Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 10

சிவமகுடம் - பாகம் 2 - 10
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - பாகம் 2 - 10

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - பாகம் 2 - 10

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சிவமகுடம் - பாகம் 2 - 10
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - பாகம் 2 - 10
சிவமகுடம் - பாகம் 2 - 10

சிவப்  பிரசாதம்!

நாயகர்கள் உருவாவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்! நாயகர்களை உருவாக்குவது யார், வெகுஜனங்களா - இந்தச் சமூகமா எனும் கேள்வி எழுப்பினால், `இல்லை’ என்றே பதில் தருகின்றன காலப்புத்தகத்தின் சரித்திரப் பக்கங்கள்.

ஆம்! ஒருவன்,  தன்னை ஏதேனும் ஒருவிதத்தில் வெளிப்படுத்திக்கொள்ளும்போதுதான் அவனைத் தங்களின் தலைவனாக, ஆதர்ச புருஷனாக, நாயகனாக ஏற்றுக்கொள்கிறது இந்தச் சமூகம். அதுவரையிலும் எவரும் அவனை அடையாளம் கண்டு கொள்வதில்லை என்பது தான் நிதர்சனம். எனில், ஒரு நாயகனை உருவாக்கும்  காரணிகள்  என்னென்ன?

மேம்பட்ட இயல்பு, காணும் பொருள்களின் - நபர்களின் தன்மையைக் கண்ட மாத்திரத்தி லேயே கணித்துவிடும் தீட்சண்யம், எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனம், அதற்கேற்ற நடவடிக்கைகள், எவருக்காகவும் எதற்காகவும் தனது இயல்புகளை மாற்றிக் கொள்ளாதத் தன்மை, இன்னார் இதற்காகத்தான் என்றறிந்து உரியவர்களை உரிய விஷயங்களுக்குப் பணிப்படுத்தும் ஆளுமை... இவைபோன்ற விஷயங்களே, ஒருவனை அவனுக்குள்ளும் வெளியிலும் ஒரு தலைவனாக வெளிப்படுத்துவன.

இவருக்குள்ளும் மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தும் ஒருங்கமைந்து அவரை நன்றாகச் செம்மைப்படுத்தியிருக்கின்றன. இல்லையெனில்,  இப்படியான ஒரு சரித்திரப் புருஷரை பாண்டிய தேசம் பெற்றிருக்காது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியவர்கள் சிலர் சொல்லலாம்... `அவர் வந்த மரபு அப்படி. அவர் பிறந்து வந்த வம்சத்தின் வாசனை வீண்போகுமா? பாண்டிய வம்சம் விதைத்த விதை அவர். அந்த விதை, இந்த மண்ணில் அல்ல,  வேறு எங்கு   தூவப்பட்டிருந்தாலும் இப்போதிருப்பது போலவே பெரும் விருட்சமாக செழித்து வளர்ந்திருக்குமேயன்றி ஒருபோதும்  கருகியிருக்காது’ என்று. ஆனால், அதில் நம்பிதேவனுக்கு உடன்பாடில்லை.

அவன் படித்த ஞானநூல்களில் ஒன்று அவனுக்குச் சொல்லிக்கொடுத்த சில வரிகள், அவன் மனதில் ஆழப்பதிந்து விட்டிருந்தன.

`பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் முளையாதாம்’

எவ்வளவு பொருத்தமான வரிகள்?!

சிவமகுடம் - பாகம் 2 - 10

நெல்லுக்குள் இருக்கின்ற அரிசிமணிதான் முளைத்து நெற்பயிராகிறது. ஆனாலும் அந்த நெல்லின்மேல் உள்ள உமியை நீக்கி அரிசியை மட்டும் விதைத்தால் அது பயிராகாது. அப்படித்தான் இங்கும். வம்சம்-மரபு என்பது அரிசிமணி என்றால்,  அந்த அரிசிமணி ஏற்றுக் கொண்டிருக்கும் சிறப்பியல்புகளே அதைப் பயிராக்கியிருக்கிறன. ஆம்! பாண்டிய பேரரசரான மாறவர்மன் அரிகேசரியாம் கூன்பாண்டியர் , தனது வம்சத்தின் பெருமையை மட்டுமே மூலமாகக் கொண்டிருக்கவில்லை. அவர் கொண்டிருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம், மேற்சொன்ன மாமன்னரின் மகத்தான இயல்புகள்தான்.

