Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...

திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...

கூவத்திலிருந்த தாய்மாமன் வீட்டில் கொண்டு விடப்பட்ட அடிகளின் வாழ்க்கை அப்படி யொன்றும் மகிழ்ச்சியாக இல்லைதான். அந்தச் சூழலிலும் அவர் இறைவழிபாட்டிலும், கல்வி பயில்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். தன் தங்கைக்கும் ஆதரவாக இருந்தார். சிலநேரங்களில், அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்குச் சென்று விடலாமா என்றுகூட நினைத்ததுண்டு. அதற்கான சூழ்நிலையும் ஒருநாள் ஏற்படவே செய்தது.

அன்று தாய் மாமன் வீட்டில், அவர் மகனுக்குத் திருமணம்; வருவோரும் போவோருமாக, ஏராளமா னோர் வந்து போய்க்கொண்டிருந்தனர். காலை பத்து மணி முதல் மாலை மூன்று மணி வரை விருந்து நடைபெற்றது. சாதாரண நாளிலேயே கவனிக்காமல் அலட்சியப்படுத்துபவர்கள், கல்யாண வீட்டிலா கவனிக்க போகிறார்கள்?

அடிகளையும் அவர் தங்கையையும் கவனித்து, ஒரு வாய் உணவுபோட, அந்தக் கல்யாண வீட்டில் நாதியில்லை.

‘அன்னையில்லாப் பிள்ளை இருப்பது அவம் அவமே’ எனும் அருந்தமிழ் வாக்கு உண்மையானது. வெகுநேரம் பசியோடு இருந்த அடிகள், கடைசியாக ஒரு பந்தியில் தங்கையுடன் உணவுகொள்ள உட்கார்ந்தார். அனைத்தும் பரிமாறப்பட்டு, அடிகள் உணவில் கை வைக்கும் நேரம்... விருந்தினர் ஒருவரைக் கைப்பிடியாக பந்திக்கு அழைத்து வந்த தாய்மாமன், அவருக்கு அங்கே இடமில்லை என்பதைக் கண்டார். உடனே வேகமாகப் போய், அடிகள் கையில் எடுத்த உணவைத் தடுத்து,

``இப்ப என்ன அவசரம் உனக்கு? அப்பறம் பாத்துக்கலாம் எந்திரி!” என்றபடியே, அடிகளை இழுத்துத் தள்ளிவிட்டு, தான் அழைத்து வந்தவரை அங்கே அமரவைத்தார்.

அடிகளுக்கு உள்ளம் அதிர்ந்தது. ``கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே!” என்றபடியே, தங்கையுடன் ஆலயத்துக்குச் சென்று, ‘`அம்மா, இப்படி எங்களை வருத்து கிறாயே...’’ என்று அழுது அரற்றினார். இரவும் வந்துவிட்டது. பசியால் வருந்திய அடிகள், தங்கை யுடன் ஆலய வாசலிலேயே படுத்துத் தூங்கினார்.

திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...

மறுநாள்! அதிகாலையில் எழுந்து நீராடி காலை வழிபாட்டை முடித்துக்கொண்ட அடிகள், தங்கையுடன் கூவத்தைவிட்டுப் புறப்பட்டார். சென்னையை நோக்கிய அந்தப் பயணம், நடைபயணமாகவே இருந்தது.

வழியில் ஆறு குறுக்கிட்டது. சொன்னால் நம்ப வேண்டும்! கூவத்திலிருந்து புறப்படுவதால் கூவம் எனப் பெயர் பெற்ற அந்த ஆற்றில், அப்போது தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது! கரையைத் தொட்டுக்கொண்டு, நீர் நிறைந்து ஓடிக்கொண்டி ருந்தது. தங்கை பதறினாள். “பயப்படாதே!” என்று ஆறுதல் கூறிய அடிகள், அவளைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு, ஆற்றில் இறங்கினார்.

“எப்போதோ வரும் மரணம் இப்போது வந்தா லும் சரி!”என்ற எண்ணத்துடன் மெள்ள மெள்ள நடந்தார். முழங்கால், தொடை, இடுப்பு, மார்பு, கழுத்து எனத் தண்ணீர் அதிகரித்துக்கொண்டே வர, தோளில் இருந்த தங்கை, “ஐயோ! ஐயோ!” எனக் கூவிக்கொண்டே இருந்தாள். அன்புத் தங்கையின் அலறல் அடிகளின் செவிகளில் விழவில்லை.

அவர் வாயும் மனமும் , “முருகா!முருகா!” எனக் கதறிக் கொண்டேயிருந்தது. வாய் வரையில் வந்த வெள்ளம், அடிகள் கதறிய முருகநாமத்தைக் கேட்டு, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதைப் போல, அப்படியே குறையத் தொடங்கியது. கரை ஏறியவர்களின் பயணம் தொடர, மாலை நேரத்தில் மயிலாப்பூர் வந்துசேர்ந்தார்கள்.

தேடி வந்த குழந்தைகளின் சீர்கேடான தோற்றத்தைக் கண்டதும் கண்கலங்கினார் தந்தை; விவரமெல்லாம் கேட்டறிந்தார். அவரின் கண்ணீர் அதிகமானது.

“இப்படிப்பட்ட கொடியவர்களிடம் இனியும் குழந்தைகளை அனுப்பக்கூடாது” என்ற முடிவுக்கு வந்த தந்தை, “இனிமேல் அங்கு போகவேண்டாம். இங்கேயே எங்களோடு இருங்கள்!” என ஆறுதல் கூறி உணவிட்டார் .

தந்தையுடன் மயிலையிலேயே இருந்த அடிகள், கல்வி கற்பது, கோயிலுக்குப் போவது, முருக மந்திரத்தை உருவேற்றுவது, திருவருட்பா பாராயணம் என விநாடி நேரம்கூட  வீணாகாத வாறு பார்த்துக்கொண்டார். மாலையில் வழிபாடு முடிந்ததும் தெரு விளக்கிலேயே படித்தார். வேதியர் ஒருவரிடமிருந்து ‘மகாதேவ மாலை’ எனும் வள்ளலாரின் நூலைப் பெற்ற அடிகள், அந்த நூலில் உள்ள நூறு பாடல்களையும் பத்தே நாள்களில் மனப்பாடம் செய்து முடித்தார். அப்போது அடிகளுக்கு வயது ஒன்பது; மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்.

விவரமறிந்த வேதியர், அடிகளைப் பாராட்டி நான்கணா (கால் ரூபாய்) கொடுத்தார். அதைப் பெற்ற அடிகளோ தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு போய், வேதியரிடம் தந்து பூஜை செய்யச் சொன்னார்.வேதியர் திகைத்துப்போய், `‘நீ சிறப்புடன் வாழ்வாய்'’ எனப் பலமுறை வாழ்த்தினார். ‘`அந்த வேதியர் கூறிய வாழ்த்துரைதான், அடியேனை நன்னிலைக்கு உயர்த்தியது” என இந்த நிகழ்ச்சி யைப் பற்றி, அடிக்கடி கூறுவார் அடிகள். இதன் பிறகு நடந்த நிகழ்ச்சிதான், தொடக்கத்தில் நாம் பார்த்த தச்சு வேலைக்குப் போன நிகழ்ச்சி.

ஒருநாள், அடிகளிடம் ஏதோ கடுங்கோபம் கொண்ட தச்சுக்கம்பெனி உரிமையாளர், ``முட்டாளே! அறிவில்லையா உனக்கு?” என்று கத்தி, ஓங்கி ஓர் அறையும் அறைந்தார்.

பிறகு என்ன? நேரே கபாலீஸ்வரர் சந்நிதிக்கு  வந்த அடிகள், “இனிமேல் தச்சுத்தொழில் ஆயுதங்கள் எதையும் தொடுவதில்லை”என்று கண் களை மூடியபடி நின்று உறுதி கூற, ``இந்தா, பிடி!” என்ற குரல்கேட்டுக் கண்களைத் திறந்தார்.

எதிரே பிரசாதங்களுடன் குருக்கள்! விபூதி- மலர்கள் ஆகியவற்றை அடிகளிடம் தந்தார் அவர். இறைவன் திருவருளை எண்ணி வியந்து, அன்று முதல் வேலைக்குப் போவதை நிறுத்தினார். ஆலயத்திலேயே தங்கி, பெரும்பாலான நேரங் களைக் கழிப்பது; அங்கு கிடைக்கும் உணவுப் பிரசாதங்கள் - சுண்டல் ஆகியவற்றை உண்பது; கண்ட இடங்களில் படுப்பது; எப்போதாவது வீடு திரும்புவது  என நாள்கள் போய்க் கொண்டிருந்தன.

கண்டிக்க மனம் இல்லாத தந்தையோ, வாய்மூடி மௌனியானார். கோயில் முதலான இடங்களில் இருந்தபோது அடிகள், தம்மை மறந்த நிலையில் இசையோடு பாடல்களைப் பாடி, விளக்கம் சொல்லத் தொடங்கினார். கேட்கத் தொடங்கிய சிறு கூட்டம், போகப் போகப் பெருங்கூட்ட மானது.  ‘பிரசங்க பூஷணம்’ எனும் பட்டப்பெயரும் கிடைத்தது. நாள்தோறும் நூல்களைப் படித்துப் பெரும்புலமை பெற்ற அடிகளின் சொற்பொழிவு, சென்னையில் பல இடங்களிலும் நிகழத் தொடங்கியது. நுணுக்கமான தகவல்களைக் கேட்டு வியந்த அன்பர்கள், வள்ளலாரின் திருவருட்பா முதலான நூல்களுக்கு உரை எழுதும் படி, அடிகளிடம் வேண்டினார்கள்.

அடிகளும் உடன்பட்டு உரை எழுதத் தொடங் கினார். சந்தேகம் உண்டாகும் இடங்களில், அனுபவசாலிகள் பலரையும் கேட்டே எழுதினார்.ஒரு தருணத்தில், அடிகளுக்கு ஒரு நூலில் ஓரிடத்தில் சந்தேகம் உண்டானது. பலரிடமும் கேட்டுப் பார்த்தார். விளக்கம் கிடைக்கவில்லை. ``யாராவது உரை எழுதியிருக்கிறார்களா?” என அறிஞர்கள் பலரிடம் கேட்டும் பலன் இல்லை. மனதில் வருத்தமும், எடுத்துக்கொண்ட காரியத் தைச் செம்மையாகச் செய்ய முடியாமல் போய் விடுமோ என்ற பயமும் அடிகளுக்கு உண்டாயின. நேரே கந்தக்கோட்டம் கோயிலுக்குச் சென்று முருகனைப் பிரார்த்தித்துவிட்டு வந்தார்.

இரவு வெகுநேரம் கழித்தே உறங்கினார். அதிகாலை வேளையில் அடிகளின் கனவில் ஐந்து வயது சிறுவனின் தோற்றத்தில் தோன்றிய ஆறுமுகப்பெருமான், “அன்பனே வருந்தாதே! நீ தேடும் உரை, மயிலைக்கு அடுத்துள்ள மந்தை வெளியில் ஒரு பாட்டியிடம் உள்ளது” என்று சொல்லி, முகவரியையும் கொடுத்து மறைந்தார்.

திடுக்கிட்டு எழுந்தார் அடிகள். நீராடிவிட்டு காலை வழிபாடுகளை முடித்துக்கொண்டு, முருகப் பெருமான் தந்த முகவரிக்கு ஓடினார். அங்கே குடிசையில் வசித்த மூதாட்டியைச் சந்தித்தார். ``யார் தம்பி நீ, என்ன வேணும்?”என்று கேட்ட படியே, வெந்நீர் அடுப்பில் தாள்களைக் கிழித்துப் போட்டுக்கொண்டிருந்தார், அந்த மூதாட்டி.

பார்த்த அடிகள் உடல் நடுங்க, ``பாட்டி! இது என்ன?'' எனக் கேட்டார்.

“எல்லாம் பழய பொத்தகங்க தம்பி! செல்லரிச்சு வீணாப் போவுது. இதையெல்லாம் படிக்கிறதுக்கும் ஒரு நாதியில்ல. அதான், அக்னி பகவானுக்கு அர்ச்சனை பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார்.

அப்படியே தடுத்த அடிகள், அங்கிருந்த பழைய நூல்களையெல்லாம் எடுத்துப் பார்த்தார். அடிகள் உரை தேடி அலைந்த நூலும், அவற்றில் ஒன்றாக இருந்தது. பிரித்துப் பார்த்து அங்கேயே தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டு, அங்கிருந்த பழைய புத்தகங்களை எல்லாம் தான் எடுத்துக் கொண்டார். மூதாட்டிக்கு ஐந்து ரூபாய் பணமும் கொடுத்தார். மூதாட்டியோ, “அப்பா! இதையெல் லாம் வீசக்கடயில எடைக்கு போட்டாக்க, அர ரூவா முக்கா ரூவா கூட கிடைக்காது. மொத்தமா அஞ்சு ரூவா குடுத்தியே... நல்லா இருப்பா!'' என மனமார வாழ்த்தினார்.

திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...

நூல்களையெல்லாம் கட்டி எடுத்துக்கொண்ட அடிகள், நேரே கந்தக்கோட்டம் சென்று, முருகன் திருமுன்னால் நூல்களை வைத்து, நெகிழ்ச்சியோடு அவரை வணங்கி வழிபட்டு திரும்பினார்.

அடிகளுக்குத் திருமணம் நடந்தது. அடிகளுக்கும் ஜயலட்சுமி என்பவருக்கும் நடந்த அந்தத் திருமணம் திருவல்லிக்கேணியில் நடந்தது. சொற்பொழிவுகளால் வருகின்ற வருமானத்தில், ஏதோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. “இந்த வறுமை தீர இறைவன், எப்போது அருள் செய்வானோ?” என எண்ணினார் அடிகள்.

அன்று மாலையிலேயே அடியார் ஒருவர், குதிரை வண்டியில் வந்து, இருபது ரூபாய் தந்தார். “உங்களை நன்கு அறிவேன் நான். மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்!”என வேண்டினார்.

அடிகளுக்கு மெய்சிலிர்த்தது. “தெய்வமே! காலையில்தானே உன்னிடம் முறையிட்டேன். அதற்குள்ளாக அருள்புரிந்துவிட்டாயே!” என்று கண்ணீர் சிந்தினார். வந்தவரோ, ராயபுரத்தில் இருந்த தனது வீட்டுக்கு  அடிகளை அழைத்துச் சென்று தங்கவைத்து, “இங்கே அருகில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கு வாரம் இரு நாள்கள், தாங்கள் சொற்பொழிவாற்ற வேண்டும். அதற்கு, முன்பணமாகத்தான் ரூபாய் இருபது தந்தேன்” என்றார்.  கூடவே இரண்டு பட்டு வேட்டிகள், ஒரு சால்வை, ஒரு பட்டுப்புடவை, பட்டு ரவிக்கை, ஐந்து ரூபாய் (காசுகள்) ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து வணங்கினார்.

அதன்படியே சொற்பொழிவு நடக்க, நிறைவு நாளன்று பத்து சவரன் பதக்கத்தோடு கூடிய ருத்ராட்ச மாலையை அடிகளுக்கு அணிவித்து மகிழ்ந்தார் செல்வந்தர்.

இவ்வாறு சொற்பொழிவுகள் மட்டுமல்லாமல், அடிகள் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். நம் காலத்தில் வாழ்ந்து, உத்தமர்கள் பலரால் போற்றிப் பாராட்டப்பட்ட அடிகள் வாழ்விலிருந்து, நாம் பார்த்தவை ஒரு சிலவே. துயரங்களும் தொல்லைகளும் துரத்தி வந்தபோதும், இறையருளை நாடி ஓடி, அவற்றை வென்றவர் அடிகள்.

1968-ம் வருடம் வடலூர் சென்று வள்ளலாரைப் பற்றிச் சொற்பொழிவாற்றிவிட்டு சென்னைக்குத் திரும்பியவர், அன்றே வடசென்னை சஞ்சீவி ராயன் தெருவிலிருந்த தனது சொந்த வீட்டில் இறைவனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார்.

- திருவருள் பெருகும்...

படம்: எஸ்.விவேகானந்தன்

`தூ... து... போனாயே!'

இனிய குரல், எடுப்பான இசை.

திருவருள் செல்வர்கள்! - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...

ஆனால் அந்த இசைவாணர் பாடியதோ, மன்றத்தில் உள்ளோரை அவமதிப்பதாக இருந்தது.

ஏன் இராது? சபையின் முன்பாக ஓர் இசைவாணர்,  ‘தூ... தூ... போ... நாயே...’ என்று பாடினால், யாருக்குதான் கோபம் வராது.

ஆனால், அவர் இரண்டாம் அடியைப் பாடியதும் கோபம் மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். காரணம், ‘ஆதி நாள் சுந்தரர்க்கு அன்புடனே...'  என்ற இரண்டாம் அடியை அவர் பாடியபோதுதான், அவர்கள் உண்மையை உணர்ந்தார்கள்!

அதாவது, `தூது போனாயே...' என்ற முதலடியை, தமது வித்வத்தை வெளிப்படுத்தும் பொருட்டு நிறுத்தி நிதானமாக நிரவல் செய்து, “தூ... தூ... போ... நாயே....” என்று பாடி, பாசுரத்தின்
பொருளையே  பாழாக்கிவிட்டார்!

தொகுப்பு: ஆர்.சி.சம்பத், ஓவியம்: ரமணன்