Published:Updated:

கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?

கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?

’காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?

’காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

Published:Updated:
கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?

? சென்னை கடற்கரை அருகில் ‘சென்னம்மன்’ என்ற பெயர் கொண்டிருந்த அம்பிகை, எப்படி காளிகாம்பாள் என்று பெயர் பெற்றாள்?

- சு.கௌரீதரன், பொன்னேரி


கடற்கரையின் அருகில் வாழும் மீனவப் பெருமக்கள், தங்களைக் காக்கும் தெய்வமாகத் திகழ்ந்த அம்பிகைக்குச் செந்தூரம் அளித்து வழிபட்டதாகவும், பின்னர்  `சென்னியம்மன்’ என்று போற்றப்பெற்ற அந்த சக்திதேவி... மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி 1677-ம் வருடம் வந்து தரிசித்து வழிபட்ட பிறகு, ‘காளிகாம்பாள்’ என்று போற்றப்பெறுவதாகவும் செவிவழிச் செய்திகளும், ஆலயங்களில் பதிப்பிக்கப்பெற்ற நூல்களும் கூறுகின்றன. ஆனால், வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகளோ, செப்புப் பட்டயங்களோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், இந்தப் பராசக்தி முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்ததாகவும், பின்னர்  `மராத்தா டவுன்’ என்று அழைக்கப்பட்ட,  தற்போதுள்ள இடத்துக்கு இடமாற்றம் செய்யப் பட்டதாகவும் நம்பப்படுகிறது.

கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?

? நல்ல காரியம் செய்யும்போதும் துன்பம் ஏற்படுகிறது. கோயிலுக்குச் சென்று திரும்பும்போது விபத்து ஏற்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

- எம்.கேசவன், சென்னை - 50


‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ - நமது ஒவ்வொரு செயலும் ஒரு வினைப்பயனை உண்டுபண்ணும். அவற்றின் அடிப்படையில்தான் நமது வாழ்க்கையும் அமை கிறது. எனவே, நம் முன்னோர்கள் கூறிய முதுமொழிகளை, அவற்றுக்குரிய உட்பொருளோடு அறிந்துகொண்டால், நமக்கு ஏற்படும் இன்பமோ துன்பமோ, மற்றவர்களால் அளிக்கப்படுவதில்லை; அவை அனைத்தும் நமது கர்மவினைப் பயன்களே என்பதைத் தெளிவாக அறியலாம்.

ஒரு நல்ல காரியம் செய்யும்போது துன்பம் ஏற்படுகிறது என்றும், கோயிலுக்குச் சென்று திரும்பும்போது விபத்து ஏற்படுகிறது என்றும் தாங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொன்ன காரியங்களில் நீங்கள் ஈடுபடாமல் இருந்திருந்தால், விளைவுகள் இன்னும் கடுமையாக இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடுமையாக மழை பெய்கிறது. நீங்கள் ஒரு குடையின் உதவியுடன் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்கிறீர்கள். கால்கள் நனைந்து விட்டதே என்று கவலைப்படாமல், தலை நனைய வில்லையே என்று நினைத்து மகிழ்ச்சி அடைவதே அறிவின் முதிர்ச்சி. கால்களும் நனையாமல் இருக்கவேண்டுமானால், நமது வீட்டுக்கு அருகிலேயே கார் போன்ற வாகனத்தை வரவழைத்து, அதில் பிரயாணம் செய்தாக வேண்டும். அப்போது, ஓரளவுக்கு நாம் பத்திர மாக செல்லலாம்.

இதுபோன்றே, வாழ்நாள் முழு வதும் கடவுள் நம்பிக்கை, பூஜைகள், சாதுக்களைத் தரிசித்தல், பெரியோர்களைப் பார்த்துக்கொள்தல், முன்னோர்களைத் திருப்தி செய்தல், இயன்றவரையிலும் சாஸ்திரங்கள் சொன்னபடி வாழ்தல் போன்றவற்றை நாம் கடைப்பிடித்தோமானால், நமது கர்மவினை களின் அளவுக்கு ஏற்ப பலன்களும் அமையும்.

எனவே, நாம் நல்ல காரியம் செய்ததால்தான் ஆபத்தின் அளவு குறைந்துள்ளது என்ற உண்மையை உணர்ந்துகொண்டு, நல்ல செயல் களைத் தொடர்ந்து செய்துவர வேண்டும். தளர்ச்சி அடையாத மனமே கடவுள் குடிகொண் டிருக்கும் கோயில். விடாமுயற்சி வெற்றி தரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?

? ஆத்மா அழிவதில்லை என்கிறார்கள். இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கின்றன என்றால், இறந்தவர்களுக்கு சிராத்தம் செய்வது எப்படி சரியாகும்?

- எம்.சிவக்குமார், சென்னை - 100


‘ஆத்மா’ - இந்த ஒரு வார்த்தையின் பொருளை நாம் உள்ளபடி உணர்ந்துவிட்டோமானால், உலகை அறிந்தவர்கள் ஆகிவிடுவோம். ‘பரமாத்மா’ என்றும், ‘ஜீவாத்மா’ என்றும்; இரண்டும் ஒன்றே, அல்லது வெவ்வேறானாதே என்றும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக விளக்கம் அளிக்கும். அதுகுறித்து பிறகு பார்க்கலாம்.

ஆத்மா என்று ஒன்றுள்ளது என்பதை யாருமே மறுக்கவில்லை. ஒவ்வோர் ஆத்மாவும், அதனதன் உடலுடன் சம்பந்தப்பட்ட கர்மவினைகளின் அடிப்படையில் பிறப்புகளை எடுக்கின்றன. இவற்றையெல்லாம் செய்பவரையே, ‘கர்தா’ அல்லது ‘கடவுள்’ என்று கூறுகிறோம். இன்று பிற மதங்களில் பயன்படுத்தப்படும் பல வார்த்தைகள், நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்ட பல வார்த் தைகள் அனைத்தும் நமது சனாதன தர்மத்தைச் சார்ந்தவையே.

கடவுள் என்பவர், நாம் ஒவ்வொருவரும் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவியை அளிக்கிறார் என்பது நமது சனாதன தர்மத்தின் சித்தாந்தம். அனைத்து கர்மவினைகளும் நசிந்து பிறப்பற்ற நிலையை அடையும்வரை, இந்த ஜீவாத்மா பிறப்பு இறப்பு எனும் சுழற்சிக்குள் அகப்பட்டிருக்க வேண்டியதே. ஜீவாத்மா எண் ணற்ற பிறவிகள் பிறப்பது பற்றி, மாணிக்கவாசகப் பெருமான் தாம் இயற்றிய சிவபுராணத்தில் மிக எளிமையாகவும் மிக ஆழ்ந்தும் விளக்கியுள்ளார்.

எப்படி ஒரு மனிதர் வேறொரு நாட்டுக்குச் சென்றால், அந்த நாட்டின் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் செலவு செய் கிறாரோ, அதுபோன்று இங்கு நாம் செய்யும் சிராத்தத்தின் பயனானது, அவருடைய முன்னோர்கள் எந்த உருவத்தை அடைந்துள்ளனரோ, அதன்படி சென்றடையும்.

அவர் ஒரு பசுவாக இருப்பாரானால் புல்லா கவும், பறவையாக இருப்பின் தானியமாகவும்... இப்படி எந்த ஒரு பிறப்பாக இருப்பினும் அதற்கு ஏற்றபடி மாறிக்கொள்ளக் கூடிய ஆற்றலை அறிந்தே நமது ரிஷிகள் இதுபோன்ற கிரியைகளை அளித்துள்ளார்கள். எனவே, இறந்தவர்களுக்குச் சிராத்தம் செய்தல் என்பது சரியே. அவர்கள் நற்கதியை அடைந்திருப்பினும், அதுபற்றி நாம் அறியாததால் தொடர்ந்து சிராத்தம் செய்து வருவது அவசியம்.

? வீட்டில் மகாபாரதம் படித்தால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்கிறார்களே, அது சரிதானா?

- ஆர்.ரகோத்தமன், சென்னை - 46


ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் ஒவ்வொரு மனிதனும் படித்து, தெளிந்து உயர்வுபெற உதவும் மாபெரும் காவியங்கள்.

பல நூறு வருடங்கள் நம்முடைய நாடு அந்நியர் களின் ஆதிக்கத்தில் இருந்துவிட்ட காரணத்தினால், நம்முடைய மதக் கோட்பாடுகளைப் படித்துப் பயன்பெற முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.
அதன் காரணமாகவே இன்றளவும் நம்மால் நம்முடைய மதத்தைப் புரிந்துகொள்ளவும் கடைப்பிடிக்கவும் முடியவில்லை. சாஸ்திரங்களைப் பற்றிய முழுமை யான அறிவும் தெளிவும் இல்லாத வர்கள், இருப்பதை இல்லையென்றும், இல்லாததை இருக்கிறது என்றும் தவறான கருத்துகளைப் பரப்புவதைக் கேட்டு, நாமும் சரியான பாதையில் பயணிக்கத் தவறிவிடுகிறோம்.

ஒரு நாட்டில் வசிக்க வேண்டு மெனில், அந்த நாட்டின் சட்டதிட்டங் களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டி யது எப்படி அவசியமோ, அப்படி, ஒரு வழக்கத்தைப் பற்றியோ, செய்முறை பற்றியோ நாம் அறிய வேண்டுமென்றால், அந்த விவரங் களைப் பற்றி கூறப்பட்டிருக்கும் மூல நூல்களில் உள்ளது என்ன என்பதை அறிந்து, அதன்படியே நாம் கடைப்பிடிக்கவும் வேண்டும். அதைவிடுத்து, தன்னிஷ்டப்படி ஒவ்வொருவரும் கூறும் கருத்து களைக் கேட்க ஆரம்பித்தால், குழப்பம்தான் மிஞ்சும்.

கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?

முதலில் வீடுகளில் படிக்கக்கூடாது என்று கூறுபவர்கள், பிறகு மகாபாரதமே கூடாது என்று கூறுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், அவர் களுடைய வார்த்தைகளைக் கேட்காமல் விடுவதே நமக்கு நல்லது. வீட்டில் மகாபாரதம் படித்து விடுவதாலேயே சண்டை வருமென்றால், கோயில் களிலும் பொது இடங்களிலும் மட்டும் படிக்க லாமா? அங்கிருப்பவர்கள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்களா?!

எனவே ராமாயணம், மகாபாரதம் போன்ற தெய்வ அவதாரங்களின் இதிகாசங்களை, புராண நூல்களை அனைவரும் தங்களின் வீடுகளில் வைத்துப் படிக்கலாம். செல்வம், மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்து நன்மைகளும் பெருகும்.

? மந்திரங்கள் எல்லாவற்றையும், ‘ஓம்’ என்று சொல்லித் தொடங்குவது ஏன், ஓங்காரத்தை எல்லோரும் உச்சரிக்கலாமா?

- ஆர்.ராஜசுந்தரம், திருச்சி - 1


‘ஓம்’ - இந்த ஒலியில் உலகம் முழுவதும் அடங்கியிருப்பதாக நம் ரிஷிகள் உணர்ந்தும் அனுபவித்தும் கூறியுள்ளார்கள். ‘ஓம் இதிதகும் ஸர்வம்’ என்று கூறி,  `அனைத்தும் ஓம்காரமே’ என்று விளக்குகிறது வேதம். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபாவம் மற்றும் அனுக்ரஹம் என்ற ஐந்தும் இந்த ஓம்காரத்தினுள் அடக்கம். மகான்கள் பலரும்  `பிரணவ ஜபம்’ என்று ஓம்காரத்தை மட்டுமே ஜபம் செய்து ஸித்தி அடைந்திருக்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு எப்படி தலை முக்கியமோ, அதுபோன்று  ஓம்கார மானது அனைத்து மந்திரங்களுக்கும் தலை போன்றது. எனவேதான் எந்தத் தெய்வத்தின் மூல மந்திரமாக இருந்தாலும் ‘ஓம்’ இல்லாமல் இருப்பதில்லை. மந்திரங்களின் ஓரெழுத்து வெளிப்பாடே ஓம்காரம். மந்திரங்களை உபதேசமாகப் பெற்றவர்கள் அனைவரும், மூல மந்திரங் களை ஜபிப்பதும், தெய்வ ஸ்தோத்திரங் களையும், ஓம்காரத்தையும் உச்சரிப்பதும் வழிவழி யாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறைதான்.

? பிறந்த கிழமை, நட்சத்திரம் வரும் நாளில் முன்னோ ருக்குத் திதி கொடுக்கலாமா?

- கீதா முருகானந்தம், கும்பகோணம்


நம் முன்னோர்கள் இறந்த நாள் அன்று என்ன திதியோ, அந்தத் திதியில்தான் சிராத்தம் செய்ய வேண்டும். நமது பிறந்த நாள், நாம் பிறந்த கிழமைகள், நட்சத்திரங்கள் வருவதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர்களின் திதியில் தவறாமல் திதி அளிப்பது நமது கடமையாகும். .

அமாவாசை போன்ற நாள்களில் நம் நட்சத்திரம் வந்தால், அன்று நாம் தர்ப்பணம் செய்யும் எள்ளுடன் சிறிது அரிசியைச் சேர்த்துச் செய்தால் போதும். நம் முன்னோரின் திதி வரும் நாள்களில், தீட்டு போன்ற தவிர்க்கமுடியாத காரணங்களால் திதி கொடுக்க முடியாவிட் டால், அடுத்து வரும் ஏகாதசி அல்லது அமாவாசையில் திதி கொடுக்கவேண்டியது அவசியம். அல்லது அடுத்த மாதம் வரும் அதே திதியில் திதி கொடுக்க வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் திதி கொடுக்காமல் விட்டுவிடக்கூடாது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.
 
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002