தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!

ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: சிதம்பரம்

மணம் துறந்து, சிவத்தில் சிந்தையைச் செலுத்தி, இமைப்பொழுதும் ஈசனை மறவாமல்,

ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!

திருப்பணிகளாலும் பாடல்களாலும் சைவம் வளர்த்த திருநாவுக்கரசரைப் பல்லவ மன்னன் ஒருவன், பல கொடுமைகளுக்கு ஆளாக்கிய கதையைச் சரித்திரம் கூறும்.

அதனால் தங்களின் குலத்துக்கு நேர்ந்துவிட்ட  அபவாதத்தை - பெரும் பாவத்தைக் களையும் விதமாகவே, பிற்காலத்தில் அந்த மன்னனும் அவனுக்குப் பின்வந்தவர்களும் பல சிவாலயங் களை நிர்மாணித்தார்கள் போலும்!

தமது முதிய வயதில் திருக்கயிலைக்குச் சென்று சிவனாரைத் தரிசிக்க விரும்பினார் அப்பர் சுவாமிகள். ஆனால், முதுமைப் பிராயத்தில் அவரை அலைக்கழிக்க விரும்பாத கயிலை நாயகன், திருவையாறு திருத்தலத்திலேயே அப்பர்  சுவாமிகளுக்குக் கயிலை தரிசனம் தந்து அருள் புரிந்தார்.

இங்ஙனம், அப்பர் சுவாமிகளிடம் கயிலை நாயகன் கொண்டிருந்த அளப்பரிய கருணைத் திறத்தின் காரணமாகத்தான், அப்பர் சுவாமிகளைத் துன்புறுத்திய பாவத்துக்குப் பரிகாரமாக தாங்கள் எழுப்பிய கோயில்கள் சிலவற்றில், இறைவனுக்குக் `கயிலாசநாதர்' என்ற திருப்பெயரையே சூட்டி, பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள் போலும், பல்லவ மன்னர்கள்.

அந்த வகையில், பிற்கால பல்லவ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டு, அவர்களுக்குப் பின் வந்த சோழர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டத் திருக்கோயில்தான் தொரவி அருள்மிகு கயிலாச நாதர் திருக்கோயில்.

`இராஜேந்திர சோழ' வளநாட்டின் துணை நாடான பனையூர் நாட்டின் ஊர்களில் ஒன்றாக முற்காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கியது தொரவி. சிவனடியார்களான சைவத் துறவிகளுக்கு மன்னர்களால் இறையிலியாக அளிக்கப்பட்டது  இவ்வூர். இதையொட்டி, முற்காலத்தில் இவ்வூர் `துறவியூர்' என்று அழைக்கப்பட்டதாகவும், அந்தப் பெயரே தற்போது மருவி `தொரவி' என்று அழைக் கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!

ஒரு காலத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக அமைந்திருந்த திருக் கோயிலின் இன்றைய சிதைவுற்ற நிலையைக் கண்ட போது, மனம் பரிதவித்துப் போனோம். மன்னர்கள் காலத்தில், நித்திய பூஜைகளும் விழாக்களுமாக பொலிவுற்று விளங்கிய தொரவி அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், தற்போது முழுவதும் சிதிலமடைந்து, வெறிச்சோடி கிடக்கும் நிலையைக் கண்டபோது நம் நெஞ்சைத் துக்கம் மலையாக அழுத்தியது.

ஆலயம் சிதைவுற்றுக் கிடந்தாலும், இறைவன் பூரண அருள் சாந்நித்தியத்துடன், தம்மைத் தரிசித்து வழிபடும் பக்தர்களின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றும் கருணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்பதுதான் மிகவும் விசேஷம்.

அப்படி, தனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை, தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன், நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஓர் அன்பர்.

‘`நான் போட்டோகிராபராக பணிபுரிகிறேன். எனது திருமணம் பல காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. இந்த நிலையில், என் நண்பர் ஒருவர் இந்தக் கோயிலைப் பற்றி என்னிடம் தெரிவித்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

நானும் ஒரு பிரதோஷத்தன்று இந்தக் கோயிலுக்கு வந்தேன். கோயில் சிதிலமடைந்து கிடந்ததைப் பார்த்தபோது, எனக்கு முதலில் நம்பிக்கையே ஏற்படவில்லை. ஆனால், என் நண்பர் மிகவும் உறுதியாகச் சொன்னதால், நானும் கயிலாசநாதரை மனமுருகி வேண்டிக்கொண்டேன். விரைவில் பலன் கிடைத்தது. இரண்டே மாதத்தில் கல்யாணம் நடந்தது. இதோ, இப்போது என் மனைவி கருவுற்றிருக்கிறாள்’’ என்று நெகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார், அந்த அன்பர்.

கோயிலில் அருள்பாலிக்கும் தெய்வ மூர்த்தங்கள் பல்லவர் மற்றும் சோழர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மிகப் பெரிய பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்ட விநாயகர் மற்றும் முருகன் சிற்பங்கள், கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகின்றன. இந்த ஆலயத்தில் கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. ஆனாலும், பார்க்கும்போதே கோயிலின் புராதனச் சிறப்பை நம்மால் அறியமுடிகிறது.

ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!

பல்லவர்களாலும் பிற்காலச் சோழர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட ஐயனின் ஆலயம் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. பின்னர், செங்கற்களால் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாம். இப்போது மீண்டும் சிதிலமடைந்து திகழ்கிறது இந்தச் சிவாலயம்.

தற்போது, புதுச்சேரியைச் சேர்ந்த அன்பர் சரவணன், திருக்கோயில் திருப்பணிகளை மேற் கொண்டிருக்கிறார். தினமும் வீடுகளுக்கு செய்தித் தாள்களை விநியோகிக்கும் சரவணன், இந்தக் கோயிலின் திருப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

 ‘`சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு, இந்தக் கோயிலை தரிசித்தேன். சிதிலம் அடைந்த இந்தக் கோயிலைப் புதுப்பிக்க நினைத்தேன். முதற்கட்ட மாக, ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் கோயிலில் மண்டியிருந்த புதர்களை அகற்றி, தினசரி ஒரு வேளை பூஜை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்தோம்.  கோயிலின் பழைமை மாறக்கூடாது என்பதற்காக அர்த்தமண்டபம், கருவறை இரண் டையும் முழுவதும் கற்களால் அமைக்க விரும்பி னேன். அதற்காக எனக்கென்று இருந்த ஒரே சொத்தையும் விற்றுவிட்டேன். இருந்தும் போதுமான நிதி கிடைக்காத காரணத்தால், திருப்பணிகள் தடைப்பட்டிருக்கின்றன. எனது முயற்சிக்கு உறுதுணையாக பி.கே.சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.சங்கர் ஆகியோரும் ஊர் மக்களும் இயன்ற உதவிகளைச் செய்கின்றனர்’’ என்றவரிடம், அம்பிகையின் திருவுருவம் பற்றிக் கேட்டோம்.

ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!

அம்பிகையின் சிலையை யாரோ எப்போதோ களவாடிச் சென்றுவிட்டார்களாம். தற்போது அம்பிகையின் திருவுருவம் புதிதாகச் செய்யப்பட விருப்பதாகக் கூறினார். அங்கிருந்த ஊர்ப் பெரிய வர்கள், காஞ்சி பெரியவர் இந்தத் தலத்துக்கு வந்து அருள்மிகு கயிலாசநாதரை வழிபட்ட நிகழ்ச்சியைப் பெருமிதத்துடன் தெரிவித்தார்கள்.

கற்றளி கட்டுமானமாகத் தொடங்கிய கருவறை மற்றும் அா்த்தமண்டப திருப்பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. மேலும் அம்மன் சந்நிதி, விநாயகர், முருகன், நந்தி மண்டபம், நவகிரகச் சந்நிதி, கொடிமரம், திருச்சுற்று மதில் மற்றும் திருக்குளம் ஆகிய திருப்பணிகளும் தொடங்கப்படவேண்டும்.

தன்னுடைய குடும்பத் தேவைகளை உழைத்து நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற உறுதியுடன், தனக்கென்று  இருந்த  ஒரே சொத்தையும் விற்று, கோயில் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சரவணனின் உயர்வான விருப்பம் பாராட்டுக்கு உரியது. அவருடைய உன்னத லட்சியம் பூர்த்தியடைய நாமும் தோள் கொடுப்போம்.

ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!

திருக்கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும்;  நாளும் நித்திய பூஜைகளும் விழாக்களும் கோலா கலமாக நடைபெறவேண்டும். அதற்கு இறைவனின் திருவருள் கூடிவர வேண்டுமென்று ஐயன் கயிலாசநாதரைப் பிரார்த்திப்பதுடன், நாமும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம்.

திருமணத் தடை நீக்கும் ஐயன் கயிலாசநாதர், நம்முடைய தீவினைகளையும் நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை அருள்வார் என்பது உறுதி.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

திண்டிவனம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடுத்து  இடப்புறமாக திரும்பும் தஞ்சாவூா் நெடுஞ்சாலையில், சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது பனையபுரம். அங்கிருந்து புதுச்சேரி செல்லும் வழியில், சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது `தொரவி' திருத்தலம்.

வங்கிக் கணக்கு விவரம்:

A/c Name:
ENATHI NATHA NAYANAR
ARAKKATTALAI,
BANK Name :
STATE BANK OF INDIA,   
Branch :
JIPMER BRANCH, Puducherry,    
A/C NO : 34579211546  
IFSC : SBIN0002238 

மேலும் விவரங்களுக்கு: எம்.சரவணன், (09025265394)