தொடர்கள்
Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்

திருவருள் செல்வர்கள்! - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் செல்வர்கள்! - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

த்து வயதிருக்கும் அந்தச் சிறுவனுக்கு. எப்போது பார்த்தாலும் ஓய்வு ஒழிச்சலின்றி, தேவாரம்,  திருவாசகம், திருப்புகழ், வள்ளலார் பாடல்கள் என்றுதான் படித்துக்கொண்டு இருப் பான். அருகிலுள்ள கபாலீசர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால், கண்களில் நீர்வழிந்து, சிறுவனின் திறந்த மார்பை நனைக்கும்; வாய் முருக நாமத்தை முழங்கிக்கொண்டேயிருக்கும்.

ஒருநாள் அந்தச் சிறுவனைப் பார்த்த பெரியவர் ஒருவர், “இவன் துறவியாகிவிடுவான்”என்று அவன் தந்தையிடம் சொல்லிவிட்டுப்போய் விட்டார். எப்படியிருக்கும் தந்தைக்கு?

`இனிமே இந்தப் பயலைப் படிப்புக்கு அனுப்பக் கூடாது. இவன் சாமியாராப் போயிட்டா, நமக்கு உதவமாட்டான். இவனை வேலைக்கு அனுப்பிட வேண்டியதுதான்' என்று எண்ணிய தந்தை, தச்சு வேலையில் சேர்த்துவிட்டார் பையனை.

பையன் வாயே திறக்கவில்லை. தச்சு வேலைக் குப் போகத் தொடங்கினான். போகும்போதும் வரும்போதும் தேவாரத்தைப் படித்தவாறே செல் வான். ஒருநாள், அவன் அவ்வாறு தேவாரத்தைப் படித்தவாறே வேலைக்குச் செல்கையில், வழியில் மணலைக் கொட்டிவைத்திருந்தார்கள். அதைக் கவனிக்காத பையன், மணலில் நடந்தான்; காலில் ஏதோ தட்டுப்பட்டது.

குனிந்து பார்த்தால், மணலுக்குள் மறைந்திருந்த இரண்டு சோடா பாட்டில்கள் வெளிப்பட்டன. “மணலுக்குள் இந்தச் சோடா பாட்டில்கள் எப்படி வந்தன?” என்று எண்ணியபடியே, சிறுவன் அவற்றைக் குனிந்து எடுத்தான்.

திருவருள் செல்வர்கள்! - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்

அதேநேரத்தில்... ‘பாவம் ஓரிடம்; பழி ஓரிடம்’ என்பதற்கு இணங்க, “அதோ நிற்கிறான் பார்! பிடி... பிடி!'' என்று கூச்சல் கேட்டது. சில விநாடி களில் கூட்டம் கூடிவிட்டது. வழக்கப்படி வாய்க் கூச்சல் போடுபவர்கள் , “இவன்தான்...  இவன்தான்  திருடினது. விடாதீங்க! நல்லா நாலு சாத்து சாத்தி, காவல் நிலையத்துல கொண்டுபோய் ஒப்படைக் கலாம்” என்று வீரம் பேசினார்கள்.

வேறு சிலர், ``திருட்டுப்பய! எப்பிடியிருக்கான் பாரு! இந்தச் சின்ன வயசுலேயே திருட்டுப் புத்தி...”என்று தங்கள் பங்குக்கு விரிவுரை செய்தார் கள். பையனுக்கு ஒன்றும் புரியவில்லை. கும்பலோ, அவனை அடிக்கக் கைகளை ஓங்கியது.

அந்தப் பையனோ “முருகா... முருகா! ”என்றபடி, அசையாமல் நின்றான். அந்த நேரம், ``நில்லுங்கள்” என்று கம்பீரமாக கர்ஜித்தபடியே காவலர் ஒருவர் ஓடி வந்தார்.

“என்னய்யா இது? இந்தப் பையனைப் பார்த் தால் திருடன் மாதிரியா தெரியுது? பார்த்தாலே நல்ல பையனாத் தெரியல? இவன எனக்கு நல்லாவே தெரியும். நல்ல ஒழுக்கமும் பக்தியும் உடையவன். கொஞ்சங்கூட விசாரிக்காம, கைய ஓங்கிட்டீங்களே!” என்றவர், சிறுவனின் பக்கம் திரும்பினார்.

“தம்பி! இவங்க உன்னை திருடன்னு தப்பா நெனச்சுட்டாங்க. வருத்தப்படாதே!”என்று சொல்லி வழி யனுப்பிவைத்தார்.  அதே நேரத்தில், ``இதோ! பிடிச்சிட்டோம் திருட்டுப் பயலை. இவன்தான் திருடன்”என்றபடியே  உண்மையான களவாணியைச் சிலர் பிடித்துவந்தார்கள் சிலர். அதைக் கண்டு, சிறுவனை அடிக்கக் கையை ஓங்கிய வர்கள் எல்லாம் தலைகுனிந்தார்கள். சிறுவனோ, “முருகா, இதுவும் உன் திருவிளையாடலா?” என்று மென்மையாகக் கூறிவிட்டு, தேவாரத்தைப் படித்தபடி  அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

அந்தச் சிறுவன்தான், ‘எந்தத் தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே’ என்ற தாயுமானவரின் வாக்குப்படி, சிறுவயதிலேயே நடந்து காட்டிய முக்தர், குகஸ்ரீ ரசபதி அடிகளார்.

பற்பல ஸ்தல புராணங்களை வசன நடையில் அற்புதமாக எழுதியவர். வள்ளலார் பாடல்களுக்கு இவர் எழுதிய உரை அற்புதமானது. திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளும், சிறந்த உபந்நியாசகரான சேங்காலிபுரம் அனந்தராம தீட்சி தரும், குகஸ்ரீ ரசபதி அடிகள் எழுதிய கோளறு திருப்பதிகம் - விநாயகர் அகவல் ஆகியவற்றின் உரைகளை, செல்லும் இடமெல்லாம் உள்ளம் திறந்து பாராட்டுவார்கள். உரை எழுதுவதிலும் யோகத்திலும் கரை கண்டவர் குகஸ்ரீ ரசபதி அடிகள்.

இப்படிப்பட்ட நல்லவரான குகஸ்ரீக்கு, சிறுவயதிலேயே இவ்வாறான பிரச்னைகள் ஏன்?

தெய்வங்களே அவதாரம் எடுத்துவந்தபோதும் சரி... அவதார புருஷர்களான மகான்களும் சரி... அவர்கள் எல்லாம், ஏதோ கோடிகளைக் குவித்துப் பன்னீரில் குளித்து, பால் பாயசம் அருந்தியே வாழ்க்கையை நடத்தினார்கள் என்று எண்ணக்கூடாது.

உதாரணமாக ஸ்ரீராமர், தன் குழந்தைகளை அள்ளி அரவணைத்துக் கொஞ்சியதாக, கம்ப - வால்மீகி ராமாயணங் களில் இல்லை. ராமாவதாரம்தான் இப்படியென்றால், கிருஷ்ணாவதாரத்தில்... கண்ணனின் பெற்றோரான வசுதேவரும் தேவகியும் கண்ணனைக் கொஞ்சி, குலாவி மகிழ்ந்ததாகப் பாகவதம், நாராயணீயம் முதலான நூல்களில் இல்லை. அந்தப் பாக்கியம், நந்தகோபர்-யசோதை, கோகுல வாசிகள் ஆகியோருக்கு மட்டுமே கிடைத்தது. இவ்வளவு ஏன்? ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான், வைகை நதிக்கு அணை கட்டப் போய், மண் சுமந்து, பிரம்பால் அடிபட்டதும் நாம் அறிந்ததுதானே!

தெய்வங்களே வந்து உழைப்பின் பெருமையையும் தியாகத் தின் பெருமையையும் நடத்திக் காட்டியதை, நம் இதிகாச புராணங்கள் வர்ணித்திருப்பதைப் போல, உலகின் எந்தவொரு நூலிலும் காண முடியாது.
ஆண்டவன் மட்டுமல்ல! அவதார புருஷர்கள் பட்ட பாடுகளும் நமக்குப் பெரும் பாடங்கள் ஆகும்.

குகஸ்ரீ ரசபதி அடிகள் மட்டும் விதிவிலக்கா என்ன? எத்தனை அவலங்கள்?! சுருக்கமாகப் பார்க்கலாம் வாருங்கள்.

