தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 8

ரங்க ராஜ்ஜியம் - 8
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 8

இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ம.செ

மற்றுமோர் தெய்வமுண்டோ
மதியிலா மானி டங்காள்,
உற்ற போதன்றி நீங்கள்
ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்றறியீர்
அவனல்லால் தெய்வமில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை,
கழலினை பணிமினீரே.

-தொண்டரடிப் பொடியாழ்வார்.


ராவணனின் தம்பி விபீஷணன். எல்லா வகையிலும் ராவணனுக்கு நேர் எதிராக நடந்து கொண்டவன். விபீஷணனின் முற்பிறப்பு பிரம்ம புத்ரரான புலத்தியர் பிறப்பாகும். தாயான கேகசி ராவணனைத் தவம் செய்யச் சொன்ன நேரத்தில் மற்ற தன் இருபிள்ளைகளான விபீஷணன் மற்றும் கும்பகர்ணனையும் கூட தவம் செய்யப் பணித்தாள்.

இதில் கும்பகர்ணன் அண்ணன் ராவணனைப் போலவே எவராலும் வெல்லப்பட முடியாத வரஸித்திக்கு முனைந்தான். அதைக் கண்டு தேவருலகமே நடுங்கியது. ஒரு ராவணனையே தாளமுடியாத நிலையில் இவனும் வந்துவிட்டால் அவ்வளவுதான் என்று அஞ்சி நடுங்கியவர்கள், பிரம்மாவிடமே சென்று முறையிட்டனர்.

ரங்க ராஜ்ஜியம் - 8

பிரம்மாவோ ‘கடுந்தவத்துக்கு வரம் தருவது என் கடமை. இப்போதே கும்பகர்ணன் குறித்து வருந்துவது மடமை’ என்று கூறிவிட, தேவர்கள் கலங்கி நின்றனர். அப்போது அவர்களின் நிலையை அறிந்த சரஸ்வதிதேவி ‘`தேவர்களே கலங்காதீர்கள். தைரியமே தேவலட்சணம்” என்றாள்.

“உண்மைதான்... ஆனாலும் அசுர சக்திகள் நம்மாலேயே பலம் பெற்று நம்மையே நசுக்க முற்படுவது எந்த வகையில் சரி?” - என்று திருப்பிக் கேட்டனர். இறுதியாக, சரஸ்வதி கும்பகர்ணன் விஷயத்தை தான் பார்த்துக்கொள்வதாகக் கூறினாள். எப்படி என்று கூறவில்லை. கும்பகர்ணன் தவத்ததால் மகிழ்ந்து பிரம்மா பிரசன்னமாகி வரம் தரத் தயாரானபோது, எல்லோருடைய நாவையும் தன் இருப்பிடங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த சரஸ்வதி கும்பகர்கணன் நாவிலும் அப்போது செயல்பட ஆயத்தமானாள்.

அண்ணனைப் போல் ‘நித்யத்வம்’ வேண்டும் என்று கேட்க விழைந்த கும்பகர்ணன், நாப்பிசகி ‘நித்ரைத்வம்’ வேண்டும் என்று கேட்கச் செய்தாள். பிரம்மாவும் ‘அவ்வாறே தந்தேன்’ என்று வரம் அளித்தவராக மறைந்தார். அதனாலேயே கும்ப கர்ணனும் தூங்கு மூஞ்சியாகிப் போனான்!

நல்லவேளை விபீஷணன் வரையில் தேவர்களும் அஞ்சவில்லை, நாமகளும் தேவைப்படவில்லை. தன் முன் தோன்றிய பிரம்மனிடம் ‘என்றும் தர்ம சிந்தையோடு பரம்பொருளை மறவாத உள்ளம் போதும்’ என்று கேட்டான். பிரம்மா மகிழ்வோடு அதை அருளினார்.

அதனாலேயே ராவணன் அவையில் விபீஷணன் தனித்துத் தெரிந்தான். அனுமன் சீதை யைத் தேடி இலங்கைக்குள் நுழைந்து ராவணனின் அரண்மனைக்குள் இரவில் புகுந்து, ஒவ்வோர் இடமாக காணும் தருணத்தில், விபீஷணரின் சப்ரமஞ்ச கூடத்தில் விபீஷணனை உறக்கத்தில் பார்த்து வியந்தார்.

