Published:Updated:

காங்கிரீட் காடான கோயம்பேட்டுக்குள் மறைந்திருக்கும் 800 ஆண்டு சோழர் பொக்கிஷம்!

காங்கிரீட் காடான கோயம்பேட்டுக்குள் மறைந்திருக்கும் 800 ஆண்டு சோழர் பொக்கிஷம்!
காங்கிரீட் காடான கோயம்பேட்டுக்குள் மறைந்திருக்கும் 800 ஆண்டு சோழர் பொக்கிஷம்!

காங்கிரீட் காடான கோயம்பேட்டுக்குள் மறைந்திருக்கும் 800 ஆண்டு சோழர் பொக்கிஷம்!

`பூவிருந்தவல்லிக்குப் போகும் வழியில் சென்னையிலிருந்து ஆறாவது மைலில் நெடுஞ்சாலையை அடுத்து இடதுபுறம் அமைந்திருப்பதுதான் கோயம்பேடு. அந்த இடத்தில் அமைந்திருக்கிறது குசலவபுரி க்ஷேத்திரம். ஊருக்குள் நுழைந்ததும் ரம்மியமான கிராமியச் சூழ்நிலை நம்மை வரவேற்கிறது. இடப்புறத்தில் தண்ணீர் வற்றி வறண்டு கிடக்கும் திருக்குளம், 800 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட குசலவபுரீச்வரரின் தேவாலயம் பல ஆண்டுகள் கவனிப்பாரற்றுக் கிடந்ததற்குக் கட்டியம் கூறுகிறது. புராதனப் பெருமையையும், சிற்ப எழிலும் குன்றாமல் தோற்றமளிக்கும் அந்தக் கோயிலில் அன்னை பராசக்தி அறம் வளர்க்கும் செல்வியாக அருளாட்சி செலுத்துகிறாள். தெய்விக மணம் கமழும் அந்தச் சுற்றுப்புறத்தின் அமைப்பில் நம் சிந்தையைப் பறி கொடுக்கிறோம்.’ 

1965-ம் ஆண்டு விகடன் தீபாவளி மலரில் கோயம்பேடு பற்றியும், அங்குள்ள குறுங்காலீசுவரர் கோயில் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பத்திதான் மேலே இருப்பது. 

அன்று கோயம்பேடு எனும் கிராமத்தின் அடையாளமாகக் `கோயம்பேட்டு ஆளுடையார்’ கோயில் திகழ்ந்தது. ஆனால், இன்று சென்னைப்பட்டினத்தின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாகக் கோயம்பேடு மாறிவிட்டது. கோயம்பேட்டின் அடையாளமாகக் `கோயம்பேட்டு ஆளுடையார்’ திகழ்ந்த காலம் போய், இன்று புறநகரப் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில், மார்க்கெட், மால், மேம்பாலம் எனக் கோயம்பேட்டின் அடையாளங்கள் மாறிவிட்டன.  

அன்று புனித நதியாகப் பாய்ந்துகொண்டிருந்த கூவம் நதி இன்று நகரக் கழிவுக்கான வடிகாலாக மாறிவிட்டது. வயல்வெளிகள் சூழ்ந்து, தர்ப்பைப் புற்கள் காடு போல அடர்ந்து வளர்ந்திருந்த கோயம்பேட்டில் இன்று வானளாவிய கட்டடங்கள் காங்கிரீட் காடாக வளர்ந்து நிற்கின்றன. இவற்றுக்கு மத்தியில் அமைதியே உருவமாக அருள் புரிந்துகொண்டிருக்கிறார் `கோயம்பேட்டு ஆளுடையார்’.

இங்குள்ள ஈசனுக்குக் `குறுங்காலீசுவரர்' என்று பெயர். அதற்குக் காரணமும் இருக்கிறது. ஆவுடையாருக்கு மேலே லிங்கம் நான்கு அங்குல உயரமே இருப்பதால் சுவாமி `குறுங்காலீசுவரர்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்குக் `குசலவபுரீசுவரர்’ எனும் சிறப்புப் பெயரும் உண்டு. 

`ராமர் - சீதையின் மைந்தர்களான குச -லவர்கள் வாழ்ந்த வனம்தான் இந்தக் கோயம்பேடு’ என்று கோயில் தல புராணம் கூறுகிறது. குச-லவர்கள் இருவரும், அசுவமேத யாகம் செய்வதற்கு ராமன் அனுப்பிய குதிரையைத் தடுத்து நிறுத்திவிட்டார்களாம். அதை மீட்பதற்கு வந்த லட்சுமணன் மற்றும் ராமனை குச-லவர்கள் வீழ்த்திவிடுவார்கள். பிறகு, `ராமன்தான் தங்கள் தந்தை' என்ற செய்தி தெரியவர, தந்தையைப் போரில் எதிர்த்த தங்களுடைய சாபம் தீர குச-லவர்கள் வழிபட்டதால் ஈசனுக்கு `குசலவபுரீஸ்வரர்’ என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். கோ எனும் அரசனான ராமனின் குதிரைகளை குச-லவர்கள் இருவரும் அயம் எனும் இரும்பு வேலியால் கட்டி வைக்கப்பட்ட தலம் இதுவென்பதால் `கோயம்பேடு' எனப் பெயர் பெற்றதாகவும் கூறுவர். `பேடு' என்றால் `வேலி' என்ற பொருளும் உண்டு. அருணகிரிநாதர் இந்தத் தலத்தில் அருளும் முருகனைப் பாடும்போது `கோசை நகர்’ என்று கோயம்பேடைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

கோயிலில், அறம் வளர்த்த நாயகி எனும் பெயரில் அம்பாள் அருள்புரிகிறாள். அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணப் பேறு வாய்க்கும், தீராத வியாதிகள், மனக் குழப்பங்கள் அகலும் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலின் சிறப்பினைக் கூறும் வகையில் ஒரு பாடல் கர்ண பரம்பரையாகக் கூறப்படுகிறது. 

``கோயம்பேடு என்ற ஊரும் இல்லை 

குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை 

வடக்குப் பார்த்த சிவனும் இல்லை 

மடக்கு போன்ற லிங்கமும் இல்லை..."

`கோயம்பேடு எனும் பெயரில் இந்த ஒரு ஊர் மட்டுமே இருக்கிறது. இங்கிருக்கும் மடக்கு போன்ற நான்கு அங்குல லிங்கத்தை வேறு எங்கும் காணமுடியாது. இங்கு மட்டுமே சிவபெருமான் வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். அதே போன்று குறுங்காலீசுவரர் எனும் பெயரில் சிவபெருமான் இங்கு மட்டுமே அருள் புரிகிறார்...' இதைத்தான் மேற்கண்ட பாடல் விளக்குகிறது. 

வடக்கு நோக்கி ஈசன் அருள்புரிவதால் இந்தத் தலம் முக்தித் தலமாகவும், பித்ரு தோஷங்களை நீக்கும் தலமாகமும் விளங்குகிறது. சிவன் கோயிலிலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் வைகுந்தவாச பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. சைவமும், வைணவமும் ஒன்றாகத் தழைத்தோங்கியதை உணரலாம்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் எழுப்பப்பட்ட இந்தச் சிவாலயத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்று கோயம்பேட்டின் பழைமையைப் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறது. அந்தக் கல்வெட்டு வரிகள்...

`ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரையும், பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய குலோத்துங்கச் சோழ தேவர்க்கு யாண்டு 23-வது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டமான மாங்காடு நாட்டு கோயம்பேட்டு ஆளுடையார், குறுங்காலாண்டாருக்கு... நந்தா விளக்குக்கும் சந்தி விளக்குக்கும் விட்ட பரிசு...'

அந்தக் காலத்தில் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு பகுதியும் `கோட்டம்' என்றும், கோட்டங்கள் இணைந்து `மண்டலங்கள்' என்றும் பிரிக்கப்பட்டன. அந்த வகையில், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்குக் கீழே அடங்கிய புலியூர்க் கோட்டத்தில் கோயம்பேடு கிராமமாக இருந்ததை இந்தக் கல்வெட்டின் மூலம் அறியலாம். இதற்கு அடுத்திருக்கும் தலம் திருவலிதாயம். அது புழல் கோட்டத்தைச் சேர்ந்தது. அதனால் கோயம்பேடுதான் அந்தக் காலத்தில் புலியூர்க் கோட்டத்தின் வடக்கு எல்லையாகவும், இரு கோட்டங்களையும் இணைக்கும் முக்கிய இடமாகவும் இருந்துள்ளது. அன்று புலியூர்க் கோட்டத்தில் முக்கியமான இடமாக விளங்கிய கோயம்பேடு இன்று சென்னைப்பட்டினத்துக்குள் அடங்கிச் சுருங்கிவிட்டது. 

அன்றிலிருந்து இன்றுவரை... கடந்து காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் உரிய இணைப்பாகக் கோயம்பேட்டு ஆளுடையார் குறுங்காலீசுவரர் மட்டும் அதே நிலையில் காலம் கடந்தும் அருள்புரிந்து கொண்டிருக்கிறார்..!

அடுத்த கட்டுரைக்கு