? கோயில் மூடியிருக்கும்போது சுவாமியை வழிபடலாமா? சிலர், அப்படிச் செய்யக்கூடாது

என்கிறார்களே?
- பா.செந்தில்குமார், வேலூர்
பிரபஞ்ச சக்தியை நமக்கு அளிக்கக் கூடிய புனிதமான இடம் ஆலயம். எப்போதும் எல்லோருக்காகவும் வழிபாடு நடைபெறும் இடம் அது. அங்கே, சுவாமியின் முன்பாக திரை போடப் பட்டிருக்கும்போதும், கோயில் மூடியிருக் கும்போதும் வழிபடுவதைத் தவிர்ப்பது அவசியம். சிலநேரம், பயணத்தின்போது மூடியிருக்கும் கோயிலைக் கண்டு பக்தி மேலிட வணங்குகிறோம் எனில், அதில் தவறேதும் இல்லை.
பொதுவாகவே நமக்குப் பழக்கமான ஒன்றை மாற்றிக்கொள்வது கடினம். நாம் கடவுளைக் கண்டாலோ, அவர் சிறப்பாக உறையும் ஆலயத்தைப் பார்த்தாலோ, நம்மையுமறியாமல் கைகூப்பி வணங்குவது நமது பழக்கம். இப்படிச் செய்பவர்கள் ஆலயம் மூடியிருக்கிறதா, திறந்துள்ளதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள், அவர்கள் உள்ளே உறையும் இறைவனை மனதில் ஏற்றி வழிபடுவார்கள். இறைவன் மீதான அதீத பக்தியே இதற்குக் காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரவு நடைசாத்திய பிறகு, மறுநாள் ஆலயம் திறக்கும்வரை, சிறப்பு ஆராதனைகள் செய்வது கண்டிப்பாகக் கூடாது.
? விரதம், பூஜை, பிரார்த்தனை போன்ற பல வகைகளிலும் இறைவனை வழிபடுகிறோம். இவை எல்லாவற்றுக்கும் ஒரேவிதமான பலன் கிடைக்குமா? உடலை வருத்திக்கொண்டு கடுமையான விரதங்களை அனுஷ்டிப்பது அவசியம்தானா?
- எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை - 24
‘யத் பாவம் தத் பவதி’ - அதாவது நமது சிந்தனை எப்படி உள்ளதோ, அதற்கேற்பவே நாம் காணும் பொருளும் அமையும் என்று கூறுவார்கள். `கடவுள் இருக்கிறார்’ என்று நம்புபவர்களுக்கு `உண்டு’ என்றும், இல்லையென்று நினைப்பவர்களுக்கு `இல்லை’ என்றும், ஒரே கடவுள் என்று சொல்பவர்களுக்கு ஒன்றாகவும், பலவாக நினைத்து வழிபடுபவர்களுக்கு பலவாகவும்... இன்னும் எந்த வகையில் தாங்கள் நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் தங்களுக்குக் காட்சி அளிப்பார் இறைவன். தங்களின் எண்ணங்கள் ஒருபோதும் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.
வேதங்களும் ஆகமங்களும் குறிப்பிடும் பரம்பொருளின் தன்மை அனைத்திலும் மேலானது. அதுபற்றி அறியவேண்டுமெனில், நமக்கு முன்ஜன்மத்தின் நல்வினைகள் இருந்தால்தான் முடியும்.பரம்பொருள் நமது பக்குவ நிலைக்கேற்ப, பல வடிவங்களில் அருள் தருகிறார். உலகுக்கெல்லாம் மூலகாரணமான அந்தப் பரம்பொருளை அடைவ தற்கான வழிமுறைகளே பூஜைகளும் விரதங்களும்.
இவற்றால் ஏற்படும் பலன்கள், ஆன்மிக வழியில் நமக்கு முன்னேற்றத்தைத் தரும். கிடைக் கும் பலன்கள், அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப மாறுபடும். சூரிய ஒளி ஒன்றாக இருந்தாலும், ஓரிடத்தில் ஈரத்தைக் காயவைக்கவும், மற்றோர் இடத்தில் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நாம் அறியவேண்டியது என்னவெனில், நம் முன்னோர் கூறிய வழிமுறைகளின்படி, தற்காலத்தில் எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க முடியுமோ, அவற்றை முறைப்படி கடைப்பிடிக்கவேண்டும். நம்முடைய முன்னோர்கள் அடைந்த நல்வாழ்கை முறையை நாமும் அடைய முயற்சி செய்ய வேண்டும்.
பூஜைகள், விரதங்கள் போன்றவற்றின் பலன் களை அனுபவித்தால்தான், அவற்றின் முக்கியத் துவத்தை நம்மால் உணரமுடியும். பலமுறை கடுமையாக முயற்சி செய்தும் கிடைக்காத மன ஒருமைப்பாடு, பூஜைகளாலும் விரதங்களாலும் நமக்குக் கிடைக்கும்.
இவையெல்லாம் இன்றோ நேற்றோ ஏற்பட்ட பழக்கங்கள் அல்ல. நம்முடைய ரிஷிகளால், எவ்வித சுயநல நோக்கமுமின்றி கடவுளின் அருளால் நமக்களிக்கப்பட்ட அமைதியின் கருவூலங்கள். இந்த விரத முறைகள் நம் உடம்புக்கும் உள்ளத்துக்கும் பலம் கொடுக்கக்கூடிய அருமருந்து கள் ஆகும்.
இந்த உண்மைகளை அறிந்து, அவற்றை சிறந்த முறையிலும், நம் சக்திக்கு உட்பட்டும், மற்ற காரியங்களுக்கு இடையூறு ஏற்படாமலும் கடைப் பிடிக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
ஏதோ பக்கத்து வீட்டுக்காரர் செய்கிறார் நாமும் அதுபோன்று செய்ய வேண்டும் என்றில் லாமல், நமக்குத் தேவையானதுதானா என்பதை அறிந்துகொண்டு, நம்மால் முடிந்த அளவுக்குப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கடைப்பிடித்தால், வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். மறு உலகிலும் இறைவனுடன் ஒன்றியிருக்கும் பேற்றி னைப் பெறலாம். இதுவே நமது ஸநாதன தர்மம் காட்டிய வழி.
எந்தக் காலத்திலும் நாம் நமது சமயக் கருத்து களை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்தல் கூடாது. எப்போதும் நமக்கு நன்மை அளிக்கக்கூடிய சமயச் சடங்குகளை, இயன்றவரையிலும் முழுமை யாக அனுசரித்து, நல்வாழ்க்கை வாழ்வோம்.

படம்: மதன் சுந்தர்
? எடுத்ததற்கெல்லாம் கடவுளை வேண்டுவது என்பது, நமக்குத் தன்னம்பிக்கை இல்லாததன் அடையாளம் அல்லவா? கடவுள் நம்பிக்கையைவிடவும் சுய முயற்சியில் நம்மை இயங்கச் செய்யும் தன்னம்பிக்கை மேலானதுதானே?
- ராதாகுமார், கல்லிடைக்குறிச்சி
தாங்கள் `தன்னம்பிக்கை’ என்று எதை குறிப்பிடுகிறீர்களோ, அந்த உட்பொருளை இயக்கக்கூடிய பரம்பொருளே கடவுள் என்று நமது சமயம் நமக்குத் தெளிவுபட விளக்கியுள்ளது.
‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் உரக்க கர்ஜனை செய்ய முடிந்தது என்றால், அதற்குக் காரணம் அவரது கடவுள் நம்பிக்கையே ஆகும். பக்தி இல்லாத தன்னம்பிக்கை சில காலம் வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், தெய்வ நம்பிக்கையின் மூலமாக நாம் பெறும் தன்னம்பிக்கை, அனைத்துக் காலங்களிலும் நமக்கு வழிகாட்டக்கூடிய ஒளி விளக்காக விளங்கும்.
கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்துவிட்டோ மானால், இந்த உலகத்தின் மீதும் நமது நம்பிக்கை பெருகும். உலகில் உள்ள அனைத்தையும், ஒரே பரம்பொருளாக நினைப்பதே ஆன்மிக வழியில் உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது.
கடவுளால் அனைத்துக் காரியங்களையும் செய்ய முடியும், அவரால் இயலாத காரியம் என்று எதுவும் இல்லை, இவ்வுலகின் தாயும் தந்தையும் அவரே, அவரின்றி ஓர் அணுவும் அசையாது எனப்போன்ற உயர்ந்த எண்ணங்கள் தங்களின் மனதில் பதிந்துவிட்டால், தாங்கள் எக்காலத்திலும் எப்படிப்பட்ட சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கமாட்டீர்கள்.
கடவுளின்மீது அதீத பக்தி வைத்து, தாங்கள் தங்களுடைய காரியங்களைச் செய்து வந்தீர்களா னால், தங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்; தெய்வ அனுக்கிரகமும் தங்களுக்குப் பரிபூரணமாக வாய்க்கும்.
நமது ஸநாதன தர்மத்தில், அனைத்து நிலையில் உள்ளவர்களுக்கும் இடம் உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களையும் நமது மதம் பிரித்துப் பார்ப்பதில்லை; அவர்களும் அவர்களின் நிலையிலிருந்து மாறுவதற்கு வாய்ப்பளிக்கும். அனைவரும் தெய்வத்தின் திருவருளினால் தெய்வத்தன்மையை அடைய வேண்டும் என்பதே ஸநாதன தர்மத்தின் குறிக்கோள்.
? ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? வெவ்வேறு தெய்வங்களை வழிபடும் நம் மதத்துக்கு இது பொருந்துமா?
- பி.கிருஷ்ணசாமி, சென்னை - 80
நமது மதம் ஸநாதன தர்மம் என்று அறியப் படுகிறது. ‘ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி’ ஒரே பரம்பொருள், ஞானிகளால் பல ரூபங்களாக போற்றப்படுகிறது என்றும், ‘வசுதைவ குடும்பகம்’ உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்றும் நமது சாஸ்திர நூல்கள் விளக்குகின்றன.
‘ஒன்றே குலம் - ஒருவனே தேவன்’ என்பது நமது மதத்தின் அடிப்படை கருத்தே. ஒரு மரத்துக்கு ஊற்றப்படும் நீரானது, எப்படி வேர் மூலம் அந்த விருட்சத்தின் அனைத்து பாகங்களுக் கும் சமமாகச் செல்கிறதோ, அதுபோன்று நமது மதத்தில் நாம் செய்யும் எந்தவொரு பூஜையாக இருந்தாலும், அது இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் நன்மையையும் கருத்தில்கொண்டே செய்யப்படுகிறது. அதற்கேற்பவே நம்முடைய ஆலயங்களின் அமைப்பும் திகழ்வதுதான் அற்புதம்!
அந்த ஆலயங்களுக்கு வந்து வழிபடுபவர் களுக்கு மட்டும்தான் என்றில்லாமல், சகல ஜீவ ராசிகளுக்குமான பிரார்த்தனை அங்கு நிகழும். இதுவே, நம் மதத்தின் தனிச்சிறப்பு எனலாம். உலகிலுள்ள மனிதர்கள் மட்டுமல்லாமல் பறப்பன, ஊர்வன என்று உயிர்கள் எந்தெந்த உருவத்தில் வடிவில் இருந்தாலும், அவை அனைத்தும் நன்மை அடையவேண்டும் என்பதால்தான் ஆலயம் தோறும் பூஜைகள் நடைபெறுகின்றன.
- பதில்கள் தொடரும்...
வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002