தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 6

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 6
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 6

வெ.நீலகண்டன்

கோத்தர்களின் சாமிக்கு உயிர்ப்பலியோ, அசைவப் படையலோ கிடையாது. கோத்தர்களும் அசைவம் சாப்பிடுவதில்லை. கேழ்வரகு, சாமையரிசி, மூங்கிலரிசி, கோதுமைதான் உணவு. இந்த மக்களின் வழிபாடு வீட்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது. வீட்டைப் பொருத்தவரையிலும் அப்பா, அம்மாதான் ‘அய்யனோர்’, ‘அம்மனோர்’. காலையில் எழுந்ததும் பெற்றோரையும், சூரியனையும் வணங்கியபிறகே, வெளியில் கால் வைக்கிறார்கள். அப்பா, அம்மா இல்லாதவர்கள் வீட்டருகே இருக்கும் நடுகல்லை வணங்குவார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாசத்தில் ‘வல்தா’  என்ற சடங்கை நடத்து கிறார்கள் கோத்தர்கள். இது மிகவும் உக்கிரமானச் சடங்கு. இறந்தவர்களின் ஆவியைப் போக்கி ஊரைச் சுத்தம் செய்வதற்காக இது நடத்தப்படுகிறது. எவரேனும் இறக்க நேர்ந்தால், அவர்களுடைய ஓர் எலும்பை மட்டும் எடுத்து வந்து, அதில் அவர்களது பெயரை எழுதிச் சேகரித்து வைத்துக்கொள்வார்கள். ‘வல்தா’ சடங்கு நிகழும் நாளன்று,  ஒரு நாற்காலி செய்து அதில் அந்த எலும்பை வைத்து, படையலிட்டு வழிபடுவார்கள். இந்த வழிபாடு முடிந்ததும் எல்லா வற்றையும் கொண்டுபோய் எரித்துவிடுவார்கள்.

அதன்பிறகு, ஏழு பிரிவுகளிலிருந்தும் (பிரிவுக்கு ஒருவர்) ஏழு இளைஞர்கள், பாரம்பர்யமான  உடையை அணிந்துகொண்டு, மிகப்பெரிய ‘வல்தா கல்’லை  தலைக்குமேல் தூக்கி நிறுத்த வேண்டும். அதுவும், ஏழுபேரும் தங்களின் சுண்டுவிரல்களை மட்டுமே பயன்படுத்தி, வல்தா கல்லைத் தூக்க வேண்டும்.  தடையின்றி வல்தா கல்லைத் தூக்கி நிறுத்திவிட்டால், ஊருக்கு எந்தக் குறையும் வராது. கிராமம் சுத்தமாகிவிட்டது என்று அர்த்தம். அடுத்து விருந்து... சாமைச்சோறு, அவரைக் குழம்பு என அமர்க்களப்படும். விருந்து முடிந்ததும் நடனம் தொடங்கிவிடும்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 6

கோத்தர் மக்களின் நடனங்கள் ஆதிவடிவ மானவை. பக்தியை முன்னிறுத்தி ஏராளமான வாய்மொழிப்பாடல்கள் இருக்கின்றன. நாகஸ்வரம் வடிவிலான ‘கொல்’ என்ற ஊதுகருவி,  தப்பட்டை, கொட்டு வடிவிலான தோல்கருவி களைப் பயன்படுத்துகிறார்கள். கொம்பும் இசைப்பதுண்டு. இவை தவிர, வட்டமணித் தட்டு, ஜால்ரா கருவிகள் ஆகியனவும் உண்டு.

