மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 7

ரங்க ராஜ்ஜியம் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 7

இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ம.செ

‘ஆமையாய்க் கங்கையா யாழ்கடலாய்
அவனியா யருவ ரைகளாய்,
நான் முகனாய் நான் மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த் தானு மானான்,
சேமமுடை நாரதனார் சென்று சென்று
துதித்திறைந்தக் கிடந்தான் கோயில்,
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன்
புகழ் குழறும் புனலரங்கமே.’

- பெரியாழ்வார் திருமொழி

வக்கோட்டத்தில் ஒலித்த பசுவின் குரல், தர்ம வர்மாவுக்கு நல்ல சகுனமாகப் பட்டது. முனிவர் களின் வாக்கு வரும் காலத்தில் நிச்சயம் பலிக்கும் என்கிற ஒரு நம்பிக்கையையும் உருவாக்கிற்று.
காலசக்கரம் சுழலத் தொடங்கியது.

அயோத்தியில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர் குழந்தைப் பிராயம் கடந்து இளமைப் பிராயத்துக்குள் சென்ற நிலையில், வசிஷ்டரே அவர்களுக்குக் குருவாய் இருந்து எல்லாவிதமான கல்வியையும் போதித்தார். இந்த போதனையோடு பிரணவாகாரப் பெருமாள் வழிபாட்டையும் சொல்லிக்கொடுத்தார்.

அதன் நிமித்தம் ஒரு நாள் நான்கு பேரையும் பெருமாள் முன் அழைத்துச் சென்று நிறுத் தினார். அப்போது அரங்கநாதப் பெருமாள் மேனியில் சாத்தப்பெற்ற மனோரஞ்சிதத்தின் வாசம் ராமன் மேலும், ஆதிசேஷனின் மேலிருந்து வரும் தைல வாசம் லக்ஷ்மணன் மேலும் வீசுவதைக் கண்டு சந்நிதி வைதீகர் ஆச்சர்யப்பட்டார்.

ரங்க ராஜ்ஜியம் - 7

இருவருமே மண்மிசை மானுட அவதாரம் எடுத்து வந்திருப்பது அவருக்குப் புலனாக வில்லை. ஆனால், வசிஷ்டர் பிரம்மரிஷி ஆதலால், அதை அந்தச் சந்நிதியில் உறுதிபட தெரிந்துகொண்டதோடு “ராமா... உன் தந்தை யைத் தொடர்ந்து நீயும் இதை வழிபட வேண்டும். இப்படி நீ செய்யும் வழிபாடு என்பதும் ஒரு வழிகாட்டலே! உன் வம்சாவளி யில் வைவஸ்வத மனுவில் தொடங்கி இன்று உன் வரை வந்துள்ளது. உன்னைத் தொடரப் போகிறவர்கள், உன் வம்சாவளியினரா இல்லை உலகத்தவரா என்பதை வரும் காலம் தீர்மானம் செய்யும். முன்னதாக எவரெல்லாம் இந்தப் பெருமாளை வணங்கித் துதித்தனர் என்பதைக் கூறுகிறேன் கேட்டுக்கொள்...

வைவஸ்வதமனு, இக்ஷ்வாகு, காகுத்தன், பின்னர் ஒரு பெண்ணின் கர்ப்பம் தவிர்த்து, ஆணின் தொடையிலுள்ள மாமிசத்தைக் கொண்டே கருப்பிண்டமாகி, பின்னர் பிள்ளை யாகப் பிறந்த மாந்தாதா, இந்த மாந்தாதாவைத் தொடர்ந்து முசுகுந்தன், அதன் பின்னர் சிபிச் சக்ரவர்த்தி, சகர புத்திரர்கள், பகீரதன், ரகு, அம்பரீஷன், நகுலன், யயாதி, திலீபன், அயன்... இவர்களில் அயன் எனப்படும் உன் தாத்தனுக்கும், இந்துமதி எனும் உன் பாட்டிக்கும் பிறந்த உன் தந்தை தசரதன் வரை, உன் சூர்ய வம்சம் வழிபட்ட பெருமானே இந்தப் பெருமாள்..!

