Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

Published:Updated:
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ற்புதங்களின் அற்புதம் ஆண்டவன் மட்டுமே! பகவானின் தெய்விகத்தையும் மகிமையையும் எவராலும் அளந்து சொல்லமுடியாது. அது, ஒரு குழந்தை தன் உள்ளங்கையில் நீரேந்தி, கடலையே அள்ளிவிட்டதாகக் குதூகலிப்பது

போன்றதுதான். பகவான் சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் எல்லாமே அவர் தெய்விகத்தை உணர்த்தி, மகிழவும் நெகிழவும் வைத்தபடியே, நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. உலகெங்கிலும் நாளுக்கு நாள், ஸ்வாமி பாபா புரிந்து வரும் அதிசயங்களைச் சொல்லி மாளாது. நம்பமுடியவில்லை என்று சொல்பவரின் கண்முன்னே, க்ஷணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்துவிடுகிறது.

மிகவும் பழையதான, ஏடுகள் அப்பளமாக நொறுங்கும் புத்தகம் ஒன்றைப் பலமுறை வாசித்திருக்கிறேன். 'சாயி லீலைகள்- நரநாராயண குகை ஆஸ்ரமம்’ என்னும் பொக்கிஷம் போன்ற நூல் அது. 'ஸ்வாமி மகேஷ்வரானந்த்’ எழுதிய புத்தகம். அதில் ஸ்வாமி சத்ய சாயிபாபாவைக் குறித்த தெய்விகப் பேருண்மை, சில துறவிகளாலும், சில சித்தர்களாலும் சொல்லப்பட்டிருக்கிறது. பத்ரிநாத்தில் இருந்து 25 மைல் தொலைவில் வடமேற்குத் திசையை நோக்கி, நாராயண பர்வதம் என்ற மலை உள்ளது. அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள நரநாராயண குகையில், பகவான் சத்ய சாயிபாபாவின் சங்கல்பப்படி, ஆன்மிக சாதகங்களில் ஈடுபட்டபடி, இப்போதும் பதினொரு துறவிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் தெய்விக அனுபவங்களும், ஸ்வாமியின் வழிகாட்டுதலின்படி அவர்கள் அடைந்த ஆன்மிக மேன்மைகளும் நூலில் கூறப்படுகின்றன. இமயமலை வாழ் சித்தர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேட்டி கண்டபோது, அந்தச் சித்தர்கள், சிவபெருமானே ஸ்ரீசத்ய சாயிபாபாவின் உருவில் எழுந்தருளியுள்ளதாகக் கூறும் செய்திகளும் அந்த நூலில் குறிப்பிடப் படுகின்றன. அந்தப் பதினொருவரில் ஒருவரான துறவி விரஜாநந்தா, 1970-ல் தனது 98-வது வயதில் பிரசாந்தி நிலையம் சென்று, பகவான் பாபாவைத் தரிசித்தபோது, தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுகிறார்.

பர்த்தியில் தன் சிஷ்யர்களுடன் 20 நாட்கள் தங்கியும் பாபா தரிசனம் தந்து பேசாததால், கோபத்துடன் விரஜாநந்தா, பர்த்தியிலிருந்து கிளம்பிப் போய் தர்மாவரம் சத்திரத்தில் தங்கிவிடுகிறார். உடனே பாபா, அவரை கார் அனுப்பி வரவழைத்து உபசரித்து, உணவருந்த வைத்து, தன் உள்ளங்கையை விரித்துக் காட்டுகிறார். அதில் தெரிந்த காட்சியைக் கண்டதும், வெலவெலத்துப் போகிறார் விரஜாநந்தா. பற்றுகளோடு துறவியான அவர் வாழும் ஒரு காட்சியையே தன் உள்ளங்கையில் ஸ்வாமி அவருக்குக் காட்டினார். ஸ்வாமி தன்னை உடனே அழைக்காத காரணம் அவருக்குப் புரிந்தது. ஸ்வாமி அன்போடு அவருக்கு உபதேசிக்கிறார். அவரை அமரச் சொல்லி, கண்களை மூடச் சொல்கிறார். கண்களை மூடிய விரஜாநந்தா, ஓரிரு நொடிகள் நித்திரை வசப்பட்டதுபோல் உணர்ந்தார். கண்களைத் திறந்ததுமே, 25 மைல்களுக்கு அப்பால், தான் தங்கியிருந்த தர்மாவரம் சத்திரத்துக்கு  வந்து சேர்ந்துவிட்டதை உணர்ந்து வியந்தார்! இப்படி ஓர் அற்புதம் புரிய கடவுளால் மட்டுமே முடியும் என்று, இருந்த இடத்திலிருந்தே பாபாவின் கமல மலர்ப் பாதங்களை வணங்குகிறார் விரஜாநந்தா. உபநிடதங்களில் பகவான் எப்படிப்பட்டவர் என்று சொல்லப்பட்டது அவர் நினைவுக்கு வருகிறது. ஸ்வாமி துளசிதாசர் கூறுவதும் நினைவுக்கு வந்தது. ''கடவுள் எனப்படுபவர் தன்னுடைய கால்களின் உதவியின்றி நடப்பவர்; காதுகளின்றிக் கேட்பவர்; வாயில்லாமல் எல்லாவிதமான ருசிகளையும் உண்பவர்; நாக்கைப் பயன்படுத்தாமலேயே பேசுபவர். தீர்க்கதரிசி. அதனால்தான் அவரது எல்லாச் செயல்களும் அற்புதங்களாகத் தோன்று கின்றன. வர்ணனைக்கு அப்பாற்பட்டது அவரது புகழ்; அவரது அருள்மகிமை.''

