தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 9

ரங்க ராஜ்ஜியம் - 9
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 9

இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ம.செ

யோத்தி அரண்மனையின் தர்பார் மண்டபம் திமிலோகமாய் காணப்பட்டது. நடுநாயகமாய் ரத்ன சிம்மாசனம். அருகில் இருபுறமும் இரண்டிரண்டாய் சிம்மாசனங்கள். அவற்றை அடுத்து வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், காத்யாயனர், ஸ்ரீயக்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய அஷ்ட ரிஷிகளுக்கான ஆசனங்கள். அதுபோக மிதிலாபுரி ஜனங்களுக்கும், விபீஷண னுக்கும் பிரத்யேக ஆசனங்கள்.

இவை இப்படியென்றால், வெள்ளி மற்றும் தாமிரங்களால் ஆன பலதரப்பட்ட ஆசனங்களில் கோசலை, கைகேயி, சுமித்ரை உள்ளிட்ட ரவிகுல பந்துக்களும் சக ராஜ்ஜியாதிபதிகளும் அமர்ந் திருந்தனர். இவை போக, மண்டபத்தில் விரிக்கப் பட்டிருந்த ரத்தினக் கம்பளங்களில் அயோத்தி நகர வேத விற்பன்னர்கள் முதல் மகாஜனங்கள் வரை சகலரும் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் வரையிலும் இனிதான் ராம ராஜ்ஜியம் தொடங்கப்பட வேண்டும். இதுநாள் வரை பாதுகை ஆண்டது; இனி, பாதுகைக்கு உரியவனே ஆளப்போகிறான்.

அதற்கேற்ப ஸ்ரீராமன், சீதாபிராட்டி சகிதம் ராஜாங்கபூஷிதனாய், மரவுரியோடு தரித்திருந்த துவராடையை நீக்கி, பட்டும் பீதாம்பரமுமாய், பரிமள சுகந்தத்துடன், பரந்துவிரிந்த மார்பில் ரத்னஹாரம், முத்துவடகம் போன்ற ஆபரணங்கள் மின்னிட காட்சி தந்தான். அவன் கரம் பற்றி வந்த சீதை, பாற்கடலைவிட்டு மகாலட்சுமியானவள் அப்படியே எழுந்து வந்தது போல் லட்சுமிகரமாய் காட்சி தந்தாள். அவர்களுடன், ஒரு புறம் பரதனும், மறுபுறம் லட்சுமணனும், வெண்கொற்றக் குடை ஏந்திய வனாய் சத்ருக்னனும் வந்தார்கள்.

அந்தக் காட்சியால் மனம் கசிந்தவனாய் கண்களில் நீர் பனிக்க ‘ராம்... ராம்… ’ என்று உணர்ச்சி மேலிடக் குரல் கொடுத்தான் அனுமன். மக்கள் கூட்டம் அதை அப்படியே எதிரொலித்தது.

அதனூடே ராமன் சீதையுடன் ரத்தின சிம்மாசனத்தின் முன் நின்றிட, அருகில் லட்சு மணன், பரதன், சத்ருக்னன் நின்றிருக்க, ராமன் பணிவுடன் அவையோரை வணங்கினான். அப்படியே சீதையுடன் சென்று அஷ்ட ரிஷிகளை நெருங்கி அவர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றான்.

ரங்க ராஜ்ஜியம் - 9

வசிஷ்டர் அவனை அழைத்துச் சென்று ரத்தின சிம்மாசனத்தில் அமர்த்தினார். அவன் அமர்ந்த நிலையில், வெண்கொற்றக் குடை சிரத்துக்குமேல் பந்தல்போட்டது போல் நிறுத்தப்பட்டது. அதை சத்ருக்னன் பிடித்தபடி இருந்தான். ராமனின் தாயான கோசலை ஆனந்தக் கண்ணீரோடு அதைக் கண்ட நிலையில், லட்சுமணனின் தாயான சுமித்திரையும் மிகச் சிலிர்ப்புடன் கைகேயி சகிதம் அந்த காட்சியைக் கண்டாள்.

