Published:Updated:

கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?

கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?

காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?

காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

Published:Updated:
கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?

? தேவியைப் போற்றும் ஸ்தோத்திரங்களில், ‘லலிதா சஹஸ்ரநாமம்’ தனிச் சிறப்புக் கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன் என்ன? லலிதா சஹஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?

- எம்.சுந்தரேசன், சென்னை - 5

ஆம்! அம்பிகையின் ஸ்தோத்திரங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது லலிதா சஹஸ்ரநாமம். அம்பிகை யின் ஆயிரம் திருநாமங்களும் பிரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ளன. இந்த நாமாவளிகள், அம்பிகையைச் சூழ்ந்திருக்கக்கூடிய ரஹஸ்ய யோகினிகளால் அருளப்பட்டவை. இவற்றை ஸ்ரீஹயக்ரீவர், தவசீலரான அகத்தியருக்கு உபதேசமாக அருளினார்.

தெய்வங்களுக்கான சகஸ்ரநாமாக்கள் பல உண்டு என்றாலும், அவை அனைத்திலும் வேறு பட்டது இந்த லலிதா சஹஸ்ரநாமம்.

‘ஸ்ரீமாதா’ என்று கூறினாலே ஆயிரம் நாமாக்களை கூறிய புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு. ஆம், அவளே இந்தப் பிரபஞ்சத்தின் தாய், ஆதாரம் என்பதை உணர்த்தும் மிக பலம் வாய்ந்த மந்திரச் சொல் ‘ஸ்ரீமாதா’ - தாய். நாம் அனைவரும் அவளின் குழந்தைகள் என்பதை உணர்ந்தோமானால்  குழப்பங்கள் எதுவும் ஏற்படாது. உலகம் முழுவதும் அமைதி நிலவும். ‘நாம பாராயண ப்ரீதா’ என்று, நாமாக்களைப் பாராயணம் செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய பராசக்தியை வழிபடுவது, அனைவருக்கும் பொதுவானதே.

ஆனால், லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் பல ரகசிய தேவதைகளின் சிறப்புகள், உபாஸனை முறைகள் விளக்கப்பட்டுள்ளதால்,  தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று ஜபிப்பது சிறந்தது.

ஸ்தோத்திரம் முடிந்தவுடன், சுமார் 85 சுலோகங் களில்... இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பலன்களை, மிகவும் விஸ்தாரமாக ஸ்ரீஹயக்ரீவர் ஸ்ரீஅகத்தியருக்கு விளக்கியுள்ளார்.
இந்த ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன், நோய்க ளைப் போக்குவதாகவும், நீண்ட ஆயுளைத் தருவதாகவும், மழலைச் செல்வம் இல்லாதவர் களுக்குக் குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன. ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும், புனித க்ஷேத்திரத்தில் கோடி லிங்கங் களைப் பிரதிஷ்டை செய்த பலன் கிடைக்கும் என்று விவரித்துள்ளார் ஸ்ரீஹயக்ரீவர்.

குறிப்பாகப் புண்ணிய நாள்கள், வெள்ளிக் கிழமைகள், ஜன்ம, அனுஜன்ம, திரிஜன்ம நட்சத்திர நாள்கள், நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி நாள்களில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்.

பௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். ஜுரம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்களின் தலையைத் தொட்டுக் கொண்டு பாராயணம் செய்தால், அந்தப் பிணிகள் நீங்கும். அதேபோல், விபூதியைத் தொட்டுக்கொண்டு பாராயணம் செய்து, அந்த விபூதியை இட்டுக் கொள்ள நோய்கள் நீங்கும். குடத்தில் நீர் நிரப்பி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து அந்த நீரால் நீராடினால் பூத, பிரேத, பிசாசு போன்ற உபாதைகள் விலகும். வெண்ணெய்யில் மந்திரித்துக் கொடுத்தால் பிள்ளைப்பேறு கிடைக் கும். இந்தப் பாராயணத்தால் போர்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவார்கள். இப்படி, பலவித பலன்களை தேவியின் அருளால் நாம் பெறலாம். எந்த ஒரு தேவையுமின்றி தேவியைத் துதிப்பதையே  நோக்கமாகக் கொண்டவர்களாக வழிபட்டால், உயர்ந்தநிலையான மோட்சம் கிடைக்கும்.

சரி, பாராயணம் செய்ய முடியாதவர்கள் பலன் அடைய வேண்டும் எனில் என்ன செய்வது?

ஆலயங்களுக்குச் சென்று வழிபடும்போது, அங்கு அனைத்துக் காலங்களிலும் அர்ச்சகப் பெருமக்களால் துதிக்கப்பெற்று, மந்திரங்களின் அரசியாக விளங்கக்கூடிய தேவியின் அருளைப் பாமரர்களும் எளிதில் பெறலாம். தேவியை உபாசிக்கும் ஸ்ரீவித்யா உபாசகர்களை வணங்கு வதன் மூலமும் இந்தப் பலன்களைப் பெறலாம். அனைத்துக்கும் தீவிரமான நம்பிக்கையும், பக்தியும்,  அனைவருக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்ற எண்ணமுமே மிகவும் முக்கியமானவை.

கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?

? மற்ற வழிபாட்டு முறைகளைவிட நாம சங்கீர்த்தனம் எந்த வகையில் உயர்வானது?

- ப.கிருஷ்ணசாமி, சென்னை - 80

அனைவராலும், சகல காலங்களிலும், அனைத்து இடங்களிலும், அதிக முயற்சிகள் இல்லாமல் எளிமையான முறையில் நாம சங்கீர்த்த னம் என்பதைக் கடைப்பிடிக்க முடியும்.

வழிபாட்டு முறைகளில் `இதுதான் உயர்வு' என்று, குறிப்பிட்டு எதையும் சொல்லிவிட முடியாது. சில இடங்களில் ஒரு விஷயத்தை உயர்ந் தது என்று கூறி இருப்பார்கள் எனில், அவற்றைப் பற்றி நமக்கு ஒரு நல்ல மதிப்பு உண்டாக வேண்டும் என்பதற்குத்தானே தவிர, வேறு வழிபாட்டு முறை களைக் குறையாக மதிப்பிடுவதற்கல்ல என்பதை நாம் அறியவேண்டும்.

எப்படி ஒரு வங்கியில் அந்த வாடிக்கையாளரின் காசோலையில் அவரின் கையெழுத்து மதிப்பிடப் பட்டு அதற்கு உரிய பணமானது அளிக்கப் படுகிறதோ, அதுபோன்று எல்லாம்வல்ல இறை வனின் நாமத்தை நாம் உள்ளம் உருகிச் சொல்லும் போது, அந்த இறைசக்தியின் ஆற்றல் நம்மேல் ஊடுருவுவதை நாம் உணரலாம். அதனால்தான் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுபவர்கள், தன் நிலை மறந்து இறை அனுபவம் பெற்று, ஆடியும் பாடியும் கொண்டாடுவதை நாம் காணலாம்.

‘ஓம் நாம பாராயண ப்ரீதாயை நம:’  நாமாக்கள் பாராயணம் செய்யப்படுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறாள் என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வர்ணிக்கப்படுகிறாள் அம்பிகை..

நாமாக்களை நாம் உச்சரித்துக்கொண்டிருந்தால் நமது கர்மவினைகள் நீங்கப்பெற்று, பேரானந்த நிலையை அடையலாம். சமீப காலத்தில் சத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமிகள், ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள், ஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் போன்று பல மகான்கள் நமக்கு இந்த நாமசங்கீர்த் தனத்தின் மூலமாக நல்வழி காட்டி அருளியது பக்தர்களின் பாக்கியம்.

பல பாகவத உத்தமர்கள், இன்றும் தன்னலம் கருதாமல் தொடர்ந்து இதுபோன்ற நாம ஸ்மரண பஜனைகளின் மூலம், சம்சாரக் கடலில் உழன்று அல்லல்படுபவர்களைக் காப்பாற்றி பகவானின் பக்தி ரஸத்தில் மூழ்க வைத்துக்கொண்டிருப்பது, நமது நாட்டுக்கு வலிமை அளிப்பதாகும்.

வால்மீகி முனிவர் ‘மரா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி அதுவே ராமநாம ஜபமாக மாறி, ராமாயணத்தை அளித்திருப்பது  வரலாறு. இங்ஙனம், கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல் பக்தியுடன் இறைவனின்  திருநாமங்களைக் கூறி வருவதன் மூலமாகவே நாம் உயர்ந்த நிலையை அடைய வழி கிட்டுவதால், நாமசங்கீர்த்தமானது அனைவராலும் உயர்வானதாகப் போற்றப் படுகிறது.

? இறந்துபோனவர்களின் உடலுக்கு கர்ணமந்திரம் சொல்வது, கங்கா தீர்த்தம் கொடுப்பது போன்ற சம்ஸ்காரங்கள் நடைபெறுவது ஏன்?

- எஸ்.ராம்குமார், சென்னை - 100

யா ஸ்ம்ருதா உச்சாரிதா த்ருஷ்ட்வா பீதா பாபம் உபார்ஜிதம்
விநாசயதி கல்யாணீ தாம் கங்காம் ஹ்ருதி பாவயே

எந்த கங்கையானவள் நினைத்தாலும், சொன் னாலும், கண்டாலும், அருந்தினாலும் மங்களம் அளித்து பாவங்களைப் போக்குகின்றாளோ, அந்த கங்கையை இதயத்தில் நினைக்கிறேன் என்று மேற்கூறிய சுலோகம் விளக்குகிறது.

ஒரு மனிதன் இறந்துவிட்டான் என்று கூறினா லும், சில நாழிகைகள் வரை அந்த உயிரானது அந்தச் சரீரத்தில் இருப்பதாகவும் அதன் பிறகே பிரிவதாகவும், செவிப்புலனே கடைசியாகச் செய லிழக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஆக, மனிதன் இறந்த பிறகும் அவன் ஆத்மாவுக்கு உயர்ந்த மந்திரங்கள் சென்றடையவேண்டும் என்பதற்காக, ‘கர்ண’ எனப்படும் காதில், மந்திரங் கள் ஓதுவதும், அவன் நல்ல நிலையை அடைய வேண்டி கங்கை ஜலம் அளிப்பதும் நமது மரபு.

ஒரு மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தா லும், அவர் அடுத்தப் பிறவியில் நல்ல கதியை அடையவேண்டும் என்பதே நமது மதம் நமக்கு அளித்த உயர்ந்த வழிமுறை. எனவேதான் இன்றும் நம் வீடுகளில் கங்கை தீர்த்தம் நிரப்பப்பட்ட சொம்புகளை வீட்டுப் பூஜையறையில் வைத்து வழிபடுவது மரபாக உள்ளது. இறக்கும் தருவாயில் உள்ளவருக்கு, அந்தச் சொம்புகளில் உள்ள கங்கை நீரை அளித்தால், அந்த ஆன்மாவுக்கு உயர்ந்த நிலை கிடைக்கும் என்பது நமது நம்பிக்கை.

? கோயில்களில் சுவாமிக்கு தேங்காய் உடைப்பதற் கும், சிதறுகாய் உடைப்பதற்குமான தாத்பர்யம் என்ன, இரண்டுக்கும் தத்துவ அடிப்படையில் என்ன வித்தியாசம்?

- ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை 15

நாம் ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு, அந்தப் பிரார்த்தனை நிறைவேறிய பிறகு, எத்தனை தேங்காய்களை உடைப்பதாக வேண்டிக் கொண் டோமோ அத்தனை தேங்காய்களை உடைப்பது, சிதறுகாய் பிரார்த்தனை ஆகும். சிலர், நல்ல காரியத்தை ஆரம்பிக்கும்போது, அந்தக் காரியம் இடையூறின்றி நல்லபடி வெற்றி அடையவேண்டும் என்பதற்காகவும் சிதறுகாய் உடைப்பதுண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?

`நாளிகேர ப்ராதாட்யோஹம் நிர்விக்னாய ப்ரஸீதமே’ என்பது  சிதறுகாய் உடைக்கும்போது நாம் சொல்லவேண்டிய பிரார்த்தனை மந்திரம். ‘இந்தத் தேங்காயை உடைப்பதால், எல்லாம்வல்ல விக்னேசுவரர், நான் செய்யப்போகும் செயலில் எந்த விக்கினமும் ஏற்படாமல் செய்வாராக’ என்பதே இந்த மந்திரத்தின் பொருள். சிதறுகாய் உடைக்கப்படும் தேங்காய், துண்டு துண்டாகச் சிதறி உடையும்போது, நம் மனதிலுள்ள அழுத்தம் விலகி, நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்தத் தேங்காயானது ஏழை எளியவர்களின் உணவாகவும் ஆகிறது. நம்முடைய செயல்களில் ஏற்படக்கூடிய அனைத்து தடங்கல் களையும் போக்கி வெற்றி அடையச் செய்வதற்கா கவும், ஏழை எளியவர்களுக்குத் தர்மம் செய்யும் வகையிலும் சிதறுகாய் உடைக்கும் பிரார்த்தனை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தேங்காய் அரிய பல மகத்துவங்களைக் கொண்டது. எல்லாம்வல்ல இறைவனுக்கு அதை நிவேதனமாக அளிப்பது, உயர்ந்த பலனைத் தரவல்லது. தேங்காயின் உள்ளே இருக்கும் வெண்மையை நாம் பார்க்கும்போது, அறியாமை எனும் இருள் அகன்று, ‘சச்சிதானந்த ரூபமான பரம்பொருளுக்குப் பிடித்தது தூய்மையே’ என்ற உணர்வு மேலோங்கி, நமது உள்ளத்தில் தீய எண்ணங்கள் அகற்றப்பட்டு, நல்ல எண்ணங்கள் மலர்வதை நாம் பூஜை செய்யும்போது உணரலாம்.

கடுமையான கர்மவினைகளால் சூழப்பட்ட ஆத்மாவின் நிலையைத் தேங்காயின் வெளிப்பாகம் குறிக்கும். கடவுளின் சந்நிதியில் கர்மவினைகளின் தாக்கங்கள் விலக்கப்பட்டு ஆத்மா தூய்மை அடையும். இதையே கடவுள் சந்நிதியில் உடைக்கப் படும் தேங்காய் நமக்கு உணர்த்துகிறது. தேங்காய் கள் அளவில் மாறுபட்டாலும் உள்ளே தென்படும் வெண்மையில் மாறுபாடு இருக்காது. அதேபோல், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒரே ஆன்ம ஸ்வரூபம் கொண்டவையே என்ற உயர்ந்த தத்துவத்தை குறிக்கும் வகையில், இறைவனுக்கு `தேங்காய் நைவேத்தியம்' செய்யப்படுகிறது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002