தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 6

ரங்க ராஜ்ஜியம் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 6

இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ம.செ

‘விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மாமாட வேளுக்கை - மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு'

- பேயாழ்வார்


சரதரின் அழைப்புக்கிணங்க அயோத்தியை அடைந்த தர்மவர்மா, பிரணவாகார விமானத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைக் கண்டமாத்திரத்தில், இக்ஷ்வாகுவுக்கு ஏற்பட்ட உணர்வும் சிலிர்ப்பும் தர்மவர்மாவுக்கும் ஏற்பட்டது. இக்ஷ்வாகுபோல் தவம் செய்தாவது எம்பெருமானின் ஆலயத்தைச் சோழ தேசத்துக்குக் கொண்டு சென்று விடத் துணிந்தது அவர் மனம்.  இங்ஙனம், தர்மவர்மாவின் எண்ணங்கள் பிரணவாகாரப் பெருமாளின் மேலேயே இருக்க, தசரதர் மறுபுறத்தில் வேள்விக்கான ஏற்பாடுகளில் மும்முரமாயிருந்தார்.

வேள்வியின் தலைவராக ரிஷ்யசிருங்கர் எனும் மாமுனியின் வருகையும் அயோத்தியில் அமைந்தது. ரிஷ்யசிருங்கரின் பாதம் பட்ட இடத்தில் மழை பொழியும் - சுபிட்சம் கூத்தாடும் என்பதால், அவரது வரவை அரசர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அப்படிப்பட்ட ரிஷ்யசிருங்கரையே முன்னிலைப்படுத்தி, அவரை நடுநாயகமாய் அமரச்செய்து, தனது வேள்வியைத் தொடங்கினார் தசரதர். அவ்வேளையில், பிரார்த்தனை உரையை யும் நிகழ்த்தினார்.

`‘அரியதொரு நிகழ்வான இந்த வேள்விக்காக, இந்தக் கோசல தேசமே மகிழ்வுறும் வண்ணம் தன்னுடைய திருப்பாதங்களைப் பதித்திருக்கும் ரிஷ்யசிருங்க மாமுனிவரே! எங்கள் ரவி குலத்தை வழிநடத்தும் எம் குலகுருவாம் வசிஷ்ட மாமுனி வரே! வேள்வியின் பொருட்டு திரண்டு வந்திருக்கின்ற ரிஷிகளே, முனிகளே!

ரங்க ராஜ்ஜியம் - 6

இப்பூவுலகில் நாடுகள் பல கண்டு, அவற்றைத் தர்மத்தோடும் தகைமையோடும் ஆட்சி செய்து வரும் என் மித்ர ராஜாக்களே! என்னிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட அயோத்தியின் பிரஜைகளே, மற்றுமுள்ள வேதியர்களே! இவ்வேள் வியைத் திட்டமிட்டு நிகழ்த்தும் ஸ்தானீக மஹநீயர்களே! அனைவரது சித்தமும் குளிரும்படி நடக்கப்போகும் இந்த வேள்விக்கு வந்திருக்கும் உங்களை மனதார வரவேற்று வந்தனம் புரிகிறேன்.

எங்கள் ரவிகுலம் பெற்ற பெரும்பேறான பிரணவாகாரப் பெருமாளின் தண்ணருளாலே நிகழ இருக்கும் இவ்வேள்விக்கான பொதுவான நோக்கம், இப்பூவுலகம் அமைதியாகவும் பசி - பஞ்சமின்றியும் திகழவேண்டும் என்பதே! அடுத்து, எங்கள் ரவிகுலம் தொடர்ந்து தழைத்திட, எனக் கான புத்திரப்பேறு வேண்டியும் இங்கே இந்த வேள்வி நிகழ்த்தப்படுகிறது.

ஒருவேளை, முன்னமே எனக்குப் புத்திரப்பேறு ஏற்பட்டிருந்தால், இங்கே இந்த வேள்வி நிகழ வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. உங்கள் எல்லோரை யும் இந்தச் சரயு நதி தீரத்தில் ஒருசேரச் சந்திக்கும் பாக்கியமும் வாய்த்திருக்காது. இதனாலேயே எனக்குப் புத்திரப்பேறு தாமதப்பட்டதாக நான் திருவுள்ளம் கொள்கிறேன்.

இன்று நடக்கப்போகும் இந்த வேள்வியால் காலகாலத்துக்கும் நன்மைகள் விளையட்டும். நம் எல்லோருடைய குறைபாடுகளும் தீரட்டும். நம் குறைகளையெல்லாம் எம் குலதெய்வமான அரங்கநாதப் பெருமாள் தீர்த்துவைப்பாராக. வைகுண்டத்திலிருந்து சத்யலோகத்துக்கும், பின் சத்யலோகத்திலிருந்து பூவுலகில் இந்த அயோத்திக் கும் வந்து, நமது அயோத்தியையே பூலோக வைகுண்டமாக்கியிருக்கும் அந்தப் பெருமாளின் கழல்களைப் பணிந்து, வேள்வியானது தொடங்கிட வேண்டுகிறேன்’' -  தசரதரின் இந்த உரை, தர்ம வர்மாவை வெகுவாகச் சிந்திக்கவைத்தது.

பிரணவாகாரப் பெருமாளின் திருச்சந்நிதி முன்னால் வேள்விக் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் வட்ட வடிவில் அரசப் பெருமக்களுக்கு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் அமர்ந்திருந்த தர்மவர்மாவின் பார்வை வேள்விக்கூடம் கடந்து பிரணவாகாரப் பெருமாளின் திருச்சந்நிதி நோக்கியே இருந்தது. பள்ளிகொண்டிருந்த அரங்கநாதனின் தோற்றம், தர்ம வர்மாவை பலவாறு எண்ணம் கொள்ளச் செய்தது.

‘எம்பெருமானே! ஒரு பக்தனின் பொருட்டு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து நீ கோயில் கொண்டுள்ளாய் என்றால், உன் கருணையை என்னவென்பேன்? கருணை மிகுந்த உன் ஸ்தூலம் காண, நான் தெற்கிலிருந்து இந்த வடக்கு நோக்கி வருவதற்கு எவ்வளவு பிரயாசைப்பட்டிருப்பேன் தெரியுமா? என்னைப்போல் என் நாட்டவரால் வர இயலுமா? அவர்களுக்கெல்லாம் உன் தரிசனம் என்பது எட்டாக்கனிதானா?
 
வைகுண்டம், சத்யலோகம், அயோத்தி என மூன்று இடங்களைக் கண்ட நீ, நான்காவதாக என் சோழ நாட்டுக்கு ஏன் வரக் கூடாது? இந்த ரவிகுலத்தவர்களைவிட இன்னும் சிறப்பாக நாங்களும் உன்னைக் கொண்டாடி மகிழ்வோமே?

இந்த வேள்வியில் எல்லோருக்கும் ஒரு பிரார்த் தனை உள்ளது. எனது பிரார்த்தனை என்ன தெரியுமா? நீ என் மண்ணில் கோயில்கொள்ள வேண்டும் என்பதுதான்! இந்த வேள்வி முடியும் வரை மட்டுமல்ல... இனி, நீ என் மண்ணை அடையும்வரை அது ஒன்றே என் எண்ணம், நோக்கம், வாழ்வு எல்லாம்!’ - என்று ஒரு முடிவுக்கு வந்தான் தர்மவர்மா.

வேள்வி முடிந்து சோழ தேசம் திரும்பியவன், அமைச்சர்களை அழைத்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசினான். தர்மவர்மாவின் பேச்சைக் கேட்ட அமைச்சர்களும் ‘`அரசே! தங்கள் விருப்பம் மிக மேலானது. தெய்வத்திடம் நாம் எதையும் வேண்டிப் பெற்றிட முடியும். ஆனால், தசரதச் சக்ரவர்த்தி, தங்களைப் போல் தாய் தந்தையர் வயிற்றில் பிறந்த ரத்தமும் சதையுமான புருஷர். அவரிடம் எப்படி நாம் எம்பெருமானை வேண்டிப் பெற முடியும்? ஒருவேளை, போரிட்டு அவரை வெற்றிகொண்டால், உங்கள் விருப்பம் சாத்தியமாக லாம். ஆனால், அதுவும் நம் வரையில் சாத்தியம் இல்லை. போருக்குப் பகை மிக முக்கியம். தசரதச் சக்ரவர்த்தியோ நம்மோடு நட்பு, அன்பு என்று மிக இணக்கமானவராக இருக்கிறார். அவரை எப்படிப் பகைக்க முடியும்? எனவே, எப்படிப் பார்த்தாலும் உங்களின் மேலான விருப்பம் கைகூட வாய்ப்பில்லை. வேண்டுமானால், அந்த ஆலயம் போன்ற ஓர் ஆலயத்தை நாம் இங்கே கட்ட முனையலாம்” என்றனர்.

“இல்லை!  அதுபோல் நூறு ஆலயங்களை நாம் இங்கே கட்டலாம்தான். ஆனால், அவையெல்லாம் வைகுண்ட சாந்நித்தியம் கொண்டதாகிவிடாது.அந்தப் பிரணவாகாரமும் எம்பெருமானின் மூர்த் தமும் எம்பெருமானாலேயே தோற்றுவிக்கப் பட்டனவாம். அந்த ஸ்வாமி, உளி படாத ரூபம்; உருக்கி வார்க்காத தங்கம்.

கூடவே, தேவாதிதேவர்களுடன் சித்தசாத்ய கணங்கள் சூழ, தும்புரு, நாரதரின் வீணாகானம் எப்போதும் ஒலித்தபடி இருக்க, சந்திர - சூரியரே சாமரம் வீசியபடி அங்கே திருப்பணி செய்கின்றனர். இதெல்லாம் நாம் எழுப்பும் ஆலயத்தில் சாத்தியமா?''

தர்மவர்மாவின் கேள்வியின் முன் அமைச்சர் கள் மௌனம் சாதித்தனர். தர்மவர்மாவோ விடுவதாயில்லை.

“அருமை அமைச்சர்களே! விண்ணிலிருந்தே ஒருவனால் அப்பெருமாளை மண்ணுக்குக் கொண்டுவர முடிந்திருக்கிறது. அந்தப் பெருமாளை  இம்மண்ணில் வடக்கிலிருந்து தெற்கே கொண்டு வருவதா கடினம்? நான் இம்மட்டில் எனக்கு முன்னோடியான இக்ஷ்வாகுவின் வழியிலேயே செல்ல முடிவு செய்துவிட்டேன்” என்றார். அமைச்சர்கள் அதிர்ந்தார்கள்.

“மன்னா! தவம் சாதாரண விஷயமில்லை. நம் போன்ற க்ஷத்ரிய புருஷர்களின் புலன்கள் அடங்குவதும் எளிதல்ல...” என்ற ஓர் அமைச்சரின் கருத்து, தர்மவர்மாவுக்குக் கோபத்தையே வரவழைத்தது.

ரங்க ராஜ்ஜியம் - 6

“சுலபமாக அடைவதற்கு, அதுவொன்றும் சரீர இச்சை சார்ந்ததல்ல. ஆத்ம விடுதலைக்கானது. அந்த அரங்கனே என் சுதந்திரதேவன். நான் இனி இரண்டாம் இக்ஷ்வாகு...” என்று உறுதியாகக் கூறிய தர்மவர்மா, பெருந்தவத்தில் அமர்ந்துவிட்டான்.