'தன் அருளைப் பெற்றவர்களுக்குக் கடவுள் அனைத்தையும் நடத்திக் கொடுக்கிறார். இத்தனை காத தூரத்தை, சில நொடிகளில் கடந்து, நான் எப்படி தர்மாவரம் வந்திருக்க முடியும்! கடவுளால் மட்டுமே இப்படி அற்புதம் புரிய முடியும். சத்ய சாயிபாபா கடவுளேயன்றி வேறொரு வரும் அல்லர்!’ என்று உறுதிபட மொழிகிறார் விரஜாநந்தா.

எனவே, கடவுளின் அவதாரமாக இருக்கும் பகவான் சத்ய சாயியின் தெய்விகம் மகோன்னதமானது. அவரது மகிமைகளும் ஈடு இணையற்றவை! இத்தகு சத்ய தெய்வம் எனக்குத் தந்த ஒரு சில அனுபவங்களை இந்தக் கடைசி அத்தியாயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எப்போதாவது, ஸ்வாமியைப் பற்றி நான் எழுதுவது உண்டு. சக்தி விகடனில் இருந்து சத்ய சாயிபாபாவைப் பற்றி, இந்த ஓர் இதழுக்கு மட்டும் எழுத முடியுமா என்று என்னைக் கேட்டபோது யோசித்தேன். ஸ்வாமி பாபா அப்போது மருத்துவமனையில் இருந்ததால், மனம் சரியில்லாமலிருந்தது. இருந்தாலும் இது ஸ்வாமிக்கான குரு சேவை என்று நினைத்து ஸ்வாமியைப் பிரார்த்தித்தபடி எழுதினேன். அந்த ஒரு படைப்பு சாயிசங்கல்பத்தால் 'சத்தியம் நிகழ்த்திய அற்புதம்’ என்ற தொடராக வளர்ந்தது. தொடர்ந்து எழுதச் சொன்னார்கள். எழுதினேன். அப்போது சாயிசேவா நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர், 'அற்புதங்கள் சரி, ஸ்வாமியின் உபதேசங்களையும் சொல்லுங்கள்’ என்றார். பணிவோடு 'சரி’ என்றேன். வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பின்னாளில் சொல்வோம் போலிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், ஸ்வாமி துரிதகதியில் வேலை செய்தார். சக்தி விகடன் வழங்கும் 'அருளோசை’யில் 14 நாட்களுக்கு சத்ய சாயிபாபாவின் செய்திகளை, உபதேசங்களைப் பேச முடியுமா என்று கேட்டார்கள். இதை என்னென்று வியப்பது!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
##~##
'அருளோசை’யில் ஸ்வாமி பாபாவின் உபதேசங்களைப் பேசுவது என்பது நல்லதொரு ஆன்மிகச் சேவையாக எனக்குப் பட்டது. சரி என்று சொல்லிவிட்டேனே தவிர, உள்ளுக்குள் ஒரு பயம் வளர்ந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்கும் பேசாமல் ஒதுங்கியிருந்தவள், திடீரென்று ஸ்வாமியின் செய்திகளை, போதனைகளைப் பேசப்போனால் சரியாக இருக்குமா என்ற பயம் வந்தது. 'இது சரிப்பட்டு வருமா ஸ்வாமி? உருப்படியாகப் பேசுவேனா ஸ்வாமி?’ என்று ஸ்வாமியிடம் கேட்டுப் பிரார்த்தித்தபோது, ஒரு காட்சி வந்தது. ஸ்வாமி, வெண்ணிற அங்கியில் இரண்டு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார்! அப்புறமென்ன... ஸ்வாமியின் கிருபையால் நிகழ்ச்சி திருப்தியாக அமைந்தது. நிகழ்ச்சி ஒலிபரப்பாகி முடியும் நிறைவு நாளன்றும், ஸ்வாமி மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்தார். இது போனஸ் ஆசீர்வாதம்! மிக உற்சாகமாயிருந்தது எனக்கு.

எப்போதுமில்லையென்றாலும் முக்கிய நிகழ்வுகளின்போது ஸ்வாமியின் பிரத்யட்சத்தை உணர்கிறேன். அறியாமல் நான் செய்யும் பிழைகளைப் பொறுத்து மன்னிக்கும்படியும், என் குறைகளைப் போக்கும்படியும் ஸ்வாமியிடம் எப்போதும் பிரார்த்திக்கின்றேன். ஓரளவுக்குப் படித்ததும் பாடம் நடத்தியதும் உண்டே தவிர, மிகப் பெரிய தத்துவங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. ஸ்வாமியைப் பற்றித் தெரிந்துகொண்டால் போதும் என்று மனம் ஒரு தெளிவுக்கு வந்திருக்கிறது. ஒரு கூட்டுக்குள் இருந்தபடி அமைதியாகப் புரியும் சாயி சேவைகளால் சாந்தி கிடைக்கிறது.

பகவான் பாபாவின் கோயிலும் சேவா நிறுவனமுமான சென்னை 'சுந்தரத்’தில் சமீபத்தில் ஸ்வாமி வந்து நடமாடியதற்கான தெய்விக அடையாளமாக ஸ்வாமியின் விபூதிப் பாதங்கள் படிந்திருக்கின்றன. ஸ்வாமி படங்களும் விபூதி பொழிகின்றன என்ற செய்தி வந்ததும், எப்படியாவது போய்ப் பார்த்துவிட முயன்றேன். ஏனோ போக முடியாமல் தள்ளிப்போனது. மிகவும் ஆதங்கத்துடன் ஸ்வாமியிடம் குறைப்பட்டுக் கொண்டேன். அப்போது, பகவான் பாபாவின் நிகழ்ச்சிகளை வழங்கும் இணையதளமான 'ரேடியோ சாய்’க்கு பிரதிவாரம் சனிக்கிழமைதோறும் வரும் தமிழ் நிகழ்ச்சியில், ஸ்வாமியின் 'சின்ன கதா’ கதைகளைச் சொல்ல முடியுமா என்று அதன் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் கேட்டார். ஸ்வாமி நல்லதொரு சேவையைத் தருகிறார் என்று தோன்றியது. 'சரி’ என்றேன். 'சுந்தரத்’த்துக்கு வாருங்கள். அங்குதான் ஒலிப்பதிவு’ என்று சொன்னதும், மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. 'சுந்தரம்’ சென்று, ஸ்வாமியை தரிசித்து, ஸ்வாமியின் விபூதிப் பாதங்களை வணங்கி, விபூதிப்பொழிவு கண்டு மகிழ்ந்தபடியே அன்று 'சின்ன கதா’விலிருந்து சில கதைகளைச் சொல்லிவிட்டு வந்தேன். வழிபாடும் சேவையும் ஒருசேரக் கொடுத்த நிறைவுக்காக ஸ்வாமிக்கு நன்றி சொன்னேன்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

தொடர்ந்து கவிதை பாடியும் பேசியும் எழுதியும் வந்த அந்த நாட்களிலும் எனக்கு விளம்பரம், புகழில் நாட்டம் இருந்ததில்லை. ஆனால், ஏதேனும் ஒரு படைப்பை, எழுதி வெளிவரும்போது, தக்கவர் ஓரிருவரேனும் அதுகுறித்துச் சொன்னால், அது அடுத்த படைப்புக்கான 'டானிக்’காக இருக்கும் என்று மட்டும் நினைப்பது உண்டு. அப்படியரு முறை ஸ்வாமியின் பிறந்த நாளுக்கு நல்லதொரு மரபுக்கவிதையை ஆத்மார்த்தமாக எழுதி, அது வெளிவந்த பிறகு, என் சக சாயிதோழியரிடம் 'படித்தீர்களா?’ என்று கேட்டேன். சர்வீஸ், கடமைகள் காரணமாக படிக்கமுடியவில்லை என்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது நியாயமே! இருந்தாலும், அன்று சற்று மனம் வருந்தினேன். ஸ்வாமியிடம் என் ஆதங்கத்தைச் சொன்னேன். 'ஸ்வாமி,  எழுதுவதும் பேசுவதும் உன் செயல்தான். ஆனால், யாருக்காக எழுதுகிறோமோ அவர்களே படிக்கவில்லை என்றால், எதற்காக எழுதுவது?’ என்று கேட்டேன். அடுத்த நாள், என் சாயி தோழி ஒருவர் ஃபோன் செய்து, ''ஸ்வாமிகிட்டே நேத்து நீ ஏதாவது புலம்பினியா..? ஸ்வாமி உன் பெயரைச் சொல்லி, நீ எழுதறதையெல்லாம் யார் படிக்கிறாங்களோ இல்லையோ, தான் படிப்பதாகச் சொன்னார்'' என்றார். எனக்கு எப்படி இருந்திருக்கும்! ஒரே சந்தோஷமாகப் போய்விட்டது! அதே நேரத்தில், அர்ப்பண உணர்வுடன் ஆண்டவனுக்கான சேவையைப் புரியும்போது, எந்த எதிர்பார்ப்பும் கூடாது என்ற உணர்வையும் எனக்குள் ஏற்படுத்தினார் ஸ்வாமி.

அது 2000-வது ஆண்டு என நினைக்கிறேன். கனவில் ஸ்வாமி வந்து, 'கஜானனா’ பாடு என்று சொல்கிறார். அதே பஜன் பாடலை, அவரே பாடிக் காட்டுகிறார். நானும் பாடுகிறேன். அந்த நாட்களில் எனக்கு சாயிபஜன் எதுவுமே தெரியாது. முதலில், எனக்குப் பாடும் குரலும் இல்லை. எந்தச் சங்கீதமும் கற்றதுமில்லை. ஸ்வாமி கனவில் வந்து, பஜன் கற்றுத் தந்ததும்... சாயி பஜன்களில் சிலவற்றைத் தோழியரிடம் கற்றுக்கொண்டேன். ஸ்வாமி பாடும் 'பஜனபினாசுக சாந்தி நஹி’ போன்ற பாடல்கள் என்னைப் பெரிதும் கவர்ந் தன. ஒரு வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மாடியிலிருந்து இறங்கி வரும்போது, ஸ்வாமி 'பபபயஹரணா வந்திதசரணா’ என்ற பாடலை, தன் இனிய குரலில் பாடுவது கேட்டது. வெளியில் எங்குமில்லை; பாட்டு எனக்கு மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. அன்று முழுவதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தபோது, ஒன்பது மாதங்கள் நானும் அவர்களோடு அங்கே போய்த் தங்கியிருந்தேன். வீட்டுக் கடமைகளுக்கு அப்பால், அங்கிருந்த பெரிய சாயிவட்டத் தினருடன் சேர்ந்து நிறைய சாயி பஜன்களை, அங்கே ஏற்பாடு செய்து நடத்தும் வாய்ப்பு எனக்கு, ஸ்வாமியின் அருளால் ஏற்பட்டது. ஸ்வாமி கனவில் வந்து பஜன் கற்றுத் தந்தது, இதற்காகத்தான் என்று தோன்றியது. என் வாழ்வில் சோதனைகள் வந்தபோதெல்லாம் ஸ்வாமியின் பரிவொன்றே என்னைக் காத்தது. துன்பங்களால் மனம் புடம் போடப்பட்டது புரிந்தது.

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு வியாழக்கிழமையில் பூஜை முடிந்து, சற்று நேரம் தியானத்திலிருந்தபோது, ஸ்வாமி சத்யசாயிபாபா சுண்டு விரல் அளவே உள்ள சிறிய உருவமாய், மஞ்சள் வண்ண அங்கியில், இடது பாதம் தூக்கி நடராசப் பெருமானாய் ஆடும் அரிய காட்சி வந்தது. சற்று நேரம் அந்தக் காட்சியிலேயே மனம் லயித்திருந்தது. தெய்விக உணர்வுகளால் மனம் கனிந்து உருகியது. சிவன் மீது ஒரு பாடல் எழுதவேண்டும் என்று தோன்றியது. எழுதினேன்.

