Published:Updated:

வாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்!

வாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்!

எஸ்.கண்ணன் கோபாலன்

வாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்!

எஸ்.கண்ணன் கோபாலன்

Published:Updated:
வாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்!

டி மாதத்தின் தொடக்கம் முதல் மார்கழி வரையிலான காலம் `தட்சிணாயன புண்ணிய' காலம் ஆகும். தேவர்களின் இரவுப் பொழுது தொடங்கும் மாதம் ஆடி. சூரியனின் தென் திசைப் பயணம் தொடங்கும் தட்சிணாயன காலத்தில் பகல் பொழுதைவிட இரவுப் பொழுது அதிகமாக இருக்கும். மேலும், மாறி வரும் பருவ காலங்களின் விளைவாக பல நோய்களும் தோன்றி மனிதர் களைத் துன்புறுத்தும்.

நோய்களும், அவற்றின் விளைவான துன்பங் களும் இல்லாமல் வாழவும், வாழ்க்கை ஒளிரவும் நாம் வழிபடவேண்டிய சிவாலயங்கள், பல திருத்தலங்களில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சில சிவத்தலங்களை இங்கு தரிசிப்போம். அத்துடன், சூரியன் வழிபட்ட தலங்களையும் தரிசிப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கை ஒளிரும்; சகல நன்மைகளும் ஏற்படும்.

வாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்!

திருவருள் தரும் திருவண்ணாமலை!

பஞ்சபூதத் திருத்தலங்களில் திருவண்ணாமலை அக்னிக்கு உரியது. திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு மாயை இருளின் காரணமாக ஏற்பட்ட கர்வத்தைப் போக்கும் வண்ணம்  இறைவன் ஜோதி ஸ்வரூபமாகத் தோன்றிய திருத்தலம். எண்ணற்ற மகான்கள் வழிபட்ட தலம். திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் ஆட்கொள்ளப்பட்ட தலம். விநாயகருக்கு உரிய ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருவண்ணாமலை.

திருவண்ணாமலை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பௌர்ணமிதோறும் நடை பெறும் கிரிவலம் நிகழ்ச்சிதான். பௌர்ணமி மட்டுமல்லாமல், தினமும் கிரிவலம் வரலாம். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு பலன் உண்டு. அமாவாசையன்று கிரிவலம் வந்தால், மனதை வாட்டும் எப்படிப்பட்ட கொடிய கவலையும் உடனே மறைந்து, நிம்மதியும் மகிழ்ச்சியுமான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு நாளும் கிரிவலம் வருவதால் கிடைக்கும் பலன்கள்:

ஞாயிறு - சிவ புண்ணியம் வாய்க்கும்; திங்கள் - இந்திர பதவி கிடைக்கும்; செவ்வாய் - கடன், எதிரி, நோய்களின் தொல்லைகள் விலகும்; புதன் - கல்வி, கலைகளில் சிறப்பான தேர்ச்சி பெற முடியும்; வியாழன் - செல்வச் செழிப்பான வாழ்க்கை அமைவதுடன், ஞானமும் கைகூடும்; வெள்ளி - விஷ்ணுபதம் ஸித்திக்கும்; சனி - நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும். 

மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவதால் சித்தர்களின் ஆசிகள் கிடைப்பதாகவும், அமாவாசை தினங்களில் வலம் வருவதால் மனதை வாட்டும் அனைத்து கவலை களும் நீங்கும் என்றும் ஞானநூல்கள் கூறுகின்றன.

அவ்வகையில், இந்த ஆடி மாதத்தில் பௌர்ணமி (27.7.18) அன்றும், ஆடி அமாவாசை (11.8.18) அன்றும் கிரிவலம் வந்து சித்தர்களின் ஆசி களைப் பெறுவதுடன் மனதை வாட்டும் கவலை களிலிருந்தும் விடுபடலாம்.
இனி, நம் வாழ்வில் சூழ்ந்திருக்கும் துன்ப இருள் விலகவும், நம் மனதில் திகழும் அறியாமை எனும் அக இருள் நீங்கி ஒளிபெறவும், சூரியன் வழிபட்ட சிவத்தலங்களின் மகிமைகளை அறிவோம்.