இவர்களோடு நீயும் சேர்ந்து வழிபடுவாயாக. இவர்கள் வழிபட்டதற்கும், நீ வழிபடுவதற்கும் நிறைய வேற்றுமை உண்டு. ஒரு வகையில், உன்னை நீயே வழிபடுவது போன்றதே இந்தச் செயல்! `தானே பிரம்மம்' என்று உணரும் ஞானத்துக்கு இணையானது நீ புரியப்போகும் பூசனைகள். இதற்குமேல் நான் சொல்லவும் ஒன்றுமில்லை. நீ அறிந்திராத ஒன்றை என்னாலும் சொல்ல இயலா தென்றே கருதுகிறேன்” - என்று கூறிய வசிஷ்டர்,  மேலும் தொடர்ந்து, ‘`ராமா! இந்தப் பூசனையில் உன் திருமேனிக் கரங்கள், இந்தத் தெய்வத் திருமேனியை ஸ்பரிசிக்கட்டும். அந்த ஸ்பரிசமே காலகாலத்துக்கும் இந்தத் திருமேனிக்கு வைகுண்ட சாந்நித்யத்தை நிலைநிறுத்தட்டும்” என்றார்.

 ராமனும் அடியார் கோலம் பூண்டு பிரணவா காரத்து அரங்கநாதப்பெருமாளுக்கு, தன் கையா லேயே அபிஷேக ஆராதனைகளைச் செய்ய விழைந்தான். அவனுக்கு அவன் சகோதரர்கள்  உதவி செய்தனர்.
லக்ஷ்மணன் பால் குடத்தை அபிஷேகிக்கத் தந்தான். பரதன் தேன் குடத்தைத் தந்தான். சத்ருக்னன் பன்னீரைத் தர, இப்படி நான்கு பேரும் செய்யத் தொடங்கிய அந்த பூசனைகள், நான்கு வேதங்களும் மானுட வடிவம் கொண்டு, தங்க ளைப் படைத்த தயாபரனை வழிபடுவது போல வும் இருந்தது. வசிஷ்டர் எட்ட நின்று கண்குளிர அந்தக் காட்சியைக் கண்டார். பிரம்ம ஞானியாதலால் பெரிதாய்ப் பரவசப்படக்கூடாத சமநிலையிலும், அவருக்குள் பரந்தாமனின் திருவருள்செயல்பாடு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சி யையும் அளித்திருந்தது.

அவருக்கு ஓர் உண்மை நன்றாகத் தெரியும். தன்னைத் தானே வணங்கிடும் நிலை என்பது ஒரு சுற்று. அடுத்த சுற்று, தான் படைத்தவர்கள் தன்னை வணங்கித் தன்னை அடைதல் என்பது. அந்த நாளை நோக்கிக் காலச் சக்கரமும் சுழன்றது.

இலங்கை! ராவணப்பட்டினம் என்றும் கூறலாம். பின்னாளில் `திருவரங்கம்' என்றொரு திவ்ய முதல் தேசம் உருவாகத் தேவைப்பட்ட காரணங்களில் முதல் காரணம் தர்மவர்மாவின் பக்தியும் தவமும் எனில், இரண்டாவதுக் காரணம் இந்த நகரமும் இதனை ஆண்ட ராவணனும்தான்!

ராமாயணத்தின் வழி ராவணனைப் பார்ப்பதற்கும் தனித்து ராவணனைப் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த ராவணனை முழுவதுமாய் அறிந்தால்தான் விபீஷணனையும் நாம் அறிய முடியும். விபீஷணனை அறிந்தால்தான் திருவரங்கத்தை அணுசுத்தமாய் அறிய முடியும்.

முதலில் ராவணனை அறிவோமா? ஒரு வகையில், ராவணனின் ஆரம்பம் பிரம்மனிட மிருந்தே தொடங்குகிறது. பிரம்மாவின் புத்திரர் களில் புலத்தியரும் ஒருவர். தவத்தில் நிகரற்றவர். இவர் மனைவியின் பெயர் ஆவிர்ப்பூ. இவர்களுக் குப் பிறந்தவன் விஸ்ரவசு. இந்த விஸ்ரவசுதான் ராவணன், விபிஷணன் மற்றும் கும்பகர்ணனின் தந்தை. இவர்கள் தாயின் பெயர் கேகசி.

விஸ்ரவசுவோடு கூடி மூன்று பிள்ளைகளையும், சூர்ப்பணகையையும் பெற்ற கேகசி, மூத்தவன் ராவணனைச் சர்வலோக சக்ரவர்த்தியாக்கிப் பார்க்க விரும்பினாள். அதன்பொருட்டு, முதலில் குபேர நிதிக்காக பிரம்மனை எண்ணித் தவம் செய்யச் சொன்னாள். ராவணனும் தவம் செய் தான். சாதாரண தவமல்ல... தன் சிரசுகளை ஒவ்வொன்றாக வெட்டி அக்னியில் ஆஹுதியாகப் போட்டு இவன் செய்த தவத்துக்குப் பிரம்மனும் மனமிரங்கினார். ராவணன் முன் காட்சியளித்து, `‘என்ன வரம் வேண்டும்?’' என்று கேட்டார்.

ரங்க ராஜ்ஜியம் - 7

அற்ப மனிதர்களாலன்றி வேறு எவராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்கிற வரத்தோடு, தான் ஆஹுதியாய் அக்னியில் இட்ட தலைகளும் கரங்களும் தனக்கு மீண்டும் கிடைக்கவேண்டும் என்று வேண்டினான். பிரம்மனும் அவன் கோரிய வரத்தை அளித்து மறைந்தார். `குபேர' சம்பத்தை தன் பலத்தால் குபேரனிடமிருந்து கைப்பற்ற தீர்மானித்தான். அதை ஒரு வரமாக பிரம்மாவிடம் பெற விரும்பவில்லை!

குபேரனுக்குச் சொந்தமானது இலங்கை. திரும்பிய பக்கமெல்லாம் செல்வச் செழிப்போடு மயனால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையை, குபேரனை மிரட்டிப் பணியவைத்துத் தனதாக்கிக் கொண்டான். இந்த குபேரன், ராவணனின் சிற்றன்னை ‘இளி’ என்பவளுக்குப் பிறந்தவன். ராவணனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன்! இவன் வசம் இலங்கை மட்டுமின்றி புஷ்பக விமானமும், சங்கநிதி, பதுமநிதி என வகைதொகையின்றி செல்வங்களும் இருந்தன. அனைத்தை யும் ராவணன் தனதாக்கிக் கொண்டான். அப்படியே இலங்கையை உருவாக் கிய மயனின் மகளான மண்டோதரி யையும் மணந்துகொண்டான்.

தனது எழில் நகரமான இலங்கை காலத்தால் அழியாதிருக்க சிவ பெருமானை எண்ணிக் கடும் தவம் புரிந்தான். அவரும் காட்சி தந்து தன் இன்னருளை ஒரு ஸ்படிக லிங்கத்தில் அடக்கி அதை ராவணன் வசம் தந்து, `‘இதை நீ உன் இலங்கை நகரில் வைத்து பூஜித்து வா. உன் நகரம் ஒரு நாளும் அழியாது. உன்னையும் எவராலும் வெல்ல முடியாது” என்று வரம் தந்தார்.

ராவணன் அந்த ஸ்படிக லிங்கத்தை இலங்கைக்குக் கொண்டு சென்று வணங்கத் தொடங்கி விட் டால், அதன்பின் அவன் சர்வலோக சக்ரவர்த்தியாகி எல்லோரையும் அடிமைப்படுத்திவிடும் ஆபத்து உண்டு என்பதை உணர்ந்த இந்திரன், அந்த ஸ்படிக லிங்கப் பிரதிஷ்டை இலங்கையில் நிகழக்கூடாது என்று கருதினான்.

ஸ்படிக லிங்கத்தின் பின்புலத்தில் இரண்டு நிபந்தனைகள் இருந்தன. ஒன்று அசுத்தமான நிலையில் அதைத் தீண்டக்கூடாது. அடுத்து, அதை எங்கே கீழே வைத்தாலும் அது அங்கேயே கோயில் கொண்டு விடும். அதன் பின் அதை அசைக்க இயலாது. இந்த நிபந்தனைகளைப் பயன்படுத்தியே தனது விருப்பத்தை ஈடேற்ற எண்ணிய இந்திரன், விநாயகப்பெருமானிடம் சென்று தனக்கு உதவிட வேண்டினான். விநாயகரும், ராவணன் ஸ்படிக லிங்கத்தை எடுத்து வரும் வழியில், அவனுக்கு ஜல உபாதை நேரும்படிச் செய்தார். அப்படியே அவன் எதிரில் ஒரு பிரம்மச் சாரி பிள்ளையாக நடந்துசென்றார். ஜல உபாதை தாளாத ராவணன், பிரம்மச்சாரி பிள்ளையான விநாயகரிடம் ஸ்படிக லிங்கத்தைத் தந்து பத்திரமாகக் கையிலேயே வைத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால், விநாயகர் அதை அங்கேயே வைத்துவிட்டார். அதுமட்டுமல்ல, ராவணன் வந்து கேட்டபோது, `‘தன்னால் அந்த லிங்கத்தைச் சுமக்க முடிய வில்லை. அதனால் கீழே வைத்துவிட்டேன்'’ என்றார்.

அதன்பின் ராவணன் எவ்வளவு முயன்றும் அந்த லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. ஆனால் பசுவின் காது போல் குழைந்துபோனது. பின்னர் அந்த இடம் ‘கோகர்ணம்’ எனும் தலமாகியது. ஏமாற்றத்துடன் இலங்கை திரும்பிய ராவணன், அதன் பின் நிறையவே அட்டகாசம் புரியத் தொடங்கினான்.

குபேரனிடம் அபகரித்த விமானத்தில் ஏறி, பறந்து திரிவதில் மிகவும் மகிழ்ந்தான். ஒரு தருணத்தில், அந்த விமானம் ஈசனின் கயிலாயத்துக்கு மேல் பறக்க முனைந்தபோது, நந்திதேவர் தடுத்தார். அவரை ராவணன், குரங்கைப் போல முகம் சுழித்துப் பழித்தான். இதனால் வெகுண்ட நந்தி, ‘உன் பட்டணம் குரங்கா லேயே அழியக்கடவது’ என்று சபித்தார்.

இதே வேளையில்தான் கயிலாயத்தைத் தூக்கி தன் பலத்தை யும் காட்ட முற்பட்டான். அதைக் கண்ட சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் கயிலாய கிரியை அழுத்தி - ராவணன் கை நசுங்கி அலறும்படிச் செய்தார். வலி தாளாமல் அழுததால்தான் அவனுக்கு ராவணன் என்கிற பெயர் ஏற்பட்டது. பின் அவ்வழி வந்த வாகீச முனிவரின் வழிகாட்டுதலால், சாமகானம் பாடி ஈசன் மனதைக் கனியச்செய்து கைகளைத் திரும்பப் பெற்றான். எத்தனை பட்டாலும், ‘நான்’ எனும் செருக்கினால் தொடர்ந்து தவறுகள் செய்தான். வேதவதி என்னும் தவம் செய்த பெண்ணிடம் தவறான எண்ணத்துடன் அணுகி, அவளால் `குலம் அழியும்' சாபம் பெற்றான். நூறு திங்களுக்கு ஒரு திங்கள் குறைவாய் 99 திங்கள், இவன் பாதாளத்தில் தவம் செய்து வருணனை வெற்றிகொண்டு, அவன் வசமிருந்த பாசத்தைப் பிடுங்கிக்கொண்டதோடு, வருணனின் மகனையும் வெற்றிகொண்டு அவன் மனைவியை இலங்கைக்குத் தூக்கிச் சென்றான்!

குபேரன் மகனான நளகூபரனின் மனைவி ரம்பை! ஒரு வகையில் இவள் ராவணனுக்கு மருமகள். இருப்பினும் அவளை விட்டுவைக்க வில்லை ராவணன். அவள், பிரம்மாவிடம் சென்று அழுது புலம்பினாள். பிரம்மா, ``உன்னை விரும்பாத எந்தப் பெண்ணை நீ தொட்டாலும் உன் தலை வெடித்துச் சிதறும்'’ என்று ராவணனுக் குச் சாபமிட்டுவிட்டார்! இதனாலெல்லாம் ராவணன் அடங்கிவிட வில்லை. கார்த்தவீர்யார்ஜுனனுடன் மோதினான்; அவனால் சிறைப்பட்டான். பின் புலத்தியர் வந்து விடுவித்தார். அதேபோல் சிவபூஜை செய்யும் நேரத்தில் வாலியோடு மோதி, அவனிடம் அகப்பட்டுப் பின் நட்பு பாராட்டி விடுபட்டான். ஒருமுறை, சூரியனையே இலங்கையில் உதிக்காமல் செய்துவிட்டவன் ராவணன்!

மகாபலிச் சக்ரவர்த்தி பாதாளத்தில் சிறையில் இருந்ததற்குக் காரணம் ஸ்ரீமஹாவிஷ்ணு என அறிந்து, வைகுண்டத்துக்குச் சென்று அவருடன் மோத முற்பட்டான். சிவபெருமான் மற்றும் பிரம்மா தந்திருக்கும் வரங்களை உத்தேசித்து ஸ்ரீமஹாவிஷ்ணு இவன் வந்த நேரத்தில் வைகுண்டம் விட்டு நீங்கினார். அதை எண்ணி ஸ்ரீமஹாவிஷ்ணுவே தனக்குப் பயந்து ஓடிவிட்ட தாகக் கொக்கரித்தான் ராவணன். ஸ்ரீராமனின் பாட்டன்மார்களில் ஒருவரான மாந்தாதா என்பவரோடும் மோத முற்பட்டு, காலவ முனிவர் ராவணனைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். சந்திரனுடன் மோதி, அதனால் சில மந்திர ஸித்திகளை அடைந்தான். இறுதியாக மூன்றரை கோடி வருடங்கள் உயிர் வாழ்ந்தான். இப்படிப்பட்டவனை, அவனது வரஸித்திக்கு ஏற்ப அழிக்கவே, ஸ்ரீராமனும் அவதரித்தார்.

- தொடரும்...