Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி
க்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பார்கள். திக்கு திசை தெரியாமல், நல்லது கெட்டது அறியாமல், இன்பத்தில் பூமிக்கும் வானுக்கும் குதிப்பதும் துன்பத்தில் மூலையில் சுருண்டு கதறுவதுமான மனித வாழ்க்கையில், தெய்வத்தைத் தவிர துணையாகவும் பலமாகவும் நமக்கு வேறு எவர் இருக்க முடியும்?

'எனக்கு நல்ல வழி காட்டு’ என்று வேண்டுகிறோம். 'என் மகனுக்கு நல்ல புத்தியையும் ஞானத்தையும் கொடு’ என்று பிரார்த்திக்கிறோம். 'என் மகளுக்கு வியாழ நோக்கம் சீக்கிரம் வர... நீதான் அருளணும்’ எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுக்கிறோம். 'இந்தப் பரந்த உலகில், எங்களுக்கென்று ஒரு வீடு வாசலைக் கொடுக்கக் கூடாதா?’ என்று இறைஞ்சு கிறோம். 'எங்கள் வீட்டில், சகல செல்வங்களும் நிறைந் திருக்க அருள்வாயாக!’ என மன்றாடுகிறோம்.

இப்படியான பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் கடவுளுக்கும் நமக்குமான பந்தத்தை ஏற்படுத்துகின்றன. அந்தப் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அந்தப் பந்தம் இன்னும் பலமாகிவிடுகிறது. இந்தப் பூவுலகில் வாழ்வதற்கான திக்கு திசையைக் காட்டிவிட... அந்தத் திசையில் சென்று, வாழ்வியலில் கிடைக்கிற சகல இன்பங்களையும் பெற்று மகிழ... தடாலென்று உள்ளே நமக்குள் இருக்கிற சக்தியானது, கடவுள் எனும் மகாசக்தியைத் தேடுகிற பயணத்துக்கு ஆசைப்பட்டுவிடும். அதன் பிறகு, பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் இருக்காதா என்ன? வழிபாடுகளையும் பூஜைகளையும் செய்ய மறந்துவிடுவோமா என்ன?

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

ஆனால் இதையடுத்து, நம் பிரார்த்தனைகள் வேறு மாதிரியாகிவிடும். இறைவனிடம் நாம் வேண்டுகிற விஷயங்கள், இதுவரை கடவுளிடம் நாம் கேட்டிராததாக இருக்கும்.

'என் இந்த வாழ்க்கைக்கு நீதான் காரணம். உனக்கு இந்த ஜென்மம் முழுக்கக் கடன்பட்டிருக்கேன்’ என நெக்குருகுவோம். 'பையன் நல்ல வேலைல இருக்கான். பொண்ணு புகுந்த வீட்ல நிம்மதியா இருக்கு. காசி-ராமேஸ்வரம்னு போக உடம்புல தெம்பும் மனசுல ஆசையும் இருக்கு. இதைவிட வேற என்ன வேணும் எங்களுக்கு?’ என்று நெகிழ்ந்து, கடவுளைச் சிலாகிப்போம். அனவரதமும் இறைநாமத்தையே ஜபித்துக் கொண்டிருப்போம். 'கிருஷ்ணா ராமா’ என்று சொல்லிக் கொண்டோ... 'நமசிவாய’ என்று உச்சரித்தபடியோ நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மிக அருமையாக நகர்ந்துகொண்டிருக்கும்.

அந்திம காலத்தில், இறைவனிடம் இறைஞ்சுகிற விஷயங்கள் ஒவ்வொன்றாகக் குறைந்துகொண்டே வர... நிறைவாக, நிறைவான இந்த வாழ்வை நிறைவு செய்யவேண்டும் என்பதற்காக, கடவுளிடம் நாம் கையேந்தி, மனமுருகிக் கேட்கிற ஒரே பிரார்த்தனை... 'இந்த ஜென்மத்துக்கு, மோட்சகதியைக் கொடுடாப்பா! மனசு நிறைஞ்சு, இந்த ஆத்மா உங்கிட்ட வந்துசேரும்’ என்பதுதான்!

உலகின் எல்லா மனிதர்களும் மோட்சம் கிடைக்க வேண்டும் என்றுதான் இறுதிக்காலத்தைக் கழிக்கிறார்கள். 'சிவலோகத்துக்கு என்னை அழைச்சுக்கப்பா, என் சிவனே! இந்த பிராண அவஸ்தையிலேருந்து எனக்கு விடுதலை கொடுத்துரு’ என்றும், 'அப்பா கோவிந்தா... வைகுண்டத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போயிடேன்’ என்றும் பிரார்த்திக்காத மனிதர்கள் இங்கு வெகு குறைவுதான்! மோட்சத்தை வெறுப்பவர்கள் இங்கே எவருமில்லை. முக்தி கிடைக்கவேண்டாம் என ஒதுக்குபவர்கள் இல்லாத உலகம் இது!

ஆலயம் தேடுவோம்!

மணப்பாறை அருகில் உள்ள ஆலயத்தில் இருந்தபடி, நம் மொத்த வாழ்க்கைக்குமான சகல சௌபாக்கியங்களையும் தந்தருளும் சிவனார்... நிறைவாக மோட்சத்தையும் தந்து ஆட்கொள்கிறார். அதனால்தான் அந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீமுக்தீஸ்வரர் எனத் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.

முடிவு என்றும் இறுதி என்றும் சொன்னால் அது அபசகுனம். அதுவே நிறைவு என்று சொன்னால், எவ்வளவு மங்கலகரமான சொல்லாகத் திகழ்கிறது, இல்லையா? அந்த நிறைவு எனும் வார்த்தையைவிட, இன்னொரு சொல்... பூர்த்தி! மனித வாழ்வின் நிறைவாக, அற்புதமான அந்த வாழ்க்கையை பூர்த்தி செய்கிற விதமாக, தன் அடியவருக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர்.

1,356-ஆம் வருடம், திரிபுவனச் சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்ட ஆலயம் இது எனத் தெரிவிக்கிறது கல்வெட்டு. திரிபுவனச் சக்கரவர்த்தி என்பது குலசேகர பாண்டிய மன்னனைப் போற்றும் திருப்பெயர்களுள் ஒன்று என்கின்றனர், சரித்திர ஆர்வலர்கள்.

ஆலயம் தேடுவோம்!

பிரமாண்டமான கருங்கல் திருப்பணியால் எழுப்பப் பட்ட ஆலயம், இது. ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீமுக்தீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீஅந்தாள பரமேஸ்வரி. அதாவது, அழகிய பாதத்தைக் கொண்ட ஈஸ்வரி. இத்தனை பிரமாண்டமாக, அற்புதமாகக் கட்டிய கோயிலுக்கு, சுமார் 200 ஏக்கர் அளவுக்கு நிலங்களும் ஒதுக்கித் தந்திருக்கிறான் மன்னன்.

ஆலயம் தேடுவோம்!

இந்தத் தலத்தின் பெருமையை அறிந்த முனிவர்களும் யோகிகளும் இங்கு வந்து, தவம் செய்து இறைவனின் திருவடியை அடைந்து, முக்தி அடைந்திருக்கிறார்கள். நள மகாராஜா இங்கு வந்து வழிபட்டு, வரம் பெற்றார்; மோட்ச கதி அடைந்தார் என்கிறது ஸ்தல புராணம். ஆனால் என்ன... பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம், இந்தக் கோயிலில் பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்ததுடன் சரி என வேதனையுடன் தெரிவிக்கிறார் ராஜகோபாலன் எனும் அன்பர்.

மன்னன் கட்டிய இந்தக் கோயிலை, மேலச்சடவன் குடி, கீழச்சடவன்குடி என இரண்டு நாட்டு பெருந்தனக்காரர்களும் பராமரித்து வந்தனர்.

எந்தவொரு விஷயத்தைத் துவக்குவதாக இருந்தாலும், ஸ்ரீமுக்தீஸ்வரரிடம் அனுமதிப் பெற்றுவிட்டே, அவரின் சந்நிதியில் கோரிக்கையை வைத்துவிட்டே காரியத்தில் இறங்கினார்களாம்!

இன்றைக்கு, கோரிக்கைகளை நிறைவேற்றித் தர, சிவனார் காத்திருந்தாலும், ஏனோ கோயில் சிதிலமுற்று, வழிபடுவதற்கு வசதியின்றி, புற்கள் மண்டிக் கிடக்கின்றன, பிராகாரங்கள்.

'என்ன வரம் கேட்டாலும் தருவார்; எல்லாவற்றுக்கும் மேலாக மோட்சத்தையும் அருள்வார் ஸ்ரீமுக்தீஸ்வரர். ஆனால், ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிற கோயிலாக, பக்தர்களின் வருகையின்றி, வழிபாடுகளோ விழாவோ இன்றி, வெறிச்சோடிக் கிடக்கிறது ஆலயம்.

நம் பாவத்தையெல்லாம் போக்கி, நமக்கு முக்தி தரும் திருத்தலம், பொலிவின்றி இருப்பது பாவமல்லவா? பிறகு அந்தப் பாவத்தைத் தொலைக்க, எந்தக் கோயிலுக்குச் செல்வது நாம்?! மோட்சம் தரும் ஆலயம், சீர்பெறுவது எப்போது? நற்கதி அருளும் இறைவன் குடியிருக்கும் கோயிலை நன்றாகச் சீரமைப்பது நம் கடமை அல்லவா?

கடமையைச் செய்வதே புண்ணியம். அப்படிப் புண்ணியம் செய்கிற அன்பர்களுக்கு மோட்சத்தையே தருவார் சிவனார். அது சத்தியம்!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism