தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

மகா பெரியவா - 6

மகா பெரியவா - 6
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 6

வீயெஸ்வி, ஓவியங்கள்: கேஷவ்

`எல்லோருக்கும் எக்காலத்திலும்
குரு ஈச்வரன்தான், தக்ஷிணாமூர்த்திதான்.
காலத்தில் கட்டுப்படாதவர் ஆதலால்,
ஈசனே ஆதி குருவுக்கும் குரு.’

- மகா பெரியவா

மகா பெரியவா - 6

ருவேளை, பள்ளித்தோழன் கிருஷ்ண சாமியின் வீட்டுக்கு. சுவாமிநாதன் சென்றிருக்கக் கூடுமோ? சந்தேகப்பட்ட சுப்பிரமணிய சாஸ்திரிகள். மனைவியுடன் கிருஷ்ணசாமியின் வீட்டுக்குச் சென்றார்.

கிருஷ்ணசாமியின் தந்தை டி.கே.வெங்கட் ராமய்யா பிரபலமான வக்கீல். திண்டிவனம் பெரிய அக்ரஹார வீதியில் வசித்தார்.

அன்றைய விடியற்காலை நாலரை மணிக்கு, சுவாமிநாதன் வக்கீல் வீட்டுக்குப் போனது, சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

வக்கீல் உள்பட வீட்டில் அத்தனைபேரும் உறங்கிக்கொண்டிருந்த நேரம் அது.

“கிருஷ்ணசாமி... டேய் கிருஷ்ணசாமி...’’ என்று தூங்கிக்கொண்டிருந்த தோழனை சுவாமிநாதன் எழுப்ப...

“காலங்கார்த்தால எதுக்குடா என்னை எழுப்பறே?”

“கேள்வி எதுவும் கேட்காம, எழுந்து பேசாம என்னோட வா...”

“எங்கேடா..?”

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்... இப்போ நீ வா.”

இருவரும் சத்தம் எழுப்பாமல் இருள் கவ்வியிருந்தத் தெருவில் வேகமாக நடந்தார்கள். சில்லென்ற காற்று இருவரின் முகங்களையும் வருடிச் சென்றது.

சிறுவர்கள் அந்தப் பக்கம் போக, இந்தப் பக்கம் மனைவியுடன் சுப்பிரமணிய சாஸ்திரிகள், வக்கீல் வீட்டுக்குள் நுழைந்தார்.

மகா பெரியவா - 6

``சுவாமிநாதன் இங்கே வந்தானா?”

இங்கே, தன் மகன் கிருஷ்ணசாமியைக் காணாமல் பதற்றத்தில் இருந்த வக்கீல் வெங்கட் ராமய்யாவுக்குப் பொறி தட்டியது.

“இப்ப புரியறது சாஸ்திரிகளே.. நம்ம எல்லோருக்கும் டிமிக்கிக் கொடுத்துட்டு, இரண்டு பயலுகளும் எங்கேயோ போயிட்டானுங்க. கவலைப்பட வேண்டாம்... தெய்வம் அவாளுக்கு நல்வழிக் காட்டிடும்...”

இருந்தாலும் தேடாம இருக்க முடியுமா?

பெற்றோருடன் ஊரே ஒன்றுகூடி தேடியது. கிடைக்காமல் களைத்துப்போய் வக்கீலும் சாஸ்திரிகளும் வீடு திரும்பிய நேரம், மடத்திலிருந்து வந்திருந்த ஒருவர் வாசல் திண்ணையில் உட்கார்ந் திருந்தார்.

“நமஸ்காரம். நீங்க கவலைப்பட வேண்டாம். குழந்தைகள் ரெண்டுபேரும் மடத்துக்குத்தான் வந்திருக்கா. அங்கே பத்திரமா இருக்கா. சுவாமிகள் சொல்லிட்டு வரச் சொன்னா... நாலு நாள்கள் மடத்தில் குழந்தைகளை வச்சிருந்து அனுப்பறதா சொன்னார்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் மடத்து ஊழியர்.

பெற்றோருக்கு ஒரு பக்கம் நிம்மதி. இன்னொரு பக்கம், ‘எதற்காக அத்தனை பெரிய குரு, இந்தச் சின்னக் குழந்தைகளை நாலு நாள்கள் மடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?’ என்ற கேள்வியும் அவர்களைக் குடைந்தது!

அப்போது ஸ்ரீமடம் திண்டிவனத்திலிருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள ஸாரம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் முகாமிட்டிருந்தது. காமகோடி பீடத்தின் 66-வது சங்கராசார்ய சுவாமிகள், பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். வரிசையில் நின்றார்கள் சுவாமிநாதனும், கிருஷ்ணசாமியும்.

1906-ம் ஆண்டில் பெருமுக்கல் என்ற சிற்றூரில் சுவாமிகள் முகாமிட்டிருந்தபோது, சுப்பிரமணிய சாஸ்திரிகள் குடும்பத்துடன் சென்று அவரை தரிசித்து வருவதுண்டு. முக்கியமாக, சுவாமிநாதன் பெற்றோருடன் செல்வது வழக்கம். வாய் பொத்தி நிற்கும் சிறுவனின் ஒளி மிகுந்த கண்களையும், அறிவு பொலியும் முகத்தையும் புன்முறுவலுடன் கவனித்திருக்கிறார் பீடாதிபதி. சுவாமிநாதனை அருகில் அழைத்து உரையாடியிருக்கிறார். அந்த மகானின் உள்ளுணர்வு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். மட்டுமல்லாமல், ஸ்ரீமடம் திண்டிவனத் தில் முகாமிட்டிருந்த நேரத்திலும் சுவாமிகளை தரிசிப்பதற்காகச் சுவாமிநாதன் போனதுண்டு.

“மகாலட்சுமி... நீ கவனிச்சியோ? மடத்துக்கு வந்தா சுவாமிநாதன் துறுதுறுன்னு சுவாமிகளையே வைத்தக் கண் வாங்காம பார்த்துண்டிருக்கான். சுவாமிகள் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜை பண்றதை சிரத்தையா கவனிக்கறான். மடத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பா பார்த்து உள்வாங்கிக்கிறான்...” என்று ஒருவித பெருமை யுடன் மனைவியிடம் கூறுவார் சுப்பிரமணிய சாஸ்திரிகள்.

“ஆமா... நானும் கவனிச்சேன். என்னோட அக்கா பையன் லட்சுமிகாந்தன், சுவாமிகளுக்கு நெருக்கத்தில் இருந்து கைங்கரியம் செய்யறதும் சுவாமிநாதனுக்கு ஆர்வம் உண்டாகக் காரணமா இருக்கலாம்னு தோணறது” என்பாள் மகாலட்சுமி.

மகா பெரியவா - 6

பீடாதிபதிகள் ஸாரம் பகுதிக்கு முகாம் மாறிய திலிருந்து சுவாமிநாதனுக்கு இருப்புக்கொள்ள வில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மடத்துக்குப் போனதும் அதனால்தான்!

இதோ, வரிசை நகர்ந்து சுவாமிகளுக்கு மிகவும் நெருக்கத்தில் சுவாமிநாதன். சிறுவர்கள் இருவரும் சுவாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறார்கள்.

“ஏண்டாப்பா... காலங்கார்த்தால வந்திருக்கியே... ஆத்துல சொல்லிட்டு வந்தியோ..?” என்று வினவு கிறார் சுவாமிகள். “இல்லே ஸ்வாமி... உங்களைப் பார்க்கணும்னு தோணித்து... உடனே கிளம்பி வந்துட்டோம்” என்கிறான் சுவாமிநாதன். இதற்காகக் குரு மகிழ்ந்திருக்க வேண்டும். வீட்டையும் வாசலையும் விட்டு வருபவர்கள்தானே அவருக்கு வேண்டும்!

மகன் திரும்பி வந்த பிறகும் சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு மனம் நிம்மதியின்றி தவித்தது. மகன் நன்றாகப் படித்துப் பெரிய உத்தியோகம் பார்க்கவேண்டும் என்று கனவு கண்டுக்கொண்டி ருந்தவருக்கு, சுவாமிநாதனின் நடவடிக்கை கவலையைத் தந்தது. மகனின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, ஜோதிடத்திலும் ரேகை சாஸ்திரத்திலும் திறமையும் புலமையும் பெற்று விளங்கிய நண்பர் வக்கீல் வெங்கட்ராமய்யாவின் வீட்டுக்கு மறுபடியும் விரைந்தார் சுப்பிரமணிய சாஸ்திரிகள்!

தமிழ் இலக்கியங்களிலும் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கிய மகாபுருஷர் மகா பெரியவா. திருக்குறள் பற்றிய அன்னாரின் எண்ண ஓட்டங் களைக் கொஞ்சம் பார்ப்போம்.

‘`தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்பிரா யம், வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத் தான் முதலிடம். அப்புறம்தான் வேத யக்ஞம், பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின்தான் வேத பூஜை செய்யவேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.

`தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'


பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்கவேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத் தாரைச் சொல்லி அப்புறம் தெய்வத்தைச் சொல் கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக- வைதிக நம்பிக்கையிலேயே, ‘மூதாதைகளை’ தென்புலத்தார் என்கிறார்.

வைதிகமும், வள்ளுவரும் விதிக்கிற இந்தத் தர்மத்தைவிட பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை. தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோபகாரமாக வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற தியாகம்தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நீதி நூல்களும் சரி, மறையின் மரபில் வந்தவைதான்.

திருவள்ளுவர் வைதிகத்தைத்தான் சொன்னார். ஒளவையார் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒருநாள்கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது என்கிறாள். ஆழ்வாராதிகளும் சைவத் திருமுறைக்காரர்களும் எங்கே பார்த்தா லும், ‘வேதியா! வேத கீதா! சந்தோகம் காண், பௌழியன் காண்’ என்று வேதங்களையும், அவற்றின் சாகைகளையும் சொல்லியே பகவா னைத் துதிக்கிறார்கள். இந்தத் தமிழ் நாட்டில் வேதப் பாடசாலைகளைவைத்து நடத்துவதில் பிராமணர் அல்லாதார் செய்திருக்கிற கைங்கர்யம் கொஞ்சம் நஞ்சமல்ல. நிலமாகவும், பணமாகவும் வாரிக் கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.

இப்போதும்கூட, ஏதோ அரசியல் காரணங் களுக்காக அவைதிகமான, நாஸ்திகமான அபிப்பிராயங்கள் கொஞ்சம் தலைதூக்கியிருந் தாலும், மொத்தத்தில் தமிழ் ஜனங்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தி விசுவாசமும் போகவேயில்லை என்பதுதான் என் அபிப்பிராயம்.

அவர்களது அன்புக்குப் பாத்திரராகிற மாதிரி பிராமணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அனுஷ்டான சீலர்களாகிவிட்டால், இங்கே வேதரக்ஷணம் திரும்பவும் நன்றாக நடந்து விடும் என்பதே என் நம்பிக்கை.’’

(வளரும்)