Published:Updated:

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

தொகுப்பு: நமசிவாயம்

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

தொகுப்பு: நமசிவாயம்

Published:Updated:
அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!
அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் மேன்மை பெற்ற பல்லாயிரம் க்ஷேத்திரங்களைத் தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமி நம் பாரதம். இந்தத் தலங்கள் அனைத்தையும் தரிசிக்க இந்த ஒரு  பிறவி போதாது. என்றாலும், நாம் யாத்திரையாகச் சென்று தரிசித்து வழிபட்டு வரம்பெற்று மகிழ்வதற்கு வசதியாக, குறிப்பிட்ட தலங்களை வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்.

சக்தி பீடங்கள், திவ்யதேசங்கள், தேவாரத் திருத்தலங்கள், பஞ்ச துவாரகைகள், காசி - ராமேஸ்வரம், திருக்கயிலாய தரிசனம்... என்று பெரியோர்களால் பாடல் பெற்ற, புராணங்களால் போற்றப்பட்ட புண்ணிய திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வதும், அந்தத் தலங்களின் மேன்மையை அறிந்து வணங்குவதும், அங்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி வருவதும், நமக்கு  மட்டுமல்ல நம் சந்ததிக்கும் பெரும்பேற்றினைப் பெற்றுத் தரும் வழிபாடுகளாகும்.

`மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாயத் தொடங்கினர்க்கு ஓர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்பது தாயுமானவரின் திருவாக்கு. இறையருள் வேண்டியும் ஞானத்தைத் தேடியும் மேற்கொள்ளும் பயணமே யாத்திரை.

திருத்தலம்தோறும் யாத்திரை சென்று இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம சுகமே தனிதான். அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது; அனுபவித்து உணர வேண்டிய ஒன்று.

அவ்வகையில், ‘சக்தி விகடன்’ வாசகர்கள் பயனடையும் வகையில், அவர்களோடும் ஆன்மிகப் பெரியோர் களுடனும் புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசிக்கும் வகையில் துவங்கவுள்ளது சக்தி யாத்திரை!  
முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறு கின்றன. தலங்கள் - தரிசனம் மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தி யாத்திரையில் இடம்பெறும் தலங்களின் சிறப்புகளும், வழிபாடுகளின் விளக்கங்களும் இந்த இணைப்பில் உங்களுக்காக.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

குமரக்கோட்டம்

காஞ்சிபுரத்தின் ராஜ வீதியி லேயே அமைந்திருக்கிறது குமரக் கோட்டம்.

அம்மையப்பருடன் முருகன் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை ‘சோமாஸ்கந்த மூர்த்தம்’ என்று போற்றுவர். அதேபோல், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் நடுவில் குமரக் கோட்டம் அமைந் திருப்பதால், இந்த மூன்று கோயில் களும் சேர்ந்து சோமாஸ்கந்த அமைப்பில் திகழ்வது, விசேஷம்.

கந்தபுராணம் அரங்கேறிய தலம் இது. குமரக்கோட்டத்து முருகனை நாள்தோறும் பூஜித்து வழிபட்டவர் கச்சியப்ப சிவாச் சார்யர். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், “எமது வரலாற்றை அழகிய செந் தமிழில் பாடுக’’ என ஆணையிட் டார். அத்துடன், `திகட சக்கரச் செம்முகம்' என்று முதல்அடியும் எடுத்துக்கொடுத்தார்.

ஆறுமுகனின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற எண்ணிய கச்சியப்பர், கந்த புராணத்தை இயற்றத் தொடங் கினார்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

ஒரு நாளைக்கு நூறு பாடல்கள் வீதம் எழுதிவந்தார் கச்சியப்பர். ஒவ்வொரு நாள் இரவும் அன்று எழுதிய பாடல் களை முருகனின் திருவடிகளில் வைத்துவிட்டுச் செல்வார். மறுநாள் காலையில் அதில் சில திருத்தங்கள் அமைந்திருக்கும். இவ்வாறு குமரனின் அருளால் கந்தபுராணம் நிறைவுபெற்றது.

அரங்கேற்றத்தின்போது, கந்த புராணத்தின் முதல் வார்த்தையாக உள்ள ‘திகட சக்கரம்’ என்பதில் சொற்குற்றம் இருப்பதாகக் கூறினார் புலவர் ஒருவர். மன வருத்தத்துடன் இரவு உறங்கச் சென்ற கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகன், புலவரின் சந்தேகத்தைத் தானே வந்து நிவர்த்தி செய்வதாகக் வாக்களித் தார்.

மறுநாள் புலவர் உருவில் அவைக்கு வந்து, ‘திகட சக்கரம்’ என்ற வார்த்தை வீரசோழியம் என்ற நூலில் இருப்பதாகக் குறிப்பிட்டு மறைந்தார். வந்தவர் முருகப்பெருமான் என்பதை அறிந்த புலவர் பெருமக்கள் கச்சியப்பரின் முருக பக்தியை வியப்புடன் போற்றினர். இந்த அருள் நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தை இன்றைக்கும் இக்கோயிலில் நாம் தரிசிக்கலாம்.

குமரக்கோட்டம் கோயிலில் வரஸித்தி விநாயகர், சந்தான கணபதி, தண்டபாணி தெய்வம், மீனின் மீது அமர்ந்தபடி சடாதரி யாகக் காட்சிதரும் மச்சமுனி, சண்முகர், மயூரவாகனர் ஆகிய தெய்வ மூர்த்தங்களை தரிசிக்க லாம்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

பள்ளியறையை அடுத்தாற் போன்று உருகும் உள்ளம் பெருமாள் சந்நிதி உள்ளது. இக் கோயிலில் தனக்கும் ஓர் இடம் வேண்டும் என்று விரும்பி வந்து சந்நிதி கொண்டிருக்கிறாராம் இந்தப் பெருமாள்!

திருக்கோயிலின் தியான மண்டபத்தை அடுத்து, திருச் சுற்றின் மேற்கு கோடியில் வடக்கு நோக்கிய சந்நிதியில் நாக சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை யுடன் காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இந்தத் திருமூர்த்தங்களுக்கே திருக்கல்யாணம் நடை பெறுகிறது.

கருவறையில் ஒருமுகம்; நான்கு திருக்கரங்களுடன் பிரம்மசார்ய கோலத்தில் தரிசனம் காட்டுகிறார் முருகப்பெருமான்.

இங்கே மூலவருக்கு அபிஷேகத் துக்கு முன்னர், எண்ணெய்க்குப் பதில் தேனாலேயே அபிஷேகம் செய்யப்படுகிறது.

மூலவரான சுப்ரமண்யரின் சந்நிதிக்கு எதிர்புறத்தில், தேவ சேனாதீஸ்வரர் சந்நிதி இருக்கிறது.

பிரம்மன் சிறைப்பட்டபோது, அவரை விடுவிக்கும்படி நந்தியின் மூலம் சொல்லியனுப்பினார் சிவனார். ஆனாலும் பிரம்மனுக்கு விடுதலை கிட்டவில்லை. தந்தை யின் கட்டளையை மீறியதால் முருகப்பெருமானுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்க இங்கே சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டாராம் முருகன். 

இங்கே முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகமும், ஐப்பசியில் கந்தசஷ்டி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. 

கந்தசஷ்டி விழாவின்போது, செங்குந்த மரபைச் சேர்ந்த அன்பர்கள் காப்புக் கட்டி, வேடமணிந்து இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை நாடகமாக நடித்துக் காட்டுவர். இது இந்த விழாவின் சிறப்பம்சமாகும்.

ஞானமலை

ண்ணாமலையில், அருணகிரிநாத ருக்குத் திருவடி தரிசனம் காட்டி, அவரை முருகன் ஆட்கொண்ட திருக் கதை நாமறிந்ததே. அதேபோல், அருணகிரியாரின் வேண்டுதலை ஏற்று, அவருக்கு முருகப்பெருமான் மீண்டும் தமது திருவடி தரிசனத்தைக் காட்டி யருளிய தலம் ஞானமலை.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக் கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 14 கி.மீ தொலைவில், கோவிந்தசேரி கிராமத்தில் அமைந்துள்ளது, ஞானமலை முருகன் கோயில்.

‘ஞானம்’ என்ப தற்கு `திருவடி' என்றும் பொருள். எனவே, ஞான மலை என்பதை திருவடி மலை என்றும் கூறலாம்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

அடிவாரத்தில் அருள் பாலிக்கும் ஞானசக்தி கணபதியை தரிசித்துவிட்டு, 150 படிகள் ஏறினால், யோகாநுபூதி மண்டபத் தில், கல்லால மரத்தடியில் காட்சி அளிக்கும் ஞான தட்சிணா மூர்த்தியை தரிசிக்கலாம்.

மலைக்கு மேலுள்ள கோயிலின் கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டித சுவாமி அருள்பாலிக்கிறார். சிற்ப ஆகம நூல்கள் குறிப்பிடும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவம். பிரணவத்துக் குப் பொருள் தெரியாத பிரம்ம னைத் தண்டித்துச்  சிறையிலிட்டு, சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்ட (பிரம்ம சாத்தன் -  பிரம்மனைத் தண்டித் தவன் என்று பொருள்) அருள்கோலம்!

பல்லவர்கள் மற்றும் முற்காலச் சோழர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தின் பெரும்பாலான கோயில்களில் பிரம்ம சாஸ்தா வடிவமே காணப்படுகிறது. சிற்ப அமைப்பின் மூலம், ஞான மலை ஞானபண்டிதன் திருக்கோலம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிய வருகிறது.

கோயிலின் தெற்குச் சுற்றில் அருணகிரியாருக்குக் காட்சி யளித்த ‘குறமகள் தழுவிய குமரன்’ வடிவம் அமைந்திருக்கிறது. நீல மயிலில் அமர்ந்த கோலக் குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு அருள்புரிய, அருகில், அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் திகழும் இந்தத் திருவடிவம், வேறேங்கும் காண இயலாத அற்புத வடிவம் ஆகும்.

மலையின் மேற்புறம் ஏறிச் செல்லும் வழியில் முருகன் உண் டாக்கிய ‘வேற்சுனை’ உள்ளது.

அருணகிரிநாதரை பரமகுரு வாகக் கொண்டு  இந்த ஞான மலையில் பல்லாண்டுகள் தவமியற்றியவர் ஞான வெளிச் சித்தர் எனும் பாலசித்தர் ஆவார்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

முருகன் திருவடிகள் பதிந்த இந்தத் தலத்தில் தவமியற்றி, மக்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறைகளை நீக்கி, பல நோய்களுக்கு மருந்தளித்து, ஞானத்தை போதித்தவர். கார்த் திகை மாதம் மூல நட்சத்திர நாளன்று, இவர் ஞானமலை முருகன் திருவடிகளில் கலந்தார்.

இந்த அற்புதச் செய்தியை 2010-ம் ஆண்டு அக்டோபர் நாலாம் நாள் நள்ளிரவில் உணர்த் தியதோடு, முருகன் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தூணில் ஞானவெளிச் சித்தரின் உருவத் தைக் காட்டி அருள்பாலித்தார் முருகன். அவர் சமாதி கொண்ட இடத்தில் ஞானகிரீஸ்வரரை தரிசிக்கலாம்.

இந்த மலையில் இரண்டு குகை கள் உள்ளன. பாலசித்தருக்குப் பிறகு மற்றொரு சித்தர் சில நூற் றாண்டுகளுக்கு முன்பு தவமியற்றி யுள்ளார். மலையின் அடிவாரத் தில் அவருக்கான சமாதி உள்ளது.

ஞானகிரீஸ்வரர் கோயிலின் பின்புறம், ஞான பண்டித சுவாமி திருவடி பதிந்துள்ள இடத்தை தரிசிக்கலாம். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்தால் நோய்கள் நீங்கும்; இல்லறம் சிறக்கும்.

ஞானமலையில் மிகுதியாகக் காணப்படுவது வெப்பாலை மரம். தோல் சம்பந்தமான நோய், வெண்குஷ்டம், மூட்டுவலி முதலான உபாதைகளுக்கு இந்த மரத்தின் இலை அருமருந்தாகும். இம்மரத்தின் காற்று, தம்பதியருக்கு இல்லற இன்பத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அளிக்கும் என்கின்றன சித்த நூல்கள்.

வள்ளிமலையில் வள்ளியை மணந்து, தணிகை மலைக்குச் செல்லும் வழியில் முருகன் முதலில் வள்ளி யுடன் பொழுது போக்கிய பெருமையுடையது ஞானமலை. எனவே, இம்மலைக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு ஆனந்த வாழ்வையும், மன அமைதியையும் அளித்து மகிழ்விக்கிறான் அந்த வள்ளி மணாளன்.

சுவாமி மலை

முருகனின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை. கும்பகோணம்- திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமி மலை அமைந்துள்ளது.

கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில் இறங்கி, வடக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால், சுவாமி மலையை அடையலாம்.

சுவாமிமலையை புராணங் களும் இலக்கியங்களும் திருவேர கம் என்று குறிப்பிடுகின்றன. ‘ஏர்’ என்றால் அழகு; ‘அகம்’ என்றால் வீடு என்பர். அழகு மிக்க படை வீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

அடியவர்களின் மனதை ‘அருள்’ எனும் ஏர் கொண்டு உழுது, ‘அன்பு’ எனும் பயிரை வளர்ப்பவர் முருகப்பெருமான். அவர் அருள்பாலிக்கும் தலம் ஆதலால், இந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனைத் தண்டித்து, சிறையில் அடைத்த முருகப் பெருமான், தந்தைக்கும் பிரவணப் பொருளை உபதேசித்தார். முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார், தம் உள்ளத்தில் உவகை பொங்கிட, தன் மகனை ‘நீயே சுவாமி!’ என்று கூறினாராம். இதனால் இந்தத் தலம் சுவாமி மலை எனும் பெயர் பெற்றது. முருகப்பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமி, தகப்பன் ஸ்வாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார்.

ஒரு முறை ‘பிருகு’ மகரிஷி தீவிர தவத்தில் ஆழ்ந்தார். தனது தவத்துக்குத் தடை ஏற்படுத்துவது  எவராக இருந்தாலும், அவர் தமது சிறப்பை இழப்பார் என்று ஆணையிட்டிருந்தார்.

அவரது தவ வலிமையால் அகில உலகமும் தகித்தது. தேவர் கள் அனைவரும் சிவனாரை வேண்ட, அவர் பிருகு முனிவரின் தலையில் கை வைத்து தகிப்பை கட்டுப்படுத்தினார். இதனால் தவம் கலைந்தது. முனிவரது ஆணைப்படி சிவனார் பிரணவ மந்திரத்தை மறந்தார்.

இதன் பிறகு, பிரம்மனுடன் முருகப்பெருமான் நிகழ்த்திய அருளாடலின்போது, அவரிடமே பிரணவப் பொருள் உபதேசம் பெற்றார் ஈசன். இந்தப் பெருமை சுவாமிமலையையே சாரும்.

தந்தைக்கு வலக் காதில் பிரணவப் பொருள் உபதேசித்த வேலவன், தன் தாயாகிய பராசக்தி யும் அதன் அர்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காக சிவனா ரின் இடக் காதிலும் உபதேசம் செய்தார் என்கிறது புராணம்

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி, கட்டு மலை (செயற்கையான குன்று) கோயி லைக் கொண்டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும். 

கட்டுமலையில் ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடு கிறது. இந்தப் படிகள் ஒவ்வொன் றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.  தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.

கருவறையில், அகரம், உகரம், மகரம், நாதம், பிந்து என ஐவகையான ஓங்காரத்தின் உருவினனாக, மெய்ஞான குருவாக அருள்பாலிக்கிறார் ஸ்வாமிநாத ஸ்வாமி. அவரை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவ லிங்கத்தின் ஆவுடையாரா கவும் ஸ்வாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது, ‘ஈசனே முருகன்; முருகனே ஈசன்!’ என்ற தத்து வத்தை உணர்த்துவதாக உள்ளது.

ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத்தினராகவும், சந்தன அபிஷேகத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் ஸ்வாமிநாதர்.

மகா மண்டபத்தின் வடக்குச் சுவர் பக்கம் தெற்கு நோக்கி காட்சி தருகிறார், பாகுலேய சுப்ர மணியர். நடராஜப்பெருமானைப் போன்று காட்சி தரும் இவரை `சபாபதி' என்றும் அழைப்பர். தெய்வானையுடன் திகழும் இவர், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின்போது மட்டுமே வீதியுலா வருகிறார்.

குன்றக்குடி

கா
ரைக்குடி - திருப்பத்தூர் சாலையில், காரைக்குடியிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது குன்றக்குடி.

ஊரின் நடுவே உயர்ந்து நிற்கும் மலையின் மேல், தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது முருகனின் திருக்கோயில். இந்தத் திருக்கோ யில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று கீழ்க்கோயில். இங்கு தேனாற்று நாதரும், அழகம்மையும் அருள் புரிகின்றனர். மலைக்கோயிலில் முருகன் அருள்கிறார்.

முருகனின் வாகனமான தேவ மயிலின் சாபம் தீர்த்த இந்தத் தலத்தில், அந்த மயிலே மலை யாகத் திகழ்வதாகப் புராணங்கள் சொல்கின்றன.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

மலையடிவாரம் துவங்கி மலைக்கோயில் வரை,  ஐந்து பிள்ளையார்களை தரிசிக்கலாம். அவர்கள்: சந்நிதி விநாயகர், தோகையடி விநாயகர், கார்த் திகைப் பிள்ளையார், வல்லப கணபதி, சொர்ண கணபதி.

மலைக்கோயில் கருவறையில், ஆறுமுகங்கள் பன்னிரு கரங் களுடன், அன்புடன் இறங்கி வந்து பக்தர்களை அரவணைக்கும் பாவனையில், அழகு மயில்மீது ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் அருள்கிறார் முருகன். அவருக்கு இருபுறமும் தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும், தெய்வானையும் அருள்கின்றனர். முருகனின் மயில் வாகனமும், திருவாசியும், மூலமூர்த்தமும் ஒரே சிலையாக எழிலுடன் வடிக்கப் பெற்றிருக்கிறது.

மருதுபாண்டிய சகோதரர்கள் சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த காலம் அது. ஒருமுறை பெரிய மருதுபாண்டியருக்கு ராஜப் பிளவை நோய் ஏற்பட்டு கடுமையாக வாட்டியது.  முதியவர் ஒருவரது ஆலோசனைப் படி, முருகபக்தரான காடன் செட்டியாரை அழைத்து வந்து,  குன்றக்குடி முருகனை வேண்டி திருநீறு வழங்கச் செய்தனர்.

அன்று இரவில் பெரிய மருது  ஒரு கனவு கண்டார். பால சந்நியாசி ஒருவர் மயில் தோகை யுடன் வந்து, பெரிய மருதுவின் பிளவையைப் பிதுக்கி, முழுக்க அகற்றி வாழை இலையில் வைத்து விட்டு, காயத்தின் மீது திருநீறு வைத்தார். திடுக்கிட்டு விழித்துக் கொண்ட பெரிய மருது, அச்செயல்கள் யாவும் அப்படியே நனவாக நடந்திருப்பதையும், வலியின் கொடுமை முழுக்க அகன்றுவிட்டதையும் உணர்ந்து மகிழ்ந்தார்.

சில நாள்களில் பூரணநலம் பெற்றுவிட்ட மருது பாண்டியர், காடன் செட்டியாரை அழைத்துக் கொண்டு தமது பரிவாரங்களுடன் குன்றக்குடிக்கு வந்து சண்முக நாதரை வணங்கி வழிபட்டதுடன், பல திருப்பணிகளையும் செய்வித்தார்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

சிதம்பரம் அருகேயுள்ள கீழ்ப் பரப்பை என்னும் ஊரைச் சேர்ந்த செந்தில்வேலு எனும் சிறுவனுக்கு ஏழு வயதாகியும் பேச்சு வரவில்லை. சிறுவனின் தாத்தா சொக்கலிங்க முதலியார் அவனை  அழைத்துக்கொண்டு 11 முறை தொடர்ந்து குன்றக்குடி வந்து சண்முகநாதப் பெருமானை வழிபட்டுத் திரும்பினார்.

12-வது முறை ரோகிணி நட்சத்திரத்தன்று குன்றக்குடிக்கு வந்து சண்முகநாதரை வழிபட்ட வர், பேரனைப் பார்த்து “ஓம் முருகா!” என்று சொல்லுமாறு கூறினார்.

அதேவேளையில் சந்நிதியில் திரை விலகி, சண்முகநாதரின் அருள்முகம், தீப ஆராதனையில் பிரகாசித்தது. அவ்வளவில் சிறுவன் செந்தில்வேலின் வாயி லிருந்து “ஓம் முருகா” என்னும் மந்திர ஒலி மெதுவாக, இனிமை யாக ஒலித்தது. அதிலிருந்து அவன் நன்கு பேசத் தொடங்கி விட்டான்!

அன்று மட்டுமல்ல, இன்றைக் கும் தொடர்கிறது குன்றக்குடி முருகனின் அருளற்புதங்கள்!

வள்ளியூர்

ண்பொருநையாம் தாமிர பரணி தவழ்ந்தோடும் திருநெல் வேலி மாவட்டத்தில், நெல்லை - நாகர்கோவில் சாலையில் அமைந்துள்ளது வள்ளியூர்.

இவ்வூரில், குடைவரைக் கோயிலில் அருளும் கந்தக் கடவுளை இந்திரன், அகத்தியர், இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

அகத்தியருக்கு பிரம்ம ஞான உபதேசம் அருளிய காரணத்தால் இந்தத் தலத்தின் முருகன், ‘ஞான ஸ்கந்தன்’ என்றும் அழைக்கப் படுகிறார். அகத்தியர், முருகனின்  தரிசனத்தையும் அருளையும் பெற்றது, பங்குனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பது தலபுராணம் கூறும் செய்தி.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

புராணக் காலத்தில் அகத்தி யரின் சாபத்தால் ‘கிரௌஞ்ச அசுரன்’ மலையின் உருவத்தில் இருந்தான். முருகப் பெருமானின் வேல் பட்டதும், அந்த மலை மூன்று துண்டுகளாகச் சிதறியது. அதில் தலைப் பகுதி விழுந்த இடம்தான், ‘வள்ளியூர் குன்று’ என்கிறது தலபுராணம்.

குன்றின் மீது முருகப் பெருமா னுடைய வேலின் ஒளிபட்டு பூரணம் பெற்றதால், இந்த மலைக்கு ‘பூரணகிரி’ என்ற பெயரும் உண்டு.

திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் மகேந்திரகிரி மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குன்றில் குடியேறியதால் இவ்வூர் `வள்ளியூர்’ என்றானது. 

வள்ளியூர் திருக்கோயிலில், ஒளி பொருந்திய திருமுகத்துடன், நான்கு திருக்கரங்களில் மேலிரு கரங்களில் வஜ்ஜிரம், சக்தி ஆயுதங்களையும், கீழிரு கரங்களில் வலக் கரத்தில் மலரும் ஏந்தி, இடக் கரத்தை தொடையின் மீது வைத்த கோலத்தில் பேரழகோடு காட்சி தருகிறார் முருகப் பெருமான்.

வள்ளிதேவியும், தெய்வானை அம்மையும் இந்தக் கோயிலில் அமிர்தவல்லி, சுந்தரவல்லியாகவே காட்சி தருவது, சிறப்பம்சம்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

வள்ளிபிராட்டி கேட்டுக் கொண்டபடி முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை ஊன்றி உருவாக்கிய தீர்த்தக் குளம் சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடு வதுடன், தங்கள் வீடுகளுக்கும் புனித நீர் எடுத்துச் செல்கின்றனர்.

சாபத்தால் நாயாகப் பிறந்த கனகவல்லி என்ற பெண்ணும், வேடன் ஒருவனும் இந்த சரவணப் பொய்கையில் நீராடி முக்தி அடைந்ததாக தலவரலாறு.

மற்ற தலங்களில் தெய்வானை திருமணம் நடைபெறும். ஆனால், இந்தத் தலத்தில் வள்ளித் திரு மணம் நடைபெறுகிறது. வள்ளியின் பெயரால் அமைந்த ஊர் என்பதால், வள்ளிக்குத்தான் இந்தத் தலத்தில் மிகுந்த முக்கியத் துவம் போலும்!
கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியன்று இரவில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

செவ்வாய், கார்த்திகை, வளர் பிறை சஷ்டி ஆகிய நாள்களில் இங்கு வந்து வழிபடுவது விசேஷம்.

இந்த தினங்களில் மூலவர் சுப்ரமணியருக்கும் தனிச் சந்நிதி யில் அருளும் வள்ளி பிராட்டிக்கும் பாலபிஷேகம் செய்து, சுவாமிக்கு வெண்பட்டும் பிச்சிப் பூ மாலையும், வள்ளி பிராட்டிக்கு மஞ்சள் பட்டும் சிவப்பு அரளி அல்லது ரோஜாப்பூ மாலையும் அணிவித்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட் டால், செவ்வாய் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

அதேபோல், மூலவர் சுப்ர மணியருக்கு ருத்ராபிஷேகமும் சந்தனக் காப்பு அலங்காரமும் செய்து வழிபட்டால், குஷ்டம் மற்றும் தோல் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தோரண மலை

கு
ற்றாலத்துக்கு அருகிலுள்ள தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இதன் உச்சியில் மட்டுமல்ல, அடிவாரத்திலும் முருகன் கோயில் கொண்டிருக்கிறான்.

வெண்மேகங்கள் தழுவ விண்ணைத் தொட்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலுக்குத் தோரணமாய் அமைந் திருக்கிறது, தோரண மலை. யானையைப் போன்று காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரணமலை எனப் பெயர் பெற்றுவிட்ட இந்த மலையில், மாமுனிவர் அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்திருக் கிறார்.

மலையேற முடியாத அன்பர் களுக்கு அருள்பாலிக்கும் விதமாக, மலைப்படிகள் துவங்கும் இடத் திலேயே பாலமுருகன் எழுந்தருளி யிருக்கிறார்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

அடிவாரத்திலிருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடைய லாம். வழியெங்கும் அபூர்வ மூலிகைகள்; அவற்றின் நறுமணத் தைச் சுமந்து வரும் காற்றை சுவாசித்தாலே போதும், நமது பிணிகள் யாவும் நீங்கிவிடும்.

திருக்கயிலையில் நிகழ்ந்த சிவ பார்வதி திருக்கல்யாணத்தின் போது, தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் கூடிவிடவே, பூமியின் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தபோது, பூமியைச் சமன்படுத்த வேண்டி, சிவனாரின் கட்டளைப்படி தென்பாரதம் வந்த அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும்வழியில், இந்த மலையின் அழகில் லயித்து, சில காலம் இங்கே தங்கினாராம்.

மாபெரும் சித்த மருத்துவரான அகத்தியரின் மருத்துவ அறிவு பல நூல்களாக உருவெடுத்ததும் இங்குதானாம். அகத்தியர் இங்கு தங்கியிருந்ததோடு, அபூர்வ மூலிகைகள் நிறைந்த இந்தப் பகுதியில் பெரிய அளவில் மருத் துவச்சாலை நிறுவி, பலருக்கும் வைத்தியம் செய்த சான்றுகளும் உண்டு என்கிறார்கள். அவருடைய சீடரான தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரணமலையில் தான் என்று நூல்குறிப்புகள் பலவும் கூறுகின்றன.  இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை இது என்கிறார்கள்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

ராமபிரான் இங்கு வந்து அகத் தியரை வணங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதி ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பரவியதும் இந்தத் தோரணமலை அழகனைத்தான்.

குகைக்கோயிலில் தினமும் உச்சிக் கால வேளை பூஜை நடை பெறுகிறது. ஆண்டுதோறும் தைப்பூசமும் வைகாசி விசாகமும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. மேலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் இங்கே மிக விசேஷம்!

தோரணமலை முருகனை வணங்கினால், தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும்; புத்திர பாக்கியம், வேலை, மன நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது பல பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்துள்ள பிரத்யட்சமான உண்மை.

வேல்மாறல் பாராயணம்

முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். `வேல்' என்ற சொல் ‘வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்’ என்று பெயர். இத்தகையை வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம்.

அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராய ணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

அதாவது, அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மை யானவை. அவை:

1. சீர்பாத வகுப்பு - மணி வகுப்பு, 2. தேவேந்திர சங்க வகுப்பு -  மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு.

இவற்றுள் உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்லது ‘வேல் வகுப்பு’ என்று வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார்.

அப்படியான மகத்துவம் வாய்ந்த வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக (16x4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது.

பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப் பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம்.

அற்புதமான இந்த வழிபாடு, சக்தி யாத்திரையில் ஞானமலை கோயிலில் நடைபெறவுள்ளது.

திருப்புகழ் மகாமந்திர பூஜை

வி
நாயகர், முருகப்பெருமான், சிவபெருமான், அம்பிகை, மகா விஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் கீர்த்தியும் நாமாவளியும் ஒருசேர அமைந்துள்ள ஒப்பற்ற மகாமந்திர நூல் திருப்புகழ்.

அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!

அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழின் பாடல்கள் திருமண வரம், குழந்தைப்பேறு, வழக்கில் வெற்றி, சொந்த வீடு, பதவி உயர்வு, மாணவர்களுக்கு உயர்கல்வி, முதியவர்களுக்கு உடல்நலம் என சகல வரங்களையும் அளிக்க வல்லது. திருமுருகனே அடியெடுத்துக் கொடுக்க அருணகிரியார் அருளிய மந்திரத் திருபுகழை ஓதி நிகழ்த்தும் வழிபாடுதான் திருப்புகழ் மகாமந்திர பூஜை. நினைத்ததை நிறைவேற்றும் இந்த வழிபாடு சக்தி யாத்திரையின் ஓர் அங்கமாக, தோரண மலை திருத்தலத்தில் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.