள். மிக எளிய உருவம், இதழ்களில் புன்னகை, இனிய தமிழில் சிறு சிறு நன்னெறிக் கதைகளோடு ஞாயிறுதோறும் அங்கே உரையாற்றுபவர், புலவர் தேவகி பிரபாகர மூர்த்தி.
தனது வாழ்வையே திருமுறைகளைத் துதிப்பதற்கும், ஓதுவதற் கும், ஆன்மிகச் சேவைகளுக்காகவுமே அர்ப்பணித்துக்கொண் டவர். தேவகி மட்டுமல்ல, அவரது குடும்பமே திருமுறைகளின் வழி வாழ்க்கை நடத்தும் தெய்விகக் குடும்பமாகத் திகழ்கிறது.

குன்றத்தூரில், தனது இல்லத்திலேயே உள்ள பிள்ளையார் கோயிலின் கருவறையில் சிறு மாடம் அமைத்து, அதில் பன்னிரு திருமுறைகளையும் வைத்து, தினமும் பூஜித்து வருகிறார் தேவகி. அங்கே லிங்க பிரதிஷ்டையும் செய்துள்ளார்கள். இந்தக் கோயில், ‘திருமுறை விநாயகர் கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது. இப்படி, திருமுறைகளுக்கென ஒரு கோயிலை அமைத்து, குடும்பமே வழிபடுவது நமக்குப் பேராச்சர்யமாக இருந்தது.

‘திருமுறைகளே எங்கள் வழிகாட்டி!’

அந்த வியப்பு விலகாமலேயே தேவகியிடம் பேசினோம். தான் இப்படி ஓர் இறைப்பணியில் ஈடுபடக் காரணமாக இருந்த தன் பிறந்தகத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி, அழகிய தமிழில் விவரித்தார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது ராஜமன்னார்குடி. அப்பா தினந்தோறும் ராஜகோபால ஸ்வாமியை வணங்கிவிட்டுத் தான் வேறு வேலைகளைப் பார்ப்பார். எங்களுக்கும் அதனால் பக்தி என்பது இயல்பாய் அமைந்திருந்தது. தமிழ் மேலிருந்த காதலால், பள்ளிப் படிப்புக்குப் பிறகு, தமிழில் புலவர் பட்டம் பெற்றேன். சிறுவயது முதலே பேச்சுத்திறமை மற்றும் பாடும் திறமையை இறைவன் தந்திருந்தார். கல்லூரியில் படிக்கிறபோது, வில்லுப்பாட்டுக் குழுவை அமைத்து, நிறைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினேன். அப்போதே பெரிய புராணம் பற்றியெல்லாம் பேசுவேன்.

பின்னர், ஆசிரியர் பயிற்சிபெற்று, தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றினேன். பிறகு அரசு வேலை கிடைத்தது. திருமணத்துக்குப் பின், என் கணவர் பிரபாகரமூர்த்தியும் என்னைப்போலவே தமிழ் மீதும், ஆன்மிகத்திலும் பற்றுக்கொண்டவராக இருந்ததால், வாழ்க்கை இன்னும் அழகானது. அவரும் ஆசிரியர்தான். எனது முயற்சிகளுக்கும் பணிகளுக்கும் தடையேதும் சொல்லாமல் என்னை ஊக்குவித்து ஆதரித்தார். எங்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். என் மகன் திருச்சிற்றம்பலமும் திருமுறை ஆசிரியர். சைவ சித்தாந்த வகுப்புகளை எடுக் கிறார். திருவாவடுதுறை ஆதீனத்தில் தேவார, திருமுறை பேராசிரியராக இருக்கிறார்’’ என்றவர், தனது ஆன்மிகப் பணிகளை விவரித்தார்.

‘‘குன்றத்தூரில் சேக்கிழார் கோயில் இருக்கும் தெருவில் தான் எங்கள் வீடு. அங்கே சுமார் 20 பெண்கள் சேர்ந்து ‘சேக்கிழார் மகளிர் மன்றம்’ அமைத்து, வாரந் தோறும் புதன்கிழமைகளில் வழிபாடு, பாராயணங் கள் செய்தோம். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, முதன்முதலில் அங்கே ‘முற்றோதுதல்’ நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

உழவாரப் பணி செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. குடும்பத்தோடு கோயில்களில் உழவாரப்பணி செய்வோம். அந்தக் காலகட்டத்தில் குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில் மிகவும் பாழடைந்து, சிதிலமடைந்திருந்ததைப் பார்த் தோம். அந்தக் கோயிலுக்கு என்னால் முடிந்த அளவு திருப்பணி செய்தேன். இப்போது மக்கள் வந்து வழிபடும் அளவுக்கு அந்தக் கோயில் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘திருமுறைகளே எங்கள் வழிகாட்டி!’

அதன் பிறகு, எங்கள் வீட்டிலேயே விநாயகருக் குச் சிறு கோயில் கட்டினேன். அங்கே லிங்க பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு மேலே திருமுறை நூல்களை மாடத்தில் வைத்து, தினசரி இரு வேளைகள் பூஜைசெய்ய ஆரம்பித்தேன்.

என் மகன் அல்லது மாப்பிள்ளை பூஜை செய்வார் கள். திருமுறை விநாயகருக்கும் திருமுறை உகந்த நாதரான லிங்கத் திருமேனிக்கும் தூய பசும்பாலில் மட்டுமே அபிஷேகம் செய்கிறோம். ரொம்ப சக்தி வாய்ந்த அனுக்கிரக மூர்த்திகள். பலருக்கும் பல பிரார்த்தனைகளை நிறைவேற்றி யிருக்கிறார்கள்’’ - மனம் நெகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தவரிடம் மாங்காடு கோயிலில் அவர் செய்யும் சொற்பொழிவு குறித்துக் கேட்டோம்.

‘`2002-ம் ஆண்டு முதல், மாங்காடு கோயிலில் பேசி வருகிறேன். வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குப் பேசுவேன். பெரியபுராண வரலாறு, நீதிபோதனைக் கதைகள், திருமுறைகள் பற்றிய சுவையான தகவல்கள், பொதுவான நல்ல செய்திகள்... என சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் எனது சொற்பொழிவு.  காமாட்சியை வணங்கிட்டு மனநிறைவோடு வரும் பக்தர்கள், ஆத்மார்த்தமாகக் கேட்டு ரசிப்பார்கள்.

இது காமாட்சி போட்ட பிக்ஷை என்றுதான்தான் சொல்ல வேண்டும். அவள் காலடியில் அமர்ந்து, அவளைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு நாலு நல்ல விஷயங்களைச் சொல்வது எவ்வளவு பெரிய பாக்கியம். உடலில் தெம்பு இருக்கும்வரை இதைத் தொடர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்’’ என்று சொல்லும் தேவகி, வெளியூர், உள்ளூர் கோயில்களில் அழைப்புக்கிணங்க சென்று, சொற்பொழிவு செய்துவருகிறார்.

அதேபோல், மகனுடன் சேர்ந்து ஆலயங்களில் கும்பாபிஷேக வைபவங்களில் நேர்முக வர்ணனை யும் வழங்கி வருகிறார். இவற்றுக்கெல்லாம் கட்டணம் எதையும் பெறுவதில்லை, கோயில் நிர்வாகத்தினர் மனமுவந்து தருவதை ஏற்றுக் கொள்கிறார். மட்டுமின்றி, விநாயகர் கோயில் அமைந்துள்ள வீட்டை, திருமுறை வழிபாட்டுக் காகவே பயன்படுத்த வழிவகை செய்திருப்பது, குறிப்பிடத்தக்கது.

‘`குன்றத்தூர் திருநாகேஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று இரண்டாம் கால பூஜையின்போது, சிவராத்திரி மகிமை, வெவ்வேறு சிவத்தலங்கள் பற்றி நானும் என் பிள்ளைகளும் பேசுவோம். சேக்கிழார் கோயிலில் குழந்தைகளுக்குத் தேவாரம் சொல்லித் தருவதும் உண்டு. பணியில் இருந்த காலத்தில், நேரம் வாய்க்கும்போது மட்டுமே செய்து வந்த பணியை, இப்போது ஓய்வுபெற்ற பிறகு, முழுநேரமாகச் செய்துவருகிறேன். பன்னிரு திருமுறைகள்தான் எங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி. இன்றும் எங்கள் குடும்பத்தில் திருமணங்களுக்கு ஜாதகம் பார்ப்பது இல்லை. திருமுறையில் கயிறு போட்டுப் பார்த்து வரனைத் தேர்வுசெய்வோம்’’ என்றவ ரிடம், ‘அது என்ன கயிறு போட்டுப் பார்த்தல், அம்மா?’ என்று கேட்டோம்.

