தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 5

ரங்க ராஜ்ஜியம் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 5

இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ம.செ

‘சரங்களைத் துரந்து வில்வளைத்து மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து தீர்த்த செல்வர்மன்னு பொன்னிடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி விந்தலைக்கும் வார்புனல்
அரங்கமென்பர் நான்முகத்தயன் பணிந்த கோயிலே!”

- திருச்சந்த விருத்தத்தில்’-திருமழிசையாழ்வார்.

பூலோக மாந்தர்களுக்கு இக்ஷ்வாகு மூலமாக அரங்கநாதப் பெருமான் கிடைக்கப் போவதாக வசிஷ்டர் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அதற்கானச் சூழல் விண்ணிலும் எதிரொலித்தது.
மெல்லிய கார்மேகங்கள் வானில் பந்தல் விரித்தார் போல் கூடி நின்ற நிலையில், பிரணவாகார விமானத்தைக் கருடன் தன் முதுகின் மேல் வைத்து சுமந்த நிலையில் பறந்து வந்தார். பிரம்மனும் அன்ன வாகனம் மேல் அமர்ந்த நிலையில், அந்தச் சரயு நதிக்கரையை நோக்கி வந்தார்!

தவம் புரிந்தபடி இருந்த இக்ஷ்வாகுவுக்கு நேர் எதிரில் மணி மண்டபம் ஒன்று க்ஷணத்தில் தோன்றிய நிலையில், அதன் மேல் மலர்களால் ஆன மேடை ஒன்றும் திகழ, பிரணவாகார விமானத்தை ஸ்ரீகருடன் அதன் மேல் இருத்தினார்! பிரம்மாவும் அன்ன வாகனம் நீங்கி இக்ஷ்வாகுவின் எதிரில் தோன்றி, அவனைக் கண்மலரப் பணித்தார். கண் மலர்ந்தவன் முதலில் கண்டது பிரணவாகார விமானத்தையே. பிறகே, பிரம்மதேவனைக் கண்டான். கண்கள் பனிக்க பிரம்மதேவரின் காலில் விழுந்து வணங்கினான்!

அந்த வேளையில் வசிஷ்டர் உள்ளிட்ட ரிஷிகள் மட்டுமின்றி விவஸ்வானும் வந்துவிட, அயோத்தி அந்த நொடியே பூலோக வைகுண்டமாகிவிட்டது.

“இக்ஷ்வாகு! உன் தவத்தால் நான் உள்ளம் பூரித்தேன். சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கிக்கொண்டு, இறுதியில் இந்த அயோத்தியையும் பூலோக வைகுண்ட மாக்கிவிட்டாய். உன் தவம் என்னை மட்டுமல்ல, எம்பெருமானையும் நெகிழ்த்தி விட்டது. இந்தப் பிரணவாகார விமானம் இன்று இங்கு குடிகொள்ள வந்திருப்பது, உன் தவத்தாலான என் விருப்பத்தால் மட்டுமல்ல, எம்பெருமானின் அளவற்ற கருணையால் என்பதே மேலான உண்மை.

ரங்க ராஜ்ஜியம் - 5

எம்பெருமானின் அந்தக் கருணை, இனி பூவுலகில் எம்பெருமானை எண்ணுபவர், எண்ணாதவர் என்று சகலருக்கும் கிடைக்கும். பாயும் புனலுக்குத் தாகம் தீர்ப்பதே கணக்கு. மானுடர், விலங்கினம் எனும் பாகுபாடுகள் எப்படி நீருக்குக் கிடையாதோ, அப்படியே எம்பெருமான் பேதமின்றி பூவுலகத்தவர்க்குக் கருணையைப் பொழி வார். இது சத்தியம். நீ வாழ்க! நின் கொற்றமும் மக்களும் மற்றுமுள சகலரும் வாழ்க... வாழ்க!” என்று வாழ்த்திய பிரம்மன், அந்தப் பிரணவாகார விமானத்தையும் வணங்கியவராக விடைபெற்றார்!

ஏழாவது மனுவான விவஸ்வான் வேகமாக வந்து தன் புதல்வனை ஆரத்தழுவி மகிழ்ந்தான். அப்படியே, “மகனே.. உன்னால் ஒரு பெரும் ராஜபரம்பரை தோன்றப்போகிறது. சூர்ய வம்சம் என்று அது பெயர் பெற்றிடும். எம்பெருமானேகூட இந்த வம்சத்தில் பிறப்பெடுத்து அவதாரம் நிகழ்த்தலாம். ஒரு காலக்கணக்கனாய் நான் கூறுவதை, எல்லாரும் காலத்தால் உணர்வர். அதே தருணம் உன் பெயரும் உன்னால் என் பெயரும் மண்ணில் நிலைபெற்றுவிடும். உன் பக்தியால் நீ இதை எல்லாம் சாதித்துவிட்டாய். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று ஆனந்தக் கண்ணீர் சிந்தினான்.

இக்ஷ்வாகுவோ தனக்குக் கிடைத்த சகல நற்பெயரையும் வசிஷ்டருக்கே காணிக்கையாக்கி, அந்தப் பிரணவாகார விமானத்து அரங்கநாதப் பெருமானை ஆறு காலமும் வந்தித்துத் தொழுதான். காலச்சக்கரமும் சுழன்றதில் அவனைத் தொடர்ந்து அவன் பிள்ளைகள் வழிபடத் தொடங்கினர். அதாவது ஓர் அரசனைத் தொட்டு அவனது வம்சத்தவர்கள் மாத்திரமே தொழுதிடும் பெருமானாக அரங்கநாதனும் திகழ்ந்தார்.

இதற்காகவா விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்தது இந்தப் பிரணாவாகார விமானம்? இது உயிர்கள் அவ்வளவுக்கும் பொதுவானதல்லவா? பொதுவான ஒன்று அனைவருக்கும் பொதுவாக வேண்டாமா? அந்த நாளும் வந்தது... தர்மவர்மா எனும் சோழ சாம்ராஜ்ஜியாதிபதி வடிவில்!

அயோத்தியில் இக்ஷ்வாகு வம்சத்தின் தொடர்ச்சியில் தச ரதனின் காலம்! ஒன்றுக்கு மூன்று மனைவியர் இருந்தும் தசரதனுக்குப் புத்திர ப்ராப்தி இல்லாத காலமும்கூட.  இதனால், தசரதன் மனமுடைந்துபோயிருந்தான். எப்போதும் எந்த ஒன்றும் கிடைத்தபடி இருக்கும்போது, அதன் மதிப்பு பெரிதாகத் தெரியாது. கிடைக்காமல் போகும்போது, அதைத் தவிர வேறு எதுவுமே பெரிதாகத் தோன்றாது.

தசரதனும் ‘பிள்ளை... பிள்ளை...’ என்று அதே நினைப்பில்தான் இருந்தான். தனக்குப் பின் வம்சாவளி அற்றுப்போய் அயோத்தியே அழிந்து, ரவிகுலமே பூ உலகில் ஒரு முடிவைக் கண்டுவிடுமோ என்று அவன் மனது பேதலித்தது. அதன் எதிரொலியாக ராஜ குருவும், வழிகாட்டியுமான வசிஷ்டரிடம் புலம்பத் தொடங்கி விட்டான் தசரதன்.

“என் இஷ்ட குருவே, இந்த வம்சத்தவர்களை மூப்பை வென்று வழிநடத்தி வரும் பிரம்மரிஷியே... எனக்கு எதனால் பிள்ளைப் பேறு இல்லை? என் வம்சம் என்னோடு முடிந்துபோய்விடுமா?” என்று கதறினான்.
“தசரதா! முதலில் நீ உன் பத்தினியர்களோடு, சரயு நதி தீரத்தில், தமஸா எனும் பாகத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரணவாகாரப் பெருமாளை வணங்கிப் பிரார்த்தனை செய்து விட்டு வா. பிறகு இதுகுறித்துப் பேசுவோம்” என்று  தசரதனையும் அவன் பத்தினியர் மூவரையும் அனுப்பிவைத்தார் வசிஷ்டர்.தசரதனும் தம் பத்தினியரோடு புறப்பட்டான்.

சரயு நதியில் புதுப்புனலில் அட்டகாசம். மும்மாரியிலும் குறையே இல்லை. திரும்பின பக்கமெல்லாம் பசுமையான காட்சிகள்.

தசரதன், நான்கு புரவிகள் பூட்டிய ரதத்தில் அயோத்தி நகரத்து வீதிகளில் விரைந்தபோது, சாலையில் போவோர் வருவோர் எல்லாம் ஒதுங்கி வழிவிட்டு நின்றது மாத்திரமல்ல, “பேரரசர் வாழ்க... ரவிகுல திலகர் வாழ்க...” என்று தாங்களாகவே வாழ்த்து முகமன்களைப் பாடினர்.

ரங்க ராஜ்ஜியம் - 5

அந்தக் காட்சிகள், தசரதன் தனக்குள் ஒரு தராசு அமைத்து அதில் தன் ஆட்சியைத் தனக்குத் தானே எடைபோட்டுக்கொள்ள உதவியாக இருந்தன. ‘எல்லாம் நன்றாகவே உள்ளது. எல்லோரும் ஒன்றாக உள்ளனர். என் ஆட்சியில் ஒரு குறையுமில்லை. அப்படியிருக்க, எதனால் எனக்குப் புத்திர உற்பத்தி இல்லை?’

இதே கேள்வியோடு நதி தீரத்து ஆலயத்தில் பிரணவா காரப் பெருமாள் முன் நின்றான். கண்களில் கண்ணீரின் பெருக்கு. சந்நிதி வைதீகர் அதைக் கண்டார். எம்பெருமா னின் பிரசாதத்தைத் தரும்போது “மன்னவா... தங்களுக்குக் கூடவா மன வருத்தம்?” என்று கேள்வி எழுப்பினார்.

“ஆம் வைதீகரே! பிறப்பால் மட்டுமே நான் ஆண்மகன் என்றாகிவிடுவேனோ என அச்சப்படுகிறேன். வம்சம் தழைத்தால் அல்லவா என் குலம் விருத்தி ஆகும். அது என்னோடு முடிந்துபோய்விட்டால் நானோர் முடவன் என்றாகிவிடாதா?” என்று தசரதன் அந்த வைதீகரிடம் திருப்பிக் கேட்டான்.

“மன்னவரே! இப்பெருமாளின் சந்நிதி யிலா இப்படி ஒரு வருத்தம்? வைகுண்டத் திலிருந்து சத்யலோகத்துக்கும், பின் அங்கிருந்து இந்தப் பூலோகத்துக்கும், குறிப்பாக இந்தச் சரயு நதி தீரத்துக்கும் இப்பெருமாள் வந்திருக்கிறாரே, அவர் தன் பொருட்டாவது இம்மட்டில் அருளாமல் போவாரா?

அவ்வாறு அருளாமல் போனால் இந்தச் சந்நிதியுமல்லவா இருளடையும்? தானும் ஒளிர்ந்து, தான் சார்ந்தவற்றையும் ஒளிர வைக்கவென்றே வந்துள்ள எம்பெருமான் இருக்க, தாங்கள் கவலை கொள்ளலாமா?” என்று திருப்பிக் கேட்டார் வைதீகர்.

“நீர் சொல்வதும் சரிதான்! ஆனால் காலம் கடந்துகொண்டிருக்கிறதே?”

“வித்துக்கள் விளைவதற்கு ஒரு காலம் இருப்பதுபோல், தங்கள்வரையிலும்கூட காலமிருக்கலாம். யார் கண்டது, தங்கள் முன்னோர்களில் ஒருவர் இப்பெருமாளை சிலை வடிவில் பெற்றார். தாங்கள், பிள்ளை வடிவில் பெறலாமல்லவா?”

“தங்கள் வாக்கு பலிக்கட்டும், பொன் வாக்காய் மாறட்டும். ஆயிரம் பொற்காசு களால் தங்களுக்கு அபிஷேகமே செய் கிறேன்” என்று தசரதன் சொன்ன நொடியில், திருச்சந்நிதிப் புலத்துக்குள் இருந்து ஒரு கௌளி அதை ஆமோதிப்பது போல் குரல் கொடுத்தது.

தசரதனும் அவன் பத்தினியர் மூவருமே உச்சிக்குளிர்ந்து போயினர். அதே மகிழ் வோடு திரும்பி, வசிஷ்டரிடம் நடந்ததைக் கூறவும், அவர் முகத்திலும் மலர்ந்த புன்னகை!

“தசரதா! உன் மனவருத்தம் நீங்கும் நாள் வந்துவிட்டது. அதற்கான அறிகுறிகளை அறியவே உன்னை ஆலயம் சென்றுவரப் பணித்தேன். நீயும் அந்த அறிகுறிகளை அறிவித்துவிட்டாய். அடுத்து நீ செய்ய வேண்டியது யக்ஞம். புத்திரகாமோஷ்டி யக்ஞம். இதைச் செய்தமாத்திரத்தில் காலத் தடை உடைந்து பிள்ளைப்பேறும் ஸித்திக் கத் தொடங்கிவிடும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றவர் தொடர்ந்து,  “முன்னதாக சகலதோஷ நிவர்த்தியாக அஸ்வமேத யாகத்தையும் நிகழ்த்திவிட வேண்டும். அதன் பொருட்டு பூ உலகில் உள்ள சகல ராஜ்ஜியாதிபதிகளுக்கும் ஓலை போக்குவோம். அனைவரும் இந்த அயோத்திக்கு வந்து யாகத்தில் பங்குகொள்ளட்டும். இதனால் யாக திரவியங்கள் ஒருபுறம் சேரும். மறுபுறம் இந்தப் பூலோகமே அதன் நிமித்தம் புண்ணியச் செயலுக்கு உள்ளாகும்” என்றார்.

வசிஷ்டரின் விருப்பம் செயல்படத் தொடங் கியது. பூ உலகின் சகல பாகங்களுக்கும் அயோத்தி யின் தூதர்கள் செய்தி கொண்டு சென்றனர். அதில் ஒருவன், சோழ மண்டலத்தை ஆண்டு வந்த தர்மவர்மா முன் வந்து நின்றான். தசரதனின் வேள்விச் செய்தியை அறிவித்தான். அதைக்கேட்ட தர்மவர்மாவுக்கும் வடதேச யாத்திரை குறித்த எண்ணம் தோன்றியது.

குறிப்பாக, ‘வைகுண்டத்தில் இருந்து பூ உலகில் கோயில் கொண்டிருக்கும் பிரணவாகாரப் பெருமாள் முன்னிலையில் இந்த வேள்வி நிகழும். அரசர் பெருமக்கள் எம்பெருமானை தரிசனம் செய்திட இது ஓர் அரிய வாய்ப்பு’ என்கிற தகவல், தர்மவர்மாவின் மனதில் தானும் இந்த வேள்வியில் பங்கேற்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

உடனேயே அந்தத் தூதனுக்கு பதிலளித்தான்.

“யாம் இந்த வேள்வியில் பங்குகொள்வது உறுதி. எம்மோடு நூறு குடம் காவிரி ஜலம் முதல், எம்மண்ணின் விசேஷச் சிறப்பான வாழை, வெற்றிலைகளுடன் சேர மலை நாட்டின் தேனை யும் சுமந்துகொண்டு வருவோம்” என்று அவன் கூறவும், தூதனும் மகிழ்வுடன் திரும்பினான்.

அதன்பின் ஒரு மண்டல கால அளவிலான பயணத்தில் தர்மவர்மா அயோத்தியை அடைந்த போது, நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தர்மவர்மாவும் அயோத்தியின் அரசவைப் பிரதானிகளால் வரவேற்கப்பட்டான். பின் சரயு நதியோரமாக அரசர்களுக்கென உருவாக்கப்பட்ட குடிலில் தங்கினான். அப்போதுதான் ‘தமஸா’ எனும் இடத்தில் பிரணவாகாரப் பெருமாள் குடிகொண்ட ஆலயத்தையும் அதன் நெடிதுயர்ந்த கோபுரத்தையும் கண்டான். அதைக்கண்ட மாத்திரத்தில், தொடக்கத்தில் இக்ஷ்வாகுவுக்கு ஏற்பட்ட அதே தாக்கம் தர்மவர்மாவுக்கும் ஏற்பட்டது. இக்ஷ்வாகுபோல் தவம் செய்தாவது இந்த ஆலயத்தை சோழ தேசத்துக்குக் கொண்டு சென்று விடத் துணிந்தது, அவன் மனது!

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 5

புகையிலை விடு தூது...

கிராமிய தெய்வங்களுக்குப்   படையலிடும்போது, புகையிலை சுருட்டு நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உண்டு.

விராலிமலை முருகனுக்குச் சுருட்டு சமர்ப்பணம் உண்டு என்பார்கள்.

புலவர் ஒருவர், புகையிலையை பழநியாண்டவரிடம் தூது போகும்படிப் பாடியிருக்கிறார். அதற்கு, ‘புகையிலை விடு தூது’ என்று பெயர்.

அதை, தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் பதிப்பித்திருக்கிறார். புகையிலையின் பெருமைகளை அந்தச் சிறு நூல் அழகாகச் சொல்கிறது.

(கி.வா.ஜ. ஒரு கட்டுரையில்)