ராமனுக்கு ராஜ்ஜியாபிஷேக வைபவம் தொடங்கியது. ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் உள்ளிட்டோர் பூலோகத்தில் பாயும் சர்வ நதிகளின் தீர்த்தத்தையும் கொண்டு வந்திருந்தனர். சுஷேணன், ரிஷபன், கவயன், நளன் ஆகிய நால்வரும் நாலாபுற சமுத்திர தீர்த்தத்தைக் கொண்டு வந்திருந்தனர். தீர்த்தக் கலசங்களை எட்டு ரிஷிகளும் தங்கள் கைகளால் தொட்டு ஆசீர்வதித்து தந்த நிலையில், ரவிகுல குருவான வசிஷ்டர் அந்த நீரால் ராமனை அபிஷேகித்தார். இவ்வேளையில் சத்ருக்னன் வெண்கொற்றக்குடை பிடித்திட, சுக்ரீவன் வெண் சாமரம் வீசிட, வாயு பகவான் தங்கத் தாமரை களாலான மாலைகளையும் ஒன்பது ரத்தினங்கள் நடுவே முத்து சேர்த்த மாலையையும் அணிவித்தார். பின், வேத மந்திர கோஷத்துக்கு இடையே ராமனுக்கு வசிஷ்டர் மணிமுடியான கிரீடத்தை சூட்டவும், ராமனை வாழ்த்திடும் கோஷம் அயோத்தி யின் விண் பாகத்தையே கிழிப்பதுபோல் ஒலித்து அடங்கியது. அதை முதலில் எழுப்பியவன் அனுமனே!

அடுத்து லட்சுமணனுக்கு இளவரசப்பட்டம் சூட்ட தயாராயினர். ஆனால், லட்சுமணன் மறுத்து பரதனைப் பணித்த நிலையில், பரதன் யுவ ராஜனானான்.

இந்தக் காட்சிகளைக் கண்கொட்டாது பார்த்துச் சிலிர்த்த வர்களில் விபீஷணனும் ஒருவன். அவன் வரையில் ஸ்ரீராமனும் சரி, ஸ்ரீராமன் கடந்துவந்த நிகழ்வுகளும் சரி... அவை, நுட்பமான அரிய உட்பொருளைக் கொண்டிருந்ததை எண்ணிப் பார்த்தான்.

‘ராமன் யாரோ அல்ல… ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம்! அயோத்தி இம்மட்டில் மோட்ச தளம் என்றால், இதன் மூல புருஷர் தசரதன். அவரின் மனைவியர் மூவரும் மூன்று விதமான மாயையைக் குறிப்பவர்கள்.

கோசலை- சுத்த மாயையைக் குறிப்பவள். அவளிடம் தூய ஆத்மாவாக தோன்றியவன் ஸ்ரீராமன். மெய்ஞ்ஞானம் ஆகிய வசிஷ்டர் (குருவின்) மூலம் தன்னை உணர்ந்து, விஞ்ஞானம் எனும் விசுவாமித்திரன் மூலம் அஞ்ஞானக் கானகத்தில் பிரவேசித்து, அரக்க மாயை எனும் தாடகையை அழித்து, ஞானம் எனும் வேள்வியைக் காத்தான்... இப்படியான சம்பவங் களுடன் தொடர்ந்து நீண்ட ஸ்ரீராமனின் வாழ்க்கைப் பயணத் தையும் அது உணர்த்திய உட்பொருள் ஒவ்வொன்றையும்  எண்ணிச் சிலாகித்தது விபீஷணனின் மனம்!

ஸ்ரீராமன் காமம் எனும் மாரீசனை விரட்டியடித்து, குரோதம் எனும் சுபாஹுவை ஒழித்து, அறியாமை எனும் அகலிகைக் கல்லைப் பெண்ணாக்கி, ஆனந்தம் எனும் சக்தியைக் குறிக்கும் சீதையை அடைய, ‘மமகாரம்’ எனும் வில்லை ஒடித்து, தன்னலக் கைகேயி, கோபம் எனும் கூனியின் சொல்லால் தூண்டப்பட்டு வரம் கேட்க, தவம் எனும் வனவாசம் சென்று, நிஷ்காம்யம் என்கிற குகனுடன் நட்பு கொண்டு, ஆசை எனும் கங்கையைக் கடந்ததை எண்ணிப் பார்த்தான் விபீஷணன்.

மேலும், ஸ்ரீராமன் உறுதி எனும் சித்ரக்கூட மலையிலிருந்து, பரஞானம் அபர ஞானம் எனும் பாதுகைகளைப் பரதனுக்குத் தந்து, விரோதம் மிகுந்த விராதனை வென்று, கருணைக்கு இனமில்லை என்பதை உணர்த்த ஜடாயுவை நேசித்து, மோக நெருப்பெனும் சூர்ப்பணகையைத் தவிர்த்து, ராட்சஸ குண ராவணனால் ஆனந்தமெனும் சீதை அபகரிக்கப்பட, அவளைத் தேடி `அவித்யை' என்ற அயோமுகியை நீக்கி, கவலை எனும் கவந்தனை வென்று, நிர்விகல்பம் எனும் சபரிக்கு மோட்சம் அளித்து, அடங்காமை எனும் வாலியை அடக்கி அழித்து, பரிசுத்தமாகிய சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டியதையும் எண்ணிச் சிலிர்த்தான் விபீஷணன்.

தொடர்ந்து, மெய்ஞ்ஞானமெனும் அனுமனால், ஆனந்தச் சீதையின் இருப்பிடத்தை அறிந்து, பிறவிப் பெருங்கடலுக்கே அணை கட்டி, துர்க்குணங்கள் எனும் அரக்கர்களை அழித்து, தாமச குணமெனும் கும்பகர்ணனையும் அழித்து, ராட்சஸ குணவானான ராவணனையும் கொன்று, சத்வ குணபூஷணான விபீஷணனுக்குப் பட்டம் கட்டி, ஆனந்தச் சீதையைக் கைப்பற்றி மோட்ச உலகான அயோத்திக்கு ராமன் அரசனாக மூடி சூட்டிக் கொண்டதையும் தரிசித்து மகிழ்ந்தான்.

இங்ஙனம், விபீஷணன் அனைத்தையும் எண்ணி நெக்குருகி நின்றிட, தான் இன்று சக்ரவர்த்தியாக நிற்பதற்குக் காரணமான சகலரையும் எண்ணிப் பார்த்து அவர்களை கௌரவிக்கத் தயாராகியிருந்தான், ஸ்ரீராமன்.

கௌரவத்துக்கு உரியவர்கள் வரிசையாக அழைக்கப்பட்டனர். சுக்ரீவன், ஜாம்பவான், நீலன் என்று வரிசையாக அனைவரையும் அழைத்து கௌரவித்த நிலையில், விபீஷணனும் அழைக்கப்பட்டான். விபீஷணன் குவிந்த கைகளோடு பணிந்த மனதோடு அனைவர்  முன்னாலும் வந்து நின்ற நிலையில், ஸ்ரீராமன் சீதை சகிதம் விபீஷணனைப் பார்த்த பார்வையில், ஆயிரம் உட்பொருள். விபீஷணன் பெறப்போகும் மரியாதைக்குரிய  பரிசு எதுவாக இருக்கும் என்று எல்லோரிடமும் யூகம்!

அப்போது, பிரணவாகாரப் பெருமாளின் தங்க விமானத்தைச் சுமந்துவந்து அங்கே நிறுத்தினான் அனுமன். அஷ்டரிஷிகளும்கூட அதை எதிர்பார்க் காதவர்கள் போல் முகத்தில் அதிர்ச்சியை எதிரொலித்தனர். விபீஷணன் அங்கே அந்தப் பெருமாளைப் பார்த்தமாத்திரத்தில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினான். அவனது வணக்கத்தை எல்லோரும் கண்ட நிலையில், ராமன் பேசத் தொடங்கினான்.
“என் இஷ்டமித்ர பந்துக்களே... அயோத்தி வாழ் மகா ஜனங்களே! உங்கள் முன் பணிவோடும் பக்தியோடும் காட்சி தரும் ஸ்ரீஸ்ரீ விபீஷணர் லங்காபுரியில் எனக்கு உற்ற துணையாக இருந்தவர். தன் சகோதரனான ராவணனை என் பொருட்டும் தர்மத்தின் பொருட்டும் துணிந்து எதிர்த்து, அதனால் ராவணனால் துரத்திவிடப்பட்ட நிலையில் என்னிடம் சரண் புகுந்தவர்.

ராவண மாயையை எனக்கு அடையாளம் காட்டியதோடு ராவணனுக்கு உரிய தர்மோப தேசமும் செய்தவர். அன்போடும் பாசத்தோடும் விபீஷணர் செய்த முயற்சி ராவணன் வரையில் பலிதமாகவில்லை. அம்போடும் கோபத்தோடும் நான் செய்த முயற்சியே ராவணனை அடக்கி அழித்தது. அந்த அழிவைக் கண்டு பாசத்தால் ஒருபுறம் துடித்தபோதும், என்பால் உள்ள நேசத் தால் அதை அடக்கிக்கொண்டு,  நான் அயோத்திக்கு வெற்றியோடு திரும்புவதற்குப் பெரிதும் காரணமானவர்.

என்னைப் பற்றி சிந்திக்கும்போது, விபீஷணரை எவராலும் தவிர்க்க இயலாது. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்தும் சகோதரர்களிடமிருந்து மாறுபட்டு, விபீஷணர்  சர்வகுண முனியாக தன்னைச் செதுக்கிக்கொண்ட செயல் போற்றப் பட வேண்டிய ஒன்று. ஓர் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று நீதி நெறிகள் கூறுகின்றனவோ,  அப்படி பரிபூரண நற்குணத்தினராய் திகழ்பவர் இவர். இந்த நிலையில் விபீஷணருக்கு ஒரு பெரும் கடமையும் காத்திருக்கிறது. அது யுத்தத்தால் பாழ் பட்டிருக்கும் இலங்கையை புதுப்பிப்பதும் சிறப்பிப்பதுமேயாகும். அதன்பொருட்டு, மனித சக்தியோடு தெய்வ அனுக்கிரகமும் தேவைப்படுகிறது. எந்த மண்ணில் ஆராதனைகளும், வழிபாடுகளும் நிகழ்கிறதோ அங்கே காம, குரோதங்கள் அழிந்து பக்தியும், பக்தியால் புத்தியும் தெளிவு பெறும்.

உடம்பானது உரிய பயிற்சிகளால் உறுதியாவது போல், மனமானது பக்திவழி அதன் அனுஷ்டானங் களால் உறுதியும் ஞானமும் அடையும். இலங்கை யின் இப்போதைய முதல் தேவையும் அதுவே. ராவணனின் கீழ்மையால் இலங்கை பாழானது. என்றாலும் என் பங்கும் அதில் இருப்பதால், அதன் பொருட்டு இலங்கையின் மேன்மைக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். 

ஆகவே, இதுநாள் வரை எங்கள் ரவிகுலம் தொழுது வந்த இந்தப் பிரணவாகாரப் பெருமாளை, உத்தம அருள்நிதியாகவும் உகந்த பரிசாகவும் விபீஷணருக்கு அளிக்க விரும்புகிறேன்.  யாருக்கும் இதில் எந்த ஆட்சேபமும் இருக்காது என்பதோடு இருக்கவும் கூடாது என்றும் விரும்புகிறேன்.”

ராமனின் நெடிய பேச்சும், அதில் வெளிப்பட்ட கருத்துகளும் எல்லோரையும் மெளனிக்கச் செய் தது. விபீஷணனோ மெய்சிலிர்த்துப் போயிருந்தான். அவன் கண்களில் ஆனந்தப் பனிப்பு!

இந்த ராமன்தான் எத்தனை மேலானவன்? இவனுக்கு இணையாக ஒரு மானிடன் இந்த மண்ணில் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை. யாருக்கு, எதை, எப்போது, எப்படித் தர வேண்டும் என்பதில் ஒரு கணக்கும் கருணையும் இருக்கின்றன. அவற்றை நூறு சதவிகிதம் ஒருவன் பின்பற்றுவது என்பது, மாயை நிறைந்த இந்த உலகில் இயலாத காரியம்.

சிலர், தங்கள் உயிரையே தர சித்தமாயிருப்பர் - உயிரை அதுபோல் தந்தவர்களும் உண்டு. ஆனால், உயிரினும் மேலானதை, உயிர்களுக்கெல் லாமும் காரணமானதைத் தருவது என்பது எத்தனை பெரிய செயல்?

ரங்க ராஜ்ஜியம் - 9

அதுதான் இப்போது நடந்திருக்கிறது!

ஒன்றைக் கொடுத்துவிட்ட பிறகு அதை தன்னு டையதாக நினைப்பது, கொடுத்ததைக் கெடுத்து விடும் இழிவான செயலாகும். எனவே அந்த அவையில் உள்ளோரும், மிகுந்த சிரமத்துடன் `பிரணவாகாரப் பெருமாள் தங்களுடையவர்' என்ற அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள முற்பட்டனர். இனி, அந்தப் பெருமாளுக்குப் பதிலாக ஸ்ரீராமனையே தங்களின் பெருமானாகக் கருதுவது என்றும் தீர்மானித்தனர்.

அதுவும் சரிதானே? உரியவனே இருக்கும்போது அவன் வரித்தது இரண்டாம்பட்சமாவது இயல்புதானே?

விபீஷணனுக்கோ ஸ்ரீராமன் தன்னையே பிரணவாகாரப் பெருமாள் வடிவில் ஒப்படைத்து விட்டதுபோல் தோன்றியது. இனி, தன் மண்ணும் அயோத்தி போல் தர்மபுரியாகும் என்ற நம்பிக்கை அவனுக்குள் சுடர்விடத் தொடங்கியது.

அதுவரை அங்கு நடந்ததைக் கண்ட நிலையில் ஏதும் பேசாதிருந்த வசிஷ்ட மகரிஷி புன்னகை யோடு விபீஷணனைப் பார்த்து பேசத் தொடங் கினார்.

‘`இலங்கை வேந்தனே! நீ பெரும் புண்ணியவான். உனக்குப் பரிசாகத் தரப்பட்டிருக்கும் இந்தப் பெருமாள் விண்ணகத்தே பிரம்மனால் வழிபடப் பட்டவர்.

பின்னர், இம்மண்ணகத்தே ரவிக்குலத்தவரால் வணங்கப்பட்டு, இறுதியாய் ஸ்ரீராமனே வணங்கிய மூர்த்தி; அணு நுட்பம் போல் பல நுட்பம் கொண் டவர். எல்லோரும் இம்மூர்த்தியை தவத்தாலேயே பெற்றனர். நீயோ பரிசாகவே பெற்றுவிட்டாய்! 

இதைப் பெறுவதுகூட பெரிதல்ல; உரிய முறையில் பேணுவது மிகப் பெரிது. நீ அதில் கவனமாயிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால்...?’’

- தொடரும்...