கண்ணொளி அருளும் காஞ்சி தரிசனம்!

பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி தலமாகப் போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்.  இந்தக் கோயிலின் முருங்கை மரத்தின் நிழலில் ஜோதி லிங்கமாகத் தோன்றிய இறைவனை, சூரியன் வழிபட்டு பேறு பெற்றிருக்கிறார்.

மயூரசர்மன் என்ற மன்னன் விதிவசத்தால் தன் கண் பார்வையை இழக்க நேரிட்டது. இந்தத் தலத்தின் மகிமையை அறிந்த மன்னன், இங்கு வந்து சூரியனால் ஏற்படுத்தப்பட்ட சூரிய தீர்த்தத்தில் நீராடி, இழந்த பார்வையை திரும்பப் பெற்றதாக தலவரலாறு. வடமொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அந்த மன்னன் சூரியன் மீது இயற்றிய ஸ்தோத்திர நூல்தான் ‘சூரிய சதகம்’.

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் நீராடி, ஜோதிலிங்கத்தை வழிபடுபவர்கள் நோய்கள் இல்லாமல் வாழ்வர்; கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குறிப்பாக தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் காஞ்சிக்குச் சென்று, சூரியன் ஆராதித்த ஈசனை வணங்கி வழிபட்டு வாருங்கள்; வறுமைகள் நீங்கி வளமான வாழ்வைப் பெறலாம்.

திருவாடானைக்கு வந்தால் பதவி யோகம் வாய்க்கும்!

தேவக்கோட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ளது திருவாடானை. கிருதயுகத்தில் சூரியன் தன் ஒற்றைச் சக்கரத் தேரில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூரியனின் பயணம் தடைப்பட்டது.

பின்னர், சிவபெருமான் அசரீரியாகக் கூறிய படி, இந்தத் தலத்தில் நீல மணியால் ஒரு சிவலிங்கம் வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதும் சூரியனின் சஞ்சாரம் தடையின்றி தொடர்ந்தது.  மேலும் அவரின் ஒளியும் மேன்மை அடைந்ததாம். இந்தத் தலத்தில்தான் சூரியனுக்கு நவகிரகங்களின் மண்டலத்துக்கு அதிபதியாகும் பேறு பெற்றதாக தெரிவிக்கின்றன ஞானநூல்கள்.

இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட் டால், உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு போன்ற பல நற்பலன்களைப் பெறலாம்.

வினைகள் நீங்கும் வியாசர்பாடியில்!

சென்னை-வியாசர்பாடியில் அமைந்துள்ளது அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில். பிரம்ம தேவரின் சாபத்துக்கு ஆளாகி, பூமியில் மனிதனாகப் பிறக்க நேரிட்ட சூரியன் வழிபட்ட தலம் என்பதால், ஆதிகாலத்தில்  இந்தத் தலம் பானுபுரம் என்று அழைக்கப்பட்டதாம்.

பிரம்மதேவரின் சாபத்திலிருந்து விடுபட நினைத்த சூரியன், நாரதரிடம் ஆலோசனை கேட்டார். நாரதர் கூறியபடி இந்தத் தலத்துக்கு வந்து, வன்னி மரத்தினடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றார் என்கிறது தலபுராணம். இந்தத் தலத்தில் அருளும் இறைவனை தினமும் காலை 6 மணி முதல் 6.30 வரை சூரியன் தன் கதிரொளி பரப்பி வழிபடுகிறார். இங்கு வந்து சிவதரிசனம் செய்தால், வல்வினைகளும் சகல சாபங்களும் நீங்கும்.

வியாசமுனிவரும் வழிபட்ட தலம் இது. இந்தக் கோயிலில் பெருமாளின் சந்நிதியை அடுத்து வியாச முனிவரின் சந்நிதியை தரிசிக்கலாம். இந்த ஆலயத்துக்கு வந்து வியாச முனிவரை தரிசித்து வழிபட்டு அவருடைய ஆசியைப் பெற்ற பிறகே பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் வழக்கம் இந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் காணப்படுகிறது. மேலும், பௌர்ணமி தினத்தில் வியாசருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபட்டால், கலைத்துறையில் பிரகாசிக்கலாம் என்பது நம்பிக்கை.

பிணிகள் நீங்க வரம் அருளும் ஞாயிறு வழிபாடு

சூரியன் வழிபட்ட தலங்கள் பாஸ்கர க்ஷேத்திரங்கள் என்று போற்றப்படுகின்றன. தலைஞாயிறு, திருப்பரிதிநியமம், திருமங்கலக்குடி, திருச்சிறுகுடி, சென்னைக்கு அருகிலுள்ள ஞாயிறு ஆகிய தலங்கள் பஞ்ச பாஸ்கர தலங்களாகப் போற்றப்படுகின்றன.

இவற்றில் (சென்னைக்கு அருகில்) திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஞாயிறு திருத்தலம். கோயம் பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றத் துக்கு நிறைய பஸ் வசதி உண்டு.

பிரம்மதேவரின் சாபத்தால் ஏற்பட்ட பிணியில் இருந்து மீள்வதற்கான வழியைக் காட்டியருளும்படி சிவனாரைக் குறித்து தவமியற்றினார் சூரியன். அவருக்கு தரிசனம் தந்த சிவபெருமான், ‘தாமரை மலர்கள் பூத்திருக்கும் குளத்தில் ஒரு தாமரைப் பூவில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் எம்மை வழிபட்டால் சாபமும் பிணியும் நீங்கும்’ என்று அருள்பாலித்தார். அதன்படி சூரியன் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாக வரலாறு.

இங்கு அருளும் சூரிய பகவானை, ஞாயிறு தோறும் வந்து வணங்கினால் சிறப்பு என்கின்றனர். 11 வாரம் வந்து வணங்கி, 11-வது வாரத்தில் செந்நிற ஆடையை பகவானுக்கு சார்த்தி, செந்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட்டால்... இயன்றால் அன்னதானம் செய்து வழிபட்டால், பார்வைக் கோளாறு, தீராத நோய், திருமணத் தடை ஆகியவற்றைத் தீர்த்து அருளுவார் சூரிய பகவான். பதவி உயர்வு, பிள்ளை வரம் ஆகியவற்றுக்காகவும் இங்கே பக்தர்கள் வேண்டி நிற்கிறார்கள்!

தோஷங்கள் நீங்கும் பரிதிநியமம் கோயிலில்!

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது திருப்பரிதிநியமம். தற்போது பரிதிநியமம் என்று அழைக்கப்படும் இந்தத் தலத்தில் உறையும் இறைவனின் திருநாமம் அருள்மிகு பாஸ்கரேஸ் வரர்; அம்பிகை: அருள்மிகு மங்கள நாயகி.

தனது வெப்பத்தைத் தானே தாங்கமாட்டாமல் தவித்த சூரியன், சித்திரை மாதப் பௌர்ணமியன்று இந்தத் தலத்துக்கு வந்து மணலால் சிவலிங்கம் வடித்து வழிபட்டதாகப் புராணங்கள் விவரிக் கின்றன. கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு எதிரில் நந்தி மூர்த்தம், பலிபீடம் அமைந்திருக்க, இவற்றுக்குப் பின்னால் ஈசனை வணங்கும் கோலத்தில் காட்சி தருகிறார் சூரியன்.

பங்குனி மாதம் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சூரியனின் கதிர்கள் இறைவனின் திரு மேனியில் படுவது குறிப்பிடத்தக்கது.

அமாவாசையன்று இங்கு வந்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. எனில், ஆடி அமாவாசை இன்னும் சிறப்பல்லவா? இந்தத் தினத்தில் பரிதி நியமம் தலத்துக்குச் சென்று ஈஸ்வரனைத் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

மேற்சொன்ன தலங்கள் மட்டுமின்றி திருமீயச் சூர், திருநாகேஸ்வரம்,  திருச்சோற்றுத்துறை ஆகிய தலங்களும் சூரியன் வழிபட்டு அருள்பெற்ற தலங்களாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism