Published:Updated:

நாவலந்தீவை காவல் காத்த சம்பாபதி அம்மன் கோட்டத்தின் இன்றைய அவலநிலை!

மணிமேகலைக்கு அடைக்கலம் கொடுத்த அன்பு வடிவமான சம்பாபதி கோயிலின் தொன்மைச் சிறப்பை உணர்ந்து கோயிலை மறு சீரமைப்பு செய்து நித்திய பூஜைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது...

நாவலந்தீவை காவல் காத்த சம்பாபதி அம்மன் கோட்டத்தின் இன்றைய அவலநிலை!
நாவலந்தீவை காவல் காத்த சம்பாபதி அம்மன் கோட்டத்தின் இன்றைய அவலநிலை!

வானுயர்ந்த கட்டடங்கள், வியக்க வைக்கும் தொழில்நுட்பம், ஆடம்பர வாழ்க்கை நிறைந்த லண்டன், பாரீஸ், நியூயார்க், வாஷிங்டன் போன்ற மேலைநாட்டுப் பெருநகரங்களைக் கண்டு நாம் வியக்கிறோம். இன்றைக்கும் பெரும்பாலான இளைஞர்களின் கனவுப் பட்டினங்களாக இந்தப் பெருநகரங்கள் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகமே பார்த்து வியந்த பட்டினம்தான் தமிழகத்தின் சிறப்புமிக்க பூம்புகார். இது சங்ககால சோழர்களின் தலைநகராகவும், தமிழகத்தின் முக்கிய வணிக நகரமாகவும் விளங்கிய பெருமை கொண்டது. குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறானது கடலுடன் சேரும் இடத்தில் அமைந்த பட்டினமாகையால் அதற்கு `காவிரிப்பூம்பட்டினம்’ என்ற பெயர் வந்தது. அது மருவி `பூம்புகார்’ என்றும் `புகார்’ என்றும் அழைக்கப்பட்டது. 

பௌத்த நூல்களில் குறிப்பிடப்படும் `கவீரப்பட்டினம்’, `பெரிபுளீஸ்' எனும் யவனக் கடற்பயண நூலில் `கமாரா’, தாலமியின் பயணக் குறிப்பில் `சபரிஸ்‘ என்றும் வியந்து போற்றுவது இந்தப் பூம்புகாரைத்தான். ஈழம், யவனம், சாவகம், பவளத்தீவு, சீனம், கடாரம் என்று பல்வேறு நாட்டினரும் போட்டி போட்டு வணிகம் செய்வதற்குக் குவிந்த பட்டினம்தான் பூம்புகார். இந்நகரின் செல்வச் செழிப்பையும், அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை பற்றியும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் சிறப்பித்துக் கூறியிருப்பார். 

கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் ஆழிப்பேரலை தாக்கி அழியும் வரை தமிழகத்தின் முக்கியப் பெரும்பட்டினமாகத் திகழ்ந்தது பூம்புகார். இரட்டைக் காப்பியங்கள் எனப் போற்றப்படும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைக் காவியங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது இந்தப் பூம்புகார் பட்டினம். காப்பியத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பூம்புகாரை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. 

காவிரி ஆறு தோன்றி கடலில் சங்கமிக்கும் காலத்துக்கு முன்பே சிறப்பு பெற்றிருந்த பூம்புகாரின் ஆதிகாலப் பெயர் `சம்பாபதி’. இந்த சம்பாபதி, பௌத்தர்களின் தரைக் காவல் தெய்வமாகப் போற்றப்பட்டவள். `முதல்வியான இறைவி’, `முதியோள்’ என்று இலக்கியங்கள் அவளைச் சிறப்பிக்கின்றன. உலகம் தோன்றியபோதே நிலத்தைக் காக்க `அவலோகிதர்' என்ற போதி சத்துவரால் படைக்கப்பட்டவள்தான் இந்த சம்பாபதி. அம்மனாகக் கோயில் கொண்டுள்ள இடத்துக்கு `முதியோள் கோட்டம்’ என்று பெயர். இந்தக் கோட்டம் சுடுகாட்டின் அருகே அமைந்திருந்ததால் `சுடுகாட்டுக் கோட்டம்’ என்றும் அழைக்கப்பட்டது. 

