மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?

கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?

காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

? ஒருவருக்கு, ஆன்மிக மார்க்கத்தில் குரு என்பவர் அவசியம்தானா?

- இரா.குமரகுருபரன், மயிலாடுதுறை


‘குரு இல்லா வித்தை குப்பையிலே’ என்று நம் முன்னோர்கள் கூறுவர். எப்படி ஒரு மருத்துவர் நமது உடலைப் பரிசோதித்து, பிறகு மருந்துகளைப் பரிந்துரைக்கிறாரோ , அதுபோன்று குரு என்பவர் சிஷ்யனின் மனபரிபாகத்தை அறிந்து, அதற்கேற்ப மந்திரங்களினால் தீட்சை அளித்து, பரம்பொருளை அடையும் வழியைக் காட்டக்கூடிய சாமர்த்தியம் படைத்தவர்.

முடியுமா, முடியாதா என்றெல்லாம் இல்லை. சிலர், பூர்வஜன்ம ஸம்ஸ்காரங்களினால் இயற்கை யாகவே ஞானம் பெற்று கடவுளை அடைவதும் உண்டு. கண்ணப்ப நாயனார் போன்று பக்தியாலும், முற்பிறவி வினைப்பயனின் வலிமையாலும் இறையனுபூதியைப் பெற்ற அடியவர்களைப் பற்றி ஞானநூல்கள் பலவும் விளக்குகின்றன.

‘கு’ எனில் இருட்டு; ‘ரு’ எனில் இருளைப் போக்குபவர் என்று சொல்வர். `குரு என்பவர், நமது அக இருளைப் போக்கி ஞானத்தை அளிப்பவர்' என்கின்றன சாஸ்திரங்கள். முழு நம்பிக்கையுடன் தன்னைச் சரணடையும் சீடனுக்கு, தமது தவ வலிமையாலும் அன்பாலும் ஞானத்தை அருள்வார் குரு என்பதே சாஸ்திரங் களின் முடிவு..

கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?

? கடவுள் வழிபாடு, மகான்கள் வழிபாடு இரண்டில் எது உயர்வான பலனைத் தரக்கூடியது? இறைவனை வழிபடுவதைவிட, இறையடியார்களை வழிபடுவது உயர்வானது என்று சொல்வது சரியா?

- எம்.சுவாமிநாதன், பெங்களூரு


பலனில் எந்தவித வேறுபாடும் இல்லை. அனைத்துப் பூஜைகளும் எல்லாம் வல்ல பரம்பொருளோடு ஒன்றிணைவதற்காக அமைந்த வையே. எல்லாவற்றுக்கும் மூலம் பரம்பொருளே.

மகான்கள், அந்தப் பரம்பொருளின் அருளை நிறையப் பெற்றவர்கள். அவர்களுடைய உபதேசங் கள் அனைத்தும் அந்த உண்மைப் பொருளின் வழியைக் காண்பதாகவே அமையும். ஆக, அவர் களை வழிபடுவதும், அந்தப் பரம்பொருளை அடைவதற்காகவே என்று அறியலாம்.

யோசித்துப் பாருங்களேன்! நம்மால் சில நாட்கள் நம் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்திருப்பதே மிகவும் சிரமம். சிறிய அவமானங்களைக்கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

ஆனால் ஒரு சந்நியாசியாகவோ, மகானாகவோ பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்களுக்கு அப்படியில்லை. எந்தவிதச் சலனமும் இல்லாத வர்கள் அவர்கள். கடவுளை அடைவதையும், தாம் கற்று அல்லது அனுபவித்து உணர்ந்த உண்மையை, அனைவருக்கும் தெரிவிப்பதையும், அன்பர்களை நல்வழிப்படுத்தவேண்டும் என்பதற்காகத் தங்களுடைய அனைத்து விருப்பு-வெறுப்புகளையும் துறப்பதையும் கடமையாகக் கொண்டிருப்பவர்கள்.அவர்கள் துறவு பூண்டிருப்பது, நமக்கு வழிகாட்டு வதற்கே தவிர, அவர்களது சொந்த நலனுக்காக அல்ல என்பதை நாம் அறிவது அவசியம்.

இந்தக் காரணத்தை அறிந்த நம் முன்னோர், நமக்குக் குருவின் பெருமைகளையும், அவரை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும் அறிவுறுத்தி யுள்ளார்கள். எனவே, அந்த வழிமுறையை நாமும் பின்பற்றி குருவின் வழியாகக் கடவுளை அடைவதென்பது சரியே. அதேநேரம், கடவுளை அடையும் வழியைச் சொல்லாமல், வேறு தவறான வழிகளைக் கற்பிக்கும் போலியானவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் சரணடையக் கூடாது. அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

மனதில் தைரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி, நல்வழியான சிவகதிக்கு அழைத்துச் செல்லும் மகான்களை வழிபடுவதன் மூலம், ஆன்மிகப் பாதையில் எந்தத் தடங்கலுமின்றி பயணிக்கலாம்.

? கடவுளின் அருளை வேண்டி மந்திரங்களை உச்சரிப்பது ஏன்? கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர் எனில், `மந்திரம் சொல்லி அழைக்கப்படும் இடத்துக்கு அவர் வருவார்' என்பது சரியாகுமா?

- எஸ்.சிவசுப்பிரமணியம், சிவசைலம்


‘மந்திரம்’ - சம்ஸ்கிருத மொழியில்  இதை ‘மந்த்ரா’ என்று கூறுவர். ‘மந்’ எனில் உச்சரித்தல்; ‘த்ரா’ எனில் காப்பாற்றுதல். எந்தச் சத்தமானது, நாம் உச்சரிக்க உச்சரிக்க நம்மைக் காப்பாற்றுகிறதோ, அந்தச் சத்தமே ‘மந்த்ரம்’ என்று கூறப்படுகிறது.

காற்று எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால், அந்தக் காற்றை நாம் உணர, நமக்கு ஒரு விசிறியோ அல்லது மின்விசிறியோ தேவைப்படுகிறது. அதேபோல், எங்கும் நிறைந்திருக்கும் இறை சக்தியை நாம் உணர்ந்து ஆனந்தம் அடைவதற்கு மந்திரங்கள் வழிகாட்டுகின்றன.

மந்திரங்களின் உச்சரிப்புடன் மன ஒருமைப் பாடும் மிகவும் அவசியம். கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர். அதுபற்றி சந்தேகம் வேண்டிய தில்லை. அவர் மந்திரம் சொல்லி அழைக்கப்படும் இடத்துக்கு மட்டும்தான் வருவார் என்றால், அது தவறுதான். ஆனால் நமது சனாதன தர்மம்,  `மந்திரம் சொல்லும் இடத்துக்கும் வருவார்’ என்றுதான் கூறுகிறது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை தாங்கள் அறிவீர்கள். ஆக, மந்திரங்களை உச்சரித்து கடவுளின் அருளை வேண்டுவதும் ஒரு வழியே தவிர, அது மட்டும்தான் வழி என்று நம்முடைய சனாதன தர்மம் ஒருபோதும் கூறியதில்லை.

தகுதியான குரு ஒருவரிடம் முறைப்படி மந்திர உபதேசம் பெற்று, தொடர்ந்து சில மாதங்கள் ஜபம் செய்து வந்தால், அதனால் ஏற்படும் அனுபவம் என்ன என்பது உங்களுக்குப் புரியும். இனிப்பு என்றால் என்னவென்றே தெரியாதவ ரிடம், ‘சர்க்கரை இனிக்கும்’ என்று சொன்னால், அவருக்கு ஒன்றும் புரியாது. ஆனால், சிறிது சர்க்கரையை எடுத்து அவர் தமது வாயில் போட்டுக்கொண்டால், இனிப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வார்.

நமது நன்மைக்காகவே பல வழிபாடுகளை சாஸ்திரங்கள் நமக்கு அளித்திருக்கின்றன. நம்முடைய பூஜைகள் கடவுளுக்குச் சக்தி அளிக்கும் என்றில்லை; கடவுள்தான் நமக்குச் சக்தி அளிக்கிறார். நாம் செய்யும் பூஜைகளால் பலன் அடைவது நாம்தான். மந்திரங்கள், சுற்றுச் சூழலிலுள்ள மாசுகளை அகற்றி, நல்ல சூழலை ஏற்படுத்த வல்லவை. ஆலயங்களில் அனைத்து ஜீவராசிகளுக்காகவும் நித்திய வழிபாடுகள் நடை பெறுகின்றன. நமக்கு மந்திரம் தெரிந்திருந்தாலும் தெரியவில்லை என்றாலும், நாம் உள்ளன்புடன் கடவுளை வழிபட்டால், அவர் நிச்சயம் வருவார். பக்த பிரஹலாதனுக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருளிய பரம்பொருள் அல்லவா கடவுள்!

? முருகனின் திருமுகங்கள் ஆறு; படைவீடுகள் ஆறு; மந்திரமும் ஷடாக்ஷரம்... இதன் தத்துவம் என்ன?

ஆர்.முருகன், தஞ்சாவூர்


கந்தபுராணத்தில் மிக அருமையான பாடலொன்று உண்டு.

கோலமா மஞ்ஞைதன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலனென்றிருந்தேன் அந்நாட் பரிசிவை
            யுணர்ந்திலேன் யான்
மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி அன்றோ


சிவபெருமானின் ஐந்து முகங்களும், சக்தியின் ஒரு முகமும் கூடிய ஆறுமுகமே - சண்முகர். அவரைப் பாலன் என்று நினைத்ததாகவும், பின்னர், அவரே அனைத்துக்கும் மூலகாரணம் என்று உணர்ந்ததாகவும் கந்தபுராணத்தில்  விளக்குகிறார் ஸ்ரீகச்சியப்ப சிவாசார்யர்.

பஞ்சபூதங்களே இந்த உலகம். அதை ஒருநிலைப் படுத்துவதே சக்தி. சிவனும் சக்தியும் இணைந்த சண்முகர், நமக்கு அனைத்து ஆற்றலையும் அளிப்பதுடன், நம்மைக் காக்கக் கூடிய கடவுளா கவும் விளங்குகிறார். சிவாகமங்கள் சண்முகரை சிறப்பாகப் போற்றுகின்றன. அனைத்துச் சித்தர் களும் சிவபெருமானின் அருளைப் பெற்றிட கந்தனைத் துதித்தார்கள்.

முருகனின் ஆறுமுகங்களும் நான்கு திசைகளில் மட்டுமின்றி மேற்புறமும் உள்புறமுமாக தன்னுடைய ஆற்றல்களை வெளிப்படுத்த வல்லவை. எப்படி காற்றானது ஒரு மனிதனுக்கு இன்றியமையாததோ, அதுபோல் முருகனின் அருள் மிகவும் அவசியமானது.

கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?

உடலில் காணப்படும் ஆறு சக்கரங்களைத் தாண்டி, ஏழாவது நிலையான ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையில் ஆனந்த அனுபவத்தை அளிக்கவல்ல கடவுள் ஆறுமுகர். தெற்கு நோக்கி ஆறுமுகரை அமைத்திருப்பது, எதிரிகளைப் போக்கி நம்மைக் காப்பாற்றுவதற்காக.

இதனாலேயே ஸ்ரீசண்முகருக்கு, ஆறு கோணங் களில் பூஜை, ஆறு அக்ஷரங்கள் கொண்ட மந்திரம், ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்த திருக்கதை, ஆறு சிறப்புத் தலங்களில் பூஜைகள், சஷ்டி தினத் தன்று விரதங்கள் என்று ` 6 ' என்ற எண்ணிக்கை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

? உணவுக்கும் ஆன்மிக மார்க்கத்தில் நமது முன்னேற் றத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?

- எஸ்.ராமகிருஷ்ணன், மயிலாடுதுறை


சாத்விகம், ராஜஸம், தாமசம் என்று குணங் களை மூன்றாக வகுத்துள்ளார்கள். நாம் உண்ணும் உணவுகள், நமது உடலில் மட்டுமல்லாமல், புத்தி சக்திகளிலும் மாறுதல் ஏற்படுத்தக்கூடியவை. எனவே, ஆன்மிக வழியில் முன்னேற விரும்பு பவர்கள், சாத்விக உணவையே உட்கொள்ளுதல் அவசியம்.

உடல் வலிமைக்கும் மாமிச உணவுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதைப் பற்றி மருத்துவ ரிடம்தான் கேட்கவேண்டும். சைவ உணவையே உட்கொள்ளும் யானை பலம் வாய்ந்ததே. சைவ உணவு உட்கொள்ளும் பலரும் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வருவதை நாம் பார்க்கலாம்.

‘தனது உயிருக்குத் தீங்கு ஏற்பட்டாலும்கூட வேறு உயிர்களைக் கொல்வது கூடாது’ என்று திருவள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்தக் காலத்தில் அவரவர் தொழில் சார்ந்து உணவுப் பழக்கவழக்கம் இருந்து வந்ததை வரலாற் றில் காணலாம். எனவே, மாமிச உணவு உண்பவர் களும், படிப்படியாக அந்த வழக்கத்தைக் குறைத்து, முடிவில் முழுவதுமாக அசைவ உணவைத் தவிர்த்தவர்களாக இருப்பதன் மூலம், ஜீவ காருண்யம் பெருகும்; தெய்வத்தின் திருவருள் அதிகம் கிடைக்கும்.

 ? இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது, நம்முடைய சாதாரண ஆசைகளை வேண்டுதலாக முன்வைக்கலாமா?

- ஆர்.ரகுநாதன், கும்பகோணம்


நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள். அவரிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். நாம் குழந்தைகளாக இருந்தபோது, நம் பெற்றோரிடம் நிறையக் கேட்டிருப்போம். ஆனால், நாம் வளர வளர, அவர்களிடம் கேட்பது குறைந்து விட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.

அதுபோல், இறைவனை வழிபட்டு நமது குற்றம் குறைகளை அவரிடம் முறையிடுவதில், நமக்குத் தேவையானதை அவரிடம் கேட்பதில் தவறில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, `வேண்டத்தக்கதை அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ' என்பதை உணர்ந்த பிறகு, நமது பிரார்த்தனை அவரை அறிவதாகவே மட்டுமே அமையும். அதற்குப் பிறகும் சில காலம் கழித்து, நம் மனதின் பக்குவம் மேலும் அதிகமாகி, எவ்வித நோக்கமும் இல்லாமல், இறைவனை வழிபடுவது நமது கடமை என்பதை உணர்ந்து வழிபடத் தொடங்குவோம்.

அப்போது ஏற்படும் ஆனந்தமே பரமானந்தம். இதை ப்ரஹ்மானந்தம் என்றோ சிவானந்தம் என்றோ எப்படி வேண்டுமென்றாலும் குறிப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பரமானந்தம் ஒன்றுதான். இப்படியானதொரு நிலையை அடைவதற்கு, ஆரம்பக் கட்டத்தில் கடவுளிடம் கேட்பது தவறாகாது. அவரிடம் கேட்காமல் நாம் வேறு யாரிடம் கேட்பது?

அவரிடம் முறையிட்டுவிட்டால், நமக்கு அனைத்துக் காரியங்களும் நடைபெற்றுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும். அதனால், மனம் அமைதியாகும். மனதில் அமைதி ஏற்பட்டுவிட் டால், நம்மால் அடையமுடியாதது என்று எதுவுமே இல்லை.

மக்களின் பலவிதமான பிரார்த்தனைகள் நிறைவேறச் சிறப்பான மந்திரங்களும் நமது சாஸ் திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே, நம்முடைய பிரார்த்தனைகளை கடவுளிடம் முறையிடுவது நமது வழக்கமே.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002