மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு!

நாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு!

நாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு!

‘நாரதர் வருவாரா?’ என்று வாசலையே பார்த்துக்கொண்டிருந்தோம். நம்மை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், சில நிமிடங்களிலேயே அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

வெயிலுக்கு இதமாக நுங்கு சேர்த்த இளநீரைக் கொடுத்து உபசரித்தோம்.

‘`ஏதேது... உபசாரம் பலமாக இருக்கிறதே?’’ என்று கேட்டபடியே இளநீரைப் பருகிவிட்டு, நுங்கையும் சுவைத்தபடி, நம்மிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

‘`கோயில் கோசாலையில் மாடுகளைக் கட்டலாம். ஆனால், அன்னதானக் கூடத்தில் மாடுகளைக் கட்டலாமா?’’

நாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு!

‘`எந்தக் கோயிலில் இப்படி ஒரு விசித்திரம் நடந்திருக்கிறது?’’

நாம் பதில் கேள்வி கேட்டதும், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார் நாரதர்.

‘`நண்பர் ஒருவரின் அழைப்பின்பேரில் விழுப்புரம் மாவட்டம் கிளியூருக்குச் சென்றிருந் தேன். அந்த ஊரிலுள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத அருள்மிகு சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோயிலில்தான் அன்னதானக் கூடத்தில் மாடுகளைக் கட்டிவைத்திருந்ததைப் பார்க்க நேரிட்டது’’ என்று நாரதர் சொல்லிக்கொண்டிருந்த போதே, அவரை இடைமறித்த நாம், ‘`கோயிலில் கோசாலைக்கு இடமில்லாததால் அன்னதானக் கூடத்தில் கட்டியிருக்கிறார்களோ என்னவோ...’’ என்று சமாதானம் சொன்னோம்.

‘`கோயிலுக்குச் சொந்தமான மாடுகளாக இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்கலாம். ஆனால், அந்த மாடுகள் தனியாருக்குச் சொந்தமானவை. அதுதான் வேதனையான விஷயம்.  அதுமட்டுமல்ல, கோயில் நிலங்களைக்கூட தனியார்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்’’ என்றவர், அந்தக் கோயிலைப் பற்றிய விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்.

நாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு!

‘`கோயிலில் மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தைப் பார்த்த நான்,  முதலில் அதை கோசாலை என்றே நினைத்தேன்.

அங்கிருந்தவர்களிடம் ‘கோசாலை மிகவும் வசதியாக இருக்கிறதே...’ என்று நான் எனது வியப்பை வெளிப்படுத்த, அவர்களோ ‘நீங்கள் நினைப்பதுபோல் இது கோசாலை இல்லை. அன்னதானக்கூடம்’ என்றார்கள். அத்துடன், அந்தக் கோயிலைப் பற்றி மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்’’ என்ற நாரதர், தொடர்ந்து விவரித்தார்.

‘`இந்தக் கோயில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. 1970-ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு கோயில் சிதிலமடைந்து விடவே மறுபடியும் 2003-ம் வருடம் பூமி பூஜையுடன் திருப்பணிகளைத் தொடங்கினோம். ஆனால், நிதிப் பற்றாக்குறையின் காரணமாக ஒரு கட்டத்தில் திருப்பணிகள் தடைப்பட்டன. பிறகு, சிங்கப்பூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர், பெரும் பொருள் செலவில் ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் திருப்பணிகளைச் செய்து முடித்தார்.  2016-ம் வருடம் கும்பாபிஷேகமும் நடைபெறச் செய்தார். நித்திய பூஜைகளுக்கும் உதவி செய்து வருகிறார்’ என்று கூறினார்கள்’’

‘`சரி, அதற்கும் கோயில் அன்னதானக் கூடத்தில் தனியார் மாடுகளைக் கட்டியிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?’’ என்று கேட்டோம்.

‘`அங்கேதான் வில்லங்கமே இருப்பதாக ஊர்மக்கள் கூறுகிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு நபர்கள், கோயிலும் கோயில் பெயரில் இருக்கும் நிலமும் தங்களுக்குத்தான் சொந் தமானவை என்று சொல்லி, கோயில்  நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார்களாம். அதேபோல், கோயிலில் நடைபெறும் எந்த விழாவாக இருந்தாலும், பல வகைகளில் இடையூறும் விளைவிக்கிறார்களாம். விழா தொடர்பான விளம்பரப் பலகைகளைக்கூட சேதப்படுத்து கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள், ஊர் மக்கள்’’ என்றார் நாரதர்.

‘` எனில், அன்னதானக்கூடத்தில் மாடுகளைக் கட்டிப்போடுவதும் அவர்களின் கைங்கர்யம் தானோ, அந்த நபர்கள் கோயிலில் ஏதேனும் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்களா..?’’ என்று நாம் சந்தேகத்துடன் கேட்டோம்.

நாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு!

‘`அதுதான் இல்லை. அவர்களுக்கும் கோயிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம். இத்தனைக்கும் அந்தக் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் இருப்பதாகச் சொல்கிறார் கள் ஊர்மக்கள். கோயில் நிலங்களுக்கான பட்டாகூட கோயில் பெயரில்தான் இருக்கிறதாம்.’’

‘`‘சிவன் சொத்து குலநாசம்’ என்பதை, இவர்களைப் போன்றவர்கள் எப்போதுதான் உணர்ந்து திருந்துவார்களோ?’’ என்று நாம் அங்கலாய் துக்கொள்ள,   அதை ஆமோதிப்பதுபோல் தலையாட்டிய நாரதர், வேறு விஷயத்துக்குத் தாவினார்.

‘`மகாமகத்துக்குப் பிரசித்திப் பெற்ற கும்பகோணத்தில் ஒரு கோயிலில் பல வருடங்களாக பிரம்மோற்சவமே நடைபெறாமல் இருந்தது. கும்ப கோணத்திலுள்ள இறையடியார்கள் பல வருடங்களாகப் போராடி, சமீபத்தில் பிரம்மோற்சவம் நடைபெறச் செய்தார்கள்...’’ என்று நாரதர் சொல்லத் துவங்கவும், குறுக்கிட்ட நாம், ‘`கும்பகோணம் - கொட்டையூரில் இருக்கும் கோடீஸ்வரர் கோயில் பற்றித்தானே சொல்கிறீர். அதுபற்றிய விஷயம்தான் நமக்கு ஏற்கெனவே தெரியுமே’’ என்றோம்.

‘‘ஆமாம். அதேபோல், இப்போது வேறொரு கோயிலின் பிரம்மோற்சவத்தை எதிர்நோக்கி யிருக்கிறார்கள் அன்பர்கள்...’’ என்ற நாரதர் தொடர்ந்தார்.

நாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு!

‘`கும்பகோணத்தில் மகாமகத்துடன் தொடர்புடைய 12 கோயில்களில், நகரின் ஈசான மூலையிலுள்ள பாணபுரீஸ்வரர் கோயிலும் ஒன்று. ஈசன், அமுத கும்பத்தை பாணம் எய்து உடைத்த வரலாற்றைக் குறிப்பிடும் விதமாக இந்தப் பகுதி, ‘பாணாதுறை’ என்றே அழைக்கப் படுகிறது. இங்கே தேரோடும் நான்கு வீதிகளுடன் அமைந்திருக்கும் பாணபுரீஸ்வரர் கோயிலில், ஒரு காலத்தில் வைகாசி பிரம்மோற்சவம்  வெகு சிறப்பாக நடைபெறுமாம்.

ஆனால், கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லையாம். தற்போது, இந்தக் கோயிலிலும் பிரம்மோற்சவம் நடைபெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஊர்மக்கள் சார்பாகக் கோயில் நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறார் திருவடிக்குடில் சுவாமிகள்’’ என்ற நாரதர் தொடர்ந்து, ‘‘விரைவில் நான் கும்பகோணம் சென்று, மேற்கொண்டு விவரங்கள் சேகரிக்கவேண்டும். பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’’ என்று கட்டளைத் தொனியில் கூறிவிட்டு, தமக்கு வந்திருந்த வாட்ஸப் தகவல்களில் மூழ்கிப்போனார்!

படங்கள்: ம.அரவிந்த்