ஒருபுறம் தர்மவர்மாவின் தவம், மறுபுறம் தசரதரின் வேள்வி நோக்கம் ஈடேறிய நிலையில், ஸ்ரீராம, பரத, லக்ஷ்மண, சத்ருக்னர்களின் பிறப்பு. காலமும் உருளத் தொடங்கியது!

தர்மவர்மா புரியும் தவம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. குறிப்பாக, காவிரிக் கரையை ஒட்டிய புலஸ்திய முனிவரின் சிஷ்யரான தாலப்யர் எனும் முனிவரின் ஆசிரமத்தைச் சேர்ந்த முனிவர்கள் சிலர், தர்மவர்மாவின் தவத்தை அறிந்து தர்மவர்மாவின் தவக்கோட்டத் துக்கு வந்தனர்; அவனது தவத்தைக் கண்டு சிலிர்த்தனர். அதே உணர்வோடு, தர்மவர்மாவின் தவத்தை இடையூறு செய்யாதவண்ணம் தர்ம வர்மாவின் மேல் மலர்களைத் தூவினர்.

மலர்களின் மணமும் ஸ்பரிசமும் தர்ம

வர்மாவைக் கண்திறக்கச் செய்தன. எதிரே தென்பட்ட முனிவர்களைக் கண்டு வியந்தவனாக எழுந்த தர்மவர்மா, அவர்களுக்குத் தன்னுடைய வந்தனங்களைப் புரிந்தான்.

“அநேக வந்தனங்கள் முனி பெருமக்களே... என்னுடைய அநேக வந்தனங்கள் உங்களுக்கு உரித்தாகுக...”

“மகிழ்ச்சி அரசே... பெரும் மகிழ்ச்சி! உனக்கும் எங்களின் நல்லாசிகள் உரித்தாகட்டும்.”

“மிக்க நன்றி. தாங்கள் யாரென்று நான் அறிய லாமா?”

“நிச்சயமாக. நாங்கள் வந்திருப்பதும் உன்னைக் கண்டு, உனது தவ நோக்கம் பலிக்கப்போகிறது என்பதைக் கூறவே.''

“எனது பெரும் விருப்பம் ஈடேறப் போகிறதா... நிஜமாகவா? அடியேன் தன்யனானேன்!” - நெகிழ்ந்தான் தர்மவர்மா.

“ஆம்! ஆனால் இப்போதோ, இன்றோ அல்லது நாளையோ அல்ல...''

“என்றால்..?”

“நாங்கள் கூறப்போகும் செய்திகளை முதலில் நீ அறிந்துகொள். பிறகு, அனைத்தும் உனக்குத் தானாகத் தெரியவரும்''

“நல்லது! கூற வந்ததை தாராளமாய்க் கூறுங்கள்.”

“முதலில், நீ உனது தவப் பீடத்திலிருந்து நீங்கி, எங்களுக்கான ஆசனங்களை அளித்து, ஒரு சீடனுக்குரிய தன்மைகளோடு அணுகு.''

தர்மவர்மாவும் அவர்கள் கூறியபடியே நடந்து கொண்டான். அந்த முனிவர்கள், உயரிய மேடை யில் விரிக்கப்பட்ட பட்டு விரிப்பின் மேல் அமர்ந்துகொண்டனர். அவர்கள் முன்  தரையில் கீழே அமர்ந்தான் தர்மவர்மா. அந்த முனிவர்கள், தாங்கள் கூற வந்ததை விவரிக்கத் தொடங்கினர்.

“அரசனே! நாங்கள் காவிரி நதி தீரத்தில் தவம் புரிந்து வரும் தாலப்ய முனிவரின் சீடர்கள். அவரின் விருப்பப்படியே,  செய்திகளை உன்னிடம் இப்போது கூறப்போகிறோம்.

