சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்
இந்தியாவின் புகழை, இந்து மதத்தின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்த வீரத் துறவி, சுவாமி விவேகானந்தர். தம்முடைய ஞானக் கருத்துகளால் புதிய இந்தியாவை மலரச் செய்தவர். சுவாமிஜி, 1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள் ஸித்தியடைந்தார். ஜூலை 4 புதன்கிழமையன்று சுவாமிஜியின் நினைவு தினம்.
அயன உற்சவம்
8.7.18 அன்று திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் சிவபெருமானுக்கு அயன உற்சவம் ஆரம்பம். இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டு வேண்டிக்கொண்டால், நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்; சகல சுபிட்சங்களும் உண்டாகும்.
முளைக்கொட்டு உற்சவ ஆரம்பம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடி மாத முளைக்கொட்டு விழா 15.7.18 அன்று (ஆனி மாதம் 32-ம் தேதி) தொடங்குகிறது. ஆடி மாத ஆயில்ய நட்சத்திரம் தொடங்கி பத்து நாள்களுக்கு விமர்சை யாக முளைக்கொட்டு உற்சவம் நடைபெறும். இந்த விழாவில் மீனாட்சி அம்மனுக்கு மட்டுமே கொடியேற்றம் நடைபெறும்.
மாணிக்கவாசகப் பெருமான் குருபூஜை
திருவாசகத்தால் ஈசனை உருகவைத்த அடியவர் மாணிக்கவாசகர். ஆனி மாதம் - மகம் நட்சத்திரத் திருநாள் (16.7.18), தில்லை ஆடல்வல்லானோடு கலந்த மாணிக்கவாசகரின் குருபூஜை தினம்.
அன்று அடியாரையும் ஆடல்வல்லானை வழிபட்டு அருள்பெறுவோம்.

ஸ்ரீகூர்ம ஜயந்தி
பாற்கடல் கடையப்பட்டபோது மந்தார மலை ஆதார வலுவின்றி சரியத் தொடங்கியது. தேவர்கள் பகவான் விஷ்ணுவைப் பிரார்த் திக்க, எம்பெருமான் கூர்மமாக அவதரித்து வந்தார். எம்பெருமானின் அவதாரங்கள் பலவும் துஷ்டநிக்கிரகத்துக்காக நிகழ்ந்தது எனில், அடியார் களை அனுக்கிரகிக்க நிகழ்ந்த அவதாரம் இது என்று சிலாகிப்பார்கள் பெரியோர்கள். மந்தார மலையைத் தாங்கி, அமிர்தத்தோடு தன் திருவருளையும் வாரிவழங்கிய கூர்ம அவதாரம் நிகழ்ந்தது, ஆனி மாத தேய்பிறை துவாதசி திதி நாளன்று. இந்த வருடம் 10.7.18 அன்று ஸ்ரீகூர்ம ஜயந்தி. இந்தத் தினத்தில் மாலவனை வழிபட்டு மனம் மகிழ வரம்பெறுவோம்.
சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயில் நடை திறப்பு
ஆடி மாத சிறப்பு பூஜைக்காக ஜூலை 16-ம் தேதி மாலை 5 முதல் 21-ம் தேதி இரவு 10 மணி வரை நடைதிறந்திருக்கும்.
திருவண்ணாமலை கிரிவலம்
ஜூலை மாதம் 26- ம் தேதி வியாழக் கிழமை இரவு 12.20 மணி முதல் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 2.25 மணி வரை கிரிவலம் வரும் நேரமாக பக்தர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. ஆடி மாத கிரிவலம் அம்பிகையின் ஆசியைப் பெற்றுத் தரும்.
தொகுப்பு: மு.ஹரிகாமராஜ்
