Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை

திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை

செல்வர்கள் பலர். அவர்களிலும் அருள்செல்வர்கள் சிலர். அவர்களிலும் திருவருள்செல்வர்கள் மிகச் சிலரே. அருள்செல்வர் ஒருவரையும் திருவருள்செல்வர் ஒருவரையும் இப்போது தரிசிக்கலாம் வாருங்கள்!

திருநெல்வேலியில் நடந்த வரலாறு இது. ஆனால், இரையூர் எனும் ஊரில் ஆரம்பிக்கிறது. இரையூர் தற்போது, இளயூர்-இரசை என்றெல்லாம் அழைக்கப் படுகிறது. அங்கே, கார்காத்த வேளாளர் குலத்தில் வடமலையப்ப பிள்ளை என்பவர் இருந்தார். சிறுவயது முதல் வறுமையிலே தவழ்ந்து, வறுமை யிலேயே நடந்தவர் அவர். கொஞ்சம் விவரம் தெரிந்ததும், `கல்வி கற்றால்தான் வறுமை தீரும்; உயர்நிலை அடைய முடியும்’ என்பது வட மலையப்பருக்குத் தெரிந்தது. அதற்காக அலையாய் அலைந்த அவர், அப்போது விஜயநகர மன்னர் களின் குலகுருவாக இருந்த வைணவ ஆசார்யரிடம் போனார். அவரை வணங்கி எழுந்தவர், தன் வறுமையையோ, கல்வி கற்க வந்ததைப் பற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

ஆனால், வடமலையப்பரை ஒருசில விநாடிகள் பார்த்ததும், அனைத்தையும் குறிப்பால் உணர்ந்து கொண்டார் ஆசார்யர். “அப்பா குழந்தாய்! எதற்கும் பயப்படாதே! உனக்கு உணவிட்டுக் கல்வி கற்பிக்க வேண்டியது என் பொறுப்பு. நீ என்னுடனேயே இரு!'' என்றார். தான் சொன்னது போலவே, வடமலையப்பருக்கு இலக்கண  இலக் கியங்களில் நன்கு பயிற்சியளித்ததோடு, போர்க் கலையிலும் வல்லவராக்கினார்.

வடமலையப்பர் போர்க் கலையில் வல்லவர் என்பதை, ‘போர் விற்ற டக்கை யிரையூர் வட மலைப் பூபதி’ என திருமேனி ரத்தினக்கவிராயர் என்பார் விவரித்திருக்கிறார். 

திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாமரை, குளத்தில் இருந்தாலும் அதன்பெருமை, குளத்தைத் தாண்டிக் கரையில் இருப்பவர்களை இழுக்கிறது அல்லவா? அதுபோல, வடமலையப் பரின் அறிவுத்திறன், போர்க்கலைப் பயிற்சி, நற்குணங்கள் என அனைத்தும், பாண்டியநாட்டை ஆண்டுகொண்டிருந்த திருமலை நாயக்கரை எட்டியது (கி.பி.1623-59 மதுரையை ஆண்டவர்).

`அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்' எனும் வாக்குக்கு இணங்க, திருமலை நாயக்கர் பொறுப்பான ஒருவரை, வடமலையப்பரிடம் அனுப்பினார். வந்தவர், வடமலையப்பரை வணங்கி, “அரசர் திருமலைநாயக்கர், உங்களை உடனே அழைத்து வரச்சொன்னார். பல்லக்கு அனுப்பியிருக்கிறார். எதற்காக அழைத்தார் எனத் தெரியாது. எதுவாயினும் உங்கள் நன்மைக்காகத் தான் இருக்கும்” என்று சுருக்கமாகச் சொன்னார்.

 ‘அரசரே அழைப்பு அனுப்பியிருக்கிறார்’ என வடமலையப்பர் குதிக்கவில்லை. மாறாக, “கடமை யைச் செய்தால் உடைமை தானே வரும்” என்று அமைதியாகச் சென்றார். மதுரையில் நுழைந்ததும், அன்னை மீனாட்சி கோயில் கோபுரமும் சொக்க நாதர்கோயில் கோபுரமும் வடமலையப்பரின் பார்வையில் பட்டன. வணங்கிவிட்டு மேலும் பயணத்தைத் தொடர்ந்தார்.

போகப் போக வடமலையப்பரின் மனம் கலங்கத் தொடங்கியது. காரணம்? அயல்நாட்டுப் படையெடுப்பால் அலங்கோலமாகியிருந்தது மதுரை. ‘சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி முதலான நூல்களில் நான் படித்து அறிந்திருந்த மதுரையா இது? உளக் கண்ணால் பார்த்ததை, ஊனக் கண் ணால் என்று காண்பேன்?’ என வருந்தினார்.

அரசவையில் நுழைந்ததும் வடமலையப்பரைக் கண்ட திருமலை நாயக்கர், “கேள்விப்பட்டது உண்மைதான். இவரால் நமது ஆட்சி மேலும் சிறப்படையும்” என்று மகிழ்ந்தார்.

வடமலையப்பருக்கு ஆசனம் அளித்து, “இலக்கியப் புலமையும் போர்க்கலையும் பயின்ற உங்களைத் திருநெல்வேலிப் பகுதிக்குத் தலைவராக நியமித்திருக்கிறேன். அயலார் எவரும் நம் பகுதிக் குள் ஆக்கிரமிக்காதபடி, குடிமக்களை நன்கு காப்பீர்கள் என்று எண்ணுகிறேன்” என்று கூறி முடித்தார். வடமலையப்பர் மன்னர் அளித்த பதவியை ஏற்றுக்கொண்டார். குடிமக்களைக் குறைவில்லாமல் நிறைவோடு வாழும் வகையில் ஆட்சி செய்தார்.

வறுமையில் இருந்தவர் செல்வராகிவிட்டார். அடுத்த நிலைக்குப் போக வேண்டாமா? தெய்வம் அதற்கும் வழிவகுத்தது.

திருமலை நாயக்கர் ஆட்சி (1659.கி.பி.) நிறைவுற் றது. அவருக்குப் பின் பாண்டியநாடு சொக்கநாத நாயக்கரின் ஆளுகைக்கு வந்தது (கி.பி.1660-82 வரை). அவர் ஆட்சியின்போதும், வடமலையப்பர் திருநெல்வேலிப் பகுதிக்குத் தலைவராக இருந்தார்.

வடமலையப்பர் குடிமக்களுக்குச் செய்த நன்மைகள் பல உண்டு. அதைவிட, தமிழுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் அவர் செய்த நன்மைகள் அதிகம். அதன் காரணமாக மக்கள் பலர், மிகுந்த ஆர்வத்தோடு தமிழைக் கற்றார்கள். அதனாலேயே, ‘தமிழின் செவிலித்தாய்’ எனும் புதுமொழி உருவாகி, வடமலையப்பரின் புகழை எங்கும் பரவச்செய்தது.

அந்தக் காலத்தில், தென்திருப்பேரை எனும் ஊரில் பெருமாள் அடியார்கள் பலர் இருந்தனர். மறந்தும்கூட, மறைவழி மறவாதவர்கள் அவர்கள். நாராயண தீட்சிதர் என்பவரும் அவர்களில் ஒருவர். திருமால் பக்தியில் மட்டுமல்ல; தமிழ் ஆர்வத்திலும் ஆற்றலிலும் தலைசிறந்தவர்.

தீட்சிதருக்குப் பெரிய மாளிகையும் ஏராளமான விளை நிலங்களும் இருந்தன. அதனால் அவர் கவலையில்லாமல், தமிழை ஆழ்ந்து அனுபவித்து, பக்திக்கடலில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந் தார். உத்தமர்களுக்குத் துயரம் வரும், விலகும். அதனால் மற்றவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். சாதாரணமானவர்களுக்கோ துயரம் வரும். விலகு கிறதோ இல்லையோ, அடுத்தவர்களுக்குத் தொல்லைகளைத் தரும் என்பது ஆன்றோர்களின் வாக்கு. அது, தீட்சிதர் வாழ்க்கையில் நடந்தது.

ஒரு வருட காலம் மழையே இல்லை. விளைச் சலும் இல்லை. நிலவரி செலுத்த வழியில்லாமல் ஊரார் தவித்தார்கள்.

வடமலையப்பரால் நியமிக்கப்பட்ட, வரிவசூல் செய்யும் அதிகாரி வரி செலுத்தாத மக்கள் அனை வரையும் திருநெல்வேலியில் இருந்த சிறைச் சாலையில் அடைத்தார்; தீட்சிதரும் அடைக்கப் பட்டார். ‘எந்த ஜீவனுக்கு என்ன துயரம் விளைவித்தேனோ? அதனால்தான் இந்தத் துயரம் வந்திருக் கிறது. இதற்காக, சிறை செய்தவர்களை நோவதில் பலனில்லை. குழைக்காதராம் பகவானிடம் முறையிட வேண்டியதுதான்’ என்று முடிவு செய்தார்.

சிறையிலிருந்தபடியே, நாள்தோறும் செந்தமிழ்ப் பாடல்கள் பாடி, அந்தப் பாடல்களுக்கு ‘குழைக் காதர் பாமாலை’ எனப் பெயரும் இட்டார். ஒரு மாதமானது.

ஒருநாள், ‘வடமலையப்பர் தமிழின் ஆழங் கண்டவர். அவர் போய், வரிகட்ட இயலாத தமிழ்ப் புலவரைச் சிறையிலடைப்பாரா? இது அவருக்குத் தெரியாது. எப்படித் தெரிவிப்பது? தரையில் இருந்து குருவி கத்தினால், அது ஆகாயத் தில் இருக்கும் நட்சத்திரத்துக்குக் கேட்குமா என்ன? பகவானிடம் முறையிட வேண்டியதுதான் இதையும்’ என்று, தனது வழக்கப்படி பாடத் தொடங்கினார்.

வள்வார் முரசதிர் கோமான் வடமலை யப்பன் முன்னே
விள்வாருமில்லையினி எங்கள் காரியம் வெண்டயிற்பால்
கள்வா அருட்கடைக் காண்பார்கருணைக் களிறழைத்த
புள்வாக னாவன்பர் வாழ்வே! தென் பேரைப் புராதனனே


எனப் பாடி, அப்படியே கீழே விழுந்தார். மூச்சு மட்டும் வந்து கொண்டிருந்தது.

பாடலைக் கேட்ட சிறை அதிகாரி, உடனே வடமலையப்பரிடம் ஓடினார். “மன்னா! தென் திருப்பேரையிலிருந்து வரி கட்டாதார் பலர் சிறையில் உள்ளனர். அவர்களில் ஒருவர்  செந்தமிழ்ப்புலவர் போலிருக்கிறது. அவர் பாடிய பாடலில் உங்கள் பெயரும் இருந்தது. ஓடி வந்தேன்” என்று விவரித்தார்.

வடமலையப்பர் உடனே குதிரை மீது தாவி ஏறினார். சிறைச்சாலையை அடைந்ததும், குதித்துக் கீழே இறங்கி சிறைச் சாலைக்குள் ஓடி னார். கண்களை மூடியபடிப் பாடிக்கொண்டிருந்த தீட்சிதரைக் கண்டதும் வடமலையப்பர் உள்ளம் நடுங்கியது.

“சிறையிலிருக்கும் இவ்வடிவு தமிழ்வடிவோ, தெய்வ இன்பமோ, சான்றோர்களின் அறநூலோ... இப்படியாகிவிட்டதே!” என்று புலம்பினார். தீட்சிதர் கண்களைத் திறந்தார். அவரிடமிருந்து அவர் வரலாற்றை அறிந்த வடமலையப்பர், “மன்னியுங்கள்! விவரம் அறியாமல் தங்களைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். வருந்தாதீர்கள். உங்களை விடுதலை செய்துவிட்டேன்'' என்றார்.

 தீட்சிதரோ, “வரிகட்ட இயலாதவர் பலர் இங்கே சிறையிருக்க, எனக்கு மட்டும் ஏன் விடுதலை. அவர்களையும் விடுதலை செய்ய வேண்டுகிறேன்” என்றார்.

வடமலையப்பர் மறுக்கவில்லை. “அனைவரையும் விடுதலை செய்தேன். அனைவரும் அரண்மனைக்கு வாருங்கள்!” என அழைக்கவும் செய்தார். வண்டிகள் பல சிறைச்சாலை வாசலுக்கு வந்தன. அனைவரும் ஏறி, அரண்மனையை அடைந்தார்கள்.

அங்கே, அனைவருக்கும் அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. “தீட்சிதரால் விடுதலை அடைந்தோம் நாங்கள்” என விடுதலை அடைந்தவர்கள் நன்றி பாராட்டினார்கள். வடமலையப்பரோ, “இனி, தீட்சிதர் உட்பட நீங்கள் யாரும் வரி கட்டவேண்டாம். உங்கள் நிலங்களை இறையிலி நிலங்களாகச் செய்துவிட்டேன்” என்று கூறி, அப்படியே செய்தார்.

திருநெல்வேலியில் தீட்சிதர் உட்படப் பலரும் சிறையிருந்த தெருவுக்கு ‘காவல்புரைத் தெரு’ என்ற பெயர் இன்றும் வழங்கப்படுகிறது. சிறைச்சாலையில் இருந்தபடி தீட்சிதர் பாடிய பாடல்களையெல்லாம், வடமலையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி, மறுபடியும் பாடினார் தீட்சிதர். அறுபத்தைந்து பாடல்கள் ஆகியிருந்தன. “மேலும் முப்பத்தைந்து பாடல்கள் பாடி, நூலை நிறைவு செய்யுங்கள்!” என வடமலையப்பர் வேண்ட, அவ்வாறே செய்தார் தீட்சிதர். அந்நூலின் பெயர் ‘குழைக்காதர் பாமாலை’.

வடமலையப்பர் நூல்கள் இயற்றுவதிலும் வல்லவர். இவர் எழுதிய, ஐயாயிரம் பாடல்கள் கொண்ட ‘மச்சபுராணம்’ எனும் நூல் கி.பி.1707-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. நீடூர்த்தல புராணமும் இவரால் எழுதப்பட்டது.

வடமலையப்பர் எனும் பெயரைப் படித்ததும் வேறோர் அருள் சம்பவமும் உங்கள் நினைவுக்கு வரலாம். ஆம்! திருச் செந்தூர் முருகப்பெருமான் அருளால் நிகழ்ந்தது, அந்தச் சம்பவம். வடமலையப்பர் காலத்தில் ஒருமுறை, திருச்செந்தூர் சண்முகர் விக்கிரகத்தைக் கப்பலில் கவர்ந்து சென்றனர் அந்நியர்கள். அவர்களது கடற்பயணத்தின்போது, முருகன் அருளால் திடுமென பெரும் புயலடிக்க, கப்பல் நிலைகுலைந்தது. சண்முகரின் விக்கிரகத்தை எடுத்துச் செல்வதாலேயே இந்த நிலை என்பது அந்நியர்களுக்கு உணர்த்தப்பட, சண்முகர் விக்கிர கத்தைக் கடலில் சேர்த்தார்கள். புயலின் சீற்றம் தணிந்தது.  அதன்பிறகே, அந்நியர்களின் கப்பல் பயணம் தொடர்ந்தது.

பின்னர் ஒருநாள், நம் வடமலையப்பரின் கனவில் தோன்றிய முருகன், சமுத்திரத்துக்கு அடியில் தாம் இருக்கும் இடத்தை உணர்த்த, ஸ்வாமியின் விக்கிரகத்தை மீட்டு செந்தூர் ஆலயத்தில் எழுந்தருளச் செய்தார் வடமலையப்பர். ஆம்! முருகப்பெருமானின் பரிபூரண அனுக்கிரகத்தைப் பெற்றவர் வடமலையப்பர்.

பூமிக்கடியில் எங்கும் நீர் இருப்பதைப்போல, எங்கும் என்றும் திருவருள்செல்வர்கள் இருக்கிறார்கள். அறிந்து உணர்ந்து பயன் பெற வேண்டியது நம் கடமை.

- திருவருள் பெருகும்...

கர்மமும் கருணையும்!

நாமும்  பிறக்கிறோம்;  இறைவனும்  அவதாரம் செய்கிறார். ஆனால், இருவரது பிறப்பும் ஒன்றாகி விடாது. நாம் நமது கர்மவசத்தினால் பிறப்பெடுக் கிறோம். ஆகவே, நாம் நமது விருப்பப்படி பிறக்க இயலாது. ஆனால், இறைவன் தமது பெருங்கருணையினால் அவதாரம் செய்கிறார். எங்கே எப்படித் தோன்ற வேண்டுமோ, அப்படித் தோன்றுகிறார்.

திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை

மலையிலிருந்து உருட்டியதனால் ஒருவன் கீழே விழுகிறான். மற்றொருவனோ படிப்படியாக இறங்கி வருகிறான். நாம், முன்னவனைப் போல் இந்த உலகத் துக்கு உருட்டித் தள்ளப்பட்டிருக்கிறோம். இறைவனோ, பின்னவனைப் போல் தாமாக உவந்து வந்து இவ்வுலகில் அவதரிக்கிறார்.

 மேலேயிருந்து  உருட்டிவிட்டால் காயம்  உண்டாகும் அல்லவா? நமக்கு  இந்தக் காயம் (உடம்பு) ஊழ் வினை உருட்டிவிட்டதால் வந்தது.

(சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் சொற்பொழிவிலிருந்து)

பொய்யும் மெய்யும்!

அனைத்தையும் இழந்த அரிச்சந்திரன் கானகத்தின் வழியே நடந்து கொண்டிருந் தான். எப்படியாவது, ‘அரிச்சந்திரன் பொய் பேசுபவன்’ என்று நிரூபிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன், அவனைப் பின் தொடர்ந்து சென்றார் விஸ்வாமித்திரர்.

திருவருள் செல்வர்கள்! - 7 - வடமலையப்ப பிள்ளை

இரவு நெருங்கியது. களைப்பின் காரணமாக சிறிது கண்ணயர்ந்தான் அரிச்சந்திரன். சிறிது நேரத்தில் அவனை அணுகிய விஸ்வாமித்திரர், “என்ன தூக்கமா?” என்று  கேட்டார். அதற்கு அவன், “ஆமாம், சிறிது, கண்ணயர்ந்து விட்டேன். மன்னியுங்கள்” என்றான். இந்த இடத்தில் நாம் ஓர் உண்மையைக் கவனிக்க  வேண்டும். நம்மில் பலரும் இப்படியொரு குட்டித் தூக்கம் போடும்போது, எவரேனும் நம்மை அணுகி, ``என்ன தூக்கமா?'' என்று விசாரித்தால், சட்டென்று சுதாரித்துக் கொள்வோம். “இல்லையே... விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!” என்றே பதில் சொல்வோம். அது, நம்மை அறியாமல் நாம் சொல்லும் பொய். ஆனால், அரிசந்திரன் அப்படி வாய்தவறிகூட பொய் சொல்லவில்லையாம்!

(ஓர் உபன்யாசத்தில் கேட்டது)