பொன்போல் ஒளிரும் சிகரங்களைக் கொண்ட மேருமலையின் உச்சியில் தோன்றி மக்களைக் காக்கவே தென் திசைக்கு இடம் பெயர்ந்தவள் இவள். தென்திசைக்கு வந்து அடர்த்தியான கிளைகளை உடைய நாவல் மரத்தடியில் அமர்ந்ததால் `சம்பு’ என்று பெயர் பெற்றாள். பாரத தேசத்தின் பண்டைய பெயர் `நாவலந்தீவு’. நாவல் மரத்தடியில் அமர்ந்து சம்பாபதி அம்மன் காவல் காத்ததால் `நாவலந்தீவு’ என்று பெயர் பெற்றது. இதுவே வடமொழியில் `ஜம்புத்வீபம்’ என்று அழைக்கப்பட்டது. நாவல் மரத்துக்கு வடமொழியில் `ஜம்பு' என்று பொருள்.

பூம்புகார் கடல்கோளால் அழிக்கப்பட்டாலும், அதன் எச்சங்கள் இன்றைக்கும் எஞ்சி இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது பூம்புகாரையும், மணிமேகலையையும் காவல் காத்த சம்பாபதி அம்மனின் கோட்டம். பூம்புகாருக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள `சாயாவனம்' என்ற ஊரின் தென்புறம் அமைந்துள்ளது சம்பாபதி அம்மனின் சக்கரவாளக் கோட்டம். 

அந்தக் காலத்தில் கடல் தெய்வமாக வணங்கப்பட்டவள் மணிமேகலைத் தெய்வம். தரைக் காவல் தெய்வமாக வணங்கப்பட்டவள் சம்பாபதி. பூம்புகாரின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோட்டத்தை வழிபட்டே தங்களது பணியைச் செய்தனர் அந்தக் கால மக்கள். நாவலந்தீவுக்கே காவல் தெய்வமாகப் போற்றப்பட்ட சம்பாபதி அம்மன் இன்றைக்கு ஊர்க்காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறாள். கோயிலுக்கு அருகே வெட்டவெளியில் `சதுக்கப்பூதங்கள்’ என்று அழைக்கப்படும் ஆண், பெண் பூதங்கள் காவல் புரிகின்றன. அந்தக் காலத்தில் தவறு செய்தவர்களை இந்தப் பூதம் தண்டித்ததாக வரலாறு உண்டு. அத்துமீறிய சோழ இளவரசன் ஒருவனை இந்தப் பூதங்கள் இரண்டும் அசையவிடாமல் செய்துவிட்டதாக இலக்கியத்தில் குறிப்புகள்கூட இருக்கின்றன. அந்தக் காலக் கட்டடக்கலைக்குச் சான்றாக இன்றைக்கும் விளங்குவது இந்தச் சம்பாபதி அம்மனின் கோட்டம்தான்.

இதில் சோகம் என்னவென்றால், பழங்கால சம்பாபதி அம்மனின் சிலை இந்தக் கோயிலில் இல்லை. அருகே இருக்கும் சாயாவனேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பழங்கால சம்பாபதி அம்மன் ஆலயம் யாரும் நெருங்கமுடியாத அளவுக்குப் புதர்களும், முள்மரங்களும் மண்டிக் கிடக்கின்றன. போதிய பராமரிப்பு இல்லாமல் கோயில் முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. பூதங்களின் சிலைகளும் மண்ணில் புதைந்து, பெரும்பாலான பாகங்கள் உடைந்து போய், பாசி படிந்து மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றன. இந்தக் கோயிலில் உள்ள குதிரை, யானை சிலைகளும் மிகவும் சேதமடைந்துள்ளன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பகுதியை பாதுகாப்பது பற்றியும், அதைச் செப்பனிடுவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறும் பகுதி மக்கள் தமிழக அரசுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் சம்பாபதி அம்மன் கோயில் இருந்ததற்கான தடயங்களே இல்லாமல் அழிந்து போய்விடும். எனவே இந்தப் பழங்கால ஆலயத்தைச் சீர்செய்து, அதன் சிறப்புகளைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

தென்திசையைக் காப்பதற்கென்றே வடதிசை மேரு மலையிலிருந்து வந்த மூத்த தெய்வம்; `சம்பாபதி' என்று தன் பெயரில் வழங்கப்பட்ட ஊரின் பெயரை, சோழர் தம் குலக்கொடியாக விளங்கிய காவிரியின் பெயர் கொண்டு `காவிரிப்பூம்பட்டினம்’ என்று அழைக்கும்படி செய்த கருணையின் உருவம்; மணிமேகலைக்கு அடைக்கலம் கொடுத்த அன்பு வடிவான சம்பாபதி கோயிலின் தொன்மைச் சிறப்பை உணர்ந்து கோயிலை மறு சீரமைப்பு செய்து தொடர்ந்து நித்திய பூஜைகள்  நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது.