மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 7

மகா பெரியவா - 7
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 7

வீயெஸ்வி, ஓவியங்கள்: கேஷவ்

ன்மிகத் தேடல் தொடர்பான தனது இந்திய பயணத்தின்போது, சென்னைக்கு வருகிறார் பால் பிரண்டன். இவரைக் காஞ்சிபுரம் அழைத்துச் சென்று பரமாசார்யாரைத் தரிசிக்க ஏற்பாடு செய்கிறார், எழுத்தாளர் கே.எஸ்.வெங்கட்ரமணி.

மகாபெரியவரின் முன் அமர்கிறார் பால் பிரண்டன். சற்றுநேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பிறகு மெதுவாக ஆரம்பிக்கிறார்.

மகா பெரியவா - 7

“நீங்கள் எனக்கு மந்த்ரோபதேசம் செய்தருள வேண்டும்.”

மகாபெரியவா அவரைத் தீர்க்கமாகப் பார்க்கிறார்.

“மடத்துக்கென்று சட்டதிட்டங்கள் உண்டு. வெளிநாட்டவர்களுக்கு மந்த்ரோபதேசம் செய்ய இங்கே மடாதிபதிகளுக்கு அனுமதி கிடையாது. நீ திருவண்ணாமலை சென்று ரமணரைத் தரிசனம் செய்” என்கிறார்.

தங்கியிருக்கும் அறைக்குத் திரும்புகிறார் பால் பிரண்டன். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் தாய்நாடு திரும்பவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தாகிவிட்டது. திருவண்ணாமலைக்குச் சென்று திரும்ப நேரம் இருக்காது. என்ன செய்யலாம்?

யோசித்தபடியே உறங்கச் செல்கிறார். திடீரென்று அவருக்கு ஒரு கனவு. காற்று வெளியிடையில் தோற்றம் அளிக்கிறார் பரமாசார்யார்.

மகா பெரியவா - 7

“ரமணர் தரிசனத்தை இந்த முறை நீ தவற விட்டுவிட்டால், பிறகு அப்படி ஒரு வாய்ப்பே உனக்குக் கிடைக்காமல் போகலாம்” என்று சொல்லிவிட்டு திருவுருவம் மறைகிறது.

இந்தச் சம்பவத்தை பால் பிரண்டன் தனது புத்தகத்தில் பதிவு செய்ய, ஸ்ரீமடத்தின் அணுக்கத்தொண்டர் ஒருவர் அதனைப் படிக்க நேரிடுகிறது. மகா பெரியவரிடம் இதுபற்றிக் கேட்கிறார்.

“பெரியவா! பால் பிரண்டன் தூங்கும்போது நீங்க அவரோட சொப்பனத்துல காற்று வெளி யிடையில் வந்தீர்களாம். தன் புத்தகத்துல அவர் எழுதியிருக்கிறார். அப்படின்னா, பெரியவா அற்புதங்கள் செய்யறதுண்டா?”

புன்னகைக்கிறார் பரமாசார்யார். பின்னர் ஒரே வார்த்தையில் பதிலளிக்கிறார்!

“அதுக்குத்தான் சொல்றது, தூங்கும்போது நல்லதை மட்டுமே நெனைக்கணும்னு!”

கோடைக் காலம். காஞ்சி மடத்தில் அண்டா நிறைய நீர்மோர் கரைத்துவைத்து, வரும் பக்தர்களுக்கெல்லாம் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்.

மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்த மகாபெரியவா, அந்த நீர்மோர் அண்டாவை மடத்துக்கு வெளியே வைக்க உத்தரவிட்டார். ஏன், எதற்கு என்பது யாருக்கும் புரியவில்லை. இட்ட பணியை நிறைவேற்றினார்கள்.
சிலமணி நேரத்துக்குப் பின், ‘`அண்டா காலி ஆயிடுத்தா..?” என்று விசாரித்தார் காஞ்சி முனிவர்.

“காலி ஆயிடுத்து பெரியவா.  ஏதோ பகுத்தறிவுக் கட்சியோட ஊர்வலம் இந்தப் பக்கமா போயிருக்கு. முதல்லே ஒருத்தர் வந்து மோர் எடுத்துக் குடிச்சாராம். அப்புறம், மத்தவங்களும் ஒவ்வொருவரா வந்து குடிச்சிருக்கா பெரியவா.”

பெரியவரின் முகத்தில் திருப்திப் புன்னகை!

ரமாசார்யாருக்கு லேசாக உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, வெளியூரிலிருந்து ஆயுர்வேத டாக்டர் ராமசர்மா வரவழைக்கப் பட்டார். பெரியவருக்குக் காய்ச்சல் இருப்பதைக் கண்டறிந்த டாக்டர், தன் கைப்பையை திறக்க முனைந்த போது...

“இரு... நீ போய் ஸ்நானம் பண்ணிட்டு  வா.  நானும் ஸ்நானத் துக்குத்தான் போயிண்டிருக்கேன்” என்றார் பெரியவா, டாக்டரிடம்.

ஸ்நானம் முடித்துத் திரும்பியதும், “இப்போ நாம ரெண்டுபேரும் சகஸ்ரநாமம் சொல்லப்போறோம்” என்று சொல்லிவிட்டு, ஸ்லோகத்தை ஆரம்பித்தார் பெரியவா. சொல்லி முடித்ததும், மகானின் காய்ச்சல் குறைந்துவிட்டதை உணர்ந்தார் டாக்டர்.

“நீ உன் பேஷண்ட்களுக்கு மருந்து எழுதிக்கொடு... வேண் டாம்னு சொல்லலே. கூடவே, பிரிஸ்கிருப்ஷன் அடியில, தினமும் ரெண்டு வேளை சகஸ்ரநாமம் சொல் லணும்னு எழுதிக்கொடு” என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார் பெரியவா!

கா பெரியவரின் பால்ய பருவத் தைத் தொடருவோம்.

“வெங்கட்ராமய்யா! சுவாமி நாதனோட ஜாதகம் எடுத்துண்டு வந்திருக்கேன். கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோ. எனக்கு என்னவோ அவனோட எதிர்காலத்தை நெனைச்சா கவலையாவே இருக்கு” என்றார் சுப்பிரமணிய சாஸ்திரிகள்.

ஜாதகம் கை மாறியது. கண்ணா டியைக் கழற்றி, மேல் துண்டால் துடைத்துவிட்டு மறுபடியும் மாட்டிக்கொண்டு, ஜாதகத்தை ஆராய்ந்தார் வெங்கட்ராமய்யா. விரல் விட்டு எண்ணியபடியே ஏதோ கணக்குப் போட்டார்.

“சாஸ்திரிகளே! உமக்குக் கவலையே வேண்டாம். உம்ம மகனுக்கு யோக ஜாதகம். பெரிய மகாராஜாக்களுக்குத்தான் இப்படி கிரகச் சேர்க்கை கள் இருக்கும். சுவாமிநாதனோட ஜாதகத்துல, சூரியன் லக்னத்துக்கு பத்தாவது இடத்துல இருக்கான். அந்த வீட்டுக்கே உண்டான சுக்கிரன், மீன ராசியில் உச்சத்துல உட்கார்ந்துண்டு இருக்கான். சந்தேகமே இல்லை... இந்தப் பையன் உலகமே கொண்டாடும் சக்ரவர்த்தியா ஆட்சி செய்யப்போறான்!”

வெங்கட்ராமய்யா உற்சாகமாகச் சொன்னாலும், சுப்பிர மணிய சாஸ்திரிகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. மனம் சமாதானம் அடையவில்லை என்பதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது.

“இன்னும் சந்தேகமா இருக்கா? போய் கையோட சுவாமி நாதனை அழைச்சுண்டு வாங்கோ.”

சாஸ்திரிகள் மகனை அழைத்து வந்தார்.

மகா பெரியவா - 7

“சுவாமிநாதா! பின்கட்டுக்குப் போய் கால் அலம்பிண்டு வா. வரும்போது, செம்பில் தண்ணி எடுத்துண்டு வா” என்றார் வக்கீல்.

பின்கட்டுக்குச் சென்று கால் அலம்பிக்கொண்டு, கையில் செம்புடன் திரும்பிய சுவாமிநாதனை, அருகிலிருந்த ஸ்டூலில் உட்காரச் சொன்னார். அழுக்கு ஒட்டிக்கொண்டிருந்த அவன் காலை தன் கையாலேயே அலம்பித் துடைத்தார்.

‘`விடுங்கோ மாமா!” என்ற சுவாமிநாதனின் குரலோ, ‘`என்ன இது! சின்னவன் காலை நீங்க தொடலாமா” என்று கேட்ட சாஸ்திரிகளின் குரலோ, வக்கீலின் காதில் விழவில்லை!

சுவாமிநாதனின் காலில் காணப்பட்ட சங்கு-சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை என்று எத்தனை உண்டோ, அத்தனையும் அவர் ஓர் அவதார புருஷனாக்கும் என்று கட்டியம் கூறிக்கொண்டு பளிச்சென்று வெங்கட்ராமய்யாவின் கண்களுக்குப் புலப்பட்டன.

எதுவும் புரியாமல் மகனையும் அழைத்துக்கொண்டு சாஸ்திரிகள் வீடு திரும்பினார்.

ருடம் 1907. மடத்திலிருந்து சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்குத் தந்தி ஒன்று வந்தது.

“குருநாதர் ஸாரத்தைவிட்டு ஆற்காட்டுக்கு அருகிலுள்ள கலவை என்ற இடத்துக்குச் சென்றுவிட்டார். குழந்தை சுவாமிநாதனை அழைத்துக்கொண்டு உடனே மடத்துக்கு வரவும்” என்றது தந்தி வாசகம்.
அப்போது சாஸ்திரிகள் ஊரில் இருக்கவில்லை. பணி நிமித்தம் திருச்சி சென்றிருந்தார். “மடத்துலேர்ந்து தந்தின்னா சும்மா இருக்கக்கூடாது. நீ உடனே சுவாமிநாதனை அழைச் சுண்டு கிளம்பு” என்று அக்கம்பக்கத்தினர் மகாலட்சுமியை அவசரப்படுத்த, சாஸ்திரிகளுக்குக் காத்திருக்காமல், குழந்தை களுடன் புறப்பட்டார் மகாலட்சுமி. காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து கலவைக்குப் போகத் திட்டம். அதற்குள், பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், 66-வது காஞ்சி காமகோடி பீடாதிபதி, வைசூரி கண்டு, மகாலட்சுமியின் மூத்த சகோதரியின் மகன் லட்சுமிகாந்தனை 67-வது மடாதிபதியாக பீடத்தில் அமர்த்தி விட்டு ஸித்தியடைந்தார்.

மடத்திலிருந்து தங்களுக்குத் தந்தி வந்த காரணம் புரியவில்லை மகாலட்சுமிக்கு. ஒரே மகன் சந்நியாசியாகி விட்ட துயரத்தில் இருக்கும் சகோதரிக்கு ஆறுதல் சொல்ல திண்டிவனத்திலிருந்து புறப்பட்டார்.

“அம்மா... நானும் உன்கூட வரேன்...” என்று சுவாமிநாதனும் புறப்பட்டான். காஞ்சிபுரத்தில் தாயை விட்டுவிட்டு, கலவைக்குத் தனியாக பஸ் ஏறினான்!

கலவையில் ஒருவித துக்க மேகம் சூழ்ந்திருந்தது. பக்தர்கள் ‘ஹரஹர சங்கர... ஜயஜய சங்கர...’ என்று சோகமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பீடம் ஏறிய இளைய சுவாமிகளும், குருவைப் பின்பற்றி எட்டாம் நாளே ஸித்தி அடைந்துவிட்டார்கள்.

அடுத்து?

(வளரும்)

மகா பெரியவா - 7

வம்சம் தழைக்கும்!

நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் காரைக்காலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஒழுகைமங்கலம். பசு பால் சொரிந்து, பூமியில் மாரியம்மன் இருப்பது தெரிந்ததால், ஊருக்கு ஒழுகைமங்கலம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.

ஆடி மாதம் வந்துவிட்டால், மாரியம்மனைக் குலதெய்வமா கவும் இஷ்ட தெய்வமாகவும் வழிபடுவோர், இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வேண்டிக்கொள்கின்றனர். தவிர, அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றி வேண்டிக் கொண்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!

புதுமணத் தம்பதியர் இங்கு வந்து, தாலி பிரித்துப் போட்டுக் கொண்டால், குடும்பம் செழிக்கும்; வம்சம் தழைக்கும் என்கின்றனர், பெண்கள்! கோயிலின் வேப்பமரத்தில் மஞ்சள் சரடு கட்டி வழிபட்டால் கல்யாண வரம் கைகூடும்; தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.