
வெ.நீலகண்டன்
வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, காவல் கோட்டங்களாகவும், நீதிமன்றங்களாகவும் திகழ்வன கிராமத்துக் கோயில்கள்.
கிராம தேவதையின் முன்வைத்து குற்றங்கள் விசாரிக்கப்படும், சாட்சியங்கள் பெறப்படும், தண்டனைகளும் வழங்கப்படும். தங்கள் கிராமத்து மூப்பனின் முன்னிலையில் நின்று, எவரும் பொய் சொல்லத் துணிவதில்லை. எவருக்கும் அடங்கா மனிதனும் அவர் முன்னால் அடங்கி நின்று கைகூப்பி அடிபணிவான்; மனம் திறந்து உண்மை பேசுவான். ‘என்னை மன்னிச்சிடய்யா’ என்று மன்னிப்பு கேட்பான். தண்டனைகளை ஏற்றுக் கொள்வான்.
கிராமத்து மூப்பனின் முன் அமர்ந்து , தன்னை நிந்தித்தவர்களை, ஏமாற்றியவர்களை, தாக்கியவர் களை, துரோகம் செய்தவர்களைத் தண்டிக்குமாறு கைகூப்பி கோரிக்கை வைப்பார்கள் மக்கள். அரூபமாக அவர்களின் தலையைக் கோதி, ஆறுதல்படுத்தி, நம்பிக்கையூட்டி அனுப்புகிறார் அந்த மூப்பன். இது தலைமுறைப் பந்தம்.
நம்பிக்கையும் மரியாதையும்தான் கிராம தெய்வ வழிபாட்டின் அடித்தளங்கள். அவையே, நியாயத்துக்கும் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு கிராமங்கள் செயல்படக் காரணமாக இருக்கின்றன. தங்களது செயல்பாட்டால் தங்கள் மூப்பனுக்கு எவ்வித சங்கடமும் நேர்ந்துவிடக்கூடாது என்று மக்கள் கவனமாக இருக்கிறார்கள். அதற்காக, தங்களுடைய சுக, துக்கங்கள், தேவைகளைக் கூட தவிர்க்கிறார்கள்.

கிராம தெய்வங்களுக்கான திருவிழாவுக்கு நாள் குறித்துவிட்டால், பல கிராமங்களில் கடும் கட்டுப் பாடுகள் அமலுக்கு வந்துவிடும். வீடு கட்டும் வேலை நடக்காது, குழி தோண்டமாட்டார்கள், சுவருக்கு வெள்ளையடிக்கமாட்டார்கள். ஊரை விட்டு வெளியில் செல்லமாட்டார்கள். வெளி யூருக்குப் பிழைக்கப்போன அத்தனைபேரும் ஊருக்குத் திரும்பிவிடுவார்கள். ஊரின் மொத்த கவனமும் கோயிலில் குவிந்திருக்கும்.
பெரம்பலூர் - சென்னை பைபாஸ் சாலையில், மேற்காகப் பிரியும் ஒரு பாதையின் முடிவில் இருக்கிறது அகரம் எனும் கிராமம். அதன் காவல் தெய்வம் பெரியசாமி. கூடவே, அவரின் தம்பி சின்னச்சாமியும் இருக்கிறார். ஊரின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது இவர்கள்தான். விதைப்பது, வெள்ளாமை அறுப்பது, அறுத்த தானியத்தை விற்பனை செய்வது என எல்லாமே பெரியசாமியிடம் கேட்டுத்தான் நடக்கிறது.
வீறுகொண்டு திகழும் புலியும், குதிரைகளும் வெளியில் நிற்க, உள்ளே வாளும் கேடயமும் தாங்கி காட்சியளிக்கும் பெரியசாமி, கொல்லி மலையில் இருந்து அகரத்துக்கு வந்தவர் என்கிறார் கள் அப்பகுதி மக்கள்.
‘கொல்லிமலையில் மூங்கில் குச்சி வெட்டிப் பிழைப்பதுதான் அக்காலத்தில் இந்தக் கிராமத்து மக்களின் தொழில். ஒருமுறை கொல்லிமலைக்குச் சென்றபோது, பசி மயக்கத்தில் பெரியசாமிக்குப் போட்டிருந்த படையல் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டார்கள் மலைமக்கள். தனது உணவைச் சாப்பிட்டதால், தன் தம்பி சின்னச்சாமியையும் அழைத்துக்கொண்டு அவர்கள் பின்னாடியே இங்கு வந்துவிட்டார் பெரியசாமி’ என்று பெரிய சாமியின் தொன்மத்தைச் சொல்கிறார்கள் இந்தக் கிராமத்து மக்கள்.
‘எங்க ஊர் ஆளுங்க பின்னாடியே வந்த பெரிய சாமியை, எங்க காவல் தெய்வம் செல்லியம்மா அவ்வளவு எளிதா ஊருக்குள்ள விடலே. எங்க ஊருக்கும் வ.களத்தூருக்கும் நடுவுல கல்லாறுன்னு ஒரு ஆறு. அந்த ஆத்தங்கரையில பெரியசாமியை மறிச்சு ‘நீ வனராஜன். உனக்கு ஊருக்குள்ள வேலையில்லை, ஓடிப்போயிரு’ன்னு செல்லியம்மா விரட்டினாள். ‘என்னையே விரட்டுறியா, உனக்கு எட்டடி தூரத்துலயே உக்காந்து வௌக்கு வெளிச்சம் காட்டுறேன்’னு சபதம் போட்டுட்டு, ஆத்தைக் கடந்து வந்து, தம்பியோட இந்த எட்டிமரத்துக்குக் கீழே உக்காந்துட்டாரு...’’ என்கிறார் இந்த கிராமத்துப் பெரியவர் ஒருவர்.
பெண்கள் கொலுசணிந்து கோயிலுக்குச் செல்வதில்லை. அதன் ஒலி வணங்குவோர் கவனத்தைத் திசைதிருப்பிவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடு இது.முதல் குழந்தைக்கு ‘பெரியசாமி’ என்றும், இரண்டாவது குழந்தைக்கு ‘சின்னசாமி’ என்றும் பெயர் வைப்பது மரபாகத் தொடர்கிறது. ஏராளமான சின்னசாமி, பெரியசாமிகள் ஊருக்குள் உலவுகிறார்கள்.
திருவிழாக் காலங்களில் ஆண்களும் பெண்களும் வெள் ளுடை தரித்துதான் கோயிலுக்கு வரவேண்டும். திருவிழாவுக்கு நாள் குறித்துவிட்டால், யார் வீட்டிலும் எண்ணைச் சட்டி வைக்கக்கூடாது, சிமென்ட் குழைக்கக்கூடாது, உலக்கைச் சத்தம் கேட்கக்கூடாது, தாளிக்கக்கூடாது. குழி தோண்டி கம்பு பதிக்கக் கூடாது, பெண்கள் வண்ண ஆடை உடுத்தக்கூடாது!

ஆனால், இதுகுறித்து யாரும் யாரையும் கட்டாயப்படுத்து வதில்லை. எல்லாம் இயல்பாக நடக்கின்றன. நம்பிக்கையே இவர்களை நகர்த்துகிறது. எல்லா நம்பிக்கைகளுக்குப் பின்னா லும் ஒரு வலுவான காரணமிருக்கிறது.
