Published:Updated:

பட்டினத்தார் திருவிழா!

பட்டினத்தார் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
பட்டினத்தார் திருவிழா!

பிரேமா நாராயணன்

பட்டினத்தார் திருவிழா!

பிரேமா நாராயணன்

Published:Updated:
பட்டினத்தார் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
பட்டினத்தார் திருவிழா!

லகில் தோன்றிய மகான்களில் பெரும்பாலானோர் நம் பாரத மண்ணில் தோன்றியவர்களே! அப்படி நம் பாரத பூமியைப் புண்ணிய பூமியாய் திகழ்ச் செய்த மகான்களைப் போற்றும்விதம்,  அவர்களுக்கான திருநட்சத்திர திருநாள்களும், குருபூஜை விழாக்களும் வெகு சிறப்பாக நடந்தேறுவது வழக்கம்.

அப்படி நம் பூமியில் தோன்றிய மகான் ஒருவருக்கு, ஆராதனைகள், குரு பூஜை மட்டுமன்றி, அவருடைய வாழ்க்கையையே நாடகமாக நடத்திக்காட்டி, 12 நாள்களுக்கு மிக அற்புதமாய் விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள் பக்தர்கள்.

பூம்புகார் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றி, சென்னை திருவொற்றியூரில் முக்தியடைந்த மகான் பட்டினத்தாருக்கான திருவிழாதான் அது.  ‘திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் அற்புதத் திருவிழா’ என்ற திருப்பெயரில், அவரின் வழிவந்த செட்டிநாட்டு நகரத்தார் பெருமக்களால், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது இந்தத் திருவிழா. சுமார் 300 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தத் திருவிழா, பட்டினத்தடிகளின் வாழ்க்கையையே விவரிக்கும் நாடகத் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

செட்டிநாட்டைச் சேர்ந்த நகரத்தார்கள் ஆதியில் காவிரிப்பூம் பட்டினத்தில் தோன்றி வணிகம் செய்ததாக வரலாறு. அதன்பிறகு, அங்கிருந்து (தற்போதைய) சிவகங்கை மாவட்டத்துக்குக் குடிப் பெயர்ந்து சென்றுவிட்டாலும், இன்றைக்கும் அனைத்து ஊர் நகரத்தார்கள், காவிரிப்பூம்பட்டின நகரவாசிகள் மற்றும் கண்டனூர் மஹாதேவ நா.அரு.காசிவிஸ்வநாதன் செட்டியாரின் வம்சாவழியினர் அனைவரும் இணைந்து, இந்த விழாவினை விமர்சையாக நடத்திவருகின்றனர். இந்த ஆண்டு திருவிழாவுக் கான ஏற்பாடுகளை அரு.காசிவிஸ்வநாதன் முன்னின்று செய்து வருகிறார்.

ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் தொடங்கி, உத்திராடம் நட்சத்திரம் வரை 12 நாள்கள் நடை பெறும் இந்தத் திருவிழா, இந்த ஆண்டு ஆடி மாதம் 1-ம் தேதி  (ஜூலை 17; செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

பட்டினத்தார் திருவிழா!

விழா நடைபெறும் காவிரிப்பூம்பட்டினம் நகர விடுதியில், கடந்த பல ஆண்டுகளாகத் தினமும் பட்டினத்தாரின் வாழ்க்கை வரலாற்றைக் கதையாகச் சொல்லி, பாடலாகப் பாடி, திருவிழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி வரும் ஆத்தங்குடி முருகப்பன் இந்த விழாவின் அற்புதங்களைப் பற்றி நம்மிடம் விவரித்தார்.

‘‘இந்தத் திருவிழாவுக்கு வருபவர்களுக்கு, பட்டினத்தடிகளின் வாழ்க்கை மனப்பாடமாகிவிடும். அவர் பிறந்ததிலிருந்து மறைந்தது வரையிலான சம்பவங்களைக் கதையாகச் சொல்வதுடன், நாடகமாகவும் நடத்திக்காட்டுவதுதான் இந்த விழாவின் சிறப்பம்சம்.  பட்டினத்தாரின் பிறப்பே தெய்விகமானது. அதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது.

ஒரு முறை, பார்வதியாள் மற்றும் குபேரனுடன் சிவனார் பூமியை வலம் வரும்போது, பூம்புகாரைச் சுற்றியுள்ள ஏழு வனங் களைக் கண்டு, அவற்றின் அழகில் மயங்கினான் குபேரன். அத்துடன் பூம்புகாரில் பிறக்கவும் ஆசைப்பட்டான். அவரது ஆசையை சிவனார் நிறைவேற்றினார்.

பூம்புகாரில் வசித்த மிகப்பெரிய வணிகர் சிவநேசச் செட்டியார். சொந்தமாகக் கப்பல் வைத்து, நவரத்தின வணிகம் செய்து வருபவர். அவருக்கும் அவர் மனைவி ஞானகலை ஆச்சிக்கும் மகனாகப் பிறந்தார் குபேரன். அந்தக் குழந்தைக்கு, தங்களின் குலதெய்வமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரரின் பெயரைச் சூட்டினார் சிவநேசர். திருவெண்காடர் பிறந்த சில ஆண்டுகளிலேயே சிவநேசர் காலமாகிவிட, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.

குறிப்பிட்ட வயதில் மகனைத் திருவெண்காட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே அவருக்கு சிவாசார்யர் ஒருவர் மூலமாகச் சிவதீட்சை பெற்றுத் தந்தார் ஞானகலை. ஊருக்குத் திரும்பியதும் திருவெண்காடருக்குத் திருமணம் பேசி, அவரின் மாமா மகள் சிவகலையைத் திருமணம் செய்து வைத்தார். இந்தத் தம்பதிக்கு 35 ஆண்டுகளாகக் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. பிறகு, சாயா வனத்தில், சிவசருமர் என்ற அந்தணரின் வீட்டிலுள்ள வில்வ மரத்தடியில் ஒரு குழந்தை தோன்றியது. அந்தக் குழந்தையைச் சிவசருமர் - சுசீலை என்ற அந்த அந்தணத் தம்பதி எடுத்து வளர்த்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டினத்தார் திருவிழா!

இந்த நிலையில் ஒருநாள், ‘குழந்தை இல்லாத திருவெண்காடர் தம்பதியிடம் இந்தக் குழந்தையைக் கொடுத்து எடைக்கு எடை பொன், பொருள் பெற்றுக் கொள்’ என்று ஓர் அசரீரி  ஒலித்தது. அதேபோல், சிவகலையின் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘நான் மகனாக சாயா வனத்தில் அவதரித்திருக்கிறேன். பொன், பொருள் கொடுத்துக் குழந்தையைப் பெற்றுக்கொள்’ என்று அருள்புரிந்தார். அதன் படியே சாயாவனத்துக்குச் சென்று, அந்தணத் தம்பதியிடம் குழந்தையைப் பெற்றுக் கொண்டனர்.

வீட்டுக்கு வந்ததும், குழந்தையை வெள்ளித் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி, `மருதவாணன்' என்று பெயரிட்டு வளர்த்தனர்.

குழந்தை வளர்ந்ததும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். அங்கே அவனுக்கு முத்துப் பரீட்சை, ரத்தினப் பரீட்சை  எல்லாம் நடைபெறும். தன வணிகரின் குலம் அல்லவா? ஆகவே, போலி முத்து மற்றும் போலி ரத்தினங்களைக் கண்டறியும் திறனை வளர்த்துக் கொண்டு, தங்களின் குல வழக்கப்படி, பெரிய கப்பலில் வெளிநாட்டு வாணிபத்துக்குச்  சென்றான் மருதவாணன்.

வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பும்போது அவனை வரவேற்கக் கப்பலடிக்குச் சென்றார் திருவெண்காடர். அவர் அந்தப் பக்கமாகச் செல்லும்போது, இந்தப் பக்கமாக வீட்டை அடையும் மைந்தன், தன் தாயிடம் ஒரு தகரப் பெட்டியை ஒப்படைத்து, அதைத் தந்தையிடம் கொடுக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார்.

கப்பலுக்குச் சென்று பார்த்த தந்தைக்கு அதிர்ச்சி. கப்பல் முழுதும் வறட்டியும் தவிடுமாக நிறைந்திருந்தன. ‘இவற்றையா மகன் சம்பாதித்து வந்தான்' என்று கோபத்துடன், வறட்டி ஒன்றை எடுத்து வீசியெறிந்தார் திருவெண்காடர். சுவரில் பட்டுத் தெறித்த வறட்டியிலிருந்து விலையுயர்ந்த நவரத்தினங்கள் கொட்டின. அதேபோல் தவிட்டுக்குள் தங்கத் துகள்கள் மின்னின!

‘அடடா.. மகனைத் தவறாக எண்ணிவிட்டோமே!’ என்று வீட்டுக்கு ஓடோடி வந்தார் திருவெண்காடர். அங்கே அவருக்குத் தகரப் பெட்டிதான் காத்திருந்தது. அதைத் திறந்து பார்த்தார் திருவெண்காடர். உள்ளே ஓர் ஓலைநறுக்கு, காதற்ற ஊசி, முறுக்கவிழ்ந்த நூல் ஆகிய மூன்றும் இருந்தன. அந்த ஓலை நறுக்கில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது.

பட்டினத்தார் திருவிழா!

அதைப் படித்ததுமே உள்ளே பொறிதட்டியது திருவெண்காடருக்கு. ‘ஆஹா... வந்தது சிவ பெருமான்தான். வாழ்வின் நிலையாமையை எனக்குப் போதிக்கவே என் மகனாக வந்திருக் கிறார்!’ என்று உணர்ந்தார். கணக்கரான சேந்தனாரை அழைத்து, தம்முடைய பொருள்கள் அனைத்தையும் சூறைவிடச் சொன்னார்.

அத்துடன் அங்கேயே ஆடைகளைத் துறந்து, அரையாடையை மட்டும் கட்டிக்கொண்டு, உடனடித் துறவு பூண்டார் திருவெண்காடர். அதைப் பார்த்த தாயார், ‘முற்றும் துறந்த முனிவனுக்கு முழு ஆடை எதற்கு’ என்று கேட்க, அந்த ஆடையையும் களைந்துவிட்டு, தாயார் தந்த சிறு கெளபீணத்தை மட்டும் அணிந்துகொண்டு வெளியேறினார் திருவெண்காடர்.  அனைத்தையும் துறந்த அவரை ‘பட்டினத்து சாமிகள்’ என்று மக்கள் அழைக்க, அதுவே ‘பட்டினத்தார்’ என்று மருவியது.

அப்படி, அவர் வெளியேறும்போது, உப்பும் அரிசியும் முடியப்பட்ட முடிச்சு ஒன்றை அவரது அரைஞாண் கயிற்றில் கட்டிவிட்ட அன்னையார், ‘இது அவிழ்ந்து விழும்போது, நான் உயிர் துறந்து விட்டேன் என்று அறிந்துகொள். என் சிதைக்குத் தீ மூட்ட வா’ என்று கூறி அனுப்பிவைத்தாராம்’’ பட்டினத்தாரின் திருக்கதையை விவரித்த ஆத்தங்குடி முருகப்பன், பட்டினத்தாரின் வாழ்வில் நிகழ்ந்த வேறு சில ஞானச் சம்பவங் களையும் பகிர்ந்துகொண்டார்.

பட்டினத்தாரை அவரின் சகோதரி கொல்லத் துணிந்தது, அதன் பொருட்டுச் சகோதரிஅளித்த அப்பத்தை அவர் வீட்டுக் கூரையின் மீது எறிந்து, ‘தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’ என்று பட்டினத்தார் கூற, சகோதரியின் வீடு தீப்பற்றி எரிந்தது, தாயார் மறைந்ததும் அவரின் திருமேனிக்கு... பச்சை வாழை மட்டை களையும் இலைகளையும் அடுக்கி, பாடல்கள் பாடி ஞானாக்னியால் எரியூட்டியது, உஜ்ஜயினியில் வீண் பழியின் காரணமாக அரச தண்டனைக்கு ஆளாகி, கழுமரம் வரை சென்று மீண்டது, உஜ்ஜயினி அரசன் பத்ரகிரியார் எனும் பெயருடன் பட்டினத்தாருக்குச் சீடரானது... எனப் போன்ற அற்புதங்களை முருகப்பன் விவரிக்க, நமக்கு மெய்சிலிர்த்தது.

மேலும் அவர், ‘‘நிறைவாகச் சென்னை திருவொற்றியூருக்கு வந்து சேர்ந்த பட்டினத்தார், அங்கே கடற்கரையில் சிறுவர்களிடம் சித்து வேலை காட்டி விளையாடினாராம். அவர்களுக்கு அவர் மண்ணை அள்ளிக்கொடுக்க, அது சர்க்கரை யாக மாறுமாம். கடற்கரையில் ஓரிடத்தில் அமர்ந்து, அந்தச் சிறுவர்களிடம் தன்னைப் பெரிய கூடை கொண்டு மூடச்சொல்லி, இன்னொரு இடத்தில் தோன்றுவாராம். இப்படியே இரண்டு முறை வெவ்வேறு இடங்களில் மறைந்து வெளிப்பட்டவர், மூன்றாவது முறை ஓரிடத்தில் அமர்ந்து,  சிறுவர்கள் கூடையால் மூடியதும், அந்த இடத்திலேயே சிவலிங்கமாகிவிட்டாராம்; முக்தி அடைந்தாராம். திருவொற்றியூரில் அந்தச் சிவலிங்கம் இருக்கும் இடத்தில் பட்டினத்தாருக்குக் கோயில் கட்டியிருக்கிறார்கள். ஆடி மாதம் அங்கே குரு பூஜை நடக்கும்’’ என்றார் நெகிழ்ச்சியுடன். அவரிடம் பட்டினத்தார் திருவிழாவைக் குறித்து கேட்டோம்.

‘‘இப்போது நான் சொன்னேனே... அந்தச் சம்பவங்கள், காவிரிப்பூம்பட்டினத்தின்  நகர விடுதியில் முதல் நாள் விநாயகர் பூஜையுடன் திருவெண்காடரின் அவதாரம் நிகழ்த்தப்படும். ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் என்னவெல்லாம் நடக்குமோ அவை அத்தனையும் நடக்கும். 2-ம் நாள் சிவதீட்சை பெறும் வைபவம். 3-ம் நாள் திருக் கல்யாணம்; கல்யாண விருந்தோடு திருவெண்காடர் திருமணம் நடந்தேறும். 4-ம் நாளன்று, குழந்தையாக வெள்ளி விமானத்தில் சாயாவனத்தின்  வில்வமர நிழலில் எழுந்தருள்வார், மருதவாணர்.

பகலில், சுசீலையோடு வரும் சிவசருமர் குழந் தையைக் கண்டெடுப்பார். பின்னர் திருவெண் காடரும் அவர் மனைவியும் வந்து, எடைக்கு எடை பொன் கொடுத்துக் குழந்தையை வாங்கிச் சென்று, வெள்ளித் தொட்டிலிலிட்டுத் தாலாட் டும் நிகழ்வு நடக்கும். இந்த வைபவத்தை நேரில் காணக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்!  அதேபோல், மாமன் குடும்பம் வந்து சீர்செனத்தி கொடுத்து, காது குத்தி பெயர் வைக்கும் வைபவமும் விமர்சையாக நடக்கும்.

அதேபோல் 5-ம் நாள் விழாவில், மருதவாணருக்கு வித்யாப்பியாசம். அன்று மாலையில், வணிகத்துக்குப் புறப்படும் மருதவாணர் அனைவரிடமும் விடைபெறும் வைபவம் நிகழும். இதற்காக நிஜமாகவே பெரிய கப்பலொன்றைக் கட்டி வைத்திருப்பார்கள். பூம்புகார் வந்தால் பார்க்கலாம். அதேநாளிலேயே மருதவாணர் திரும்புதல், பட்டினத்தார் துறவுபூணுதல், தாயாரிடம் விடை பெறுவது ஆகிய வைபவங்களும் நடைபெறும்.

இப்படி, அடுத்தடுத்த நாள்களில் வைபவங்கள் அற்புதமாய் நிகழ்ந்தேறும்.  10-ம் நாள் உத்திராடம் திருநட்சத்திரம் - பட்டினத்தார் முக்தியடைந்த நாள். அன்று குருபூஜை, சௌந்தரநாயகி சமேத பல்லவனீச்சுவரருக்கு ருத்ராபிஷேகம், இரவில் பஞ்சமூர்த்திகளும் பட்டினத்தடிகளும் திருவீதி எழுந்தருளுதல் ஆகியன நடைபெறும்.

11-ம் நாள் பஞ்சமூர்த்திகளும் பட்டினத்தாரும் ரிஷபவாகனத்தில் காட்சி தந்து தீர்த்தம் கொடுப் பார்கள். 12-ம் நாளன்று நிறைவு நாள் நிகழ்ச்சியாக, காலை பஞ்சமூர்த்திகள், மருதவாணர், சிவகலை சமேத பட்டினத்தடிகள், சுசீலை சமேத சிவசருமர், பத்திரகிரியார், நாயடியார், ஞானகலாம்பிகை, சேந்தனார், அவரின் பத்தினியார், அவர்களின் குழந்தை ஆகியோருக்கு ருத்ராபிஷேகமும் விடையேற்றி வைபவமும் நடைபெறும்.

இப்படி, இந்தப் பன்னிரண்டு நாள் திருவிழாவில்,  பட்டினத்தடிகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்துமே தத்ரூபமாக நிகழ்த்தப்படுவது மிகவும் சிறப்பு. இதற்கான எல்லாப் பொருள்களும் பூம்புகாரில் உள்ளன. வீடு தீப்பற்றி எரிவது, கப்பல் புறப்படுவது போன்ற நிகழ்வுகளை, செட்டிங்க்ஸ் போட்டு நிஜத்தில் நிகழ்வது போன்று செய்து காட்டுவது ஆச்சர்யம்!

ஊர் மக்களும் வந்து வணங்குவார்கள். வேறெங் கும் இல்லாத வித்தியாசமான விசேஷமான இந்தத் திருவிழாவைத் தொகுத்து வழங்கும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்திருக்கும் இறைவனுக்கு நன்றி'' என்று மிகவும் நெகிழ்ச்சியோடு சொல்கிறார் முருகப்பன்.

பட்டினத்தார் திருவிழா!

இந்தத் திருவிழா குறித்து செட்டிநாட்டுப் பெண்மணி ஒருவர், தனக்கான அனுபவத்தைச் சிலிர்ப்போடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘அந்தக் காலத்தில், செட்டிநாட்டு ஊர்களி லிருந்து வண்டி கட்டிக்கொண்டு இந்தத் திருவிழா வுக்குச் செல்வார்கள். அரிசி, பருப்பு எல்லாம் கொண்டுபோய், அங்கேயே சமைத்துச் சாப்பிடு வார்கள். பன்னிரண்டு நாள்களும் அங்கேயே தங்கியிருந்து விழாவைத் தரிசித்துத் திரும்புவார்கள்.

இப்போது, எல்லோராலும் பன்னிரண்டு நாள் களும் இருக்கமுடிவதில்லை என்றாலும், முக்கிய மான வைபவங்கள் நடக்கும் நாள்களில், விழாவில் கலந்துகொள்கிறார்கள். பூம்புகாரில் மட்டுமின்றி வசதிக்கேற்ப அருகிலுள்ள ஊர்களிலும் தங்கிக் கொள்கிறார்கள் பக்தர்கள். திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் குழுக் களாகச் சேர்ந்து, அருகிலுள்ள திருத்தலங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் அன்பர்களும் உண்டு. இது, இந்த விழாவினால் கிடைக்கும் போனஸ் மகிழ்ச்சி!''

அவரே தொடர்ந்து, ‘‘பட்டினத்தார் திருவிழா வுக்குப் போய்ட்டு வந்தா, நம்ம பிரச்னைகள் தீரும்: நல்லது நடக்கும். அங்கே நாயடித் திருநாளன்று உடைஞ்ச ஓடு கொடுப்பாங்க. அதைச் சுத்தமான கல்லில் உரைச்சு, தண்ணியில் கலந்து குடித்தால், குழந்தைப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், திருக்கல்யாணத் திருநாளன்று, தெய்வப் பிரசாதமா மாலை வாங்கி வந்தால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பார்கள். பட்டினத்தார் பிறந்து வாழ்ந்த மண் என்பதால்,  அதற்கேற்ற தெய்வ சாந்நித்தியத்தை அதிர்வுகளை அங்கே நன்கு உணரமுடியும்!’’ என்றார் பரவசம் பொங்க.

மேலும், பூம்புகாரில் விளையும் மாங்கனியைச் சாப்பிட்டால் மகப்பேறு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள் பக்தர்கள். திருமணம் முடிந்து வெகு காலமாகக் குழந்தைப் பாக்கியம் கிடைக்காத தம்பதிகள், பூம்புகாருக்குச் சென்று மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டு, அதன் பலனாக குழந்தைப் பாக்கியம் பெற்ற சம்பவங்கள் நிறைய உண்டு.

காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பது கொடிமரம் இல்லாத கோயில். பல்லவனீச்சரம் எனப்படும் இந்தக் கோயில், சிவபக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. நீங்களும் ஆடியில் பூம்புகாருக்குச் சென்று வாருங்கள். ஞானத்தந்தை பட்டினத்தடி களின் அற்புதத் திருவிழாவை நேரில் தரிசித்து வணங்கி, இறையருளையும் குருவருளையும் ஒருங்கே பெற்று வாருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism