Published:Updated:

கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?

கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?

`காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?

`காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

Published:Updated:
கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?

? ருத்திராட்ச மாலையை எல்லோரும் அணியலாமா, எப்போதெல்லாம் அணிந்திருக்கலாம், பூஜையில் எப்படி உபயோகிக்கவேண்டும், பெண்கள் ருத்திராட்சம் அணியலாமா?

- எஸ்.ராமகிருஷ்ணன், தஞ்சாவூர்

எல்லாம்வல்ல சிவபெருமானின் அருள் பிரசாதமே ருத்திராட்சம். மூன்று கண்களைக் கொண்ட ஈசனிடமிருந்து தோன்றியதால், ருத்திராட்சம் என்று போற்றப்படுகிறது. இந்தப் புண்ணிய மணியை அணிவதால், பாவங்கள் விலகி நல்ல எண்ணங்கள் தோன்றும் என்றும், இதை ஆண்-பெண் என்ற பேதமில்லாமல் அனைவரும் அணிந்துகொள்ளலாம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பூஜை வேளைகளில் மணியாகவும் மாலையா கவும் தரித்துக்கொண்டும், ஜபம் போன்றவற்றுக்கு எண்ணிக்கையைக் கணக்கிடவும் ருத்திராட்ச மாலையைப் பயன்படுத்தலாம். அதனால், நம் மனதில் ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

ருத்திராட்சத்தை முதல்முறையாக அணிபவர் கள், திங்கள்கிழமை, பௌர்ணமி ஆகிய நாள் களில் அணியலாம். குருவின் ஆசியுடன் பெற்று அணிந்துகொள்ளும் ருத்திராட்சம், எல்லா நாள்களும் நம் மேனியில் துலங்கலாம்.

ருத்திராட்சத்தில் ஒருமுகம், இருமுகம் எனத் துவங்கி பலவகைகள் உண்டு. அதேபோல், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு. ஒரு மாலையில் எத்தனை மணிகள் இருக்கலாம் என்பது பற்றிய விளக்கங்கள் ஆகமங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?

‘ருத்ராக்ஷ தாரணாச்ச ச்ரேஷ்டம் ந கிஞ்சித் அபிவித்யதே’ ருத்திராட்சம் அணிந்துகொள்வதைவிட உயர்ந்த புண்ணியம் வேறு எதுவும் இல்லை என்கின்றன ஞானநூல்கள். இப்படியான ருத்திராட்சத்தை அனைவரும் தரித்து, எல்லாம் வல்ல இறைசக்தியைப் பெறலாம் என்று நம் முன்னோர்களும் வழிகாட்டியுள்ளனர்.

? பிரார்த்தனையின் மூலம் நம் உடல் வேதனைகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமா? மருத்துவ நிபுணர்களும் ஒரு கட்டத்துக்கு மேல் இறைவனிடம் பிரார்த் தனை செய்துகொள்ளும்படிச் சொல்கிறார்களே?!

- கௌரிசங்கர், மும்பை

மணி, மந்திரம், ஓளஷதம் என்று நம் முன்னோர் கூறுவார்கள். ருத்திராட்சம், துளசி மணி போன்ற தெய்வத்தன்மை கொண்ட மணி களை நாம் அணிவதால், நமது உடலும் உள்ளமும் இயற்கையான முறையில் பல மாற்றங்களை அடைவதை அனுபவத்தில் உணர லாம்.

அதுபோன்று மந்திரங்கள் ஜபிப்பதால்,  மாறுபட்ட நல்ல சூழ்நிலையை உருவாக்கி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த முடியும். நிறைவில் மருந்து-ஔஷதம் போன்ற வற்றை அளித்தும் உடல் வேதனைகளைப் போக்கலாம்.

இவற்றில் மூன்றையும் சேர்த்தோ அல்லது ஏதேனும் ஒன்றையோ நம்பிக்கையோடும் குருவின் வழிகாட்டுதலுடனும் செய்யும்போது, அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.

பிரார்த்தனை என்பது சக்திமிக்க வழி. நமது ஸனாதன மதத்தில் எந்தவித எதிர் பார்ப்பும் இல்லாமல், உலகில் உள்ள அனைத்து ஜீவராசி களும் நன்மை அடையவேண்டும் என்று அர்ச்ச கர்களால் அன்றாடம் ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் பயன் பெறவேண்டும் என்பதற்காக, எல்லாம்வல்ல சிவபெருமான் காமிகாதி ஆகமங்களையும், ஸ்ரீமந் நாராயணர் வைகாநஸ, பாஞ்சராத்ர ஆகமங்களையும் அருளினர். மற்றும் பல விதமான பூஜை முறைகளையும் அருளியுள்ளனர்.

நமது நாட்டின் மீது படையெடுத்த அந்நியர்கள் பலரும், இவற்றையெல்லாம் பார்த்து வியந்து,  இவற்றை அழித்தால்தான் தங்களின் கோட்பாடு களை இங்கு செயல்படுத்த முடியும் என்று எண்ணி, பலவித கருத்து வேறுபாடுகளை நம்முள் உருவாக்கிவைத்தார்கள். இன்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவை எல்லாம் விலகி, மக்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாகத்தான் இன்றைக்கு நிறைய ஆலயங்களில் திருப்பணிகளும், சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெறத் தொடங் கியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?

? அன்பே வடிவமானவள் அம்பிகை, சில தருணங் களில் சில இடங்களில் உக்ரமான திருக்கோலத்தில்  காட்சி தருவது ஏன்?

- கே.ராமசுப்பிரமணியன், கோவை

‘அதிசௌம்ய அதிரௌத்ராயை’ என்று அம்பிகையின் வைபவம் தேவி மஹாத்மியத்தில் துதிக்கப்படுகிறது. அம்பிகை அளவற்ற அன்பின் வடிவமாகத் திகழ்பவள். அவளே அளவற்ற கோபத்துடனும் விளங்குபவள் என்று வர்ணிக்கப் படுகிறாள். ‘தைத்யானாம் தேஹ நாசாய’ என்று, `தீயவர் களை அழிப்பதற்காக ஆயுதங்கள் தாங்கி இருப்பவளாக' அம்பிகையைப் பற்றி விளக்கு கின்றன சாஸ்திரங்கள்.

நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்தவும் தான் அவதரித்திருப்பதாக பகவான் கிருஷ்ணர் அருளியுள்ளார்.

காவலர்களிடம் உள்ள துப்பாக் கியைப் பார்த்தால் தவறு செய்பவர்கள் ஒதுங்கி ஓடுவார் கள். அதுபோல் வெளியுலகில் உள்ள அரக்கர்கள், தீயசக்திகள் மட்டுமின்றி, நம்முள் இருக்கும் தீய எண்ணங்களும், ஆயுதங்களுடன் உக்ர கோலத் தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்கும்போது, நம்மைவிட்டு விலகி நாம் நல்லவர்களாக மாற ஒரு வாய்ப்பு ஏற்படும்.

நமக்கு அருள்புரியும் தெய்வ சக்திகளின் திருமேனி ஒவ்வொன்றும் மிகப்பெரிய தத்துவார்த்தத்தை உள்ளடக்கித் திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நாம் தீய வழியிலிருந்து விலகி, நல்ல வழியில் பயணம் செய்வதற்கு, மறக்கருணையோடு கூடிய அம்பிகையின் உக்ர திருக்கோலம் அருள்செய்யும்.

பலவாறாக உள்ள நம்முடைய கர்மவினைகளை அழிக்கக்கூடிய ஆற்றல் அம்பிகையின் திருக்கரங் களில் திகழும் ஆயுதங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்த நம்முடைய ரிஷிகளின் வழிகாட்டுதல் படி, நம் முன்னோர்கள் காட்டிய நெறியில் நம் முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.

தாயானவள், தன் குழந்தை நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவரிடம் அழைத்துச்சென்று, அந்தக் குழந்தைக்குத் தடுப்பு மருந்துகளைப் பெற்றுத் தருவதுபோல், கருணையே வடிவான அம்பிகையும் நாம் நன்மை அடையவேண்டும் என்பதற்காகவே பல்வேறு உருவங்களில் பல்வேறு ஆயுதங்களுடன் காட்சி தந்து அருள்கிறாள் என்பது நம்பிக்கை.

கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?

? பாகவதம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதுபோன்ற ஞானநூல்களைப் படிப்பதால் மன அமைதி கிடைக்குமா?

- எம்.சிவகுமார், சென்னை - 46

பத்மபுராணத்தில் ஒரு தகவல் உண்டு.

`ஸ்ரீமத்பாகவதம் சாஸ்த்ரம் கலெள கீரேண பாஷிதம்
ஏதஸ்மாத் அபரம் கிஞ்சித் மனச்சுத்யை ந வித்யதே
ஜன்மான்தரே பவேத் புண்யம் ததா பாகவதம் லபேத்'


என்கிறது அந்தப் புராணம். அதாவது,  பூர்வ ஜன்மாக்களில் புண்ணியம் செய்து இருந்தால் தான் பாகவதம் படிக்க முடியும் என்றும், மனத் தூய்மை அளிக்கவல்ல  மாமருந்து இதைவிட வேறொன்றும் இல்லை என்றும் ஸ்ரீபாகவதத்தின் பெருமை சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

வேதவியாச மகரிஷி, பகவான் நாராயணரின் சரிதத்தை மிகச் சிறப்பாக விவரித்துள்ளார்.

‘க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’ என்றபடி ஜீவாத்மாக்களான பசுக்களை மேய்த்து நல்வழி காட்டும் கிருஷ்ணனாக, கோபாலனாக அவதரித்த பகவானின் லீலாவிநோதங்களைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் நம் மனதி லுள்ள தீய எண்ணங்கள் விலகும்; நாம் நல்ல வழியில் பயணிப்போம் என்று நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

‘ஸர்வ வேத ஹிதிஹாஸானாம் ஸாரம்’ என்று பாகவதத்திலேயே அனைத்து வேதங்களின் ஸாரமாக பாகவதம் அறியப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

நம் முன்னோர்கள், காலை வேளையில் பூஜை களைச் செய்து, பிறகு அவரவர் தொழிலைச் சிறப்பாக முடிப்பார்கள். பிறகு மாலை வேளை யில் இதுபோன்ற தெய்வங்களின் திவ்ய சரிதங் களைப் பாராயணம் செய்வார்கள். இதை,  தெய்வங்களின் ப்ரபாவங்களை உணர்ந்து அனுபவித்து ஆனந்தமாக வாழ்வதற்குரிய வழியாகக் கடைப்பிடித்து வந்தனர்.

மீண்டும், இதுபோன்ற திவ்ய பாகவத பாராய ணங்களை வீதிதோறும் நடைபெறச் செய்ய வேண்டும். அனைவரும் மனோபலம் பெற்று அமைதியான வாழ்க்கையை அடைவதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.

நம்மை ஆன்மிக வழியில் வாழச் செய்து, ‘நான்’ எனும் அகந்தை அற்றவர்களாக,  `அனை வரும் கடவுளின் குழந்தைகள்' என்ற எண்ணம் மேலோங்க, ஒற்றுமையாகவும் ஒழுக்கமாகவும் நம்மை வாழவைப்பதே ஸ்ரீமத் பாகவதத்தின் லட்சியம்.

? காளி உருவத்தில் தேவியை வழிபடுகிறோம். சில படங்களில், தேவி ஈசுவரனின் மீது நின்றுகொண்டிருப்பது போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இது சரியா, இதனால் சிவபக்தர்களின் மனது புண்படுமே..?

- கே.கிருஷ்ணகுமார், திருச்சி 1


சிவம்-சக்தி இரண்டும் ஒன்றே; பிரிக்க முடியாதவை; நித்தியமானவை. காளிதேவி நித்தியமானவள். மகா மாயா ஸ்வரூபிணி. அவளுக்கு ரூபம் என்பது கிடையாது. ஒளிமயமா னவளும் காலத்தை நடத்துபவளுமாகிய பராசக்தி, தீய சக்திகளை அழித்து நல்லோர்களைக் காப்பதற்காகவே தாமஸ, ராஜஸ, ஸாத்வீகக் குணங்களுக்கும் தாம் செய்ய வேண்டிய காரியங் களுக்கும் உகந்தவாறு ரூபங் களை ஏற்று அருள் பாலிக்கிறாள். இதையே மகா நிர்வாண தந்த்ரம் எனும் நூல்,  இப்படி வர்ணிக்கிறது:

அரூபாயா: காளிகாயா: காலமாது: மஹாத்யுதே:
குண க்ரியானுரூபேண க்ரியதே ரூப கல்பனா.


அனைத்து பூதங்களையும் அழிப்பதால் `காளி' எனப் போற்றப்படுகிறாள் அம்பிகை. அதேபோல், காலம் அவளின் கைகளில் என்பதாலும் `காளி' என்று அறியப்படுகிறாள். நமக்கு நன்மையையே அளிப்பதால் `பத்ரகாளீ' (பத்ரம் - நன்மை) என்றும் போற்றப்படுகிறாள்.

தெற்கில் இருக்கும் யமன் இவளின் திருப் பெயரைக் கேட்க பயம் கொள்வான் என்பதால் தக்ஷிணகாளி எனப்படுகிறாள். வலம் (தக்ஷிணம்) சிவபெருமானின் நிலையாகவும், இடது (வாமம்) சக்தியின் நிலையாகவும் போற்றப்படும் உருவத் தில் அவளே சிவபெருமானின் ஆற்றலாகவும் உள்ளதாலும் அவளை `தக்ஷிண காளீ' என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். அதேபோல், மோக்ஷத்தை அளிக்கக்கூடிய சிவஞானத்தை  அருளும் ‘சிவஞான ப்ரதாயினியாக’ விளங்குவ தாலும் அவள் `தக்ஷிணகாளீ' எனப் போற்றப் படுகிறாள் என்றும் அந்த நூல்கள் விளக்குகின்றன.

புருஷோ தக்ஷிண: ப்ரோக்த: வாமா சக்திர் நிகத்யதே
வாமா ஸா தக்ஷிணம் ஜித்வா மஹாமோக்ஷ ப்ரதாயினீ
தத: ஸா தக்ஷிணா நாம்நா த்ரிஷு லோகேஷு கீயதே


தந்திர நூல்களும் காளியை மிகவும் சிறப்பாக வர்ணிக்கின்றன. `ச்மசான நிலயாம்' என்ற குறிப்பால், காளிதேவியை இடுகாட்டில் உறைப வளாகச் சொல்கின்றன அவை. `ச்மசானம்' என்பது ஜீவராசிகள் உயிர் துறந்தபின் போடப் படும் இடம். `மகா பிரளய' காலத்தில் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானிடம் உறைகின்றன. ஆக அவரையே மஹா ச்மசானமாகக் கருதி, காளிதேவி அவரின் மேல் உறைவதாகக் கொள்ள லாம். இதுவே நீங்கள் குறிப்பிடும் சித்திரத்துக்கான மறைபொருள் எனக் கொள்ளலாம்.

சக்தி தந்திரம், `மகா பிரளய' காலத்தை இப்படி வர்ணிக்கிறது:

மஹாந்த்யபி சபூதானி ப்ரளயே ஸமுபஸ்திதே
சேரதே அத்ர சவோ பூத்வா ச்மசானஸ்து ததோ பவேத்”
ச்மசானம் தக்ஷினாஸ்தானம் ச்மசானம் ச ஸதாசிவ:
சவரூப மஹாகால ஹ்ருதய அம்போஜவாஸினீ


‘அனைத்துக் காலங்களிலும் காளியானவள் நித்தியையாக இருப்பதால், அவள் மகா காலரின் இருதயக் கமலத்திலிருந்து காட்சியளிப்பதாக' வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

ஆக, காளிதேவியானவள் மகா காலரின் மீது நிற்பது போன்ற தோற்றம், ‘சிவனுள் இருந்து வெளிப்படும் சக்தியே காளிதேவி’ என்பதை உணர்த்துவதே தவிர, சிவபக்தர்களின் மனதைப் புண்படுத்துவது ஆகாது.  தெய்வ உருவங்கள் நம்முடைய ரிஷிகளின் திவ்ய அருளால் பெறப் பெற்றவை.

ஆகவே, ஒருபோதும் அவற்றில் தவறுகள் இருக்காது. நமது புரிதலில் வேண்டு மானால் மாறுதல்கள் இருக்கலாம். எனினும் இதுபோன்று சந்தேகம் வரும்போது, தகுந்த சான்றுகளுடன் விளக்கம் பெற்று தெளிவு பெறுவது சிறப்பு.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002