தொடர்கள்
Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 8

திருவருள் செல்வர்கள்! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் செல்வர்கள்! - 8

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

துரையில் திருமடத்தில் தூங்கிக்கொண்டி ருந்தார் அந்த ஞானி. அற்புதமான கனவு வந்தது.

அன்னை மீனாட்சி தன் தோழிகளோடு, அந்தத் திருமடத்துக்கு வருகிறார். வந்தவர், அங்கிருந்த குப்பை கூளங்களைக் கூட்டத் தொடங்குகிறார். தோழிகளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

``அம்மா! என்ன இது? நீங்கள் இவ்வாறு செய் வதை, சுவாமி பார்த்தால், கோபித்துக் கொள்வார். வாருங்கள் போகலாம்” என்கிறார்கள்.

“நான் என்ன செய்வேன்? நம் புத்திரனான அரசப்பன், சுப்பராயன் எனும் தீயவனோடு சேர்ந்து, திருமடத்தை அசுத்தப்படுத்திவிட்டான். அதற்காகத்தான், இந்த மனோ மடத்தைக் கூட்டு கிறேன்” எனப் பதில் சொல்கிறார்.

திருவருள் செல்வர்கள்! - 8

அதே விநாடியில், கனவு கலைய ஞானி விழித்து எழுந்தார். அம்பாளால் ‘நம் புத்திரன்’ என்று குறிப்பிடப்பட்ட அரசப்பர்தான் அந்த ஞானி. காரைக்குடியில் தன வைசியர் குலத்தில், பிள்ளையார்பட்டி கோத்திரத்தில் அவதரித்தவர்- அரசப்ப சுவாமிகள்.

கோவிலூரில் இருந்த முத்திராமலிங்கம் எனும் ஆத்மஞானியைப் பலரும், குருநாதராகக் கொண் டிருந்தார்கள். “தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியே, குருநாதராக வந்திருக்கிறார்” என்று கொண்டாடினார்கள். எப்போது பார்த்தாலும் பிரம்ம அனுபவத்திலேயே பூரித்திருக்கும் அந்த ஞானிக்கு, அன்னை சாலிவாடீச்வரி தேவி நேருக்கு நேராகவே தரிசனம் அளிப்பார்.

அப்படிப்பட்ட ஞானியைத் தன் குருவாகக் கொண்ட அரசப்பர், பலவிதங்களிலும் குருவுக்குத் தொண்டு செய்து வந்தார். சீடனின் தூய்மையான தொண்டினால் மனம் மகிழ்ந்த குருநாதர், சீடனுக்கு உபதேசித்து பிரம்ம சாட்சாத்காரம் சித்திக்கச் செய்தார். அதன் பின்னும் அரசப்பர், குருவைவிட்டுப் பிரியவில்லை; நிழல் போலக் கூடவே இருந்தார்.

குருநாதர் ஸித்தியடைந்ததும், சில காலம் கோவிலூரிலேயே வாழ்ந்து வந்த அரசப்பர், ‘ஜீவனுள்ள காலம் வரை, உத்தமமான சிவக்ஷேத் திரத்தில் வசிக்கவேண்டும். ஆளுடையார் (ஆவுடையார்) கோயில், மதுரை, சிதம்பரம் எனும் மூன்று க்ஷேத்திரங்களில் ஏதாவது ஒன்றில் வசிக்க வேண்டும். எங்கு வசிக்கலாம்?’ என்று சிந்தித்தார்.

அதற்கான பதில், அன்று இரவு அவர் தூங்கும் போது கிடைத்தது. கனவில் சொக்கநாதப் பெருமான் எழுந்தருளி, “அரசப்பா! ஆலாசிய க்ஷேத்திரத்துக்கு வா!” என்று கூறி, அரசப்பரை அழைத்துப் போய் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சந்நிதியில் நிற்கவைத்து, தீபாராதனையை தரிசிக்கச் செய்து மறைந்தார்.

கனவு கலைந்த அரசப்பர், “சொப்பனத்தில் வந்து அருள் செய்த சொக்கநாதா! பக்தர்களின் இஷ்டத்தைப் பூர்த்திசெய்து வைக்கும் பரம் பொருளே! அடியேன் என்ன கைமாறு செய்வேன்” என்று கைகளைத் தலைக்குமேல் வைத்துக் கும்பிட்டுக் கண்ணீர் சிந்தினார்.

கண்ணுதல் கடவுளே கனவில் வந்து வழிகாட்டிய பின், சும்மாயிருப்பாரா அரசப்பர்? கோவிலூரிலிருந்து உடனே புறப்பட்டு மதுரையை வந்தடைந்தார். அங்கே மதுரையின் தென்பகுதியில், பொதியமலையிலிருந்து ஓடிவரும் கிருதமாலா நதிக்கரையில் ஒரு மடத்தில் பல ஆண்டுகள் வசித்தார்.
 
அதிகாலையில் எழுவது, நீராடி அனுஷ்டானங் களை முடிப்பது, ஆலயம் சென்று உலகத்துக்கே மாதா பிதாக்களான ஸ்ரீமீனாக்ஷி - ஸ்ரீசுந்தரேஸ்வரரை தன் மாதா பிதாக்களாகத் தியானித்து, வலம் வந்து வணங்கித் துதிப்பது என வாழ்ந்து கொண்டிருந்தார் அரசப்பர்.

அதுமட்டுமல்ல. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று கோவிலூரில் நடைபெறும் குரு பூஜைக்கும் மறவாமல், தவறாமல் சென்று வந்தார்.

அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த அரசப் பரின் பெருமையை அனைவருக்கும் வெளிப் படுத்த அரன் தீர்மானித்தார் போலும் ! வழக்கப்படி பங்குனி உத்திரம் நெருங்கியது. ஒரு வாரம் முன்ன தாகவே கோவிலூர் செல்லத் தீர்மானித்தார் அரசப்பர். தடைபோட்டார் சுந்தரேசர்.

“அரசப்பா! குருபூஜையை இங்கேயே நடத்து. கோவிலூர் செல்லவேண்டாம்” என்று உத்தரவிட் டார். அரசப்பரோ, “குரு விஷயத்தில் தெய்வ வாக்கு பெரிதல்ல” என்ற எண்ணத்துடன்,  கோவிலூருக்குப் புறப்படுவதில் உறுதியாக இருந்தார். ஆனால், கண்ணுதலோனின்  கட்டளையை மீற, குருநாதர் விடுவாரா?

சீடனின் கனவில் வந்து, ``அரசப்பா! அங்கே குருபூஜை அதுபாட்டுக்கு நடக்கும். நீ வர வேண்டாம். இங்கேயே குருபூஜையை நடத்து” என்றருளி மறைந்தார். அப்படியே செயல் படுத்தினார் அரசப்பர். குருபூஜை மதுரையிலேயே விமர்சையாக நடந்தது.

என்னதான் எச்சரிக்கையாய் இருந்தாலும், தீயவர் தொடர்பு வந்து ஒட்டிக்கொள்ளும். தெய்வ அருள் இல்லாவிட்டால், தீயவர் உறவை விலக்க முடியாது. தீயவர் என்று தெரிந்தால்தானே, விலக முடியும்; விலக்க முடியும்?

அரசப்பரோடு சுப்பராயன் என்கிற தீயவர் இருந்தார். அவர் தீயவர் என்பதை அறியார் அரசப்பர். “தீயவன் என்பதுகூடத் தெரியாமல், இந்த சுப்பராயனைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறானே நம் பிள்ளை” என்று எண்ணிய மதுரை அரசி மீனாக்ஷி , அரசப்பருக்கு அறிவுறுத்த எண்ணினாள். உறங்கிக்கொண்டிருந்த உத்தமரின் கனவில் காட்சி தந்தாள்.

விசித்திரமான கனவாக இருந்தது அது. கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்த கனவுதான் அது.

`மனோ மடத்தைக் கூட்டுகிறேன்'  என அம்பாள் சொன்னாள் அல்லவா? மனோமடம் என்பது மனதைக் குறிக்கும். அதை அன்னையே தூய்மை செய்யும்போது என்ன கவலை? தீயவன் தொடர்பு அற்றுப்போனது அரசப்பருக்கு.

தெய்வ அருள் இல்லையேல் தீயவற்றிடமிருந்து தீயவர்களிடம் இருந்து விலக முடியாது என்பதை விளக்கும் வரலாற்று நிகழ்வு இது.

அரசப்பரின் திருமடத்தில், கிருஷ்ணன் என்பவர் நிர்வாகம் பார்த்துக் கொண்டிருந்தார். நந்தவனம் மிகவும் பாழ்பட்டுக்கிடந்தது. காய்ந்து போய்ச் சருகான மலர்களே பூஜைக்கு வந்தன. அரசப்பர் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் கிருஷ்ணன் கேட்பதாக இல்லை; மாறாக அரசப்பரை அலட்சியப்படுத்தியதோடு அவமானமும் செய்தார்.

அரசப்பர் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரிடம் போய் முறையிட்டார்.விளைவு? கிருஷ்ணனின் மனைவி கெட்ட கனவு கண்டாள். ஏராளமான பொதுமக்கள் வந்து ‘உன் கணவன் அரசப்ப சுவாமி களை அவமானப்படுத்தினான். அதனால் அவனைச் சம்ஹாரம் செய்ய மீனாக்ஷியும் சுந்தரேஸ்வரரும் வந்து கொண்டிருக்கிறார்கள். உன் கணவனை ஒளித்து வைத்துக்கொள்' என்று சொல்லி மறைகிறார்கள்.

அதே தருணத்தில், கிருஷ்ணனின் கனவில் சிவபக்தர் ஒருவர் தோன்றி, ``கிருஷ்ணா! நீ அரசப்ப சுவாமிகளை அவமானப் படுத்தியதால், உன்னைக் கொல்ல மீனாக்ஷி - சுந்தரேஸ்வரர் வந்து கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறி மறைந்தார்.

திருவருள் செல்வர்கள்! - 8

கணவனும் மனைவியுமாக அவரவர் கண்ட கனவை பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி நடந்தது, காளயுக்தி வருடம் கார்த்திகை மாதம் 16-ம் தேதி என்கிறது மூல நூல். கிருஷ்ணனுக்கு பயம் வந்தது. கணவன் மனைவி இருவருக்கும் ஒன்றுபோல் அல்லவா கெட்டகனவு வந்திருக்கிறது!

அன்றிலிருந்து பத்தாம் நாள்... கிருஷ்ணனுக்கு வாந்தி பேதி கண்டு, அவரின் நிலை சந்தேகத்துக்கு இடமானது. அவருடைய வயலில் நன்கு விளைந்திருந்த ஏராளமான நெல்மணிகள்,  கள்வரால் களவாடப்பட்டன. கிருஷ்ணனின் நிலை அரசப்பருக்குத் தெரிந்தது. கோயிலுக்கு ஓடினார்.

“தாயே மீனாக்ஷி! கிருஷ்ணன் செய்த தவறுகளைச் சொல்லி முறையிட்டேனே தவிர,  அவனைக் கொல்லச் சொல்லவில்லையே, தாயே... காப்பாற்று அவனை!” என உள்ளம் உருகிப் பிரார்த்தித்தார்.
என்ன மனசு! என்ன மனசு!

இதுதான் திருவருள்செல்வர்களின் இயல்பு! அரசப்பரின் பிரார்த்தனை வேலை செய்தது. கிருஷ்ணன் குணமடைந்தார். இதன் பிறகு ஆறு மாதங்கள் கழித்து... அதாவது, சித்தார்த்தி ஆண்டு - ஆனி மாதம் முதல் தேதியன்று மதுரை தெற்கு வீதியில் அரசப்பரும் கிருஷ்ணனும் சந்தித்தார்கள்.

நலம் விசாரித்தார் அரசப்பர். கிருஷ்ணன் திடுக்கிட்டார். தான் செய்த தவறுகள், தானும் தன் மனைவியும் கண்ட கனவுகள், தான் இறக்கும் நிலையை அடைந்தது, நெல் கொள்ளை போனது என ஒவ்வொன்றையும் நினைத்துப்பார்த்த அவர், `இவையெல்லாம் இந்த அரசப்பருக்காக சொக்க நாதர் நடத்திய திருவிளையாடல்' என்று உணர்ந்து, நடந்தவற்றை அப்படியே எழுதிவைத்தார்.

ஆனி மாதம் 22-ம் நாள் .தூங்கிக்கொண்டிருந்த அரசப்பரின் கனவில், வழக்கப்படி தரிசனம் தந்தார் சொக்கநாதர்.

“அரசப்பா! கிருஷ்ணனிடம், என் திருவிளை யாடல் நூல் இருக்கிறது. அதை வாங்கிப் பார்!” என்றார்.  

“சுவாமி! அவனிடம் அந்த நூல் இல்லை. திருவிளையாடல் புராணம் அடியேனிடம் உள்ளது; படித்திருக்கிறேன்” என்றார் அரசப்பர்.  இறைவன் விடவில்லை. “அரசப்பா! பழைய திருவிளையாடல் இல்லை இது; உன் நிமித்தமாக நடைபெற்றது. அறுபத்தைந்தாவது திருவிளை யாடல் எனும் பெயரில் அவனிடம் உள்ளது. வாங்கிப் பார்!” என்று கூறி மறைந்தார்.

கனவு கலைந்த அரசப்பர், கிருஷ்ணனை அழைத்து நடந்ததைச் சொல்ல, அவர் வியந்தார். தான் எழுதி வைத்திருந்த தாள்களை அப்படியே அரசப்பரிடம் ஒப்படைத்தார்.

வாங்கிப் படித்த அரசப்பர், இறைவனின் அருளை எண்ணி உள்ளம் உருகினார். பலமுறை, சொக்கநாதரையும் அன்னை மீனாக்ஷியையும், பற்பல விதங்களில் தரிசித்த அரசப்பர், மதுரை திருமடத்திலேயே, பவ வருடம், மார்கழி மாதம், சஷ்டி திதி, பூர நட்சத்திரம், திங்கட்கிழமையன்று முக்தியடைந்தார்.

பிரம்ம சாட்சாத்காரம் அடைந்த இந்த ஞானியின் வரலாற்று நிகழ்வுகள், ஆண்டு - மாதம் - தேதி - நட்சத்திரம் - கிழமை எனும் வகையில் குறிப்பிடப் பட்டிருந்தாலும், இவருடைய பெற்றோர்கள், மதுரையில் இவர் இருந்த திருமடம் முதலான தகவல்கள், இவர் வரலாற்றைக் கூறும் பழங்கால நூலான மூலநூலில் இல்லை. பலவிதங்களில் விசாரித்தும் தகவல்கள் இல்லை. இவருடைய குருவான மகானும், அன்னை சாலிவாடீஸ்வரி தேவியைப் பன்முறை நேருக்குநேராக தரிசித்தவருமான கோவிலூர் முத்திராமலிங்க தேசிகர் படம் மட்டும் கிடைத்தது.அதன்படி பார்த்தால், இது ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு என்று நிரூபணமாகிறது. குருவின் திருவருளை வணங்கிப் போற்றுவோம்.