‘`குளித்து, திருநீறு அணிந்து, திருமுறைகளுக்கு மலர் சமர்ப்பித்து, கற்பூரம் காட்டி, ஒரு மஞ்சள் கயிற்றை திருமுறை நூலில் உள்ளே விடுவோம். அது எந்தப் பக்கத்தில் விழுகிறதோ, அந்தப் பக்கத் தைப் பிரித்துப் படிப்போம். நாங்கள் எதிர்பார்த்த கேள்விக்கு மிகச் சரியான தீர்வாக அந்தப் பக்கத்தில் இருக்கும் விளக்கம் அமைந்திருக்கும்.

அப்படியான உத்தரவு கிடைக்காமல், எங்கள் குடும்பத்தில் எந்தப் பெரிய முடிவையும்  நாங்கள் எடுப்பது இல்லை. இது காலங்காலமாக திருமுறைகள் மீதும் இறைவன் மீதும் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குச் சான்று.

குன்றத்தூர் ஒரு புண்ணிய பூமி. அருணகிரிநாதர் பாடிய முருகன் தலம் மட்டுமல்ல... சேக்கிழார் கோயில், நவகிரக கோயில்கள், பல பழைமையான சிவாலயங்கள் நிறைந்த சக்திவாய்ந்த மண் இது. இந்த மண்ணை மிதித்தவர்கள் யாரும் சோடை போனதில்லை. இந்த மண்ணில் என்னை வாழ வைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தாத நாள் இல்லை’’ என்று கசிந்துருகி, கண்ணீர் மல்கும் தேவகியைப் பார்த்து நாம் கரம்கூப்பினோம்.

ஆண்டவனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற அடியாருக்கும் அடியார் அல்லவா!

‘கண்களைக் காத்த கண்ணப்பர்!’

தமது வாழ்க்கையில் இறைவனின் திருவருளை நிதர்சனமாக உணர்ந்த பல தருணங்கள் இருந்தாலும், மறக்க முடியாத ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார் தேவகி.

‘`30 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் குன்றத்தூருக்கு வந்தபோது, இது மிகவும் சிறிய கிராமம். ஒரு முறை, கல்லூரி மாணவர்கள் சிலர் வந்து `நாட்டு நலப் பணித் திட்ட' முகாம் போட்டு, இந்தப் பகுதி யைச் சீரமைத்துக் கொண்டிருந்தார்கள்.

புழுதிக்குள் ஒரு கல்வெட்டு இருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் உதவியோடு அதை மீட்டெடுத்து சுத்தம் செய்து பார்த்தால், அது கண்ணப்பர் சிவபெருமான் மீது காலை வைத்தபடி, கண்ணை அப்பும் அற்புதமான சிற்பம். சிவன் கோயிலிலேயே, சண்டிகேசுவரருக்கு எதிர்ப்புறம் அந்தச் சிற்பத்தைப் பிரதிஷ்டை செய்தோம். இப்போதும் வழிபாடு செய்துவருகிறோம்.

கண்ணப்பரின் அருளும் எங்களுக்குப் பரிபூரணமாக இருப்பதைக் காட்டும் நிகழ்ச் சியும் எங்கள் வீட்டில் நடந்தது. என் மகள் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது, மாவு கிளறும் பெரிய கரண்டியின் முனை அவள் கண்களில் குத்தி, கருவிழி மறைந்து வெள்ளை விழிதான் தெரிந்தது. பதறிப்போய்விட்டோம். நான் கண்ணப்பரை மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்ததோடு, திருமுறை விநாயகரின் விபூதியையும் பூசிவிட்டேன்.

அதன் பிறகு தொடர்ந்த சிகிச்சையில்,  அரை மணி நேரத்தில் எல்லாம் அவளு டைய கருவிழி மீண்டு, கண் சரியானது. அன்று மாலையே கோயிலுக்குச் சென்று கண்ணப்ப நாயனாருக்கு அபிஷேகம் செய்தோம்!’’
மெய்சிலிர்த்துச் சொல்கிறார் தேவகி.