‘அய்யனோர்’, அம்மனோர்’ கோயில் திருவிழா இரண்டு நாள்களுக்கு நடக்கும். முதல்நாள், களி மண் எடுக்கும் நிகழ்வு. பெண்கள் எல்லோரும் ஒன்றுகூடி காட்டுக்குப் போய் களிமண் எடுத்து, அதைக் கோபுர வடிவில் செய்து தலையில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக வருவார்கள். அந்தக் களிமண் மூலம் புதிய பானை, சட்டிகள் செய்வார்கள். அன்றோடு பழைய பானை, சட்டி களை தூக்கி வீசிவிடுவார்கள். எல்லோரும் கோயிலுக்குக் கற்பூரம். பூ, நெய் கொடுப்பார்கள். திருவிழா நேரத்தில் மட்டும் கோயில் வாசல் வரைக்கும் பெண்கள் வரலாம். கொண்டை உள்ள ஆண்கள் கோயிலுக்குள் செல்வர். மற்றவர்கள் எல்லையில்தான் நிற்க வேண்டும். வழிபாடு முடிந்ததும் விருந்து, நடனம்.

தினை விதைப்பையும் திருவிழா வாகக் கொண்டாடுகிறார்கள் கோத்தர்கள். அன்று வீட்டுக்கு வீடு பொங்கல் வைத்து அய்யனோர், அம்மனோருக்குப் படைத்து வழிபடு கிறார்கள். இரவு, வழக்கம் போல் ஆட்டக்களம் அதிர்கிறது. ஐம்பூதங் களையும் அழைக்கும் பாடல்களைப் பாடி ஆடுகிறார்கள். அதேபோல் அறுவடைத் திருவிழா. இவை தவிர, மாடுகளுக்கு உப்பு புகட்டும் நிகழ்வும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

கோத்தர்கள், நடுகல்லின் வழியே தங்கள் அய்யனோரைக் கண்டடைகிறார்கள். எல்லா ஆதி சமூகங்களுமே, கல்லின் வடிவில், மரத்தின் வடிவில், மலையின் வடிவில் தங்கள் மூதாதையின் ஆன்மா தங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறார்கள். அந்த உணர்வுதான் அவர்களின் கட்டுக் கோப்பான, மகிழ்ச்சியான, இணக்கமான வாழ்க்கைக்குக் காப்பாக இருக்கிறது.

நம் சமூகத்தில் வெகு சிறுபான்மையாக இருப்பவர்கள் திருநங்கைகள். திருநங்கைகள் பற்றிய தெளிவு, நம் சமூகத்தில் போதிய அளவுக்கு இல்லை. கேலிப்பொருளாக, தீண்டத்தகாதவர் களாகவே அவர்களைக் பார்த்துப் பழகியிருக்கிறோம். ஆணைப் போல, பெண்ணைப்போல திருநங்கைகளும் ஓர் உயிர்.   மூன்றாம் பாலினம். அவர்களுக்கென தனித்த வாழ்க்கை முறை, சாமிகள், வழிபாடுகள், சடங்குகள், உறவுமுறைகள் உண்டு. அது குறித்து வெகுசமூகம் புரிந்துவைத்திருப்பது மிகவும் குறைவு.

திருநங்கைகள் வளர்ப்பால் உருவாவதில்லை. பிறப்பிலேயே அவர்கள் பாலினச் சிக்கலோடு பிறக்கிறார்கள். நான்கைந்து வயதில் அவர்கள் தங்கள் இயல்பான நிலையை அறிந்து மிகப் பெரும் மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். அவர்களின் சிக்க லைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நம் சமூகம் பக்குவப் படவில்லை.  இன்று நேற்றல்ல... சரித்திரத்தின் பல பக்கங்களில் திருநங்கைகள் வாழ்ந்திருக்கிறார்கள். மன்னர்களாக, ராஜதந்திரி களாக, படைத் தளபதிகளாக, ஆள்வோரின் ஆலோசகர்களாகத் திருநங்கைகள் இருந்திருக்கிறார்கள். 

பிறப்பில் பாலினப் பிறழ்வுக்குள்ளாகும் திருநங்கைகள், தங்களைப்போலவே இருக்கும் பிற திருநங்கைகளோடு இணைந்து வாழ்வதையே விரும்புவார்கள். அப்படி வாழும் வாழ்க்கைதான் அவர்களை முழுமைப்படுத்தும். அம்மா, அக்கா, தங்கை, சித்தி, அத்தை, பாட்டி என அவர்களுக்குள்ளாகவே உறவுகளை வகுத்துக்கொண்டு,  வாழ்க்கையைக் கொண்டாட்டமாக கழிக்கிறார்கள்.

பொதுவெளியில் திருநங்கைகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உண்டு. ஆனால், அவர்களின் குடும்பக் கட்டமைப்பு கட்டுக்கோப்பானது. தங்களைத் தத்தெடுத்த தாயம்மாவை தெய்வமாக வணங்குவார்கள் திருநங்கைகள். தாயம்மா முன் அமரக்கூட மாட்டார்கள். அவரின் சொல்லுக்கு மறுசொல் பேசுவதில்லை. திருநங்கைகளின் வழிபாடு மிகவும் உளப்பூர்வமானது. விழுப்புரம் அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவரோடு திருநங்கைகளுக்கு தொன்மத் தொடர்புகள் உள்ளன.

மகாபாரதத்தில், பாண்டவர்கள் போரில் வெற்றி பெற வேண் டும் என்பதற்காக, குற்றங்கள் புரிந்திராத, சகல லட்சணங்களும் பொருந்திய ஒருவரை களப்பலியிட ஏற்பாடு செய்கிறார்கள். அதற்குத் தக்கவனாக இருப்பவன், அர்ஜுனன் மகன் அரவான். களப்பலியாக இசையும் அரவான், தான் பலியாவதற்குமுன் ஒரு நாளேனும் இல்லற வாழ்வில் இருந்து பார்க்கவேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், நாளை மரணம் என நிச்சயிக்கப்பட்ட ஒருவனை மணக்க எந்தப் பெண்ணும் முன்வரவில்லை. வேறு வழியின்றி கிருஷ்ணரே மோகினி உருவெடுத்து, அரவானை மணந்து அவன் ஆசையை நிறைவு செய்கிறார். இல்லற வாழ்வை அனுபவித்த அரவான் விருப்பத்தோடு பலிக்களம் செல்கிறான். மோகினி பொலிவிழந்து போகிறாள். திருநங்கைகள், அரவானைத் தங்கள் மணாளனாகவும், தங்களை மோகினியாகவும் கருதியே கூவாகம் வருகிறார்கள்.  

சித்திரை முழுநிலவு நாளில் நடக்கும் திருவிழா வில், கூவாகத்தில் குவிகிற திருநங்கைகள் அர்ச்சகரின் கரத்தால் தாலி கட்டிக்கொள்வர். இரவு முழுவதும் அரவானை நினைத்து ஆடிப்பாடி மகிழ்வர். மறுநாள் அலங்கரிக்கப்பட்ட தேரில், அரவான் சிலை வைக்கப்பட்டு கொலைக் களத்துக்குக் கொண்டு செல்லப்படும். திருநங்கைகள் அரவானின் நிலை யைக் கருதி அழுது புலம்புவார்கள். கொலைக்களத்தில் அரவான் தலை கொய்யப்படும். அதுவரை, மங்கலம் தரித்து, கொண்டாடிக் களித்த திருநங்கைகள் அரவானை இழந்த மோகினியாக மாறிப்போவார்கள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 6

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து, இந்தத் திருவிழாக் காலத்தில் திருநங்கைகள் கூவாகத்தில் குவிகிறார்கள். ஆனால் கூவாகம் கூத்தாண்டவர், திருநங்கைகளின் குலதெய்வம் அல்ல. அவர்கள் வீட்டில் வைத்து வணங்கும் குல தெய்வம், நல்லது- கெட்டது களிலெல்லாம் முதன்மை பெறும் தெய்வம், போத்ராஜ் மாதா. குஜராத் மாநிலம், அகமதாபாத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள போத்ராஜ் என்ற ஊரில் இருக்கிறது இந்த மாதாவின் கோயில்.  கையில் சூலாயுதம் தாங்கி, சேவல் மேல் அமர்ந்திருக்கும் இந்த மாதாதான் திருநங்கைகளின் குலதெய்வம். இந்தியாவில் எந்த மூலையில் பிறந்தாலும் ஒருமுறையேனும் இந்தக் கோயிலுக்குச் சென்றாக வேண்டும். அப்போதுதான் ஒரு திருநங்கையின் வாழ்க்கை முழுமைபெறும் என்பது நம்பிக்கை.

திருநங்கைகள் வாழ்வில் நடக்கும் மிக முக்கிய வழிபாடு,  மாதா பூஜை. திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்த 41-வது நாளில் இந்த பூஜை நடத்தப்படும். பூப்பூனித நீராட்டு விழாக்கள் நடக்குமல்லவா, அதைப் போன்றதொரு விழா.

திருநங்கை சமூக உறவுகள் மட்டுமின்றி, அந்தத் திருநங்கையைப் பெற்ற தாய் தந்தையரையும் இந்த விழாவுக்கு அழைத்து கோலாகலமாக நடத்து வார்கள். மஞ்சள் கலந்த நீரில் நீராடியபிறகு, தத்தெடுத்த அம்மா தன் கையில் பச்சைநிற ஆடையை எடுத்துத் தர,  திருநங்கை அணிந்து கொள்வார். தொடர்ந்து, மாதாவுக்குப் பெரிய அளவில் படையல் போடப்படும்.

அன்று இரவு, திருநங்கையின் முகத்தைச் சேலையால் மூடி, கும்பம் நிறையப் பால் ஊற்றி, அந்தக் கும்பத்தைத் தலையில் இருத்தி, அருகிலுள்ள நீர்நிலைகளுக்குச் சென்று ஊற்றிவிட்டு வருவார்கள். இதற்குப் பெயர் ‘பாலூற்றும் சடங்கு’. இந்தச் சடங்கைச் செய்த பிறகே, திருநங்கை தன் வாழ்வில் நிறைவுறுவார். தங்களுக்கு நேரும் நன்மை, தீமைகள் அனைத்தும் மாதா கொடுத்தது என்றே கடந்து செல்கிறார்கள் திருநங்கைகள். எந்தச் செயலைத் தொடங்கினாலும் மாதாவின் முன்னால் கண்மூடி அமர்ந்து குறிகேட்ட பிறகே செய்வார்கள்.

திருநங்கைகள் மட்டுமல்ல, இந்தச் சமூகத்தில் விளிம்பில் வாழும் எல்லாச் சமூகங்களுக்கும் தனித்துவமான ஒரு வழிபாடு இருக்கிறது. அவர்களுக்கேயான ஒரு குலசாமி இருக்கிறது. அந்தச் சாமி கொடுக்கிற நம்பிக்கையில்தான் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது. எவர் காதிலும் விழாத அவர்களின் கோரிக்கைகளுக்காக, தன் காதுகளைத் திறந்து வைத்துக்கொண்டே அவர்களின் மனசுக்கு நெருக்கமாக அரூப வடிவில் உலவிக்கொண்டிருக்கிறது குலசாமி!     
                                                                                                  
- மண் மணக்கும்...

படங்கள்: எம்.விஜயகுமார், தி.குமரகுருபரன்

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 6

தாள்!

இறைவனைக் குறிப்பிடும்போது, `தாள்' என்று திருவடிகளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். 

`தலை' என்றால் குல்லா இருக்கிறதா என்று பார்ப்பார்கள். `முகம்' என்றால் விபூதிப்பட்டை இருக்கிறதா, நாமம் இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றும். ‘மார்பு’ என்றால் சிலுவை தொங்குகிறதா என்ற ஆராய்ச்சி எழும்.

ஆகவே, வள்ளுவர் எல்லா சமயங்களுக்கும் பொதுவான  இறைவனைக் குறிப்பிடுகிறார். 

(சொற்பொழிவு ஒன்றில் குன்றக்குடி அடிகளார்  பேசியது)