மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 5

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 5
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 5

வெ.நீலகண்டன்

நடுகற்கள்

க்களைக் காக்க விலங்குகளுடன் சண்டையிட்டு உயிர் நீக்கும் வீரர்களுக் கும், எதிரிகளுடனான  யுத்தத்தில் இறந்த வீரர்களுக்கும் நடுகல் ஊன்றுவது மரபு. தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருக்குறள் என சங்க இலக்கியங்கள் பலவும் நடுகல் மரபு பற்றி பாடுகின்றன. தமிழர்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஆதிக்குடிகளிடமும் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. நடுகல் வழிபாட்டின் நீட்சிதான் சிறுதெய்வ வழிபாடு என்று பகுக்கப்பட்டுள்ள ‘எல்லை தேவதை' வழிபாடு ஆகும். 

உலகம் முழுவதும் ஏராளமான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதிகால நடுகற்கள் குறிப்புகள் எதுவுமின்றி, வீரனின் நினைவுகளை மட்டுமே தாங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகம், கர்நாடகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பிற்கால நடுகற்கள், சித்திரங்களின் தொகுப்பாக உள்ளன.  மூன்று நிலைகளைக் கொண்ட அந்தக் கற்சித்திரங்களின் முதல் நிலை, அந்த வீரன் ‘வில்லெய்ததால் வீழ்ந்தானா’, ‘வாளால் தலை கொய்யப்பட்டானா’, ‘ஈட்டியால் குத்தப் பட்டானா’ என்பதை விளக்குகின்றன. அடுத்த நிலையில், இரண்டு தேவதைகள் அந்த வீரனின் கரத்தைப் பற்றிச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். மூன்றாம் நிலையில், அவன் ஈசனடி சென்று அவன் திருப்பாதத்தில் கலக்கிறான்.

இறந்தவன் தளபதியாகவோ, தலைவனாகவோ இருக்கும்பட்சத்தில், அவன் தலைக்கு மேல் கொற்றக்குடை திகழ்கிறது. அவ்வளவு நுட்பமாக அந்த வீரனின் வாழ்க்கையைப் பதிவு செய்கின்றன நடுகற்கள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 5

நடுகற்கள் எப்படி உருவாக்கப்படும்?

நடுகற்கள் எப்படி உருவாக்கப்படும் என்று புறநானூறு கூறுகிறது. நடுகற்கள் எப்படி தெய்வ நிலையை அடைந்தன என்பதற்கும் அதுதான் சான்றாக இருக்கிறது.

‘உயிர்நீத்த வீரனின் பெயரையும் செயலையும் கல்லில் வடிப்பார்கள். அந்தக் கல்லுக்கு நீராட்டி, நெய் வார்த்து, வாசனைப்புகை காட்டி விளக்கேற்று வார்கள். அதன் மேல் பூக்களைத் தூவுவார்கள். மாலை சூட்டுவார்கள். மயிற்பீலி சாத்துவார்கள். ஆட்டுக்கிடாக்களைப் பலியிட்டு பறையொலிப் பார்கள். கல்லின் மேல் எண்ணெய் பூசுவார்கள். அந்த வீரனுக்குப் பிடித்த உணவுப் பொருள்களை படையலிடுவார்கள். அந்தக் கல்லைச் சுற்றி வில், வேல், வாள் கொண்டு வேலி அமைப்பார்கள்...’ என்கிறது புறநானூறு.

ஆண்டுதோறும் அந்த வீரன் உயிர்நீத்த நாளில் அந்த கல்லைச் சுத்தம் செய்து, அதன் முன்னால் அவனுக்குப் பிடித்த உணவுகளைப் படைத்து வழிபடுவது வழக்கமாயிற்று. இன்றும், நடுகற்களை மட்டுமே காவல் தெய்வமாகக் கருதி வழிபடும் மரபு தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கிறது. வேடியப்பன், கிருஷ்ணாரப்பன், சாணாரப்பன், கருப்புராயன், வேடன், மீனாரப்பன் போன்ற தெய்வங்கள் நடுகற்களிலேயே உறைந்திருக்கின்றன. வஞ்சியம்மன் போன்ற பெண் தெய்வங்களும் கற்களின் வடிவில் இருக்கிறார்கள்.

சில பகுதிகளில், நடுகற்கள் பெருந்தெய்வ உருவ வழிபாட்டில் கலந்துவிட்டன. தமிழக-கர்நாடக வனப்பகுதியில் உள்ள `எரன் ஹல்லி' போன்ற பகுதிகளில், ஏராளமான நடுகற்கள் கிடைத்திருக் கின்றன. அவற்றில் இருக்கும் சிற்பங்களை, பசவண்ணார் சாமியாகக் கருதி கோயில் எழுப்பி வழிபடுகிறார்கள் மக்கள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 5

சதி கற்கள்

நடுகற்களைப் போலவே, சதிக்கற்களும் வழிபடும் நிலையை அடைந்திருக்கின்றன. யுத்தத்தில் உயிர்நீத்த தம் கணவனுக்குச் சடங்குகள் செய்து நடுகல் இட்டு நிறுத்திவிட்டு, தீப்பாய்ந்தோ, வேலால் குத்திக்கொண்டோ தானும் உயிர்நீக்கும் பெண்களுக்காக நடப்படும் கல்லே, சதிக்கல்.  பெண்களின் பெயர்களில் இப்போது வழிபடப் படும் கற்கள் இப்படியான சதிக்கற்களாகவே இருக்கக்கூடும்.

நடுகல் வழிபாடே பிற்காலத்தில் முறைப்படுத்தப் பட்டு, பொதுமையான உருவங்கள் வரையறை செய்யப்பட்டு, சுதை வழிபாடாக உருமாறியது. கருப்பர், ஐயனார், பட்டவர், முனியன், மாடன்  என்று பெயர்கள் பொதுவாகின. இது பலநூறு ஆண்டுகளாக காலத்தேய்தலில் நடந்த மாற்றம். இன்றளவும் தமிழகத்தின் ஆதிக்குடிகளான பழங்குடி சமூகங்கள் பல, நடுகல் வழிபாட்டையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் மூதாதைச் சமூகங்களில் ஒன்று கோத்தர் சமூகம். நீலகிரி மலையில், கோக்கால், குந்தா கோத்தகிரி, திருச்சிக்கடி, கொல்லிமலை குந்தா, கூடலூர் கோக்கால், கீழ் கோத்தகிரி ஆகிய ஊர்களில் சொற்ப எண்ணிக்கையில் கோத்தர்கள் வசிக்கிறார்கள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 5

கோத்தர்கள் வசிக்கும் பகுதிகள் ‘கோக்கால்’ என்று அழைக்கப்படுகின்றன. கோத்தர்களின் மொழி கோத்தா. எழுத்து வடிவமில்லாத இந்த மொழி, அழிவின் விளிம்பில் இருக்கிறது. வழிபாடு, சடங்குகளில் வெள்ளுடை தரித்து இவர்கள் ஆடுகிற நடனம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்தக் கோத்தர்களின் தொன்மம் ஆதிசிவனோடு தொடர்புடையது.

 ஊழி வெள்ளத்தில் மிதந்து வந்த பூசணிக்காய்!

“ஒருகாலத்தில் இந்த பூலோகமே நீரால் அழிந்து போனபோது, வெள்ளத்தில் ஒரு பூசணிக்காய் மட்டும் மிதந்துகொண்டிருந்தது. அதற்குள் இரண்டுபேர் இருந்தார்கள். அதைக் கண்டுபிடித்த சிவனும் பார்வதியும், பூசணிக்காயை உடைத்து  இரண்டு பேரையும் வெளியில் கொண்டு வந்தனர்.

‘அழிந்துபோன இந்த உலகத்தை நீங்கள்தான் திரும்பவும் உருவாக்க வேண்டும்’ என்று  சொல்லி, தொழில் கருவிகளையும், ஒரு எருமை மாட்டையும் உருவாக்கி அவர்களின் கையில் கொடுத்து, மந்திர, தந்திரங்கள், மூலிகை வைத்தியங்களை கற்றுக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். அதனால், சிவனும் பார்வதியும்தான் எங்கள் மூதாதைகள். அவர்களையே எங்கள் அப்பா, அம்மாவாக இன்றைக்கும் வைத்து வணங்குகிறோம்” என்கிறார் கோத்தர் குலத்தின் ஒரு மூத்தோன்.

தொன்மக் கதைக்கு ஏற்ப எருமைமாடுதான் இந்த மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. மேய்ச்சலே மரபுத் தொழில். வீட்டுக்கு 100 எருமை கள் வைத்து வளர்த்த காலமெல்லாம் உண்டு. எருமையின் பாலை இவர்கள் பயன்படுத்து வதில்லை. நெய் மட்டும்தான். வழிபாடு, சடங்கு களிலும் நெய்தான் பிரதானம்.

சிவன், பார்வதியை ‘அய்யனோர்’, ‘அம்மனோர்’ என்று அழைக்கிறார்கள். அய்யனோர் கருவறை யில் ஓர் நடுகல்லும், அம்மனோர் கருவறையில் மூன்று அடுப்புகளும் உள்ளன. இந்தக் கோயில் திருவிழாதான் கோத்தர் சமூகத்தின் மிகப்பெரும் மரபு விழா. பக்திக்கு இணையாக, கொண்டாட் டமும் இவர்களின் வாழ்க்கையை வண்ண மயமாக்குகிறது.

இந்த மக்களின் அனைத்து சடங்குகளும் வாழ்க்கையோடு பிணைந்து நிகழ்கின்றன. வெள்ளிதான் இவர்களின் பிரதான உலோகம். பெண்கள் மணிக்கட்டில் இரண்டு வெள்ளி வளையல்களும், முழங்கைக்கு மேலாக இரண்டு வெள்ளி வளையல்களும் அணிந்திருக்கிறார்கள்.  ஆண்களும் பெண்களும் கண்டிப்பாக கொண்டை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்திருந் தால்தான் கோயிலுக்குள் செல்ல முடியும்.

இவர்களின் குடியிருப்பும் வித்தியாசமானது. கீக்கேரு, மேக்கேரு, அமிர்கேரு, நடுக்கேரு, ஆக்கேரு, ஈக்கேரு என இந்தச் சமூகத்தில் ஆறு உட்பிரிவுகள் உண்டு. இவற்றில் கீக்கேருவும், மேக்கேருவும் மாமன், மச்சான் உறவுகள். மற்றவை சகோதர உட்பிரிவுகள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 5

குடியிருப்புக்கு நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடும். அந்த வாய்க்காலுக்கு மேற்கே இருக்கும் வீடுகள் அனைத்தும் மேக்கேரு பிரிவினருடையவை. கிழக்கே இருப்பவை, கீக்கேரு பிரிவினருடையவை. அய்யனோர், அம்மனோர் கோயிலுக்கு, கீக்கேரு வுக்குத் தனியாகவும், மேக்கேருவுக்குத் தனியாகவும் பூசாரிகள் இருக்கிறார்கள். எல்லாப் பண்டிகை களிலும் இரு தரப்புக்கும் இடையே வேடிக்கையும், விளையாட்டும் களைகட்டும்.  

சாமியே தேர்ந்தெடுக்கும் பூசாரி!

ஊருக்கு ஒரு தலைவர். ஏழூருக்கும் சேர்த்து ஏழூர்த் தலைவர் ஒருவர் இருப்பார். ஆனாலும், பூசாரிதான் ஊரில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் தீர்மானிப்பார். பிரச்னைகள் வந்தால் தீர்த்துவைப்பவரும் அவர்தான்.

பூசாரி வந்தால் எல்லோரும் எழுந்து நிற்பார்கள். பூசாரிகளுக்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு.  வெளிவீடுகளில் சாப்பிடக்கூடாது. செருப்புப் போடக்கூடாது. மேல்சட்டை உடுத்தக்கூடாது. கோயிலுக்கு அருகில் மக்களே சேர்ந்து ஒரு வீடு கட்டிக் கொடுப்பார்கள். ஊர்ப் பொதுவில் எருமையும் வாங்கித் தருவார்கள். அதுதான் ஜீவனம். எதற்காகவும் யாரிடமும் பணம் பெறக் கூடாது. 

சாமிதான் பூசாரியைத் தேர்ந்தெடுக்கும். மலைக்கு மேல், ஆழமான பாதாளக் கிணறு ஒன்று உண்டு. ஊரே கூடிநிற்கும் நேரத்தில் திடீரென்று ஒருவருக்கு அருள் வரும். அவர், பூசாரியாகத்  தகுதியுள்ளவரை அந்தக் கிணற்றுக்குள் பிடித்துத் தள்ளிவிடுவார். பலநூறு அடி ஆழமுள்ள அந்தச் சாமிக் கிணற்றில் இருந்து எழுந்து வருவதென்பது, மனிதச் சாத்தியமல்ல!

- மண் மணக்கும்...

படங்கள்: எம்.விஜயகுமார், அருண்