Published:Updated:

மகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்!
மகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்!

ஆர்.குருபிரசாத், படங்கள்: ல.அகிலன்

பிரீமியம் ஸ்டோரி

ழிபாட்டில் மரங்களுக்கான முக்கியத்துவம் அதிகம் உண்டு. ஸ்தல விருட்சங்களாகவும் தெய்வ அம்சம் நிறைந்ததாகவும் காலம் காலமாக போற்றி வணங்கப்படுகின்றன மரங்கள். விருட்சங்களையே சாமியாக வணங்கி வழிபடும் திருத்தலங்களும் உண்டு.

அப்படி, விருட்சங்களைப் போற்றிக் கொண்டாடும்    ஓர் ஆலயம்தான், கோவை- ராயர்பாளையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்;  சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலைப் புனரமைக்கும் திருப்பணி நடந்த போதும், வளாகத்திலுள்ள மரங்களை வெட்டாமல் கோயிலைப் புனரமைத்ததுடன், இன்றைக்கும் அந்த மரங்களை தெய்வாம்சமாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள் இப்பகுதி மக்கள்.

அற்புதமான இந்தக் கோயிலின் வரலாறு குறித்து, கோயிலின் நிர்வாகக் குழுத் தலைவரான செந்தில் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்!

‘`இந்தக் கோயிலில் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு வரை மரத்தினாலான அம்மன் சிலைதான் வழிபாட் டில் இருந்து வந்தது. காலப்போக்கில் வழிபாடுகள் நின்றுவிட்டதால், எங்கள் முன்னோர்களில் சிலர் மரச் சிலைக்குப் பதிலாக கற்சிலை வைக்க முடிவு செய்தனர். தொடர்ந்து, மரச் சிலையை எடுத்துச் சென்று மேட்டுப்பாளையம் ஆற்றில் விட்டு விட்டனர். அதன் காரணமாக அவர்கள் அம்மனின் கோபத்துக்கு ஆளானார்களாம்.

அவர்களின் தலைமுறைனரால் இன்றைக்கும் கோயிலுக்கு வரமுடியவில்லை. அவர்கள் கோயிலுக்கு வர விரும்பினாலும் ஏதேனும் ஒரு தடை ஏற்பட்டுவிடுகிறது’’ என்றவர், இந்தக் கோயிலின் விருட்ச மகிமையை விளக்கும்விதம், சமீபகாலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை விளக்கினார்.

மகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்!

‘` எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிபுதூர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களுக்கும் இந்த கோயில் பொதுவானது கடைசியாக 1978-ம் ஆண்டுதான் இந்தக் கோயிலில் திருவிழா நடை பெற்றது. அதன் பிறகு, சில காரணங்களால் திருவிழா நடைபெறுவது தடைப்பட்டுவிட்டது. பின்னர், கேரள அன்பர் ஒருவர் மூலம், கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷே கம் செய்யும்படி வழிகாட்டுதல் கிடைத்தது. அதன்படி, கோயிலைப் புதுப்பித்து ஒரு மாதத்துக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்திருக்கிறோம்.

கோயிலைப் புதுப்பிக்கும்போது, கோயிலில் இருந்த அரச மரத்தை வெட்ட முடிவு செய்தோம். அதற்கு முந்தைய நாள் இரவில் எனக்கு ஒரு கனவு.    கனவில் நாங்கள் மரங்களை வெட்ட ஆயத்தமாக, குழந்தைகள் இருவர் தோன்றி, ‘நாங்கள் இங்கேதான் இருக்கிறோம். ஏன் வெட்டுகிறீர்கள்?’ என்று கேட்டனர். நான் பதறிப்போய் கண்விழித்தேன். அந்தக் கனவை ஊர் மக்களிடமும் கூறினேன். அதன் பின்னர் மரத்தை வெட்டும் முடிவைக் கைவிட்டோம்'' என்றார். அவரே தொடர்ந்து, ‘`இந்தக் கோயிலில் தானாகவே வளர்ந்ததாகச் சொல்லப்படும் இந்த அரச மரம், சுமார் 500 வருடங்கள் பழைமையானது. இந்த மரத்துடன் வேப்பமரம், ஐந்து இலைகள் கொண்ட மகா வில்வம், காரை மரம், காட்டு மல்லி, நாகலிங்க மரம் ஆகியவற்றையும் வளர்த்து வருகி றோம். இவற்றை ஊர் மக்கள் தெய்வங்களாகவும் சித்தர்களாகவும் கருதி வழிபடுகிறார்கள்.” என்று சிலிர்ப்புடன் விவரித்தார்.

மகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்!

இந்த மரத்துக்கு இருக்கும் தெய்விக சக்தி பற்றி கோயில் நிர்வாகக் குழு செயலாளர் அருணாசலம் நம்மிடம் தன்னுடைய அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்: ‘`என் அம்மாவுக்கு 85 வயதா கிறது. ஒரு வருடமாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்கள். கும்பாபிஷேகத்துக்கு 15 நாள்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கனத்த இதயத்துடன் அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்தோம். பிறகு, இந்த அரச மரத்தின் கிழ் இருந்த அபிஷேகத் தீர்த்தத்தை எடுத்து அம்மாவின் நெற்றியில் தடவி வேண்டிக்கொண்டோம். சில நாள்களிலேயே அம்மாவுக்குப் படிப்படியாக உடல் ஆரோக்கியம் கிடைத்ததுடன், கும்பாபிஷேகத்துக்கு நடந்தே கோயிலுக்கு வந்தார்.’’

மகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்!

மரங்களை மட்டுமல்ல, மாடுகளையும் தெய்வாம்சமாகவே போற்றி வருகிறார்கள் இப்பகுதி மக்கள். விழாவின்போது, கோயில் பூசாரி மாட்டின் மீது அமர்ந்துதான் பூசை செய்வாராம். இந்தக் கோயிலில் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கோயில் களிலும் இந்த நடைமுறையே இருக்கிறது. அப்படி, எந்த கிராமத்தில் திருவிழா என்றாலும், இந்தக் கோயில் மாடுதான் செல்லுமாம். இந்தக் கோயிலுக்கான மாடு  ஒன்று இறந்துபோக, அந்த மாட்டை கோயிலுக்கு அருகிலேயே புதைத்து, அதற்கு ஒரு சமாதியும் கட்டி யிருக்கிறார்கள். தற்போது புதிய மாடு வளர்க்கப்பட்டு வருகிறது.

இயற்கையைப் போற்றும் தலத்தில் இறையருள் பரிபூரணமாக நிறைந்திருக்கும். நீங்களும் ஒருமுறை இவ்வூருக்குச் சென்று வழிபட்டு வரம்பெற்று வாருங்களேன்.

உங்கள் கவனத்துக்கு...

எப்படிச் செல்வது?: கோவை காந்திபுரத்திலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராயர்பாளையம் மாரியம்மன் கோயில். காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6 முதல் 9 மணி வரை;
மாலை 5.30 முதல் 9 மணி வரை.


சிறப்பு பூஜைகள்: வெள்ளிக் கிழமைதோறும் மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறு கிறது. பௌர்ணமியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு