தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

எழுதப்படாத வசனம்!

எழுதப்படாத வசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
எழுதப்படாத வசனம்!

பாலு சத்யா

லயம்... ஆண்டவன் உறையும் இடம். அங்கே இன்னார், இவர் என்ற பாரபட்சங்களெல்லாம் இல்லை. கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோடுகளைக் கிழித்துவைத்துக்கொண்டு, மனிதர்கள்தான் ஒவ்வொன்றையும் பிரித்துவைக்கிறார்கள். அதற்கு ஆலயங்களும் விதிவிலக்கல்ல.

லண்டனிலிருக்கும் மிகப் பழைமையான, தேவாலயம் அது. ஞாயிற்றுக்கிழமை. ஏற்கெனவே பிரார்த்தனை தொடங்கிவிட்டிருந்தது. எதிர்ப்புறமிருந்த சாலையிலிருந்து தேவாலயத்தை நோக்கி ஓர் இளைஞன் வந்தான். பரட்டைத்தலை. ஜீன்ஸும் டீஷர்ட்டும் அணிந்திருந்தான். டீஷர்ட்டிலும் ஜீன்ஸிலும் ஆங்காங்கே ஓட்டைகள், கிழிசல். கால்களில் செருப்புகூட இல்லை. உள்ளே நுழைந்தான். தேவாலயத்தில் இருந்தவர்களெல்லாம் வழக்கமாக அங்கே வருபவர்கள். அவன் வெளியூர்க்காரன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவனைச் சற்று அசூயையோடு பார்த்தார்கள்.  

எழுதப்படாத வசனம்!

அவன், உட்காருவதற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று ஒவ்வொரு டெஸ்க்காகப் பார்த்துக்கொண்டே போனான். பிரசங்க மேடைவரை போய்விட்டான். ஓரிடம்கூட இல்லை. ஒரு கணம் யோசித்தான். சட்டென்று தரைவிரிப்பில் குத்தவைத்து உட்கார்ந்தான். கண்களை மூடிப் பிரசங்கத்தைக் கேட்க ஆரம்பித்தான். எல்லோரும் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தார்கள். அதுவரை அந்தத் தேவாலயத்தில் தரையிலமர்ந்து யாரும் பிரார்த்தனையில் ஈடுபட்டதில்லை. எல்லோரும் ஒருவிதப் பதற்றத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரிசையிலிருந்து ஒரு முதியவர் எழுந்தார். கண்ணியமான தோற்றம். நேர்த்தியான கோட். பளபளக்கும் ஷூ. வயது எப்படியும் எழுபதுக்கு மேலிருக்கலாம். தன் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி மெதுவாக அந்த இளைஞனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இருபுறமும் அமர்ந்திருந்தவர்கள் முணுமுணுப்பாக அவரிடம் சொன்னார்கள்...   ``அவனை எதுவும் செஞ்சுடாதீங்க...’’, ``பேசாம உங்க இடத்துல போய் உட்காருங்க...'' என்று. 

அவர் யார் சொன்னதையும் கேட்கவில்லை. தேவாலயத்தில் ஊன்றுகோலின் `டொக்... டொக்...’ ஓசையையும், பாதிரியார் சொல்லும் பிரார்த்தனை வசனங்களையும் தவிர வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அவர், இளைஞனுக்கு அருகே வந்துவிட்டார். எல்லோரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாதிரியார்கூடப் பிரசங்கத்தை நிறுத்திவிட்டு முதியவரையே பார்த்தார்.

அவர் ஊன்றுகோலைக் கீழே போட்டார். மிகக் கஷ்டப்பட்டுக் கால்களை மடக்கி, அந்த இளைஞனுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்.   `அவன் தனியாக இல்லை’ என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல அவனுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். கொஞ்சம் ஆசுவாசமான பிறகு, தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பாதிரியார் சொன்னார்... ``நான் சொல்கிற எல்லா வசனங்களையும் நீங்கள் ஒருபோதும் நினைவில் வைத்திருக்க முடியாது. ஆனால், இப்போது பார்த்ததை உங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம்... இது மற்றவர்கள் படித்திருக்காத, பைபிளில் எழுதப்படாத வசனம்!’’

ஒரு துளி சிந்தனை!

முதியவர் ஒருவரது டீஷர்ட்டில் எழுதப்பட்டிருந்த வாசகம் இது... `எனக்கு 70 வயதில்லை... 54 வருட அனுபவத்துடன்கூடிய 16 வயது!’