பேரரசரின் ஆபத்துதவிப் படைகள் தன்னையும், இளங்குமரனையும் சூழ்ந்து வர, அவரால் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் அந்தச் சூழ்நிலையிலும், அந்த மனிதரைப் பற்றி பெருமிதம் கொண்டு பூரித்தது நம்பிதேவனின் மனது. அந்த மாமனிதர் மணம் செய்திருப்பது தங்கள் இளவரசியாரை என்பதை எண்ணியபோது, அவனது பூரிப்பு மேலும் அதிகரித்தது.

மேல்திசை  முகடுகளில் மெள்ள மெள்ள இறங்கி ஆதவன் தனது ஓய்வைத் தேடிக் கொண்டிருக்க, `இரவின் ஆளுமையை ஏற்க நான் தயார்' என்று முன்னறிவிப்பது போல் இளந்தென்றலை அனுப்பி கட்டியம் சொன்னது சந்திரனின் வருகை. எனினும் அதற்குக் காத்திராமல் பாண்டியரின் ஆபத்துதவிகள் பந்தத்தில் சுடரேற்றிவிட்டிருந்தார்கள். நம்பிதேவனுக்கோ அதுவும் தேவையில்லை என்றே பட்டது. காரணம், பந்தங்களின் ஒளியை மிஞ்சிவிடும் அளவுக்குப் பிரகாசிக்கும் பாண்டியரின் திருமுகஜோதி ஒன்று போதும் அவர்களை வழிநடத்த என்பது அவனது எண்ணம்.

அப்படியே அவனது சிந்தனை சற்றுப் பின்னோக்கி நகர்ந்தது.

அடிகளாரின் சிறைக் குகைக்குள் வைத்து  அவன்  அந்த  ரகசியத்தின் பாதியைச் சொன்னதுமே, மனம் சுழன்று மயக்கநிலைக்கு ஆளாகிவிட்டார் அந்த முரட்டு அடிகளார். இருப்பினும் சுதாரித்துக்கொண்டு, மீதி ரகசியத்தையும் அவனிடமிருந்து வாங்கிவிடும் ஆவேசத்துடன் பெரும் பாறையொன்றை தூக்கிக்கொண்ட அடிகளார், அதை அவன் சிரத்தில் போட்டு நசுக்கிவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த வேளையில்தான் , அந்தச் சத்தம் கேட்டது. 

வேகமாகப் பாய்ந்து வந்த புரவியொன்று சட்டென்று  நிறுத்தப்பட்டதால்,   முன்னங்கால்களை உயரத் தூக்கி மீண்டும் தரையில் பதித்து கனைத்தது. அதனால் எழுந்த பெருஞ்சத்தம் அடிகளாரைக் கலவரப்படுத்தியது என்றால், நம்பிதேவனை அகமகிழச் செய்தது. அந்தக் கனைப்பொலி அவனுக்கு மிகவும் பரிச்சயமானது. அப்படியொரு விநோத பாவனையில் புரவி கனைக்கிறதென்றால், அதை அப்படி ஏவியது யாராக இருக்குமென்பதும் அவனுக்குத் தெரியும். ஆகவேதான் அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அகமகிழ்ந்தான். அந்தப் புரவி சிறிது நேரத்துக்கு முன்னதாக வந்து கனைத்திருந்தால், அந்த ஒருபாதி ரகசியத்தைக்கூட அடிகளாரிடம் அவன் சொல்லவேண்டிய தேவை இருந்திருக்காது!

அந்தப் புரவி கனைத்து ஒலியெழுப்பிய அடுத்த சில கணங்களில் உள்ளே பிரவேசித்திருந்தான் நம்பிதேவனின் ஆத்ம நண்பனான இளங்குமரன்.  அவனைக் கண்டதும்  நம்பியின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. இனி, ஒரு படையே வந்தாலும் கவலையில்லை என்று அவன் உவகை கொண்ட அதேவேளையில், அவனது அந்த எண்ணத்தைப் பலிதமாக்கும்விதம் கேட்டது பேரரவம்; படைப் பிரிவுகளின் ஆரவாரம்.

மறுகணம், பாய்ந்து வந்தான் இளங்குமரன். பாறையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருந்த அடிகளாரை  உதைத்து கீழே வீழ்த்தி விட்டு, அவர் சுதாரிப்பதற்குள் தனது பெரும் வாளால் நம்பியின் கட்டுத்தளைகளை அகற்றினான். சங்கிலிப் பிணைப்புகளை அவனுடைய பரசாயுதம் பதம் பார்த்தது. சில நொடிகளில் விடுபட்டான் நம்பிதேவன். அதற்குள் குகைக்குள் பிரவேசித்து விட்டது படைப்பிரிவு. அந்தப் படையின் சீருடையைக் கவனித்ததுமே அதிர்ந்தான் நம்பிதேவன். அது... பாண்டியரின் ஆபத்துதவிப் படைகள்!

இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்... இவர்கள் இங்கு உலாவுகிறார்கள் என்றால், அவரும் அருகில் இருக்கவேண்டுமே என்ற எதிர்பார்ப்புடன் அவரைத் தேடின நம்பியின் கண்கள். ஆனால், இளங்குமரனோ எதுபற்றியும் கவலைகொள்ளாமல் சட்டென்று  குதித்துத் தாவி குகைச் சிறையின்  மறைவானதொரு இடத்துக்குத் தாவிட்டான். ஆக்ரோஷத்துடன்  உள்ளே  பாய்ந்துவந்த ஆபத்துதவிகள் பத்துப்பதினைந்து பேரின் கண்களில் நம்பிதேவனும் அடிகளாரும் மட்டுமே தென்பட, அவர்களில் ஓரிருவர் அடிகளாரைத் தூக்கிநிறுத்தி அவரை ஆசுவாசப்படுத்த ஆரம்பிக்க, மீதிபேர் நம்பியின் மீது பாய்ந்தார்கள். மறுகணம் அவர்களுக்குப் பின்புறம் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்ட இளங்குமரன் அவர்கள் மீது பாய்ந்தான்.

ஒருபுறம் நம்பிதேவன், மறுபுறத்தில் இளங்குமரன். சூறாவளியாகச் சுழன்ற அந்த மாவீரர்களின் வாள் வீச்சுக்குமுன், வல்லமை மிக்க பாண்டியரின் ஆபத்துதவிகளே தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்கள். அந்தச் சண்டை ஒருசில கணங்களே நீடித்திருக்கும், அதற்குமேல் அதைத் தொடரவிடாமல் தடுத்துவிட்டது முகக்கவசம் அணிந்து வந்த ஓர் உருவம்.

ஆபத்துதவி ஒருவனை வெட்டி வீழ்த்துவதற்காக, மிகுந்த ஆவேசத்துடன் நம்பிதேவன் தன் வாள்கரத்தை தன் சிரத்துக்கும் மேலாக ஓங்கிய ஒரு கணத்தில்... வாளும் கேடயமுமாகப் பாய்ந்து வந்த அந்தக் கவச உருவம், நம்பிதேவனின் உயரத் தூக்கிய கரம் மேலும் அசையமுடியாதபடி, அந்தக் கரத்தை அவன் சிரத்தோடு சேர்த்து  தமது கேடயத்தால் அழுத்திப் பிடித்துக்கொண்டது. மறுகணம் அந்த உருவத்தின் பெரும் வாள், சிரத்தின் மீதி பதிந்திருக்கும் நம்பியின் கரத்துக்கும் அவன் காது மடல்களுக்குமான இடைவெளியில் நுழைந்து அவன் கழுத்தில் பதிந்தது. நம்பிதேவன் வியந்துபோனான்.

‘`இப்படியும் ஒரு தாக்குதல் நிகழ்த்த முடியுமா? கணப் பொழுதில் தம்மைச் சிறைப்பிடித்து விட்டாரே... இவர் யாராக இருக்கும்? ஒருவேளை, இவர் ஆபத்துதவிகளின் சேனைத் தலைவரோ...’’ என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கும்போதே, இளங்குமரனும் மற்றவர்களிடம் சிறைப்பட்டி ருந்தான். நம்பியை  கவச மனிதர் அடக்கிவிட்டதால், மற்ற அனைவரும் இளங்குமரன் மீது பாய்ந்து அவனை மடக்கிவிட்டிருந்தார்கள்.

இப்படி, இருவரும் அடக்கப்பட்டதும் தனது முகக்கவசத்தை நீக்கியது உருவம். அடுத்த நொடியில், அடிகளாரைத் தவிர, அங்கிருந்த மற்றவர்களின் வாள்களும் சிரங்களும் ஒருசேர தரைதாழ்ந்து வணங்கின அந்த மனிதரை. நம்பிதேவனுக்குள் அப்படியொரு பரவசம். சற்றும் தாமதிக்கவில்லை அவன்; நெடுஞ்சாண்கிடையாக அவரின் பாதங்களில் வீழ்ந்தான். ஆபத்துதவிகள் மீண்டும் அவனைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார்கள்.

``சக்ரவர்த்திகளுக்கு வீர வணக்கம்’’ என்று மீண்டும் தலைவணங்கினான் நம்பிதேவன். இளங்குமரனோ, தாழ்த்திய தனது சிரத்தை உயர்த்தவே இல்லை.

