`கரகத்தழகியம்மா
கண்ணபிரான் தங்கையரே,
கரகத்தின் மேலிருந்து
கருணை செய்வாய் தேவியம்மா.
பெரியபாளையமாம் பேரரசி ஆலயமாம்
பெரியபாளையத்து பவானியே
பெருங்கருணை வைப்பாய் அம்மா...’
ஓங்கிய குரலில் பம்பை, உடுக்கை, சிலம்புச் சத்தத்தோடு பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, பெரியபாளையம் ஆலயத்துக்குள் செல்கிறோம்.
கூட்டம்... கூட்டம்... பெருங்கூட்டம்! நம்மைத் தானாக நகர்த்திச் செல்லும் அளவு கூட்டம். ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரியபாளையம் பவானி அம்மனைத் தரிசிக்கப் பல்வேறு பகுதி களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்துவிடுகின்றனர்.
ஆலயத்தின் முதல் பிராகாரம் எங்கும் பக்தர்கள் பலவிதமான பிரார்த் தனைகளைச் செய்துகொண்டிருந்தனர். உடல் நோய்களைத் தணித்த அந்த வேப்பிலைக்காரிக்கு நேர்த்திக் கடனைச் சமர்ப்பிக்கும் விதமாக, சாரிசாரியாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வேப்பிலை ஆடையைக் கட்டிக்கொண்டு ஆலயத்தை வலம் வந்துகொண்டிருந் தனர். அங்கப்பிரதட்சணம் செய்பவர் கள் தரையில் உருண்டபடியே வர, சிலர் தேங்காய்களை உருட்டியபடியும் அங்கங்கே விழுந்து வணங்கியபடியும் வலம் வந்தார்கள்.
மேலும் தீச்சட்டி ஏந்தியபடியும், அடிப்பிரதட்சணம் செய்தவாறும் ஆலயத்தை வலம் வந்த பக்தர் களையும் காண முடிந்தது.

தடைகள் எல்லாம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கவேண்டும் என்று அம்பிகையை வேண்டிக்கொண்ட பக்தர்கள், தங்களது வேண் டுதல் நிறைவேறி நல்ல வாழ்க்கைத் துணை அமைந்ததும், கரகம் சுமந்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும் பட்டாடை உடுத்தி, சந்தனக் குங்குமம் பூசிக் கொண்டு, தலையில் கரகத்தைச் சுமந்தபடி, அம்மனுக்குப் பிரியமான இசைக் கருவிகள் முழங்க, மெள்ள ஆடியபடியே நம்மைக் கடந்து செல்கிறார்கள். கரகம் சுமக்கும் நேர்த்திக்கடன் ‘குடைக் கல்யாணம்’ என்று அழைக்கப்படுகிறது.
பலரும் அம்மனுக்குக் கோழி, ஆடுகளை சுற்றி விட்டுக்கொண்டிருந் தார்கள். சிலர் உப்பு சுற்றிவிட்டார்கள். தீபம் ஏற்றியும், தொட்டில் கட்டியும் அம்மனைப் பிரார்த்திக்கும் பக்தர்களையும் காண முடிந்தது. பல பெண்கள், தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக அளித்துவிட்டு, புதிய மாங்கல்யச் சரடுகளை அணிந்து கொண்டிருந் தனர். இவை மட்டுமா? மாவிளக்கு, துலாபாரம், முடிக்காணிக்கை, பொங்கல் படையல்... என்று தன்னைத் தேடிவந்து வழிபடும் பக்தர் களின் பிரார்த்தனைகளை, வழிபாடுகளை ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருக்கிறாள், அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியான ஸ்ரீபவானி. பெரிய பாளையத்து அம்மனின் திருநாமம் இதுதான்.
பிராகாரம் எங்கும் காதுகுத்தல், புதுமணத் தம்பதிகளின் கூட்டம் என்று திருக்கோயிலே விழாக்கோலம் பூண்டிருந்தது. எல்லாவற்றையும் பார்த்து மெய்சிலிர்த்தபடி, நாமும் வலத்தைத் தொடர்ந்தோம். கணபதியைக் கைதொழுதபின், அடுத்து இருந்த மகா மாதங்கியம்மனைத் தரிசித் தோம். ரேணுகாதேவிக்கு அடைக்கலம் கொடுத்த தியாக தேவி என்று இவளைக் குறிப்பிடுகிறார்கள்.
பிராகாரத்தின் வடக்கே வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி, ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதி, ஸ்ரீஆஞ்சநேயர் சந்நிதி, ஸ்ரீபரசுராமர் சந்நிதி ஆகியன அமைந்துள்ளன. கிழக்குத் திசையில் சக்தி மண்டபம் உள்ளது. இங்குதான் பக்தர்கள் வைக்கும் பொங்கல் பிரசாதங்கள் அம்மனுக்கு படைக்கப்படுகின்றன. பவானி அம்மனின் கருவறையை நோக்கியுள்ள வெளிப்புறத்தில் இருக்கும் சூலத்துக்கு முன்பாக பக்தர்கள் படையல் களைப் போட்டு வணங்குகிறார்கள். திருக் கோயிலின் வெளிப்புறத்தில் வடமேற்கு மூலையில் பழைமையான புற்றுக்கோயில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாவற்றையும் கண்குளிரத் தரிசித்துவிட்டு உள் பிராகாரத்துக்குள் நுழைந்தோம். நம்மைப் பரவசப்படுத்தும் அழகிய சுதைச் சிற்பங்களை ரசித்தபடி, தல விருட்சமான வேப்பமரத்தைத் தாண்டி கருவறையை நோக்கிச் சென்றோம்.
கருவறையில், சர்வாலங்கார பூஷிதையாக மேலிரு கரங்களில் சங்கு சக்கரமும், கீழிரு கரங் களில் வாளும், அமுதக் கலசமும் ஏந்தியபடி அருள்பாலிக்கிறாள் அன்னை பவானி. இந்த அமுதக் கலசம் முப்பெருந்தேவியரின் அருள் பெற்றது என்கிறார்கள். அன்னையின் அருகில் ஸ்ரீகிருஷ்ணர், நாகதேவர் திருவுருவங்கள் உள்ளன. பவானியம்மனின் முன்புறத்தில், கழுத்துவரை மட்டுமே காட்சியளிக்கும் சுயம்பு பவானியின் திருவுருவம் வெள்ளிக்கவசத்துடன் காட்சியளிக்கிறது. இவளே ஆதிதேவி என்றும் புற்றில் இருந்து உருவான ஆதார சக்தி என்றும் வணங்கப்படுகிறாள்.

உள்சுற்றில் இரு உற்சவ தேவிகள் ஒரே சந்நிதி யில் காட்சியளிக்கிறார்கள். ஒரு தேவி தேரில் செல்லவும், மற்றொரு தேவி ஊர் முழுக்க வலம் வரவும் உருவானவர்கள் என்கிறார்கள். கோயிலின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்ள ஆலய அர்ச்சகரிடம் பேசினோம்.
‘`வசுதேவருக்கும் தேவகிக்கும் திருமகனாக ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அதேவேளையில் நந்தகோபருக்கும் யசோதைக்கும் திருமகளாக அவதரித்தவள் மகா மாயாவான ஸ்ரீதுர்கா. இடம் மாறி, கம்சனை எச்சரித்துக் கிளம்பிய இந்த தேவி, ஸ்ரீமந் நாராயணின் அம்சமாக சங்கு சக்கரம் தாங்கி மண்ணுலகம் வந்தாள். இங்கே உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் அமைந் திருந்த இந்தப் பகுதியின் அழகைக் கண்டு வியந்து, இங்கேயே புற்று உருவில் அமர்ந்தாள். பிறகு ரேணுகாதேவியாக பிறப்பெடுத்த அன்னையும் இங்கு வந்து அமர்ந்தாள்’’ என்றவர், மேலும் தொடர்ந்தார். ‘`லட்சோபலட்ச மக்களின் இஷ்ட தேவியாக உள்ள பவானியம்மா மீனவப் பெண் களின் தாயைப் போன்றவள். கடலுக்குச் சென்ற கணவன் பாதுகாப்பாகத் திரும்பி வர இவளைத் தான் மீனவப் பெண்கள் வேண்டுவார்கள். கணவன் திரும்பி வந்ததும், கோயிலுக்கு வந்து தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக வழங்குவார்கள். இது தொன்றுதொட்டு நடக்கும் வழக்கம். எல்லா நாள்களுமே இங்கு கூட்டம் நிரப்பி வழியும் என்றாலும், ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி திருநாளும் விசேஷம். இந்த தேவி மாங்கல்ய பலம் அளிக்கக் கூடியவள். இங்கு நடக்கும் பிரார்த்தனைகள், வழிபாடுகள் எல்லாமே அதிசயமானவை. பக்தர் களின் பிரார்த்தனை களைக் காணும் இந்தத் தாய், வெகுவிரையில் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றிவிடுவாள்’’ என்றார் சிலிர்ப்புடன்.

ஆலயத்திலிருந்து திரும்பும் பக்தர்களின் திருமுகங்களில் துலங்கும் திருப்தியும் மலர்ச்சியும் அவர் கூறுவதை மெய்ப்பிக்கின்றன. நீங்களும் வரும் ஆடி மாதத்தில் ஒருமுறை பெரிய பாளையம் சென்று பவானியை வணங்கி வாருங்கள்; உங்களின் இல்லம் தேடிவந்து, வினைகள் தீர்த்து வரம்வாரி வழங்கி அருள்பாலிப்பாள் அந்த வேப்பிலைக்காரி!
உங்கள் கவனத்துக்கு
அம்பாள்: அருள்மிகு பெரியபாளையம் பவானி அம்மன்
தலம்: பெரியபாளையம்
அமைவிடம்: சென்னையில் இருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் உள்ளது பெரியபாளையம். சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தி லிருந்து பேருந்து வசதி உண்டு.
நடை திறந்திருக்கும் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 முதல் 12.30 மணி வரை;
பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரை. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
அபிஷேக நேரங்கள்: தினமும் காலை 8 மணி, நண்பகல் 11 மணி, மாலை 5 மணி என மூன்று வேளைகளும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. குங்குமமும் மஞ்சளும் கலந்த தீர்த்தம் இங்கு விசேஷப் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.