இங்கிருந்து ஐம்பது காத தூரத்தில் நீலிவனம் என்றொரு வனம் உள்ளது. விசேஷ தன்மைகள் கொண்ட அந்த வனம், எங்களைப் போன்ற முனிவர்களுக்கு ஏற்றதாக, நாங்கள் தவம் புரிய உகந்த இடமாகத் திகழ்ந்தது. அங்கே, ‘வியாக்கிரன்’ எனும் அசுரன் உருவில் ஆபத்து புகுந்தது. ‘இது என் வேட்டைக்காடு. இங்கே யாரும் தவம் புரியக் கூடாது’ என்று கூறியதுடன், தன்னையே வணங்க வேண்டும் என்றும் எங்களைப் போன்ற தவசிகளுக்குக் கட்டளையிட்டான்.

பரம்பொருளை ஜபித்த வாயால், இழிவான அந்த அசுரனைப் பற்றிப் பேசுவதுகூட இழிவு என்பதால், நாங்கள் மறுத்தோம். அதனால், எங்களில் பலரை வெட்டிக் கொன்றதுடன், நர மாமிசமாக அவர்களை உண்ணவும் செய்தான்.

ஞானியர் மேனியும் இறைவனின் ஆலயமும் ஒன்றல்லவா? புனிதமான ஆலயத் திருமேனி, நர உணவாகவா ஆவது? ஆகவே, கோபத்தை நினைத்தும் பார்க்கக்கூடாத நாங்கள், அவன் மீது  சினம் கொண்டோம்.  எம்பெருமானை உத்தேசித்து உக்ர தவக்கோலம் பூண்டோம். நீருக்குள்ளும், நெருப்பிலும், ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றியபடியும்,  தலைகீழாகத் தொங்கியபடியும் அவரவர் சக்திக்கேற்ப தவம் புரிந்தோம்.

எப்போதும், எந்த எதிர்பார்ப்புமின்றி அறத்தை நிலைநிறுத்தும் நோக்கோடு செய்யப்படும் தவத் துக்குரிய பலனைத் தர தேவர்கள் ஓடி வருவர். தேவர்களே ஓடி வரும்போது, எம்பெருமான் வாராதிருப்பாரா? எனவே, அவரும் பிரசன்ன மானார். அத்துடன், வியாக்ரனை சம்ஹாரம் செய்து எங்களது தவத்தையும் மெச்சினார்.

அப்போது நாங்கள் அத்தனைபேரும் முதல் நன்றியை வியாக்கிரனுக்கே கூறினோம். அவனால் அல்லவா எம்பெருமானின் காணக்கிடைக்காத காட்சியும் காணக் கிடைத்தது! நாங்கள் எதற்காக தவமியற்றினோமோ அந்த நோக்கம். ஈடேறவும், காட்சியளித்த எம்பெருமான் மறைந்துவிட்டார்!

எம்பெருமானின் அந்தத் திருக்காட்சி, முனிவர் பெருமக்களை பெரும் பிரமைக்கு ஆளாக்கியது. அந்தக் காட்சியைத் திரும்பவும் காணத் துடித் தோம். மீண்டும் தவத்தில் ஆழ்ந்தோம். இம்முறை, தவத்தின் நோக்கமும் மாறிவிட்டது. முன்பு உயிருக்காகத் துடித்தோம். இப்போது விருப்பத்துக் காகத் துடித்தோம்.

மட்டுமின்றி, எம்பெருமானின் கருணைக்குரிய அந்தச் செயலும், முனிவர் பெருமக்களின் தவமும், ஏதோவொரு கால நிகழ்வாகக் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை நாங்கள் விரும்ப வில்லை. எனவே, மீண்டும் நாங்கள் எம்பெருமா னின் தரிசன நிமித்தமும், அது அன்றாடம் நினைத்தபோதெல்லாம் நிகழ்ந்திடவும், எம்பெருமானின் ஆலயம் ஒன்று இந்த மண்மிசை அமையவேண்டியும், குறிப்பாக அயோத்தியில் அமைந்தது போலவே ஒரு கோயில் இங்கும் அமையவேண்டியும் மீண்டும் கடும் தவம் புரிந்தோம். எங்கள் தவத்தின் பயனாக ஓர் அசரீரி ஒலிக்கக் கேட்டோம். நாங்கள் செவிகுளிரக் கேட்ட அந்தச் செய்தி இதுதான்...

‘முனி பெருமக்களே! உங்கள் தவத்தால் மகிழ்ந் தேன். உங்கள் விருப்பம், வருங்காலத்தில் ஈடேறும்! எது தர்மம் என்பதை உலகம் நன்கு அறிய வேண்டியும், வியாக்கிரன் போல பல அசுரர்களை சம்ஹரிக்கும் பொருட்டும் அவதாரம் எடுக்கவுள் ளேன். பூலோக வைகுண்டமெனத் திகழும் அயோத்தியே நான் அவதரிக்கப்போகும் பூமி. அயோத்தி மன்னனே எனக்குத் தந்தையாகப் போகிறவன்.

இந்தப் பிறப்பில் என்னுடைய செயல்களில் ஒன்றாக, நீங்கள் விரும்பும் ஓர் ஆலயம் என்னுடைய சகல சாந்நித்தியங்களோடும் இம்மண்ணில் வருங் காலத்தில் அமையும். அது யுகங்களைக் கடந்தும் நிலைத்து நிற்கும். இதே விருப்பத்தோடு தவம் புரியும் தர்மவர்மாவிடமும் இந்தச் செய்தியைக் கூறி காத்திருக்கச் சொல்லுங்கள். வாழ்க உங்கள் பக்தி! வளர்க உங்கள் அருள்நிதி!’ என்று அந்தச் செய்தி விண்ணில் ஒலித்து அடங்கியது. அதைக் கூறவே நாங்கள் உன்னை நாடி வந்தோம்''

முனிவர்கள் அனைத்தையும் விவரமாகக் கூறி முடிக்க, தர்மவர்மா அகம் மகிழ்ந்தான். அதேநேரம், அந்த மன்னவனின் தவக்கோட்டத்துப் பசு ஒன்று `ம்மா...' என்று குரலெழுப்பி, மன்னவனின் மகிழ்ச் சியை இரட்டிப்பாக்கியது!

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 6

மெளன விரதம்!

ந்நியாசி ஒருவரிடம் வந்த பக்தர் “ஸ்வாமி, நான் மாதம் ஒருமுறை மெளன விரதம் இருக்க முடிவு செய்துள்ளேன்'' என்றார். உடனே சந்நியாசி, “அது உன்னால் முடியாது. வேண்டுமானால், மெளனமாக இருக்கப்போகிறேன் என்று சொல். அதை ஏற்கிறேன்'' என்றார். பக்தர் புரியாமல் விழித்தார்.

அவருக்குச் சந்நியாசி அளித்த விளக்கம்: ``சிலர், மெளன விரதம் இருப்பார்கள். அது எதற்கு? ஓய்வு வாய்க்கா, நாவுக்கா, தொண்டைக்கா..? நிச்சயமாக மனதுக்கல்ல! அடுத்தவர்களின் புகழ்ச்சிக்காகவோ, விளம்பரத்துக்காகவோ விரதம் இருந்தால், அது மனதின் ஓய்வுக்கு எதிரான எண்ணம் ஆகும். மனம் எண்ணமற்று இருப்பது அல்லது மனதில் எண்ணங்கள் குறைவாக இருப்பதுதான் விரதம். ஆக, எண்ணங்களை அலைபாய விடுவதைவிட, பேசிக்  கொண்டிருப்பது நல்லது.''

தொகுப்பு: ஆர்.சி.சம்பத், ஓவியம்: ரமணன்