கூன்பாண்டியர் நம்பியை கனிவுடன் நோக்கினார். தொடர்ந்து ஒரு புன்னகை அவரின் இதழ்களில். ஒருகணம்தான். புன்னகை மறைந்து, அவரின் திருமுகத்தில் கடுமை படர்ந்தது.

``பாண்டிய மாமன்னரின் ஞானகுருவை அவமதித்தவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?’’ எனக் கேட்டார் மன்னர்.

‘`அது தெரியாது! ஆனால், என்னை ஏவியது யாரென்று தாங்கள் அறிந்தால், தங்களின் சீற்றம் சற்றுத் தணியும்’’

சிவமகுடம் - பாகம் 2 - 10

‘`இல்லை! அடிகளார் என் உயிருக்கு நிகரானவர். அவருக்கு எதிராக உங்களை ஏவியது யாராக இருந்தாலும் அவருக்கும்  தண்டனை நிச்சயம்’’- என கர்ஜித்தார் பாண்டியர். அவரின் அந்தச் சிம்மக்குரல் நம்பியையே குலைநடுங்கச் செய்தது. எனினும்  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் கேட்டான்...

‘`என்னை ஏவியது தங்களின் பேரமைச்சர் என்றால்...’’

பேரமைச்சர் என்றதும் மாமன்னர் பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாவார் என்று எதிர்பார்த்த நம்பிதேவன் ஏமாந்துபோனான். பதிலாக மன்னவரின் சீற்றம் இன்னும் அதிகமானது. மிகக் கடுமையாக பதில் சொன்னார்: ‘`இந்த அபவாதத்துக்குக் காரணம் பேரமைச்சர்தான் என்பது நிரூபணம் ஆனால், மறுகணம் அவரின் சிரம் உடலில் தங்காது!’’ மன்னர் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த அனைவருமே ஆடிப்போனார்கள்.

இந்த உரையாடலுக்குப் பிறகு மாமன்னர் வேறு எதுவும் பேச வில்லை. சுற்றியிருந்தவர்களை நோக்கி ‘`ம்ம்ம்’’ என்று ஒரு குரல்கொடுக்க, அவர்கள் நம்பியையும் இளங்குமரனையும் சூழ்ந்துகொண்டார்கள். தொடர்ந்து இருவரும் கைதிகளாக்கப் பட்டு புரவிகளில் ஏற்றப்பட, அவர்களுடன் அந்தச் சேனை அங்கிருந்து நகர ஆரம்பித்தது.

இதோ, இப்போது வைகையின் கரையையும் நெருங்கிவிட்டிருந்தது!

இப்படி, அடிகளாரிடமிருந்து மீண்ட நம்பியை மீண்டும் கைதியாக்கி விட்ட காலம், அதே பகல் பொழுதில் வேறோர் இடத்தில் பாண்டிமா தேவியாருக்கு, சிவமகான் ஒருவர் மூலம் இறையருள் பிரசாதத்தை வழங்கிக்கொண்டிருந்தது.

பட்டுமுடிப்பு ஒன்றில் திருநீற்றுப் பொதி போன்று திகழ்ந்த அந்தப் பிரசாதம், பாண்டிமாதேவியாருக்கு  மட்டுமேயல்ல, பாண்டியப் பேரரசுக்கே வழங்கப்பட்ட சிவப் பிரசாதம். அதை அங்குக் கொடுத்தனுப்பியவரின் மகிமையை எண்ணியும், அவரால் இந்த மண்ணில் நிகழப்போகும் அற்புதங்களை நினைத்தும், அவரது விஜயத்தை எதிர்பார்த்தும் களிப்புடன் காத்திருந்தது காலம்!

- மகுடம் சூடுவோம்...

சிவமகுடம் - பாகம் 2 - 10

திருத்தேர்

தேரோட்டம்  திரிபுர தகனத்தைக்  குறிக்கும் என்பர். சிவபிரான்  முப்புரம் எரித்தபோது தேவர்கள்  தேரின் பல  அங்கங்களாக  இருந்து  தொண்டு  புரிந்தனர்.  பூமி தேராகவும்,  சூரிய சந்திரர்கள் சக்கரங் களாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், மேரு வில்லாகவும், ஆதிசேடன்  நாணாகவும், திருமால்  அம்பாகவும், பிரம்மன் சாரதியாகவும் அமைந்தனர். தேரோட்டத்தை  வழிபடுவது மேற்கண்ட  அத்தனை  பேரையும்  வழிபடுவதற்குச்   சமமாகும்.