நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயிலில், ஆண்டுதோறும் காவிரி துலா உற்சவ கடைமுகத் தீர்த்தவாரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, கஜா புயல் காரணமாக கலையிழந்துவிட்டது தீர்த்தவாரி விழா.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில்களில் ஒன்று, மயிலாடுதுறை மயூரநாதர் கோயில். இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி மாத (துலா மாதம்) துலா உற்சவம் எனும் ஐதீக விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த விழா நாளில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் மயிலாடுதுறைக்கு வந்து, துலாக்கட்ட காவிரியில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதீகம். இந்த விழா நடைபெறும் துலாக்கட்ட காவிரியில், பக்தர்கள் அதிக அளவில் வந்து புனித நீராடி மயூரநாதரை வழிபட்டுச் செல்வர். நிகழாண்டுக்கான இந்த விழா, திருவாவடுதுறை ஆதீனம் 24 -வது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் அருளாசியுடன், ஐப்பசி மாதம் நவம்பர் 7-ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் அருள்மிகு மயூரநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும், சுவாமி - அம்பாள் புறப்பாடும், துலாக்கட்ட காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக, துலா உற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கடைமுகத் தீர்த்தவாரி, நாளை (நவம்பர் 16 ) நடைபெற இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் கடைமுகத் தீர்த்தவாரி அன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் நீராடி, மயூரநாதரை வணங்கி அருள்பெறுவர். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இந்த முறை காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கடைமுகத் தீர்த்தவாரி பெருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கஜா புயல் இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் கடைமுகத் தீர்த்தவாரி, இந்த ஆண்டு பொலிவிழந்து காணப்படுகிறது. நாளை, புயலுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பி, காவிரி துலாக்கட்ட கடைமுகத் தீர்த்தவாரி எப்போதும்போல சிறப்பாக நடைபெற வேண்டும் என்று பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.