'ஆடலரசே ஆடி வா!
தோடுடைய செவியோடு
தோளாடும் பாம்போடு
சிவகாமித் துணையோடு
சிவகணத்தோடு நிலவோடு...
ஆடலரசே ஆடி வா!’

என்று எழுதினேன். கொஞ்ச நாட்களுக்கு அந்தப் பாடலை எனக்குள் பாடிக் கொண்டிருந்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு, 'மீண்டும் சரஸ்வதி’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டபோது, ஸ்வாமியின் பெயரைக் குறிப்பிடாமல், ஸ்வாமிக்கு அதைக் காணிக்கையாக்கியிருந்தேன். எனக்குப் பரிச்சயமான, பெரிய அளவில் சாயி வழிபாடு செய்யும் சாயி பக்தர்களின் வீடுகளில் புத்தகங்களைத் தந்து, ஸ்வாமி பாதங்களில் ஆசீர்வாதத்துக்காக வைக்கச் சொன்னேன். சில தினங்களுக்குப் பிறகு, ஒரு சாயித்தோழி எனக்கு ஃபோன் செய்தார். ''பொன்மணி... ஸ்வாமி நேத்து கனவில் வந்து பேசினார். 'ஆமா, புஸ்தகம் கொடுத்தா படிக்கறதில்லையா?’ என்று கேட்டு, உன்னுடைய 'மீண்டும் சரஸ்வதி’ கவிதை புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். பக்க எண்கள் சொல்லிச் சொல்லி, 'சத்ய தரிசனம்’, 'மீண்டும் சரஸ்வதி’ (டைட்டில் கவிதை) ஆகிய கவிதைகளை சிலாகித்து,  படிக்கச் சொன்னார். ஸ்வாமியே வந்து படிக்கச் சொல்லி விட்டாரா... அன்று, வீட்டில் நான் மட்டுமல்ல; எல்லாருமே பரீட்சைக்குப் படிப்பதைப்போல், உன் கவிதைகளைப் படித்தாகிவிட்டது. ரொம்ப நன்றாக இருந்தது...'' என்று என் தோழிபாட்டுக்குப் பேசிக்கொண்டே போனார். நான் அழுது கொண்டேயிருந்தேன். வெளிப்படையாக ஸ்வாமி பெயரை எழுதாமல், மானசீகமாகத்தான் அதை ஸ்வாமிக்குக் காணிக்கையாக்கியிருந்தேன். அதற்கு எப்படியோர் அன்பு... அங்கீகாரம்!

பல்லாண்டுகளாக சாயி பக்தராயிருக்கும் என் தந்தையின் வழிபாட்டுத் தொடர்ச்சியாகத்தான் சாயி வழிபாடு எனக்கு அமைந்தது. ஸ்வாமியின் மேல் நான் பக்தியும் நம்பிக்கையும் கொள்ள... காலமும் சூழலுமே காரணமாயிருந்தன. ஒருமுறை... ஸ்வாமி பலரிடம் நேரிலும் கனவிலுமாக அடிக்கடி வந்து பேசுவதைக் கேட்டபோது, நான் கடைசியாக வந்த டிவோட்டி போலிருக்கிறது; அதனால்தான் ஸ்வாமி வந்து பேசவில்லை என்று நினைத்தேன். அன்றொரு கனவு வந்தது. மிகப் பெரிய கூட்டத்தில் ஸ்வாமி பேசிக் கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் நான் கடைசியில் அமர்ந்துகொண்டிருக்கிறேன். சொற்பொழிவை முடித்து, பலரையும் ஆசீர்வதித்த பிறகு, ஸ்வாமி நடந்து வந்து எனக்கும் அடுத்ததாகக் கடைசியில் வந்து உட்கார்ந்து கொள்கிறார். அதோடு கனவு முடிந்தது. இப்போது எது கடைசி? எது முதல்? பக்தியிலும் பக்தரிலும் முதலுமில்லை, கடைசியுமில்லை என்ற உண்மை, அந்தக் கனவில் எனக்குச் சொல்லப்பட்டது.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ஸ்வாமி பாபா மகா சமாதியாவதற்கு முன், மருத்துவமனையில் 'அட்மிட்’ ஆவதற்கு முன்தினம், பல பக்தர்களுக்கும் தந்தது போல, எனக்கும் ஒரு கனவு தந்தார். ஸ்வாமியின் பாதங்கள் தெரிந்தன. ஆனால், அதற்கு முன்பு நான் கண்டது போன்று நிஜப் பாதங்களாக இல்லாமல், புகைப்படப் பாதங்களாகத் தெரிந்தன. பாத நமஸ்காரம் எடுத்துக் கொண்டேன். ஸ்வாமியின் இருப்பிடம்போல் தெரிகிறது. அருகில் வயதான பணியாள் ஒருவர் இருக்கிறார். ஸ்வாமி என்னிடம் நீண்ட நேரம் பேசுகிறார். ஆனால், கனவிலும்கூட அவர் என்ன பேசினார் என்பது எனக்குப் புரியவேயில்லை. அடுத்த நாள் ஸ்வாமி, மருத்துவ மனையில் அட்மிட் ஆன செய்தி கிடைத்தது. மனம் மிகவும் துயரத்திலிருந்த நாட்கள் அவை. எப்படியும் ஸ்வாமி அற்புதம் நிகழ்த்தி, பெட்டியை உடைத்துக் கொண்டு எழுந்துவிடுவார் என்று கடைசிவரை நம்பினேன். ஏனோ அந்த அற்புதத்தை மட்டும் ஸ்வாமி நிகழ்த்தவில்லை. மகா சமாதியாவது என்பதுதான் ஸ்வாமியின் தீர்மானிக்கப்பட்ட சங்கல்பமாக இருந்திருக்கிறது. பகவான் பாபா இப்போதும் பக்தர்களுக்கிடையே அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். அவருடைய தெய்விகமும் மகிமைகளும், முன்னெப்போதையும்விட இப்போது உலகெங்கும் பிரமாண்டமாக வளர்ந்து வியாபித்திருக்கின்றன. பலர் கனவுகளிலும் சூட்சுமத்திலும் வந்து, சமீபத்தில் ஸ்வாமி சொன்னது இதுதான்... 'நான் கட்டற்ற நிலையில் பெருமகிழ்வோடு, உங்களைக் காத்தபடி உங்களோடுதான் இருக்கிறேன்!’ அது சத்யம் சத்யம் சத்யமே!

இறுதியில்...

'சரயுநதியில் இறங்கி நடந்துவிட்ட பிறகும் ஸ்ரீராமர் எப்படித் தெய்வமாயிருந்து அருள்பாலிக்கிறாரோ..

கானகத்து வேடனின் அம்பால் உடம்பினை உகுத்த பின்பும் ஸ்ரீகிருஷ்ணர் எப்படி உலகெங்கும் வியாபித்திருக்கிறாரோ...

ஷீர்டியில் மகா சமாதியான பின்பும் ஸ்ரீஷீர்டி சாயிபாபா எவ்வாறு எங்கெங்கும் தெய்வமாய் நிறைந்திருக்கிறாரோ...

அதுபோல்தான், மகா சமாதிக்குப் பின்பும் பகவான் ஸ்ரீசத்யசாயிபாபா,உலகெங்கிலும் பேரன்பும் பெருங்கருணையும் பொழியும் பெருந்தெய்வமாய் ஒளிர்ந்தபடி, நம்மோடு நடமாடிக்கொண்டிருக்கிறார்’ என்று சொல்லி, சாயியின் அற்புதங்களை எழுத வைத்த சாயிக்கு கோடி கோடி வணக்கங்கள் கூறி, சக்தி விகடன் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைச் சொல்லி, அனைவருக்குமாக ஸ்வாமியிடம் பிரார்த்தித்து, ஸ்வாமியின் பாதாரவிந்தங்களை மானசிகமாய் வணங்கி, சாயி நிகழ்ச்சிகளின் நிறைவில் பாடப்படும் பாடலைச் சொல்லி விடைபெறுகிறேன்.

'நமஸ்தே நமஸ்தே குருமகராஜ்
சற்குரு ஸ்ரீசத்யசாயி மஹராஜ்
சரணம் சரணம் ஸ்ரீசாயீசா
சாஷ்டாங்க சரணம் சர்வேசா!

ஜெய் ஸ்ரீசாயிராம்!

(நிறைவுற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism