மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7

வெ.நீலகண்டன்

கிராம தெய்வ வழிபாட்டின் தனித்துவங்களில் ஒன்று சாமியாடுதல். அம்மாவாக, அப்பாவாக, சகோதரியாக, சகோதரனாக இருந்தவர்கள், நொடிப்பொழுதில் மாடசாமியாக, கருப்ப சாமியாக, சுடலையாக, இசக்கியாக, பேய்ச்சியாக, பேராச்சியாக மாறிவிடுவார்கள்.

உக்கிரமாகப் பறையொலிக்க, உடலை முறுக்கி அவர்கள் ஆடுகிற ஆட்டமும், போடுகிற சத்தமும் எல்லோரையும் மிரளவைக்கும்.  மூத்தச் சாமியாடி, கொஞ்சம் விபூதியை அள்ளி அவர்களின் தலை யில் கொட்டி அதட்டியதும், சாமிகள் மலையேறி சாமானியனாகிவிடுவார்கள்.

எல்லாச் சமூகங்களிலும் சாமியாடிகள் இருக் கிறார்கள். சாமியாடிகளைக் கூர்ந்து பார்த்தால், அவர்கள் சாமியின் மானிட உருவாகவே தெரிவார் கள். முறுக்கு மீசை, அகன்று சிவந்த கண்கள், ஏற்றி வாரி முடியப்பட்ட கூந்தல் எனக் கருப்பனின் பூசாரி கருப்பனின் சாயலிலேயே இருப்பார். துண்டால் வாயைக் கட்டிக்கொண்டு, மணியடித்த படி அந்தச் சாமியாடி கற்பூரம் காட்டும்போது, அவர் விழிகளில் கருப்பனின் உருவம் நெருப்பாய் கனன்று ஆடும்!

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7

பல கிராமங்களில்,  சாமியாடி வைத்தியராகவும் இருப்பார். தொடர்ந்து அழுதுகொண்டேயிருக்கும் குழந்தைகள் முதல் திடீரென படுத்தப் படுக்கையாகி விடும் பெரியவர்கள் வரை எல்லோரையும் அவரிடம் அழைத்துச் செல்வார்கள். சாமியழைத்து, தலையில் விபூதி போட்டு வீட்டுக்கு அனுப்புவார் சாமியாடி. விரைவில், படுத்தவர் எழுந்து அமர்ந்து விடுவார். `தன் சாமி, சாமியாடியின் நாவில் வந்து இறங்கி தன்னை நோயிலிருந்து விடுவித்துவிட்டார்' என்ற நம்பிக்கையே அவரை எழுந்து அமரச் செய்துவிடும். வாழ்க்கையில் பெரும்பாலானவை இப்படி அமானுஷ்யமாகவே நடக்கின்றன. ஆனால், நம் அறிவுக்கு எட்டாதவற்றை நாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கிவிடுகிறோம். மனிதர் களின் எல்லை அவ்வளவுதான். அந்த எல்லைக்கு அப்பாற்பட்டது, கிராம தெய்வங்களுக்கும் மக்களுக்குமான உறவு.

நம்பிக்கையூட்ட, பயிற்றுவிக்க, பிரச்னைகளைத் தீர்க்க, நோய் விரட்ட என எல்லாவற்றுக்கும் வெவ்வேறுபட்ட  உடல்மொழியும், வாய்மொழியும் கொண்டிருப்பார்கள் சாமியாடிகள். `அவர்கள் சொல்லும் சொற்கள் எல்லாம் சாமியின் சொற்கள்; சாமியாடி சாபமிட்டால் பலிக்கும்' என்று நம்பு கிறார்கள் மக்கள்.

சாமியாட்டம் என்பது ஓர் உணர்ச்சி நிலை. அந்தத் தருணத்தில், உண்மையான சாமியாடி தன்னில் கரைந்து உடலற்று `வெளி' ஆகி விடுகிறார். அப்போது நிகழும் எதுவும் அவருக்குத் தெரியாது. இந்த நிலையை ‘வெறியாட்டு’ என்று பாடுகின்றன நம் இலக்கியங்கள்.  குறிஞ்சி நிலத்தின் தெய்வமான முருகன், ஒரு மனிதனின் உடலில் புகுந்து ஆடும்  ‘வேலன் வெறியாட்டு’ பற்றி தொல்தமிழ் நூல்களில் பதிவுகள் இருக்கின்றன. 

குறிஞ்சித் திணையைச் சேர்ந்த இளம் பெண் சோர்வடைந்து வாட்டமுற்று இருந்தால், அவளின் தாயார் அவளை முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்று, ‘தம் மகளின் வாட்டம் போக்க வேண்டும்' என்று வேண்டுவாள். சாமியாடியாகிய வேலன் என்பான், கையில் வேல் தாங்கி, மார்பில் சந்தன மிட்டு மலர் மாலைகளைச் சூடிக்கொண்டிருப்பான். கோயிலுக்கு மத்தியிலிருக்கும் வெளியில்,  பூக்களை யும் புகையையுமிட்டு வெறியாடலாடி, முருகனின் குரலாய் பேசுவான். ஐங்குறுநூறும் திருமுருகாற்றுப் படையும் ‘வெறியாடல்’ குறித்து பாடுகின்றன.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7

காலப்போக்கில் வெறியாடல் பல்வேறு கலை வடிவங்களாகப் பரிணமித்தது. கேரளத்தின் தெய்யம், கர்நாடகத்தின் கோலா, ஆந்திரத்தின் எக்கேடம் ஆகியனவும் வெறியாடல் கலைதான். தமிழகத்தில் இப்படி நூற்றுக்கணக்கான தெய்விகக் கலைகள் இருக்கின்றன. 

இன்றும் பல சமூகங்களில் கரகமெடுத்தல் ஒரு வழிபாட்டு முறையாகவே இருக்கிறது. பெண் தெய்வங்களை நதியின் வடிவில் வணங்குவது ஒரு மரபு. அம்மன் கோயில் திருவிழாக் காலத்தில், அருகிலிருக்கும் நதிக்குச் சென்று குடத்தில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, தலைச்சுமையாகச் சுமந்து வருவார்கள். சாமியாடி குடம் சுமந்து முன் நடக்க,  தாரைத் தப்பட்டைகள் ஒலிக்க, ஊரே அவர் பின்னால் நடக்கும். அந்தக் குடத்தையே அம்மன் வடிவாய் வணங்குவார்கள். ஊரில் பஞ்சம் ஏற்பட்டாலோ, கொள்ளை நோய்களின் பாதிப்பால் உயிர்ப்பலி நிகழ்ந்தாலோ, இப்படி கரகம் சுமந்து அம்மனை ஊருக்குள் அழைத்து வரும் சடங்கு இன்றும் பல பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கரகம் சுமந்து வரும்போது, ஒலிக்கும் இசைக்கு ஏற்ப சாமியாடி அருள் வந்து ஆடுவார்.  உடன் வரும் பெண்களையும் அருள் தொற்றிக்கொள்ளும்.  பிற்காலத்தில் இதுவே கரகாட்டம் என்ற பெயரில் ஒரு கலைவடிவானது. அம்மன் கோயில் திருவிழாக் களில்  இந்தக் கரகாட்டம்  நடத்தப்படும். கரகம் ஆடும் பெண்களை அம்மன் வடிவாகக் கண்டு கையெடுத்து வணங்குவார்கள் மக்கள். 

இன்று அந்தக்  கலையின் தன்மை மாறிவிட்டது. கரகாட்டத்தை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண் டிருந்த கலைஞர்கள், வேறு வழியின்றி சமூகத்தின் தேவைக்கேற்ப கரகாட்டத்தின் வடிவத்தை மாற்றி விட்டார்கள். இன்று ‘கரகாட்டம்’ என்ற பெயரில் நிகழ்ந்துகொண்டிருப்பது, குறவன்-குறத்தி ஆட்டம். சற்று பாலியல் தன்மை தொனிக்கும் இந்தக் கலைக்கும் கிராம தெய்வக் கோயில்களுக்கும் தொடர்பு உண்டு.

மிகவும் கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறையைக் கொண்ட நம் மரபில், அந்தக் கால இளைஞர்களுக்கு பாலியல் குறித்த போதிய அறிவு வாய்க்கவில்லை.  மிகுந்த குழப்பத்தோடும் அறியாமையோடும் இருந்த அவர்களுக்கு, பாலியல் கல்வியாக வழங்கப்பட்டதுதான் இந்தக் குறவன் குறத்தி ஆட்டம்.  திருவிழாவின் நிறைவுநாளன்று இரவில்  இந்தக் கலை நிகழ்த்தப்படும். பார்வையாளர்களாகப் பெண்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள். பெரியவர்களின் முன்னிலையில், குறவன் குறத்தி ஆட்டம் அரங்கேறும்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7

இன்று தொழில்நுட்பம் எல்லாவற்றைப் பற்றி யும் ஏராளம் கற்றுத் தருகிறது. இன்றைய தலை முறை கற்பனைகூட செய்து பார்க்க இயலாத வரையறைகளும் கட்டுப்பாடுகளும் மிகுந்த ஒரு வாழ்க்கையைப் பூர்வீகமாகக் கொண்டதுதான் நம் சமூகம். அந்தக் காலகட்டத்தில் கலைகளே பாடங்களாகவும் இருந்தன.

ஆண்களுக்குப்  பாலியல் அறிவூட்ட குறவன் குறத்தியாட்டம் இருந்ததைப் போன்று, பெண்களுக் கும் ஒரு கலைவடிவம் இருந்தது. அதுவும் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டதுதான். அதற்குப் பெயர் ஔவை நோன்பு. ஆடி மற்றும் தை மாதச் செவ்வாய்க்கிழமைகளில் செய்யப்படும் இந்த வழிபாடு இப்போதும் கடைப்பிடிக்கப்படு கிறது. ஆனால், அதன் வடிவம் மாறிவிட்டது.

இந்த வழிபாட்டில் ஆண்களுக்கு அனுமதியில்லை.  ஆண் குழந்தைகள்கூட பங்கேற்கமுடியாது.  பூப்பெய்திய பெண்கள் பங்கேற்பார்கள். வயதான பெண்கள் வழிநடத்துவார்கள். எல்லோரையும் சுற்றி அமரவைத்து, மூத்தப் பெண் ஒரு கதை சொல்வார். அந்த ராஜா ராணி கதையில், ஆங்காங்கே இலைமறை காயாக பாலியல் சார்ந்த குறியீடுகள் இருக்கும். அந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், அரிசிமாவில் உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்து சாமிக்குப் படைப்பார்கள். கதையில் இடம்பெற்ற பாத்திரங்கள், செய்திகளின் வடிவங்கள் எல்லாம் கொழுக்கட்டைகளில் இடம் பெறும். இந்தக் கொழுக்கட்டைகளை ஆண்கள் கண்களிலேயே காட்டாமல் ரகசியமாக வைத்துச் சாப்பிடுவார்கள்.

இப்படி நம் மரபில் வழிபாடுகள், சடங்குகள் எல்லாம் மிகவும் கொண்டாட்டமானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், அறிவியல் சார்ந்ததாக வும், மனிதத்தன்மை மிக்கதாகவும் இருக்கின்றன.பரபரப்பான வாழ்க்கை முறையால் இன்று நாம் பலவற்றை இழந்துவிட்டோம். ஆனால், பழங்குடி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் இன்னும் தங்கள் வழிபாட்டு மரபை விட்டுக் கொடுக்காமல் வாழ்கிறார்கள்.

இந்தியாவின் ஆதிப் பழங்குடிகளில் ஒன்று காணி சமூகம்.  தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகத் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வசிக்கிறார்கள். மொத்தமாகவே இந்தச் சமூகத்தின் மக்கள்தொகை சுமார் ஆறாயிரம்தான். தமிழகத்தின் மிகப் பழைமையான தொல்குடி இனங்களில் இதுவும் ஒன்று. இன்றும் மூங்கில்களாலும், காட்டுப்புற்களாலும் உருவாக்கப் பட்ட வீடுகளில் வசிக்கும் இந்த மக்களின் குடியிருப்பு, ‘காணிப்பத்து’ என்று அழைக்கப் படுகிறது. ஆங்காங்கே குழு குழுவாக வசிக்கும் இந்த மக்களுக்கு ஒரு தலைவர் உண்டு. அவரை ‘மூட்டுக்காணி’ என்று அழைப்பார்கள், அவருக்கு நிகரான மரியாதை பிலாத்திக்கும் உண்டு. பிலாத்திதான் காணி சமூகத்தின் சாமியாடி.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7

தேன் சேகரிப்பதையும் வேளாண்மையையும் தொழிலாகக் கொண்ட காணிக்காரர்களின் வாழ்க்கையே அமானுஷ்யமானது. சூரியனையே தங்கள் பிரதான தெய்வமாக இந்த மக்கள் வணங்குகிறார்கள். முத்தன், முத்தி இருவரும் இவர்களின் குலதெய்வங்கள். காலாட்டுத் தம்புரான், மாப்பிள்ளை தெய்வம், காத்திர மக்கள், ஆயிரவல்லி, மல்லன், மாடன், மாத்தபெருமாள் எனப் பல்வேறு தெய்வங்கள் இவர்களைச் சுற்றியிருக்கின்றன. இவர்கள் எல்லோருமே வாழ்ந்து மறைந்த மூத்த காணிக்காரர்கள். மாடன், இம்மக்களின் காவல் தெய்வம். மாடன் உத்தரவை நிறைவேற்றுபவன் மல்லன். மாடனும் மல்லனும் எல்லாச் சடங்குகளிலும் இடம்பெறுவார்கள். பெரும்பாலும் எல்லாத் தெய்வங்களும் நடுகற்களா கவும் மரங்களாகவுமே இருக்கின்றனர்.

நவீன வழிபாட்டுமுறைகள் இம்மக்களின் வழிபாட்டில் ஊடுருவியுள்ளன. பல காணிக்காரர் கள் வன பத்ரகாளியை வணங்குகிறார்கள். குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வன பத்ரகாளிக்குக் கோயில்கள் உண்டு. ஆவி குறித்து தீவிர நம்பிக்கை கொண்டவர்கள் இந்த மக்கள். தங்கள் தெய்வங் களுக்கு நடத்தும் விழாக்களை ‘கொடுதி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

விவசாயத்துக்குத் திட்டமிடும் வழிபாடு ‘மீனக்கொடுதி’. அறுவடைக்கு முன்னர் செய்யப் படும் வழிபாடு ‘கச்சிக் கொடுதி’. அறுவடை செய்த தானியத்தில் விதைகளைச் சேகரிப்பதற்காக ஒரு வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. அதன் பெயர் ‘பூக்கொடுதி’. வன தெய்வங்களுக்காக நடத்தப்படும் வழிபாடு ‘மகரக் கொடுதி’. அம்மை போன்ற நோய்கள் தாக்கும் காலங்களில், பெண் தெய்வத்துக் காக நடத்தப்படுவது ‘அம்மங்கொடுதி’.

இப்படி, இந்த மக்களின் வழிபாட்டில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கொடுதிகளிலும் ஒரே ஒற்றுமை, பாடல்கள். சாற்றுப்பாடல், வருத்துப் பாடல் என வழிபாட்டின் தன்மைக்கேற்ப உச்ச ஸ்தாயியில் இந்த மக்கள் பாடும் பாடல்கள், அந்த வனச்சூழலையே ஆன்மவெளியாக்குகின்றன.

இறந்த தங்கள் முன்னோர்களின் ஆவிகளே தங்களைச் சூழ்ந்து நின்று காப்பாற்றுவதாக நம்பும் இந்த மக்கள், தீய ஆவிகளை விரட்டவும் சாற்றுப் பாடல்கள் பாடுகிறார்கள். யுத்தத்தில், மக்களைக் காக்கும் போராட்டத்தில், விலங்குகளுடன் நடந்த சண்டையில் இறந்தவர்கள், அந்த ஆதிமூலனிடம் வரம்பெற்று மீண்டும் இந்தப் புவியில் பிறந்து வருவார்கள் என்று இந்த மக்கள் நம்புகிறார்கள்.

மனிதர்களைவிட, விலங்குகளைவிட தங்களைச் சூழ்ந்திருக்கும் எதிரிகளின் ஆவிகளே ஆபத்து நிறைந்தவை என்று கருதுகிறார்கள் இவர்கள்.  சாற்றுப்பாடல்கள் ஓர் ஒலி வளையமாக தங்களைச் சுற்றி நின்று, அந்த ஆவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்பது இந்த மக்களின் நம்பிக்கை. 

காணிக்காரர்களின் பாடல்கள் மந்திர ஒலிகளா லானது. `மலம்பாஷா' என்கிற... தமிழையும் மலையாளத்தையும், பொருளறியமுடியாத பெரும் பாலான இயற்கை ஒலிகளையும் உள்ளடக்கிய தாய்மொழியில், இந்த மக்கள் தங்கள் மந்திரப் பாடல்களைப் பாடுகிறார்கள்.

இந்தப் பாடல்கள், இந்த மக்களுக்கும் அவர்களின் மூதாதைகளுக்குமான தொடர்புப் பாலமாகவும் தீமைகளிடமிருந்து காக்கும் கேடயமாகவும் இருக்கின்றன. அவையே, இந்த மக்களின் வாழ்க்கையைக் கொண்டாட்ட மாகவும் மாற்றுகின்றன.

படங்கள்: ஆர்.ராம்குமார்