அனுமன் கம்பனின் கண் கொண்டு பார்ப்பதை சுந்தரகாண்டமும் அழகாய் பாடல் வடிவில் சொல்கிறது.

“பளிக்கு வேதிகைப் பவழத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
வெளுத்து வைகுதல் அரிதென அவர் உருமேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனை
                                உற்றான்”


எனும் அந்தப் பாடல் ‘பளிங்குக்கல் மேடையில் பவழ மண்டபத்தில் பசுந்தேன் துளிர்க்கும் கற்பகப் பந்தலில், கருப்பு நிற அரக்கர்கள் மத்தியில் வெண்ணிறத்தனாய் வாழுதல் அரிது என்று அரக்கர்களின் கருநிறத்தை ஒளித்து வாழும் தர்ம தேவனாய் வீபிஷணனைக் கண்டான்’ - என்கிறது.

இப்படிப்பட்ட விபீஷணன்தான் அனுமன் ராவண சபையில் துன்புறுத்தப்பட்டபோது ‘தூது வந்தவனைத் துன்புறுத்துவது பெரும் தவறு’ என்று துணிந்து சொன்னவன். தொடர்ந்து ராவணனின் தவறுகளைச் சுட்டிக்காட்டியதால், அரண் மனையை விட்டும் துரத்தப்பட்டவன்.

அப்படி துரத்தப்பட்ட நிலையில் விபீஷணன் அடைக்கலம் என்று வந்தது ராமனிடம்தான். அடைக்கலம் கேட்டு வந்த விபீஷணனை ராமலக்ஷ்மணரைத் தவிர எவரும் நம்பத் தயார் இல்லை. ராவணனால் உளவுபார்க்க அனுப்பப் பட்டவனாகத்தான் விபீஷணனைப் பார்த்தார்கள்.

ஆனால்,  ராவண சபையில் விபீஷணன் தனக்காகப் பரிந்து பேசியதை அனுமன் எடுத்துச் சொல்லி, விபீஷணனுக்கு ராமன் அடைக்கலம் தரக் காரணமானான்.

அதன் பின் நடந்த போரில் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரம், சகலரையும் வீழ்த்திய வேளையில், ஜாம்பவான் மூலம் அனுமனை அனுப்பி சஞ்ஜீவி பர்வதத்தையே தூக்கிவரச் செய்து, லக்ஷ்மணனின் மூர்ச்சையை மட்டுமின்றி வானரசேனை மொத் தத்தையும் எழுப்பியவன் விபீஷணன்.

உச்சபட்சமாக இந்திரஜித் நிகும்பலை எனும் யாகம் செய்து, தான் மாயா சக்தியால் ஒரு மாய சீதையை உருவாக்கி ராமன் மற்றும் வானரர் முன் நிறுத்தி, அந்தச் சீதையை வாளால் வெட்டிக் கொன்று, உண்மைச் சீதையை அசோகவனத்தி லேயே இருக்கச் செய்தபோது ‘இது மாயா விளையாட்டு - நம்பிவிடாதீர்கள்’ என்று இந்திர ஜித்தின் ஜாலத்தை ராமலக்ஷ்மணர்க்கு உணர்த் தியவன்.

இறுதியாக ராவண வதம் முடியவும், ஸ்ரீராமனால் இலங்கை அரசனாக முடி சூட்டவும் பெற்றவன்.

ஆயினும் விபிஷணரின் தேவகுணத்துக்கும், உதவிகளுக்கும் ராமன் தர விரும்பிய பரிசு பொன்னோ, பொருளோ அல்ல... பிரணவாகாரப் பெருமாள்! ஏன்?

ரங்க ராஜ்ஜியம் - 8

யோத்தியில் அன்று எங்கு பார்த்தாலும் குதூகலம்! வானிலும் வெய்யக் கதிரோனின் கிரணங்கள், பந்தல் போட்டது போன்ற கார் மேகங்களுக்கு இடையே துணுக்குத் துணுக்காய் உள்ள இடைவெளி வழியாக ஊடுருவிக் கொண்டிருந்தன!

அயோத்தி மக்கள் அத்தனைபேரும் புத்தாடை தரித்திருந்தனர். ஒரு படி மேலே போய் தங்கள் இல்லத்து பசுக்களுக்கும் குதிரைகளுக்கும்கூட முதுகாடை அணிவித்து, அதன் நாற்புர நுனிகளில் மணிகளைத் தொங்கவிட்டிருந்தனர். அந்த மணிகள் ஒலியெழுப்பியபடி இருந்தன.

வீதிகளெங்கும் வசந்தக் கொடிகளும் மாவிலைத் தளிர்களும் கட்டப்பட்டு, அவை காற்றிலாடிக் கொண்டிருந்தன. அனைத்துக்கும் ஒரே காரணம்... வனவாசம் முடிந்து திரும்பிய ஸ்ரீராமனுக்கு அன்றுதான் பட்டாபிஷேகம்!

அதுநாள் வரை அயோத்தியில் ஓர் அசாத்ய அமைதி நிலவி வந்திருந்தது. பரதனின் நல்லாட்சி யில் ஒரு குறையும் இல்லைதான். ஆயினும் ஸ்ரீராமனும் சீதையும் இல்லாததே குறை என்றாகி, அவ்வளவு நிறைக்கும் ஈடாக அந்தக் குறை இருந்து வந்தது. இன்று அந்தக் குறை நீங்கிவிட்டதில் அயோத்தியில் ஒரு புத்தொளி… மக்கள் மனங் களிலும் பெரும் உற்சாகம்!

தங்கள் உற்சாகத்தை, ஆடத் தெரிந்த விரலியர் ஆடிக்காட்டியபடியே தெருக்களில் சென்றனர். மல்லாடுபவர்களும் மல்லாடிக்கொண்டு நடந்தனர். அயோத்தி நகரின் மாடங்களில் எல்லாம் தெருவில் நடப்பதை வேடிக்கை பார்த்தி டும் ஜனத்திரள்தான். அன்றைய தினத்தின் அந்த நொடிகளில், ‘ஆகாய சொர்க்கமானது விண்ணிலே செயலிழந்து மண்ணில் அயோத்திக்குத் தன்னை இடம் மாற்றிக் கொண்டுவிட்டது போலும்’ என்பதாகப் பலரும் உணர்ந்தனர்.

வீட்டுக்கு வீடு கல்யாண விருந்து! விருந்து உணவை ஒருவர்கூட தாங்கள் உண்ணவில்லை. மகிழ்வோடு தங்களின் உறவுகளுக்கும், நண்பர் களுக்கும், தோழியர்க்கும் ஊட்டிவிட, பதிலுக்கு அவர்கள் இவர்களுக்கு ஊட்டிவிட்டனர்.

அவ்வப்போது ‘ஜெய்ஸ்ரீராம்’ என்கிற உற்சாகக் குரல் பலராலும் எழுப்பப்பட்டு, அதைக் கேட்போரும் பதிலுக்கு ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று எதிரொலித்தனர். ஊருக்குள் நிலவிய உற்சாகத் தைப் போல பல மடங்கு உற்சாகம் அரண்மனைக்குள்!

ஸ்ரீராமனோடு வந்திருந்த சுக்ரீவனின் வானரப் படை அரண்மனைக்குள் மட்டுமின்றி அயோத்தியின் வீதிகளிலும் உலா வந்தனர். தங்கள் மண்ணில் திரியும் அந்த வானரர்களை அயோத்தி மக்கள் சந்தோஷமாய் வரவேற்று மகிழ்ந்தனர். சிலர் கட்டியணைத்து ஆலிங்கனம் புரிந்தனர்.

“எங்கள் பிரபுவுக்கு நீங்கள் செய்த உதவிக்கு நாங்கள் உங்களுக்கு காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறோம்” என்றனர். சுக்ரீவன், அங்கதன், நீலன் உள்ளிட்டோர் தனியே ரதங்களில் அயோத் தியை வலம் வந்தபடி இருந்தனர்.

அனுமனோ பட்டாபிஷேகக் காரியத்தில் கண்ணாயிருந்தான். பட்டாபிஷேக தர்பார் மண்டபத்தில், லக்ஷ்மணனின் மேற்பார்வையில் ஆசனங்களை வகைப்படுத்திக் கொண்டிருந்தான். இடையில் பரதனும் சத்ருக்னனும் வந்து அனுமனிடம் ‘`தொண்டாற்றியது போதும். நீங்கள் இப்போது எங்கள் விருந்தினர். பேசாமலிருந்து ஓய்வு எடுக்கலாமே...'' என்றபோது ‘`ஸ்ரீராம காரியம்தான் எனக்கு உகந்த ஓய்வு…” என்று அவர்கள் வாயை அடைத்தான் அனுமன்.

விபீஷணனோ பிரணவாகாரப் பெருமாள் சந்நிதியில் இருந்தான். வைத்த விழி வாங்காது எம்பெருமானின் சயனத் திருக்கோலத்தின் மேலேயே கண்ணாயிருந்தான்.

என்னவொரு சாந்நித்தியம்... என்னவொரு சௌலப்யம்! விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்திருக்கும் அந்த மூர்த்தம் விபீஷணனுக்குள் பல சிந்தனைகளை உருவாக்கியிருந்தது.

‘இம்மூர்த்தியாலேயே இம்மண் இத்தனை சிறப்போடு உள்ளது. வற்றாத நதியோட்டம், வளமான சோலைகள், மேடுபள்ளம் இல்லாத சாலைகள், சாலையோரங்களில் மாளிகைகள், மக்களிடம் எவ்வித பேதமும் இல்லாத இணக்கம், அரசனைத் தாய்-தந்தைக்கு மேலாகக் கருதிடும் மனோபாவம்... அத்தனையும் சிறப்பு' என்று அயோத்தியையும், அயோத்தி மக்களையும் எண்ணிப் பார்த்தான்.

அப்படியே லங்காபுரி குறித்த நினைவும் வந்தது. ‘தேவலோக மயனால் வடிவமைக்கப்பட்ட ஒரு சொர்க்கபுரிதான் இலங்கை. ஆனபோதிலும் அதற்கு உரியவன் குபேரன். அவனிடமிருந்து லங்காபுரியை ராவணன் தட்டியல்லவா பறித்துக் கொண்டான். அத்துடன், தனக்கு தலைவணங்கா விட்டால் சிரத்தையே கொய்துவிடும் அச்சத்தை உருவாக்கியல்லவா மக்களை ஆண்டான்?’

விபீஷணனின் மனம், அயோத்தியையும் இலங்கையையும் தராசிலிடத் தொடங்கி விட்டிருந்தது.  ‘இன்று அயோத்திக்கு ஸ்ரீராமனின் வனவாசப் பூரணம் ஒரு புத்துயிரை அளித்து விட் டது. ஆனால், இலங்கையோ நடந்த யுத்தத்தால் சர்வநாசமல்லவா அடைந்துள்ளது? மக்களும்கூட யுத்தத்தில் தங்கள் உறவுகளை இழந்து ஊனப் பட்டல்லவா கிடக்கிறார்கள்? போதாக்குறைக்கு சீதையால் உண்டான களங்கம் வேறு… அன்றாடம் சீதையிட்ட சாபங்களால் சூழ்ந்த பூமியாக அல்லவா இலங்கை உள்ளது?’  - விபிஷணன் மார்பை அவன் பெருமூச்சே சுட்டது.

‘எப்படி அந்த மண்ணை திருத்தப் போகிறோம்? எவ்வளவு அழகிருந்தும் அசுரக் குணப்பாடே ஊடுருவிக் கிடக்கும் நிலையில், தேவ குணங்களும் தெய்விகமும் அங்கே இனி எவ்வாறு பரவும்? இந்தப் பெருமாள் இலங்கையில் கோயில் கொண்டால் ஒருவேளை அம்மண்ணும் திருமண்ணாய் மாறுமோ?’ - விபீஷணன் மனதில் கேள்வி எழும்பி நின்றது. எழும்பிய வேகத்தில் கலையவும் பார்த்தது.

 விபீஷணன், பிரணவாகாரப் பெருமாளைப் பார்த்து பலவித கேள்விகளுக்கும் பதில்களுக்கும் ஆளான நிலையில், பட்டாபிஷேகம் நடக்க உள்ள தர்பார் மண்டபத்துக்கு அழைப்பு வரவும், புறப்படத் தயாரானான்!

- தொடரும்...