‘‘இப்படித்தான் இருக்கணும்னு யாரும் எங்களை கட்டாயப் படுத்தல. பல தலைமுறையா இதையெல்லாம் நாங்க கடைப்பிடிக் கிறோம். சிலபேரு இதை மூடநம்பிக்கைன்னுகூட சொல்றாங்க. ஆனா, பெரியவங்களுக்கு சின்னவங்க மரியாதை குடுக்கிறது இல்லையா? அதுமாதிரிதான் இதுவும். பெரியசாமி எங்க ஊரோட மூப்பர். ‘காட்டுல வௌச்சல் இல்லை’, ‘புள்ளைகளுக்கு உடம்பு குணமில்லே’, ‘ஊருல நோவு நொடி பரவுது’ன்னு எந்தக் குறையைச் சொல்லி கண்ணீர் வடிச்சாலும், எண்ணி ஏழு நாள்ல தீர்த்துவைக்கிறவரு எங்க பெரியசாமி. அவருக்குப் பிடிக் காத எதையும் நாங்க செய்யிறதில்ல...’’ என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்.
முறுக்கு மீசையும், திடகாத்திர தேகமும் கொண்ட ஒரு பெரிய மனிதர் பெரும்பாலும் எல்லா கிராமங்களில் இருப்பது உண்டு. அவர்தான், அந்த ஊரின் நல்லதையும் கெட்டதையும் தீர்மானிப்பார். அவரை ஊர் கொண்டாடும். அவரை அவமதிக்கும்படியான எந்தச் செயலையும் யாரும் செய்ய மாட்டார்கள். பெரியசாமியும் அப்படியான ஒரு மூத்தோன். கொல்லிமலையில் இருந்து தங்களிடம் நாடி வந்து, தங்களது நலனுக்காக தன்னை அர்ப்பணித்து, ஒவ்வோர் மனிதனின் உயிரோடும் பிணைந்து தங்களது நிழலில் அரூப மாக உலவித்திரியும் அந்த ‘பெரிய மனிதனுக்காக’ மக்கள் சில மதிப்பீடுகளைத் தீர்மானித்து வைத் திருக்கிறார்கள்.
நாமக்கல் வட்டாரத்தில், பெரும்பாலான கிராமங்களில் குடியிருக்கிறார் மலையாளசாமி. அவரும் பெரியசாமியைப் போல இடம்பெயர்ந்து இந்த மக்கள் மத்தியில் வந்தவர்தான். சுமார் 10 தலைமுறைகளுக்கு முன்னர் நடந்த, மலையாள சாமியைப் பற்றிய தொன்மக்கதை ஒன்று உண்டு.
கேரளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண் வாரிசு இல்லை. ஒரே மகள். எனவே, தமிழகத்திலிருந்து வீட்டு வேலை செய்வதற்காக வந்த ஆறுமுகம் என்ற சிறுவனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து வளர்த்தார். வளர்ப்புத் தந்தை இறந்தபிறகு, அவர் பயன்படுத்திய சக்கரம் ஒன்றை எடுத்துக்கொண்டு, வளர்ப்புத் தாய் வீரம்மாளையும் தங்கை மீனாட்சி யையும் அழைத்துக்கொண்டு, கொடுமுடி அருகில் உள்ள புதூர் பகுதிக்கு வந்து குடியேறினார் ஆறுமுகம். அப்பகுதி மக்கள், ஆறுமுகத்தை தங்கள் கோயிலுக்குப் பூசாரியாக நியமித்தார்கள்.
ஆறுமுகம், தன் வளர்ப்புத்தந்தையின் நினை வாக தான் கொண்டு வந்த சக்கரத்தை கோயிலில் வைத்து வழிபட்டார். காலப்போக்கில் அதுவே மலையாள சாமி வழிபாடாக மாறியது. இப்போது மலையாள சாமிக்கு சிலை வழிபாடு வந்துவிட்டது. அகன்ற விழிகளும், ஆங்கார ரூபமுமாக நின்று கொண்டிருக்கிறார் மலையாளத்தார். மலையாள சாமி வழிபாடு சார்ந்தும் பல கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள் நிலவுகின்றன.
இதுமாதிரியான தீர்க்க நம்பிக்கைகள், கட்டுப் பாடுகள் பழங்குடி சமூகங்களிடமும் இன்றளவும் இருக்கின்றன. அவற்றில் சில, வெகுசமூகத்துக்கு அதிர்ச்சியளிப்பவையாகவும், வியப்பளிப்பவையா கவும் இருக்கலாம். ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் தான் அவர்களின் வாழ்க்கையை நேர்க்கோட்டில் நகர்த்திச்செல்கின்றன; வரம்பு மீறாத வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கின்றன.
அடுத்தவன் பொருளை அபகரிக்க நினைத்தால், தங்கள் காவல் தெய்வம் தங்களைத் தண்டிக்கும் என்ற நம்பிக்கையும் அச்சமும்தான் மக்கள் இணக்கமாகவும் இயல்பாகவும் வாழ காரணமாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல, அபூர்வமான பழங்குடி மருத்துவம் அனைத்தும் காவல் தெய்வ வழிபாட்டோடு கலந்தே செய்யப்படுகிறது.
நம் முன்னால், பழங்குடித்தன்மை மாறாமல் அலைகுடிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும்... ஊசி, மணி பாசி விற்கும் நாடோடி மக்களது வழிபாடு, இப்படியான கடும் கட்டுப்பாடுகளால் ஆனதுதான். குழந்தையாக இருக்கும்போது, 3 முறை மொட்டையடிப்பது தவிர, பிறகு எக்காலத் திலும் தலைமுடியை வெட்டக்கூடாது. அப்படி வெட்டுபவர்கள் பூசை செய்வதற்குத் தகுதியுடைய வர்களாக முடியாது.
இந்த மக்களுக்கென்று, கோயில் எதுவும் கிடை யாது. வீட்டுக்கு வீடு இருக்கும் சாமி மூட்டை (தராங்டு)தான் கோயில். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் சாமி மூட்டை இருக்கும்.
தாய்க்கடவுளை வழங்கும் மரபு இவர் களுடையது. காளி, துர்கை, மீனாட்சி, மாரியம்மன், மகமாயி, பவானி, தாதாஜி, வீரன் ஐயனாரப்பன் போன்றோர் இவர்களின் பிரதான தெய்வங்கள்.
தாதாஜிக்கு உருவம் வார்ப்பதில்லை. வெற்றிலை யின் வடிவில் தாதாஜியை வணங்குகிறார்கள். பிற தெய்வங்களின் உருவங்களைச் சிறியதாக வெள்ளியில் செய்து வைத்திருக்கிறார்கள். அதோடு, வழிபாட்டுக்குரிய தாம்பாளத் தட்டுகள், தூபக் கால், சாமிக்கான ஆடைகள், சாமியாடும் போது தாங்கள் கட்டியாடும் பாவாடைகள், சலங்கைகள் போன்றவற்றை வெண்துணியில் கட்டி, ஆட்டுத்தோல் கொண்டு போர்த்தி, வீட்டுக்குள் உயரமான பகுதியில் வைத்திருப்பார்கள். இதுதான் சாமிமூட்டை.
வெள்ளியால் சிலைகள் செய்து சாமிமூட்டை வைத்திருக்கும் குடும்பமே மரியாதைக்குரியதாக, வசதி மிக்கதாகக் கருதப்படும். இதை வைத்திருக்கும் குடும்பத்தில் பெண்ணெடுக்க, பெண் கொடுக்க எல்லோரும் விரும்புவார்கள். வசதியற்றவர்கள், பூசாரி வழங்கும் பைகளை, துணிகளைச் சாமி களாகக் கருதி வணங்குவார்கள்.
வழிபாட்டின்போது, மைதாவால் செய்யப்பட்ட பதார்த்தத்தை தெய்வங்களுக்குப் படைப்பார்கள். மூத்த தெய்வத்துக்குப் பிறைச் சந்திரன் வடிவத் திலும், பிற தெய்வங்களுக்கு அடை போன்ற வடிவத்திலும் பதார்த்தம் செய்வார்கள்.
பூசை செய்பவருக்கு அதிகப்பட்ச தகுதிகள் உண்டு. 25 முதல் 30 தலைமுறையாக வெள்ளி சாமி சிலைகளுடன் கூடிய சாமிமூட்டை வைத்திருக்கவேண்டும். 25 தலைமுறையினரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களை யும் நினைவில் வைத்திருக்கவேண்டும். சிறிதும் பங்கம் இல்லாமல் குடுமி வைத்திருக்க வேண்டும். எவ்வித குற்றமும் செய்யாதவராக, எல்லோராலும் மதிக்கப்படுபவராக இருக்கவேண்டும். தெய்வத் துக்குத் தரும் மரியாதையைப் பூசை செய்பவருக்கும் தருவார்கள் மக்கள். பூசை செய்பவரே தங்கள் சமூகத்துக்குள் நடக்கும் பிணக்குகளையும் தீர்த்து வைப்பார். அவரது பேச்சுக்கு எவரும் மறுபேச்சு பேசுவதில்லை.
தெய்வத்துக்குப் பலி கொடுப்பதன் அடிப்படை யிலேயே இவர்கள் சமூகத்தின் உட்பிரிவுகள் பகுக்கப்படுகின்றன. தங்கள் தெய்வத்தின் அனுமதியில்லாமல் இவர்கள் எந்தச் செயலிலும் ஈடுபடுவதில்லை.
குடுமி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெண் கொடுப்பார்கள். திருமணமாகாத பெண்கள் பூ, கொலுசு பயன்படுத்த அனுமதியில்லை. பெண்கள் தங்களுக்கான ஆடைகளை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். பிற ஆண்கள் தொட்டு தைக்கக் கூட அனுமதிப்பதில்லை. எந்தச் சூழலிலும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. தெய்வத்தின் பெயரில் மந்திரமும், பூர்வ மருத்துவமும் இணைந்த சிகிச்சையே இன்றளவும் பிரதானமாக இருக்கிறது.
இன்றைய நமது வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டது. கிராமங்களில் மனிதர்கள் அருகி விட்டார்கள். நகரங்கள் நிரம்பிவழிகின்றன. ஆனாலும் மனிதர்களின் உயிர் சக்தியில் உறைந் திருக்கிறது, தங்கள் காவல்தெய்வத்தின் மீதான நம்பிக்கை... மரியாதை. அந்த நம்பிக்கையும் மரியாதையும் மிஞ்சியிருக்கும்வரை அறம் மிஞ்சியிருக்கும்!

பாரதியின் வேதம் !
பாரதியாரின் நூல்களை, வெள்ளையர் அரசு பறிமுதல் செய்தபோது, தீரர் சத்தியமூர்த்தி சட்டசபையில் பேசியது:
“சுப்ரமணிய பாரதியார் நாவில், `நாட்டுப் பற்று' என்ற நடனத்தை ஆடிக் கொண்டிருந்தாள் சரஸ்வதிதேவி. ஆனால், இந்த ஆட்சி மாபெரும் மேதையை நாட்டைவிட்டுத் துரத்தியது. அவர் புதுச்சேரியில் வாழ்ந்து மனம் நொந்து இறந்தார். உங்களுக்கு ஒன்று சொல்வேன். பாரதியாரின் பாடல்கள் நிறைந்த புத்தகங்கள் அனைத்தையுமே போலீசார் கைப்பற்றிவிடலாம். ஆனால், எழுத்து வடிவத்தில் வராத வேதங்கள், காலம் காலமாக வழங்கிவருவதைப் போன்று பாரதியாரின் கவிதைகளும் வழங்கி வரும்.''
(`விடுதலைப் போரில் தமிழ் இலக்கியம்' நூலிலிருந்து...)