Published:Updated:

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்
பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்
பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை: பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கியபோது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 23ஆம் தேதி, மாலை ஆறு மணிக்கு அழகர் கோயிலிலிருந்து சுந்தர்ராஜபெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு, தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டுஉடுத்தி, கைத்தடி, தேரிக்கம்புகளை கைகளில் ஏந்தியபடி கம்பீரமாக வந்தார்.

வழியில் பொய்க்கரைப்படி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல், ஆகிய ஊர்களில் மக்களுக்கு அருள்பாலித்துவிட்டு, 24ஆம் தேதி காலை மூன்றுமாவடிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பக்தர்கள் அழகரின் மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்து, எதிர்சேவை செய்தனர். பின்பு அங்கிருந்து கிளம்பி, புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் என ஒவ்வொரு மண்டகப்படியிலும் பக்தர்களின் வரவேற்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அங்கு எழுந்தருளி, அருள்பாலித்து விட்டு, இரவு எட்டுமணிக்கு மதுரை நகரத்துக்குள் வந்தார்.

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

அவர் நகருக்குள் நுழைந்த நேரம், இவ்வளவு நாள் மக்களை வாட்டி வதைத்த வெய்யிலின் உக்கிரமும், அனலும் தணிந்து குளிர்காற்று வீசியது. சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்து தீர்த்தது. இத்தனை நாட்களாக மேகம் கருக்கும், இடி இடிக்கும். ஆனால், மழை பொழியாது. அதிசயமாக அழகர் ஊருக்குள் வந்தவுடன் மழை பெய்ததை பார்த்து பக்தர்கள் பரவசமானார்கள். அழகரை புகழந்து ஆடிப்பாட ஆரம்பித்தார்கள்.

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

இரவு 10 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார். அங்கு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணிக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது. இன்று காலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு வந்தார். அங்கு தங்க குதிரையில் அமர்ந்து ஆயிரம்பொன் சப்பரத்தில் காட்சி கொடுத்தார். பின்பு மூன்று மணிக்கு வைகையை நோக்கி கிளம்பினார்.

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

அழகரை வரவேற்க தென்மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் நள்ளிரவிலிருந்து வைகை கரையில் காத்துக்கிடந்தனர். மதுரை மாநகரமே ஜனத்திரளால் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தது. ஊருக்குள் பத்தடிக்கு ஒரு தண்ணீர் பந்தல், தெருவுக்கு ஒரு அன்னதானப் பந்தல் என்று பொதுமக்களுக்கு சேவை ஆற்றினார்கள் நல்ல உள்ளங்கள். வைகை கரையோரம் விடியும் வரை, அழகர் வேடம் போட்டு நேர்த்தி கடன் செய்ய வந்தவர்களால் ஆட்ட்ம், பாட்டம், வேடிக்கை என்று களை கட்டியிருந்தது.

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

சரியாக ஏழு மணிக்கு வைகை கரைக்கு வந்தார் அழகர். 7.30க்கு, வீரராகவப்பெருமாள் வரவேற்க ஆற்றில் பச்சை பட்டுடுத்தி இறங்கினார் அழகர். இந்த காட்சியை காண்பதற்கும், அந்த சமயத்தில் பக்தர்களுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை பார்ப்பதற்கும் பலகோடி கண்கள் வேண்டும். பிறந்த பயனை அடைந்த திருப்தி பலருக்கு. நீண்ட நேரம் அங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்த அழகர், 12 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு செல்கிறார்.

அழகர் மதுரைக்குள் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் பகதர்களுக்கு பரவச நிலையை ஏற்படுத்தி வருகிறார் என்பதை நேரில் பார்க்க முடிகிறது. அவர், அழகர் கோயிலுக்கு திரும்பி செல்லும் வரை இது தொடரும்.

செ.சல்மான்
படங்கள்: கேசவசுதன்