திருவருள் செல்வர்கள்! - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்

சென்னை புரசைவாக்கத்தில், சுபகிருது வருடம், ஆவணி மாதம் 12-ம் நாள் (27-8-1902) அன்று, பார்த்தசாரதி நாயக்கருக்கும் சின்னம் மாளுக்கும் மகனாக அவதரித்தவர், குகஸ்ரீ ரசபதி அடிகள். இவரின் பிள்ளைத் திருநாமம் ரத்தின சபாபதி. (நாம் ‘அடிகள்’என்றே பார்க்கலாம்).

அடிகளின் தாயார், வள்ளலாரின்மீது அளவில் லாத அன்பும் பக்தியும் கொண்டவர். அதனால்,  அடிகளையும் பக்திநெறியிலேயே வளர்த்தார். அடிகளுக்குப் பின், அந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன்பின் அடுத்த குழந்தைப்பேறுக்காக, அடிகளின் தாயார் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தபோது, பெண் குழந்தை ஒன்று பிறந்து, மருத்துவமனையிலேயே தாயும் சேயும் இறைவன் திருவடிகளை அடைந்துவிட்டார்கள்.

அடிகளின் தந்தைக்கு வேதவல்லி என்ற முதல் மனைவி ஒருவர் இருந்தார். ஒரு பிள்ளையைப் பெற்றபின், அந்தப் பெண்மணி இறந்தார். அதன் பிறகே பார்த்தசாரதி, சின்னம்மாளை மணந்தார். இப்போது அவரும் போய்விடவே, வருத்தத்தில் ஆழ்ந்தார் பார்த்தசாரதி. இந்த நிலையில் அடுத்த துயரம் தாக்கியது அவரை. புரசைவாக்கத்தில் அவர் நடத்தி வந்த இரும்புப் பட்டறை பெருத்த நஷ்டம் அடைந்தது.

இரும்புப் பட்டறையை விற்ற பார்த்தசாரதி, குழந்தைகளைத் தன்னால் வளர்க்க முடியாது என்று எண்ணி, பெரிய பிள்ளையைத் தன்னுடன் வைத்துக்கொண்டு, அடிகளையும் அவர் தங்கை யையும் கூவம் எனும் சிற்றூரில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். அதன் பின் மூத்தப் பிள்ளையுடன் மயிலாப்பூர் சென்று வாழத் தொடங்கினார்.

மாமன் வீட்டில் வளர்ந்த அடிகள், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கத் தொடங்கினார். அவருடைய இனிமையான அமைதியான குணங் களைக் கண்ட ஆசிரியர், அடிகளிடம் தனி அபிமானமே கொண்டிருந்தார். நாள்தோறும் கல்விகற்கத் தொடங்கும் முன், தெய்வவழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் அடிகளார்.

அமைதியாகப் போய்க் கொண்டிருந்த அடி களின் வாழ்வில் இடிஇடித்து, மின்னல் வீசி,  மழை கொட்டியது.

- திருவருள் பெருகும்

படங்கள்: எஸ்.விவேகானந்தன்

திருவருள் செல்வர்கள்! - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்

பாரதியின் ஸ்தோத்திரம்...

பாரதியார் வீட்டில் மிகுந்த வறுமை. மூன்று மாதமாக அவருக்கு வருமானம் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை.

ஒரு நாள், நானும் என் தந்தையும் பாரதியின் வீட்டுக்குச் சென்றபோது, மாடியில் அவர் பாடும் குரல் கேட்டது. 

மூன்று மாத கால இடைவெளிக்குப் பிறகு தான் பாடிய பாடல் என்று கூறி, `எங்ஙனம் சென்றிருந்தீர்?' என்ற சரஸ்வதி  ஸ்தோத்திரத்தைப் பாடிக் காட்டினார், பாரதி. அப்போது அங்கே வந்த வ.வே.சு. ஐயர், பாட்டைப் பாராட்டினார். ``இன்று சரஸ்வதி ஸ்தோத்திரம் செய்திருக்கிறீர். நாளைக்கு சுதேசமித்திரன் பத்திரிகையிலிருந்து காகிதம் வரும்; பயமில்லை'' என்றார், என் தந்தை (சீனிவாச ஐயங்கார்). அதன்படி,
மறுநாளே பாரதியாருக்குச் சுதேச மித்திரனிலிருந்து, கட்டுரை அனுப்பும்படி கடிதமும் மூன்று மாதங்களாக தடைப்பட்டிருந்த பணமும் வந்து சேர்ந்தன.

- யதுகிரியம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்' நூலிலிருந்து...