பிரம்மன் தவமிருந்து ஈசனிடம் வரம் பெற்று சரஸ்வதியை மணம் புரிந்த தலமென்று போற்றப்படுகிறது ஆரியம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். சென்னை பூந்தமல்லி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்தை அடுத்து வரும் பிள்ளைச்சத்திரம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரியம்பாக்கம்.
இந்த ஊரில் அமைந்திருந்த ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பாழடைந்தும் சிதிலமுற்றும் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சக்தி விகடன் (5.1.16 தேதியிட்ட இதழில்) `ஆலயம் தேடுவோம்’ பகுதியில் இந்த ஆலயத்தின் அவல நிலை குறித்து எழுதியிருந்தோம்.கோயிலைப் புனரமைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டோம்.

அந்த ஊர் இளைஞர்கள் சிலர் இணைந்து பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலை புனரமைக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து, குடியாத்தம் சிவ.அ.பக்தவத்சலம் ஐயாவின் உதவியோடு இந்தக் கோயிலைப் புனரமைத்தார்கள். சக்தி விகடன் வாசகர்களும் தங்க ளால் இயன்ற பங்களிப்பை வழங்கினார்கள். இங்ஙனம், கோயில் பணிகள் யாவும் இனிதே நிறைவேறி, கடந்த ஞாயிறன்று (17-6-18) குடமுழுக்குத் திருவிழாவும் நடைபெற்றது. பிரமாண்ட விழாவாக யாகசாலை பூஜைகளோடு தமிழ் சைவ ஆகம முறைகளின்படி இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த உழவாரத் திருப்பணி பக்தர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பித்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரம்மபுரீஸ்வர், அம்பாள், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்துக்குப் பெரிதும் உதவிய குடியாத்தம் சிவ.அ. பக்தவத்சலம் ஐயாவின் முயற்சியால் குடமுழுக்கு நடைபெற்ற 160-வது ஆலயம் இது என்பது அறிந்து வியந்தோம். அன்று முழுவதும் அன்னதானம், பிரசாதங்கள் விநியோகம் என்று அந்த சின்னஞ்சிறு கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சிவன் தாள் வணங்கி அவனுக்காகத் திருப்பணி செய்யும் யாவரும் போற்றுதலுக்கு உரியவரே. ஒரு பழைமையான சிவாலயம் புனரமைக்கப்பட்டு பொலிவுடன் திகழ்ந்ததைக் கண்டு வணங்கி மகிழ்ந்து திரும்பினோம்.
- மு.ஹரி காமராஜ், படங்கள்: எஸ்.ரவிகுமார்